பக்தி மார்க்க பக்தியிலும் சிறந்த ஞானமார்க்க பக்தி! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஞான மார்க்கத்தில்கூட பக்தி உண்டா என்ன?’ என்று கேட்டு விசாரணை பண்ண ஆரம்பித்தது கடைசியில் எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதென்றால், ‘இந்த பக்திதான் இந்தப் பிறவியிலேயே சாச்வதத்திலும் சாச்வதமான அத்வைத மோக்ஷமேகூட அடைவதற்கு ப்ரயோஜனப்படுகிறது. ஆதார ஸத்யமான ப்ரம்மத்தோடேயே ஜீவனை ஒன்றாக்கிவிட ப்ரயோஜனப்படுகிறது. பக்தி மார்க்கம் என்றே சொல்லப்படுவதன் பக்தியோ, அந்த ஆதார ஸத்யம் மாயையோடு சேர்ந்து போட்டுக்கொண்ட வேஷத்துடன்தான் (ஸகுண ப்ரமமத்தின் குணங்கள் எத்தனை அழகாக, உசத்தியாக இருந்தாலும் வேஷந்தான். அப்படிப்பட்ட வேஷத்துடனே) ஜீவனைச் சேர்த்து வைப்பதோடு முடிந்து போகிறது. ‘சேர்த்து’ என்பதிலும் அதோடு [ஸகுண ப்ரம்மத்தோடு] அப்படியே ஒன்றாக்கி விடாமல், அதற்கு வேறேயாக இருந்து அநுபவிக்கிற சேர்க்கையாகத்தான் இருக்கிறது. எத்தனைதான் கல்ப கோடி காலம் அப்படி அநுபவித்தாலும், அதுவே பரம சாச்வதமான மோக்ஷம் என்றும் இல்லாமல் (அந்த வழியின் மூல புருஷர்கள் அதுவேதான் சாச்வதம் என்று சொன்னாலும் அப்படி இல்லாமல்) அப்புறம் ஒரு நாள் நிர்குண ப்ரம்மத்தின் உள்ளே ஸகுண ப்ரம்மம் வாங்கிக் கொள்ளப்படுகிறபோது முடிந்து போகிற அசாச்வத மோக்ஷத்தில் சேர்க்கத்தான் அந்த பக்தி ப்ரயோஜனப்படுகிறது’ என்று புரிந்துகொள்ள வைப்பதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ‘நான் இப்படியே சாச்வதமா பக்தி பண்ணிண்டே இருக்கேனே!’ என்று பக்தன் சொன்னாலும், ‘நீ சொன்னா எப்படி? எனக்கு வேஷம் போறும்னு ஆயிடுத்து. ஒரு வேஷம்-னா அதையே சாச்வதமாப் போட்டுண்டிருப்பாளா என்ன? கலைச்சுட்டு ஸ்வதாவா இருக்கணும்னு ஒரு இடத்திலே தோணுந்தானே? இப்படித் தோணியாச்சு. லீலை அலுத்துப் போச்சு. வேஷம் போட்டுண்டு விளையாடினதுக்கு ஸமதையா அத்தனை காலம் இனிமேலே ரெஸ்ட்தான்’ என்று ஈச்வரன் [ஸகுண ப்ரம்மம்] சொல்லி மாயையை ‘டக்’கென்று அவிழ்த்துப் போட்டுவிட்டு நிர்குணத்திலே நின்று விடுவான். மாயையும் ஈச்வரனும் இல்லாமல் ஜீவன் ஏது? ஆகையால் உடனே இவனும் அவனோடு அத்வைத மோக்ஷத்திற்குப் போக வேண்டியதுதான்! அதுதான் சாச்வத மோக்ஷம். ஒரு ப்ரம்மாயுஸ் காலம் பரமாத்மா ரெஸ்ட் பண்ணிக்கொண்டுவிட்டு – அதாவது தன் நிர்குண நிலையில் தனியாயிருந்து விட்டு – மறுபடி ஸ்ருஷ்டி என்று ஆரம்பிக்கும் போதும் முன்னே அத்வைத முக்தி கண்டவன் புது ஸ்ருஷ்டியில் பிறக்கமாட்டான்.

இப்போது முக்யமாகத் தெரிந்துகொண்ட விஷயம், பக்தி என்பது அடி ஆதாரத்தில் அஹங்காரத்தை அன்போடு மூல வஸ்துவில் கரைத்து ஒன்றுசேர்கிறது என்பதே. சேர வேண்டிய வஸ்து நிர்குணமாக இருக்கும் போது, பகவத் குண ரஸங்களில் நம்மைக் கரைப்பது என்பதற்கு இடமில்லாததால் ரஸமெல்லாம் கடந்த அகண்ட சைதன்யத்தில் கரைப்பது என்று ஆகிறது. அகண்ட சைதன்யம் என்றால் எந்த வரையறுப்புக்குள்ளும் அகப்படாத உயிர் மயமான வஸ்து என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒன்றில் ஜீவ பாவத்திற்கு ஆணிவேராக உள்ள ‘நான்’ என்பதைக் கரைக்கணும், கரைக்கணும் என்பதே குறியாக ஞான வழிக்காரன் நினைக்கிறான். அப்படி நினைப்பதுதான் நிஜத்தில் பக்தி என்பது தெரியாமலே நினைக்கிறான். புரியாத ஒரு ஸ்திதியோடு சேர்வது, வெறுமையோடு சேர்வது, சேர்வதற்கே ஒன்றுமில்லாமல் சூன்யந்தான் இருப்பதால் அழிந்துபோவது – என்றெல்லாம் நினைக்காமல், ஸச்சிதானந்தம் என்பதாக உயிர் நிரம்பியிருக்கிற பூர்ணத்தோடு கரைவதற்காகவே சேர வேண்டுமென்றுதான் அத்வைத வித்யையைப் புரிந்து கொண்ட எவனும் [ஸாதனை] செய்வான். அந்த உயிரில் இந்த உயிர் கரையணும் என்னும்போதே, இவனுக்கு அன்பு என்று தெரியாவிட்டாலும், அன்பு தானாகவே ஊற்றெடுத்துக் கொண்டு வரத்தான் செய்யும். ‘இத்தனை நல்ல வஸ்துவான அன்பைத் தெரியாமல் பண்ணுவானேன்? இது தெரியாததாலேயே, தத்வரீதியாக அறிவால் மட்டும் ப்ரம்மத்தைப் பற்றி நினைத்து நினைத்து, அறிவே இழுத்து கொண்டு போய்விடலாம்; ஹ்ருதயத்தைத் திறந்து அன்பு பண்ணி அதை ஹ்ருதயத்தில் ஊன்றியிருக்கிற அஹங்காரத்தின் வேரை அறுப்பதற்கு வழியை அடைத்து விடலாம். ஆகையால் வெளிப்படவே சொல்லிவிட வேண்டும்’ என்றுதான் ‘மோக்ஷ காரண ஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ’ என்று ஆசார்யாள் உச்ச ஸ்வரம் போட்டு சொன்னது.

அன்போடு அஹங்காரத்தைக் கரைத்து மூல வஸ்துவில் சேர்வதே பக்தி என்று சொன்னேன். அந்த மூல வஸ்துவின் ஸகுண ரூபத்திடம் அப்படிப் பண்ணுவதைத் தான் பொதுவாக பக்தி என்று சொல்வதாகவும், அந்த வழியையே ஞான மார்க்கத்திற்கு வேறான பக்தி மார்க்கம் என்று சொல்வதாகவும் ஏற்பட்டுவிட்டது. ஏனிப்படி என்றால்:

ஒரு பாவம் பாவமாக மாத்திரம் ஆணியடித்த மாதிரி ஒரே விதத்தில் இருந்து கொண்டிருக்கும் வரையில் அது ப்ரகாசமாக தெரிகிறதில்லை. அந்த பாவம் புதிசு புதிசாகக் கிளைவிட்டுக் கொண்டு கார்ய ரூபத்தில் ஜீவனோடு வெளியானாலே ப்ரகாசமாகத் தெரியும். ஸ,ரி என்று ஏதோ ஒரு ஸ்வரத்தையே நீட்டிக்கொண்டு போனால் எப்படியிருக்கும்? ஸப்த ஸ்வரம் வந்தாலே ரஞ்ஜகமாயிருக்கிறது. மனஸ் அடங்கி உண்டாகிற மௌன ஸமாதி தவிர, மனஸ் துளித்துளி வேலை பண்ணினாலுங்கூட அப்போது உண்டாகிற பாவங்கள் இப்படிப் புதுப்புது ரூபங்கள் எடுத்துக் கொண்டாலொழிய ப்ரகாசமாகத் தெரியாது. தெரியாது என்றால், பிறத்தியாருக்குத் தெரியாது என்பது மட்டுமில்லை; அந்த ஆஸாமிக்கே அதைப் பற்றி ‘கான்ஷி’யஸாக சோபித்துக்கொண்டு தெரியாது.

நிர்குணத்திடம் பக்தி என்கிறபோது இவன் பேருயிரிடம் தன்னுடைய சிற்றுயிர் கரைய வேண்டும் என்று ஒரே தாபமாக இருப்பதில், அந்த ‘ஒரே தாபம்’ என்பது ஒரே ஒரு ஸ்வரத்தை நீட்டிக்கொண்டு போகிறாற்போலத்தான் இருக்கிறது! அதில் புதிசு புதிசாக ரங்கு [வர்ணம்] ஏற்ற இடமில்லை. புதிசு புதிசு பண்ணுவதெல்லாம் மனஸின் கார்யம். இவனோ மனோ நாசத்தில் குறியாயிருப்பவன். சம தமங்களால் அதை அடக்கிப் போட்டவன். அவனைப் பொறுத்தமட்டில் ‘கான்ஷிய’ஸாக அதைத் தெரிந்து கொள்வதுகூட ‘ஈகோ கான்ஷியஸ்னெஸ்’ஸின் [ஜீவபாவத்திலுள்ள தன்னுணர்வின்] கீழ்தான் வருவதால் வேண்டாத விஷயந்தான். ஆகவே அவனுக்கே இதிலுள்ள பக்தியம்சம் ப்ரகாசமாகத் தெரியாது. பிறத்தியாரைப் பற்றிக் கேட்பானேன்? இவனுடைய பக்தி அவர்களுக்கு அடியோடு தெரியாதுதான்!

இவன் எதைக் குறித்து பக்தி பண்ணுகிறானோ அதுவாவது பிரதியாக ஏதாவது பண்ணி ப்ரகாசமாகத் தெரிய வைக்கிறதா என்றால், அதுவும் இல்லை! அடியோடு இல்லை! நிர்குண ப்ரம்மம் எப்படி ‘ரி-ஆக்ட்’ பண்ணும்? ஸகல கார்ய லோகத்தையும் நிர்வாஹம் செய்யும் ஸகுண ஈச்வரன் இவனுடைய பக்தியை மெச்சி இவனை உள்ளூர மேலே மேலே பக்குவப் படுத்திக் கொண்டுதான் போவான். ஆனால் இவனை ஸகுணத்தில் திருப்பப்படாது என்பதே அவன் உத்தேசமாதலால், தான் செய்வதைத் தெரியாமலே தான் செய்வான். ஆக one-sided-ஆக அந்த one-side-குங்கூட ஸ்வச்சமாகத் தெரியாமலேதான் இந்த பக்தி நடக்கும்! இதுதான் அடியோடு அஹங்காரத்தைக் கரைக்கும் உண்மையான, உச்சமான பக்தியாயிருந்தும் இப்படியிருக்கிறது. ஜீவனைக் கரைக்கிறது மட்டுமில்லாமல் தன்னையுமே கண்ணுக்குக் காட்டாமல் கரைத்துக் கொள்கிற பக்தியாயிருக்கிறது! இவனுக்குத் தியாகத்தை ஊட்டுகிற பக்தி தானும் தியாகியாயிருக்கிறது!

ஸகுணத்திடம் பக்தி என்கிறபோது எப்படி இருக்கிறது? அனந்த கல்யாண குண நிலயமாக இருந்து கொண்டு, நூதன நூதனமான லீலா சரித்ரங்களைப் பண்ணிக் கொண்டிருக்கும் ஸகுண மூர்த்தியிடம் ஒருத்தனுக்குத் தோன்றும் பக்தி பாவம் விதவிதமாகக் கிளைவிட்டுக் கொண்டு புதுப்புது ருசிகளோடு பரவுவதற்கு யதேஷ்டமாக இடம் ஏற்படுகிறது.

எல்லாவற்றுக்கும் ஸாரமாக, அன்பிலே உறவாடுவது என்பது இங்கேதான் கொழுந்துவிட்டு ப்ரகாசிக்கிறது. இடி விழுந்தாலும் தெரியாமல் ஸமாதி நிஷ்டையிலிருக்கிறவனிடம் உறவு கொண்டாடப் போகிற மாதிரிதான் நிர்குண ப்ரம்மத்திடம் அன்பை உறவு என்கிற ஜீவனுள்ள ரூபத்தில் காட்டப் போவது! ஸகுண மூர்த்தியிடமோ ப்ரபுவாக, புத்ரனாக, மாதாவாக, ஸகாவாக, பதியாகப் பல விதங்களில் அவனை வைத்து பக்தி செலுத்தி உறவு கொண்டாட முடிகிறது. அந்த பாவம் கார்ய ரூபத்தில் ஆடுவது, பாடுவது, பஜனை, ஸங்கீர்த்தனம், க்ஷேத்ராடனம், உத்ஸவம், உபந்நியாஸம் என்று தினுஸு தினுஸாக வெளிப்பட வருகிறது. பக்தி பண்ணுவதே இந்த வழியின் ஜீவநாடி என்பதால் ரொம்பவும் கான்ஷியஸாக அப்படிப் பண்ணுகிறான்.

சிகரமாக, பக்திக்குப் பாத்ரமாகிற பகவானும் ரி-ஆக்ட் பண்ணுகிறான். பக்த ஜனங்கள் எல்லாருக்கும் ப்ரத்யக்ஷமாகப் பண்ணாவிட்டாலும் அவர்களில் உசந்த நிலைக்குப் போனவர்களுக்கு தர்சனம் கொடுத்து விதவிதமாக லீலைகள் பண்ணிக் காட்டி, இவர்கள் பண்ணும் பக்தி அத்தனையும் ஒரு பங்கு என்றால் அதைப் போல் கோடிப் பங்கு அன்போடு உறவு கொண்டாடி, கதறக் கதறவும் அடித்து, திட்டுத் திட்டு என்று திட்டக்கூட வைத்து, அந்தக் கதறல் திட்டல்களிலேயும் பக்தியம்ருதத்தைப் போட்டுப் பிசைந்து வைத்து – இப்படியெல்லாம் கூத்தடிக்கிறான்! அவர்களுக்குப் பண்ணியதைக் கதையில் பாட்டில் கேட்பதே மற்றவர்களுக்கும் அவனோடு உறவு கொண்டாடும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அவர்கள் எல்லோருக்குங்கூட ஸூக்ஷ்மமாக, ஆனாலும் மனஸில் தைக்கும்படி, அவன் அருள்கள் பண்ணி உறவைத் தெரிவித்துக் கொண்டேதான் இருப்பான்.

இப்படி ஸகுண ப்ரம்மத்தோடு த்வைதமாகப் பண்ணும் போதே பக்திபாவம் பளிச்சென்று தெரியும்படி இருப்பதால்தான் அதையே பக்தி மார்க்கம் என்றும், அதில் போகிறவனையே பக்தன் என்றும் சொல்லி ஞான மார்க்கத்திற்கும் ஞானிக்கும் வித்யாஸமாக வைத்திருப்பது.

ஆனாலும் பரமாத்மாவுக்கு ஆத்ம நிவேதனம் என்று தன்னை அடியோடு கொடுத்துக்கொள்வது என்று வருகிற போது ஞான மார்க்கக்காரன்தான் பக்தன் என்றே சொல்லப்படுகிறவனையும்விட உயர்ந்து நிற்கிறான்! பக்தி வழிக்காரன் உலக விஷயங்களைப் பொறுத்தமட்டில் அஹங்காரத்தை அடியோடு அழித்துக் கொண்டு விட்டவன் தான். உள்ளே தன்னுடைய மனோபாவத்திலும் பரம நைச்சியமாயிருந்து, அஹங்காரத்தைக் கல்லிப் போட்டவன் தான். ஆனாலும் மனஸுக்கும் உள்ளே, தனி ஜீவனின் ஆணிவேராக இருக்கிற அஹங்காரத்தை அவன் முழுக்க அழிக்க ப்ரியப்படவில்லை. பக்தி பண்ணுவதற்காக, குணாநுபவ ஆஸ்வாதத்திற்காக [சுவைப்புக்காக], உறவு கொண்டாடுவதிலுள்ள ஆனந்தத்திற்காக எப்போதும் தனி ஜீவ அஹங்காரம் இருக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறான். அஹங்காரம், அஹம்பாவம் என்ற இரண்டு வித்யாஸப்படுத்திச் சொன்னதில் பின்னதைத்தான் அவன் பூர்ணமாக பலி கொடுக்க வருகிறானே தவிர முன்னதை இல்லை.

ஆகையால், பக்தி சாஸ்திரத்தில்தான் சரணாகதி, சரணாகதி என்று சொல்லியிருந்தாலும் அந்த வழிக்காரன் பூர்ண சரணாகதியாக அப்படியே ஆத்ம நிவேதனம் செய்து கொள்ளாமல், பரமாத்மாவை அநுபவிப்பதற்கென்றே ஜீவாத்ம அஹங்காரத்தில் கொஞ்சதைத் தனக்கென்று பிடித்து வைத்துக் கொண்டு பாக்கியைத்தான் அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணுகிறான்; பூர்ண சரணாகதி – Total Surrender – இல்லை. அந்த வார்த்தைகளையே சொல்லாத ஞானவழிக்காரன்தான் உண்மையில் அப்படிப் பண்ணி ப்ரம்மாக்னியில் கர்ப்பூரமாக ஜீவாத்மாவை ஆஹுதியாக்கி விடுகிறான்! இதுதான் உண்மையான, முழுசான ஆத்ம நிவேதனம், சரணாகதி, பக்தி, ப்ரபத்தி எல்லாம்!

அத்வைத ஸித்திக்கு இப்பேர்ப்பட்ட அந்தரங்க ஸாதனமாக பக்தி இருப்பதாலேயே வார்த்தைகளை அர்த்த கர்ப்பம் நிரம்பியதாகப் பொறுக்கியெடுத்துப் போடும் ஆசார்யாள், “மோக்ஷ காரண ஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ” என்று அதன் பெருமை தெரியப் போட்டிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is தலை நாடி பற்றிய தவறான கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஆத்மா உயிர்மயமானது ; தத்வப் பொருள் மட்டுமன்று
Next