ஸூத்ர பாஷ்யத்திலும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘விவேக சூடாமணி’யில் மட்டுந்தான் ஆசார்யாள் ஞானத்தின் அந்தரங்க ஸாதனமாக பக்தியைச் சொல்லியிருக்கிறாரென்றில்லை. [ப்ரஹ்ம] ஸூத்ர பாஷ்யத்திலேயே சொல்லியிருக்கிறார். [சிரித்து] “திலேயே” என்று ஏன் சொல்கிறேனென்றால், ஆசார்யாள் பேரில் [ஆசார்யாள் செய்ததாக] இருக்கும் பாஷ்யங்கள், ப்ரகரணங்கள், ஸ்தோத்ரங்களில் அவர் பண்ணினதுதானா, பண்ணினதுதானா என்று ஒவ்வொன்றை ஒவ்வொருத்தர் கேட்கும் போதிலும், அத்தனை பேரும் ஏகோபித்து அவர் பண்ணினதுதான் என்று ஒப்புக் கொள்வதாக இருப்பது ஸூத்ர பாஷ்யந்தான். அதோடு அதுதான் அவர் அநுக்ரஹித்திருக்கும் அத்வைத சாஸ்திரப் புஸ்தகங்களுக்குச் சிகரமாயிருப்பது. அதனால் அதிலேயே ஒன்று சொல்லியிருந்தால் அதற்கு ‘வால்யூ’ ஜாஸ்தி.

ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ப்ரஹ்மாநுபவத்தை உண்டாக்கும் ஸாதனத்திற்கு “ஸம்ராதனம்” என்று பேர் சொல்லியிருக்கிறது1. ‘ஆராதனம்’, ‘ஆராதனை’ என்ற மாதிரியே அர்த்தம் கொடுப்பது ‘ஸம்ராதனம்’ என்ற வார்த்தை. பக்தி வழிபாட்டைத்தான் பொதுவாக ஆராதனை என்கிறோம். இங்கே ஞான வழிபாட்டை “ஸம்ராதனம்” என்று சொல்லியிருக்கிறது. அந்த வார்த்தையை ஆசார்யாள் விளக்கி பாஷ்யம் பண்ணும் போது “பக்தி-த்யான-ப்ரணிதானாதி அநுஷ்டானம்” என்றே சொல்லியிருக்கிறார். ‘ப்ரணிதானம்’ என்றால் ‘ஸமாதி’, ‘ஸமாதானம்’ முதலியவை மாதிரி ‘பரிபூர்ணமாக ஒருமுகப்படுத்திச் சேர்த்து வைப்பது’ என்று அர்த்தம். பொதுவாக, ப்ரஹ்மாநுபவத்திற்கான ஞான ஸாதனமென்றால் என்ன நினைக்கத் தோன்றுமென்றால் (ஆசார்யாள் சொல்லிச்சொல்லிக் கேட்டேதான் இப்படி நினைக்கத் தோன்றும். அப்படி என்ன தோன்றுமென்றால்) அந்தஃகரணத்தைப் பூர்ணமாக ஒருமுகப்படுத்தி த்யானம் செய்வதுதான் அந்த ஸாதனம் என்றே தோன்றும். ஆனால் அதே ஆசார்யாளே இங்கே பக்தியை முதலில் போட்டு அப்புறமே த்யானத்தைச் சொல்லி இரண்டிலும் இரண்டாலும் ப்ரணிதானம் பண்ணவேண்டும் என்கிறார்.

ஆராதனை என்கிற மாதிரியே உபாஸனை என்பதும் பொதுவாக ஸகுண வழிபாட்டைத்தான் சொல்வது. ‘பொதுவாக’ மாத்திரமில்லை; வேத, வேதாந்த சாஸ்திரத்திலேயே அப்படித்தான் குறிப்பிடுவது; கர்மா – பக்தி – ஞானம் என்கிறதை கர்மா – உபாஸனை – ஞானம் என்றே அந்த சாஸ்திரஜ்ஞர்கள் சொல்லியிருப்பார்கள்….

பிரம்ம ஸூத்ரத்தில் ஒரு இடத்தில் ஒருவன் தான் மேற்கொண்ட உபதேசத்தை விடாமல் பல ஆவிருத்தி மனனம் செய்ய வேண்டும் – அதாவது ஆலோசனை பண்ணி அலசி அலசி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் – என்று வருகிறது2. இங்கே மூல ஸூத்ரத்தில் பக்தி பாவத்துடன் செய்கிற உபாஸனை பற்றியோ, அறிவை முக்யமாகக் கொண்டு செய்கிற ஞான ஸாதனை பற்றியோ எதுவுமில்லை. பொத்தம் பொதுவாக ஆவிருத்தி பண்ணனும் (உருப்போடணும்) என்றே இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னாலும், பின்னாலும் ஸூத்ரங்களை அமைத்திருக்கிற போக்கிலிருந்து ஞான மார்க்கத்தில் மஹாவாக்ய உபதேசம் பெற்ற பிறகு முமுக்ஷு பண்ண வேண்டிய மனனம்தான் இங்கே சொல்லியிருப்பது என்று தெளிவாகிறது.

ஆசார்யாள் ரொம்ப அழுத்தமாகத் தெளிவுபடுத்தி அப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட ஸூத்ரத்திற்கான பாஷ்யத்தை முடிக்கிறபோது அவராகவே உபாஸனா மார்க்கத்தையும் பற்றிச் சொல்லி, அறிவது உபாஸிப்பது என்ற இரண்டையும் வித்யாஸப்படுத்தாமல் ஒன்றாகவே உபநிஷத்தில் சில இடங்களில் சொல்லயிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ச்ரவணம் செய்த உபதேசத்தை விடாமல் மனனம் செய்து அர்த்தத்தைக் கண்டுகொண்ட அப்புறம் அந்த அர்த்தம் ஒன்றிலேயே மனஸை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதை த்யானம் என்கிறோம். இதே மாதிரி குரு என்ற ஒருவரிடமே சிஷ்யன் மனஸை இடைவிடாமல் ஈடுபடுத்தியிருந்தாலோ அதை குரு உபாஸனை என்கிறோம்; ராஜாவிடம் ஒரு ப்ரஜை இதேபோல ஈடுபட்டிருந்தால் ‘ராஜாவை உபாஸிக்கிறான்’ என்கிறோம்; பர்த்தாவிடமே ஒரு பதிவ்ரதை ஈடுபட்டிருந்தால் பதி உபாஸனை என்கிறோம் – என்று ஆசார்யாள் காட்டியிருக்கிறார். அதாவது [முறையே] பக்தி பா வங்களில் மிக உசந்ததாகச் சொல்லப்படும் ஆத்ம நிவேதனம், தாஸ்யம், மாதுர்யம் ஆகியவற்றை ஹின்ட் பண்ணியிருக்கிறார்3. இப்படிப் பண்ணின அப்புறந்தான், உபநிஷத்துக்களிலேயே அறிவது, உபாஸிப்பது என்ற இரண்டையும் வித்யாஸப்படுத்தாமல் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறதென்று சொல்லி இரண்டு த்ருஷ்டாந்தங்களும் கொடுத்திருக்கிறார்4. அதிலே முதல் த்ருஷ்டாந்தம் இத்தனை நாழி சொன்ன விஷயத்துக்கு – லக்ஷ்யத்தை தத்வம் என்று மட்டும் வைத்துவிடாமல், உயிருள்ள மூர்த்தி என்ற பக்தி ப்ரேமையோடு அநுஸந்தானம் பண்ண வேண்டும் என்ற விஷயத்துக்கு – பலமான ஸப்போர்டாக இருக்கிறது. அது என்ன என்றால்: ரைக்வர் என்ற ஞானியைப் பற்றி ஒரு ஹம்ஸ பக்ஷி இன்னொரு ஹம்ஸ பக்ஷியிடம், “ஸகலமான பேரும் அறிந்திருக்கிறதெல்லாமும் அவர் அறிந்திருப்பதற்குள் அடக்கமாகிவிடும்” என்று புகழ்ந்து சொல்லிக்கொண்டு ஆகாச வீதியிலே போகிறது. இதிலிருந்து அவர் ப்ரஹ்ம ஞானி என்று நன்றாகத் தெரிகிறது. பக்ஷி சொன்னது ‘வாலறிவு’ என்று தமிழ் நூல்களில் சொல்லியிருக்கும் ஸர்வஜ்ஞதையான ப்ரஹ்ம ஞானந்தான். அந்த பக்ஷி சொன்னதை உப்பரிகையில் சயனித்துக் கொண்டிருக்கிற ராஜா – ஜானச்ருதி என்று அவனுக்குப் பேர் – கேட்டுக் கொண்டிருக்கிறான். அப்புறம் அந்த ஞானியைப் பார்க்க வேண்டும் என்று போகிறான். இங்கேதான் நம் ‘டாபிக்’ வருகிறது. அவர் அறிந்திருக்கும் அந்த ஞான தத்வத்தை தனக்கும் உபதேசிக்கும்படி அவரிடம் பிரார்த்திக்க வேண்டும் என்றே போகிறான். ஆனால் போனவன் அவரிடம், “தாங்கள் அறிந்திருக்கும் தத்வத்தைப் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று சொல்லாமல் “தாங்கள் உபாஸிக்கிற தேவதையைப் பற்றி உபதேசிக்கணும்” என்று சொல்லிப் பிரார்த்திக்கிறான்! அதாவது தத்வ விசாரம், சோதனம், அநுஸந்தானம் என்றெல்லாம் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தில் சொல்லப்படும் த்யானத்தை ஜீவனுள்ள ஒரு மூர்த்தியிடம் பக்தியோடு செய்கிற உபாஸனையின் பாவத்தோடு செய்யவேண்டுமென்று இங்கே ஸ்பஷ்டமாக ஏற்படுகிறது. உபநிஷத்தே அப்படிச் சொல்லி, இவ்வாறு சொல்லியிருப்பதைக் கொஞ்சம் out of context மாதிரிகூடத் தோன்றக்கூடிய இடத்தில் ஆசார்யாளே ப்ரகாசப்படுத்திக் காட்டியிருப்பதற்கு ரொம்ப விசேஷமுண்டு.

எவ்வளவோ விஸ்தாரமாக ஆசார்யாள் பாஷ்யம் பண்ணுமிடங்களில்கூட மூலத்திலுள்ள விஷயத்தை மட்டுமே ஸரியானபடி புரியவைப்பதற்குத்தான் அத்தனை விஸ்தாரமும் தேவையானதாயிருக்குமே தவிர அநாவசிய சுற்றல், வளைசல் கொஞ்சங்கூட இருக்காது. “ஸூத்ரங்களுக்கு அவர் பண்ணும் பாஷ்யங்களின் வாசகங்களும் ஸூத்ரம் மாதிரியேதான் ரத்னச் சுருக்கமாயிருக்கும். வ்யர்த்த விஸ்தார் கஹீம் நஹீம் கர்த்தே”என்றெல்லாம் விநோபாகூடச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இங்கே கொஞ்சம் வெளியிலேயிருந்தே ஒரு விஷயத்தை இழுத்துக்கொண்டு வந்துவிடுகிற மாதிரித் தோன்றுகிறதென்றால் அது அவருக்கு ரொம்பவும் முக்யமாகத் தெரிவதென்றுதானே அர்த்தம்?

ஆனால் ரொம்பவும் ‘ட்ரெடிஷனை’ ரக்ஷிப்பவராததால், ‘அத்வைத சாஸ்திரத்தில் பக்தி என்று வெளிப்படையாக விஸ்தாரம் பண்ணி, விஷயம் புரியாதவர்கள் குழப்படி பண்ணிக்கொள்ள இடம் தரவேண்டாம். ஸமயம் வரும்போது அதை குருமார்களே சிஷ்யர்களுக்குத் தெரிவிக்கட்டும்’ என்கிற அபிப்ராயத்திலாக இருக்கலாம், தம்முடைய புஸ்தகங்களில் சொல்லாமலே இருந்திருக்கிறார் போலிருக்கிறது. ஆனாலும் முடிவாக ‘ஏஷ ஆதேச: ஏஷ உபதேச: ஏதத் அநுசாஸனம்5 – ‘இதுவே ஆக்ஞை, இதுவே final உபதேசம், இதுவே விதிமுறைக் கோட்பாடு’ என்கிற ரீதியில் “விவேக சூடாமணி”யை அநுக்ரஹித்தபோது அதில் பக்தியை வெளிப்படச் சொல்லி அதுதான் ஞானயோக உபகரணங்களில் முக்யமானது என்று தெரியப்படுத்தியிருக்கிறார்.


1 III. 2.24

2 IV. 1.1

3 நாயிகா பாவமான மாதுர்யமே ஆத்ம நிவேதனம் என்பது பொதுக்கருத்தாயினும் இங்கு சீடன் குருவிடம் காட்டும் பக்திப் பாங்கே ஆத்ம நிவேதனம் என்று ஸ்ரீசரணர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

4 முதல் திருஷ்டாந்தம் – சாந்தோக்யம் IV. 1.4; IV. 2.2 இரண்டாம் திருஷ்டாந்தம் – சாந்தோக்யம் III. 18.1; III.18.3

5 தைத்திரீயோபநிஷத் I. 11.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is வேதமே விதிக்கும் ஞானமார்க்க பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கண்ணன் காட்டும் ஞானமேயான பக்தி
Next