உடல் தேறி குண்டாவதற்கு என்ன உணவு சாப்பிடலாம்? ருசியும் பசியும் உள்ளவர்களுக்குத்தான உண்ணும் உணவின் சத்து முழுவதுமாக உடலில் சேர்ந்து புஷ்டியும் பலமும் நீண்ட நாள்க

உடல் தேறி குண்டாவதற்கு என்ன உணவு சாப்பிடலாம்?

ருசியும் பசியும் உள்ளவர்களுக்குத்தான உண்ணும் உணவின் சத்து முழுவதுமாக உடலில் சேர்ந்து புஷ்டியும் பலமும் நீண்ட நாள்கள் குன்றாமல் இருக்கும். வாய் முதல் குடல் இறுதிப்பகுதியான ஆசனவாய் வரை சுத்தமாக இருப்பதற்கும் நல்ல ஜீர்ணசக்தியைப் பெறுவதற்கும் கீழ்க்காணும் மரந்தை முதலில் சிறிது காலம் சாப்பிடவும். கடுக்காய்த் தோல் - 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு இவை தலா 3 கிராம்.

திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாக இடித்தச் சூர்ணம் செய்து துணியினால் சலித்து வைத்துக் கொள்ளவும். அளவு அரை கிராம். தேனில் குழைத்தோ அல்லது வெறும் வெந்நீருடனோ கலக்கிச் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் முதலிய அஜீர்ண நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து.

நல்ல ஜீரண சக்தியும் குடல் சுத்தியும் ஏற்பட்டுவிட்டால் காலை உணவிற்கு கோதுமைக் கஞ்சி, சோளப்பொரி, கோதுமைப் பொரி கஞ்சி, பால் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிடவும். இட்லி, தோசை போன்ற மாவுப் பலகாரங்கள் காலை உணவிற்கு ஏற்றவை அல்ல.

மதிய உணவிற்கு நெய் சேர்த்த சூடான பருப்புச் சாதம், மோர்க்குழம்பு, நன்கு வேகவைத்த காய்கறிகள், மிளகு ரசம், பிறகு தயிர்சாதம், நார்த்தங்காய் வற்றலுடன் சாப்பிடவும்.

மாலையில் நேந்திரம் வாழைப்பழத்தைக் குக்கரில் வேகவைத்துத் தேன், நெய், சர்க்கரை சிறிது கலந்து சாப்பிடவும். பிறகு சிறிது பசும் பால் அருந்தவும்.

இரவில் கேழ்வரகு மாவைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் முதலில் கலந்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வரும் அளவு காய்ச்சி இறக்கி பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். இது பசியைத் தூண்டிவிடும். உடலுக்குப் புஷ்டியைத் தரும். ருசியில் இனிப்பான ஒரு சிறந்த உணவு.

மூல வியாதி வந்து பிறகு, அறுவை சிகித்ஸை செய்து கொண்ட பின்பும் கூட, சிலருக்கு எரிச்சல், சரியாக உணவு உண்ணமுடியாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மூல நோய் எதனால் ஏற்படுகிறது? இந்த நோய் தீர எவ்வித உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்? நோயிலிருந்து விடுதலை பெற வழி என்ன?

நாம் உண்ணும் உணவை ஜீர்ணம் செய்யும் அக்னி என்னும் பசித் தீயில் ஏற்படும் கெடுதல்களால்தான் மூல நோய் ஏற்படுகிறது. அது கெடுவதற்கான நேரடியான மற்றும் மறைமுகக் காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

உடற்பயிற்சியே சிறிதும் இல்லாதிருத்தல் அல்லது தன் சக்திக்கு மீறிய உடல்பயிற்சி.

ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்வது.

பகலில் அதிக நேரம் தூங்குதல்.

மல, மூத்திர, வாயுவை அடக்குதல்,

எண்ணெய்ப் பண்டங்களை அதிகம் சாப்பிடுதல்.

காரம், புளி மிகுந்த உணவு.

அதிக உடலுறவு, அதிகப் பட்டினி, மனத்தில் ஏற்படும் தாபம், சோகம்.

இவ்வகைக் காரணங்களால் மலத்தினுடைய அம்சம் குடலில் அதிகமாகிப் பசித் தீயின் ஜீரண வேலையைக் கெடுத்துவிடுகிறது. பதனழிந்த உணவின் சாராம்சம் ரத்தத்தின் வழியாகக் கலந்து செல்வதால் ஆஸனவாய் மடிப்புகளில் மூல வியாதியை விளைவிக்கிறது. இக்காரணங்களை அகற்ற வேண்டும்.

மூல நோயுள்ளவர்கள் கீழ்க்காணும் உணவு வகைகளைப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் நலம் தரும்.

பழங்கள் - புளிப்புச் சுவை அதிகமில்லாத இனிப்புச் சுவை மேலிட்ட பழங்களாகிய திராட்சை, பலா, வாழை, பேரிச்சை, இனிப்பு மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம் சிலருக்கு மாம்பழம் ஒத்துக்கொள்ளாது. மாம்பழத்தைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளும். பொதுவாக மூல நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளையும் சில பழங்களை சாப்பிட வேண்டும். எலுமிச்சை, தக்காளி உணவில் மிதமாய்ச் சேர்க்கலாம்.

பச்சைக்காயக்ள் - பரங்கி, பூசணி, சுரை, பாகற்காய் நல்லது. இவைகளைச் சமைக்கும்போது பெருங்காயம், மிளகாய், காரசாரங்களைச் சேர்க்கக் கூடாது. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு மிகச் சிறப்பானது. இளம் தேங்காய், இளநீர் நல்லது. எல்லாவித மூல நோய்களுக்கும் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது மிக நல்லது.

கிழங்குகள் - பெரிய ரகம் காரமில்லாத வெங்காயம், கருணை, சேனை, பச்சையான மாங்காய், இஞ்சி நல்லது. இளசான முள்ளங்கியும் கேரட்டும் சாப்பிடலாம்.

பால், வெண்ணெய், நெய், மோர் இவை இன்றியமையாதவை. வறண்ட மூலத்திற்கும் ரத்த மூலத்திற்கும் வெண்ணெய் எடுக்காத ஆடைத்தயிரிலிருந்து மோர் கடைந்து சூட்டுடன் அது புளிக்கத் தொடங்கும் முன் தினசரி இருவேளை கெட்டியாகத் தனி மோராகவே ஒரு டம்ளர் பருகுவது மிகச் சிறந்தது. புளித்த மோர் நல்லதல்ல.

வெள்ளாட்டின் கல்லீரல் ரத்தமூலத்திற்கு மிக நல்லது. மாவுப் பண்டங்களில் இட்லி, தோசை, மிதமாகச் சாப்பிடலாம். பழைய புழங்கலரிசி, பாசிப் பயிறு, துவரை, உளுந்து, மிதமாய்ச் சேர்க்கலாம். தனியா, பெருஞ்சீரகம், ஜீரகம், அரிசித் திப்பிலி இவைகளை நெய்தடவி வறுத்துப் பொடித்து உபயோகிப்பது நல்லது.

மூல நோயிலிருந்து விடுதலை பெற வன சூரனாதி லேகியம் ஒரு ஸ்பூன் காலை, மாலை, ஆறுமணிக்கு வெறும் வயிற்றில்  £சப்பிடவும். அபயாரிஷ்டம் அல்லது துராலபாரிஷ்டம் 5 ஸ்பூன் (25 I.L) காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். ரத்தக் கசிவுடன் கூடிய மூலநோய்க்குக் குடஜத்வகாதி லேகியம் 1 ஸ்பூன், காலை, மாலை, வெறும் வயிற்றில், பூதிகரஞ்சாஸவத்தோடு பூதிவல்காஸவத்தைக் கலந்து 5 ஸ்பூன்கள் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

மேலும் பல தரமான மருந்துகளை மருத்துவரை நேரில் அணுகிப் பெறலாம்.