ஆத்ம ஸாதகனின் அன்புக்கு இலக்கு எது ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உண்டாகிற அன்பை எதனிடமாவது செலுத்தத் தானே வேண்டும்? அதற்கு ஒரு ‘ஆப்ஜெக்ட்’ இருக்கணுமே! அப்படி இவன் தன்னை எதற்குக் கொடுத்துக் கொள்வது, அர்ப்பணம் பண்ணுவது?வேறே மநுஷ்யர்களுக்கு, ஊருக்கு உலகத்துக்கு, தேசத்துக்கு இவன் தன்னைக் கொடுத்துக் கொண்டு அன்பு பண்ணலாமா என்றால், இந்த ஸ்டேஜில் அதெல்லாம் கூடாதுதான். ஏனென்றால் அப்படிப் போனால் அவற்றிடம் ஸங்கம் உண்டாகி மாயைக்கே மறுபடி இழுபட்டுவிடுகிற ஆபத்து இருக்கிறது! ஜட பரதர் கதையைவிட ஒன்று வேண்டாம்! முந்தைய ஸ்டேஜ்களில் பரோபகாரம், தேச ஸேவை, உலகத்தொண்டு என்றிப்படி அன்பிலே தன்னை அர்ப்பணம் பண்ணிக் கொள்வது சித்த சுத்திக்கு ரொம்பவும் நல்லதுதான். ஆனால் அது கர்மயோகத்தில் சேர்ந்தது. இப்போது உலகமே மாயை என்று தெரிந்துகொள்வதற்காக ஞானயோகத்தில் போகிற போது, தள்ள வேண்டிய அந்த மாயாலோகத்திடமே அன்பு, [அதற்குத்] தொண்டு என்றால் அஸம்பாவிதம் அல்லவா? [ஸாக்ஷாத்கார] ஸித்தியே பெற்று ஞானியான விட்டு, மாயாலோக நிர்வாஹகனான ஈச்வரனின் ப்ரேரணையில் [தூண்டுதலில்] ஒருவன் உலகத் தொண்டு செய்வதுண்டுதான். ஆசார்யாளே அப்படிப் பண்ணினவர்தானே? ஆனால் அது மாயையால் தான் பாதிக்கப்பட மாட்டாமல், [சிரித்து] ‘மாயா-proof’ ஆகி ஆணியடித்தாற்போலப் பிரதிஷ்டை ஆகிவிட்டபிறகு! அதோடு, அது அந்த ஞாநி தானாக உத்தேசித்துச் செய்யாமல் ஈச்வர ஸங்கல்பத்தினால் கருவி மாத்ரமாகப் பண்ணுவது. ஆகக்கூடி அத்வைத ஸாதனை என்றே ஆரம்பிப்பதற்கு முன்னாடி, அல்லது ஸித்தி பெற்ற அப்புறம் லோகஸேவை அல்லது தனி மநுஷ்யர்களுக்குத் தொண்டு என்பதில் ஒருவன் அன்பைக் காட்டலாமேயொழிய, இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற ஸாதனைக் காலத்தில் இல்லை. ஆயிரம் பதினாயிரத்தில் ஒருத்தராக இப்படி ஸாதனையில் இறங்கியிருக்கிற சில பேர் ஸேவை, ப்ரேமை பண்ணாததால் லோகத்திற்குப் பெரிய நஷ்டமுமில்லை! பார்க்கப்போனால் அவர்கள்தான் [லோகத்திலுள்ள ஜனங்கள்தான்] ‘நாமதான் மாட்டிண்டுட்டோம். விடுபடணும்னு இப்படி யாரோ அபூர்வமாகப் புறப்படறாளே, அவாளுடைய ஜீவ யாத்ரைக்கு ச்ரமமில்லாதபடி என்ன செய்யணுமோ அதை நாம் செஞ்சு கொடுப்போம்!’ என்று இவர்களுக்கு அவச்யமானதைப் பண்ணித்தர வேண்டும்.

ஆகவே தனி மநுஷ்யர்களிடமோ, பொதுவான மநுஷ ஸமூஹத்திடமோ இவன் அன்பு பண்ணுவதற்கில்லை. இப்படிச் சொன்னதால் ஜன ஸமூஹத்திடம் த்வேஷமாயிருக்கணும் என்று அர்த்தமாகாது. அன்புமில்லை. த்வேஷமுமில்லை. அஹிம்ஸை அவனுடைய ப்ரதம லக்ஷணமானதால் – [ஸந்நியாஸ] ஆச்ரமம் வாங்கிக் கொள்ளும்போதே, ‘எந்த உயிருக்கும் என்கிட்ட பயம் இருக்கப்படாது’: அதாவது ‘எந்த உயிருக்கும் நான் எந்த விதத்திலும் தீங்கிழைக்கக் கூடாது’ என்று அவன் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டியவனாதலால் – அவனுக்கு எந்த ஜீவராசியிடமும் ஸமூஹத்திடமும் கொஞ்சங்கூட த்வேஷம் இருக்காது – ஸாதனா பலனாக உள்ளே இப்படி த்வேஷம் இல்லாமலிருப்பதை வெளியிலே அன்பாயிருந்து காட்டுகிறேன் என்று அவன் இறங்கப்படாது.

ஆனால், உள்ளே அன்பு ஊறக்கூடிய அந்த நிலையிலே அந்த அம்ருதத்தை யாரிடமாவது கொடுத்து அதன் வழியாகவே தன்னையும் கொடுத்துக் கொண்டால் தானே ஹ்ருதயத்தின் வாசலுக்குள் போகும்படியாக இவன் இளைக்க முடியும்? அது யார்? யாரென்றால் ஆத்மாவேதான்! அதையே வரிக்கணும் என்று முமுக்ஷுதையில் சொன்னோமலலவா? அன்பு பொங்கிக்கொண்டு, தன்னையே ஆத்மாவுக்கு அர்ப்பணம் பண்ணிக்கொண்டு விடவேண்டுமென்ற சரணாகத புத்தியோடு வரிக்க வேண்டும். ஆட்கொள்வதாக மட்டுமில்லாமல் பிரிந்து நிற்கிற ஆளை[தனி-நானை]க் கொல்வதாகவே அது செய்ய வேண்டும் என்ற பாவத்துடன் அன்பு பண்ண வேண்டும்! அது தன்னைத் தெரியப்படுத்திக் கொள்வதற்குள் என்னவெல்லாம் சோதனை வைத்தாலும், “நான்னு ஒண்ணு ஒனக்குத் தராம மிச்சம் வெச்சுண்டிருந்தேன்னா தானே சோதனை, கீதனை எதுவும் தெரிய முடியும்? என்னையே உன்னுல அழிச்சுக்கணும்னு அர்ப்பண புத்தியோட நான் நிக்கறச்சே சோதனைக்கு ஆளாக யார் இருக்கா?” என்று நினைக்கும்படியான அப்படிப்பட்ட உத்தமமான ப்ரேமையோடு ஆத்மாவை வரிக்க வேண்டும்.

இங்கேதான் அன்பு என்பது பக்தியாகிறது.

உத்தம வஸ்துவிடம் வைக்கும் அன்புக்கே பக்தி என்று பேர். நமக்கு ஸமதையானவர்களிடம் வைக்கும் அன்பு – நட்பு; உத்தமர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் வயஸில் பெரியவர்களிடம் வைக்கிற அன்பு – மரியாதை; சின்னவர்களிடம், நமக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் வைக்கும் அன்பு – அருள்; கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கும் அன்பு – கருணை. உத்தமமானவர்களிடம் நாம் நைச்சியத்துடன் (பணிவுடன்) வைக்கிற அன்பு பக்தி. பரம உத்தமம் ஸ்வாமிதானாகையால், குறிப்பாக அவரிடம் அடங்கிப் பணிந்து அன்பாயிருப்பதையே பக்தி என்கிறோம். அதற்கப்புறம் குரு பக்தி, மாத்ரு பக்தி, பித்ரு பக்தி, தேச பக்தி என்றெல்லாம் சொல்கிறோம். இவர்களில் ஸ்வாமியும் குருவும்தான் நாம் அன்பிலே அர்ப்பணிக்கிற தனி-நானை வாஸ்தவமாகவே எடுத்துக்கொண்டு ஒரே நானில் அதைக் கரைக்கக்கூடியவர்கள்.

ஆனாலும் ஞான வழி ஸாதகனுக்கு ஸ்வாமியை அப்படி [ஸகுணமாக] இல்லாமல் நிர்குண ஆத்மாவாகவே பிடிக்கச் சொல்லியிருப்பதால் அந்த ஆத்மாவிடமே அன்பை – பக்தியை – செலுத்த வேண்டியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ' அஹங்கார ' மும் அன்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  நிர்குண, ஸகுண பக்திகள்
Next