பொய்கையாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சீபுரம் நகரங்களுள் சிறந்தது என்று அதனைப் பெரியோர்கள் போற்றிச் சிறப்பிப்பர். ஒரு தமிழ்ப் புலவர், இந்நிலவுலகத்தில் பொருந்தியுள்ள நாடுகள் எல்லாவற்றையும் வயல்களெனவும், தொண்டை நாடு வயல்களில் விளைந்த கரும்பு எனவும், தொண்டை நாட்டின் நகரங்கள் யாவும் கரும்பினது சாறு எனவும், அச்சாற்றைக் காய்ச்சிக் கொண்ட கற்கண்டே காஞ்சிமாநகரம் எனவும் சிறப்பித்தார். இத்தகைய பெருமை அமைந்த காஞ்சீபுரத்தில் திருவெஃகா என்னும் பதியில் உள்ள ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் (A.H. 7-ஆம் நூற்றாண்டில்) சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பொருந்திய அட்டமி திதியில் செவ்வாய்க்கிழமை திருவோண நட்சத்திரத்தில் திருமகள் நாதனாகிய திருமாலின் ஐந்து படைகளில் ஒன்றாகிய பாஞ்சசன்னியம் என்று கூறப்படும் திருச்சங்கின் அமிசம் உடையவராய்ப் பொய்கையார்வார் அவதரித்து அருளினார்.

இவர் திருமாலினிடத்து என்றும் அறாத அன்புடையவராய் இலங்கினார். அவர் "என் அன்பு திருமாலை அணுகு என்று சொல்கின்றது; எனது நா அப்பெருமானுடைய ஆழி ஏந்திய தோளை ஏத்து எனச் சொல்லுகின்றது; என் செவிகள் அவ்விறைவனது புகழைக் கேள் என்கின்றன;என் கண்கள் பிறப்பு, இறப்பு இல்லாத அவ்விறைவனைக் காண் என்று சொல்லுகின்றன" என்பார்;திருமாலினது குணங்களையும், செயற்கருஞ் செயல்களையும் சொல்லி வாழ்த்துவார்;திருமாலின் திருவடிகளைப் போற்றாதார்க்கு வீட்டின்பம் இல்லை என்பார். இங்ஙனம் கண்டோர் அனைவரும் பாராட்டி வணங்கிப் போற்றும் உண்மை அறிவுச் செல்வராய்ப் பொய்கையார் விளங்கினார்.

இவரால் பாடப்பட்ட பெருமை பொருந்திய நகரங்கள்; (1) திருவரங்கம், (2) திருவிண்ணகர், (3) திருக்கோவலுர், (4) திருவெஃகா, (5) திருவேங்கடம் (6) திருப்பாற்டல், (7) பரமபதம் முதலியனவாகும்.


 


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is முன்னுரை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பூதத்தாழ்வார்
Next