உத்தராயண மரணம்: அதன் சரியான பொருள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உத்தராயண மரணம் என்பது ஒரளவு நல்ல பிரஸித்தி அடைந்து விட்டது. ஆனாலும் அதைப் பற்றியுள்ள பொது அபிப்ராயம் ஸரியாயில்லை. நான் சொல்லப் போகிற விஷயம் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால் ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதைத்தான் சொல்கிறேன்1. உத்தராயண மரணம் என்பதற்குத் தை மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்தில் செத்துப் போவது என்று ஆசார்யாள் அர்த்தம் பண்ணவேயில்லை. பின்னே எப்படிப் பண்ணியிருக்கிறாரென்றால்: அந்த யோகி, (ஞானி தவிர நிஷ்காம கர்மி, பக்தன் முதலான எந்த உபாஸகனுமே) ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி வழியாக ப்ராண வியோகமாகி தேவயானம் என்ற தெய்விக மார்க்கத்தின் வழியாக ப்ரஹ்ம லோகத்திற்குப் போகிறான். அந்த டெர்மினஸுக்குப் போகிறதற்கு முன்னாடி அநேக ஜங்க்ஷன்கள்!அவை ஒவ்வொன்றும் ஒரு தேவதையின் ஸ்தானம். அப்படி முதலில் அக்னியின் ஸ்தானம் வருகிறது. அப்புறம் பகல் போதுக்கான தேவதையின் ஸ்தானம், அப்புறம் சுக்ல பக்ஷ தேவதையின் ஸ்தானம். அதற்கப்புறம் உத்தராயண காலத்திற்கான தேவதைகளின் ஸ்தானம் – கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்; உத்தராயண காலம் இல்லை; அந்தக் காலத்திற்கு தேவதைகளாக இருக்கப்பட்டவர்களின் ஸ்தானம் – என்றிப்படி இன்னும் சில ஜங்க்ஷன்களையும் தாண்டி டெர்மினஸ் போய்ச் சேருவதாகவே ஆசார்யாள் விளக்கியிருக்கிறார். பகவானும் ஏற்கெனவே சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் முதலிய உபநிஷத்துக்கள் சொல்லியிருப்பதை அநுஸரித்துத்தான் கீதையில் சொன்னது. அவற்றுக்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யங்களும், [கீதைக்குப்] பிற்காலத்தில் உண்டான ப்ரஹ்ம ஸூத்ரம், அதன் பாஷ்யம் ஆகியவையும் இந்த விஷயத்தை ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தும்.

இதே மாதிரிதான் புனர்ஜன்மா உள்ளவர்களுக்கு தக்ஷிணாயன மரணமென்பதும், அந்தக் கால தேவதைகள் உள்ள [பித்ருயானம் என்ற] மார்க்கத்தில் அவர்களுடைய உயிர் வெளியே போவதைச் சொல்வதுதான்! ஆடியிலிருந்து தை பிறக்கிற வரையிலுள்ள ஆறு மாஸ காலத்தில் உயிர் விடுவதைச் சொல்வதில்லை.

இன்னொரு விஷயம்: இப்படி உத்தராயண தேவதைகள் முதலான தேவதைகளின் ஸ்தானங்கள் வழியாக ஜங்க்ஷன் ஜங்க்ஷனாகப் போய், ப்ரஹ்ம லோகம் சேர்ந்து, அப்புறம் ப்ரளயத்தின்போது ப்ரம்மத்திலேயே ஐக்யமாகிற ஸமாசாரம் எதிலும் ஞானிக்கு அடியோடு ஸம்பந்தமில்லை. ஆகையினாலே அநேக ஞானிகளுடைய நிர்யாண [மரண]த் திதியைப் பார்த்து, ‘அது உத்தராயணமாயில்லையே! அப்படியானால் அவர்கள் முக்தி அடையவில்லையா?’ என்று நினைப்பது ஸரியில்லை.


1 கீதை VIII 24, ப்ரம்மஸூத்ரம் IV. 3, சாந்தோக்யம் V.10.1, ப்ருஹதாரண்யகம் VI.2.15 முதலியவற்றுக்கு ஆசார்ய பாஷ்யம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஹ்ருதய நாடிகள் : ஞானியின் உயிர் அடங்குவதும், ஏனையோர் உயிர் பிரிவதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கர்மயோகத்தின் மாறுபட்ட இரு பலன்கள்
Next