சுவையும் - தோஷங்களும்
சுவைகள் ஆறு என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் சுவைகள் நமது உடலை இயக்கும் மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களை எவ்வாறு சமநிலையில் நிறுத்தி ஆரோக்யத்தைத் தருகின்றன என்பதை நாம் அறியாதிருக்கிறோம். ஆயுர்வேதம் சுவைகளின் செயல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. பஞ்ச மஹா பூதங்களாகிய நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாசம் ஆகியவற்றில் இரண்டு பூதங்களின் ஆதிக்கம் சுவைகளை பொருட்களில் தீர்மானம் செய்கின்றன.
இனிப்புச் சுவையில் - நிலம் நீர்
புளிப்புச் சுவையில் - நெருப்பு நிலம்
உப்புச் சுவையில் - நீர் நெருப்பு
கசப்புச் சுவையில் - ஆகாயம் வாயு
காரச் சுவையில் - நெருப்பு வாயு
துவர்ப்புச் சுவையில் - நிலம் வாயு
ஆகியவை மற்ற மஹா பூதங்கள்விட அதிக அளவில் சேர்ந்திருப்பதால் அவைகளின் சேர்க்கை சுவையை நீர்ணயம் செய்கின்றன. மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களிலும் மஹாபூதங்களின் ஆதிக்கம் கூறப்படுகிறது.
கபதோஷத்தில் - நீர் நிலம்
பித்ததோஷத்தில் - நெருப்பு
வாத தோஷத்தில் - வாயு ஆகாசம்
மேற்கூரிய கருத்துப்படி கபதோஷத்தை அதிகரிப்பதில் இனிப்புச் சுவை முக்கிய பங்கும், புளிப்பும், உப்புச் சுவையும் குறைந்த அளவிலும் பங்கு வகிக்கின்றன. கபம் அதிகரித்து விட்டால் அது உடன் கெட்டு அதன் குணங்களாகிய நெய்ப்பு - குளிர்ச்சி - கனம் - மந்தத்தன்மை - வழுவழுப்பு - கொழகொழுப்பு - ஈஷிக்கொள்ளும் தன்மை ஆகியவை அதிகரித்து தலை பாரம், தலைவலி, ஜலதோஷம், ருசியின்மை, கண் காது அரிப்பு, பசியின்மை, உடல்பளு, போன்றவை ஏற்படும். கபத்தின் சீர்கேட்டில் இம்மூன்று சுவைகளையும் விலக்கி மற்ற மூன்று சுவைகளை அதாவது கசப்பு, காரம், துவர்ப்பு அதிக அளவில் உணவில் சேர்ப்பதன் ரகசியம், பூதங்களாகிய நிலம் நீரின் அளவை குறைத்து சமநிலைக்கு கொண்ட வருவதற்குத்தான். கபத்திற்கு அனுகூலமல்லாதிருப்பதால் இச்சுவைகளை உண்பதால் கபத்தை நீர்க்கச் செய்து வெளியே கொண்டு வருவதால் தலைபாரம், தலைவலி, ஜலதோஷம் போன்றவை குறைந்து குணமாக்கிவிடும். கபத்தைக் குறைப்பதில் சுவையைத் தவிர வேறு சில வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில -
இரவில் கண்விழித்தல்
பலவிதமான தேகப்பயிற்சி
வாந்தி செய்வித்தல்
பயத்தம்பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்
கடலை காய்ச்சிய கஞ்சி சூடு ஆறியதும்
தேன் கலந்து சாப்பிடுதல்
கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள்
பட்டினியிருத்தல்
மூலிகைகள் காய்ச்சிய தண்ணீரால்
வாய் கொப்பளித்தல்.
மஹாபூதங்களில் நெருப்பை அதிகஅளவில் கொண்ட புளிப்பு, காரம், உப்புச் சுவைகளை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பவர்களுக்கு பித்ததோஷம் அதிகரித்து வாய்ப்புண், எப்போதும் வயிற்றில் எரிச்சல், ஆஸன வாய்க்கடுப்பு, சிறுநீர் மஞ்சளாகவும் எரிச்சலுடன் செல்லுதல், ரத்தக்கசிவு, புலன்களாகிய கண், தோல், நாக்கு, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக உஷ்ணம், தூக்கமின்மை, அதிகப்பசி, துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை, அதிக கோபம் போன்றவை ஏற்படும்.
இதுபோன்ற நிலையில் பித்தத்தின் சீற்றத்தை இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை அவைகளின் பூதங்களின் சேர்க்கை விசேஷத்தினால் சரி செய்து விடுகின்றன. வேறு சில சிகித்ஸை முறைகளும் கூறப்பட்டுள்ளன.
கசப்பானநெய் பருகுதல் - மூலிகை போட்டு காய்ச்சிய நெய்.
இனிப்பும் குளிர்ச்சியும் சேர்ந்த மருந்துகளால் பேதி செய்தல்.
மணமும், குளிர்ச்சியும், மனதிற்கு பிடித்ததுமான சந்தனம் போன்ற வாசனைப் பொருட்களை உபயோகித்தல்
முத்து மாலை அணிதல்
மனதிற்கு சுகம் தரும் அந்திப்பொழுது, சந்திரன், கீதம், குளிர்ந்த காற்று, தாமரைத் தடாகத்தை பார்த்துக் கொண்டிருத்தல்.
பால், நெய் அதிக அளவில் உணவில் சேர்த்தல்
வாயுதோஷத்தின் சீற்றம் வாயு ஆகாசங்களைக் கொண்ட உணவு மற்ற நடவடிக்கைகளால் உடல்வலி, மூட்டுவலி, குடலின் வாயுவின் ஒட்டம், வயிறு உப்புசம்,, பசி சீர்கெட்டு சில சமயங்களில் அதிகமாகவும், சில சமயங்களில் குறைவாகவும் இருத்தல், மலச்சிக்கல், கடுமையான தலைவலி, உடல் வறட்சி, குளிர்ச்சி அதிகரித்தல் உறக்கமின்மை போன்றவை ஏற்படுத்தும். அம்மாதிரியான நிலைகளில் வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளை தவிர்த்து இனிப்பு புளிப்பு உப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மேலும் -
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
பஸ்தி எனும் எனிமா சிகித்ஸை
எண்ணெய் தேய்த்து வியர்வை உண்டாக்குதல்
காம சோக பயங்களை தவிர்த்தல்
சூடான வெந்நீரில் குளித்தல்
நெய்ப்புத்தன்மையை அதிகரிக்கும் உணவை உட்கொள்ளுதல்
இப்படியாக வாத பித்த கபங்களின் சீற்றத்தை உணர்ந்து சுவைகளின் குணங்களை மஹாபூதங்களின் வழியாக உணர்ந்து, உணவாகக் கொண்டு சமநிலைப்படுத்தி ஆரோக்யத்தை நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சுவைகளை பொருத்தவரை 'நித்யம் ஷட்ரஸோ அப்யாச;' என்று அறுசுவைகளையும் தினமும் உணவில் சேர்க்குமாறு ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. அவைகளின் சீரான சேர்க்கை தோஷங்கள் - தாதுக்கள் - மலங்கள் போன்றவற்றை சரியான நிலையில் வைத்திருக்க உதவுவதால் 'எனக்கு கசப்புப் பிடிக்காது, புளிப்பு பிடிக்காது' என்றெல்லாம் இனிமேல் கூறாமல் அறுசுவைகளையும் உணவில் சேர்த்து பயன்பெறுவோமாக.