இலக்கிய சுவையோடு கூடிய கவிதைகளை அவரவர்கள் பக்குவப்படி வியாக்யானம் பண்ணிக் கொள்வதுன்று. ச்லோகங்களில் மந்த்ர சாஸ்த்ர தத்வங்கள் வரும்போது, ஸம்க்ஷிப்தமாக [சுருக்கமாக]ச் சொல்லியிருப்பதை விவரித்து வியாக்யானம் பண்ணுவது இன்னொன்று. ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கவிதா நயம், மந்த்ர ஸுக்ஷ்மம் இரண்டும் இருப்பதால்தான் அதற்கு ஏகப்பட்ட வியாக்யானங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முப்பத்தாறு வியாக்யானங்கள் கிடைத்திருக்கின்றன1. இவற்றுக்குள் லக்ஷ்மீதரர் பண்ணினது அதிகப் பிரக்யாதி பெற்றிருக்கிறது. இப்போது ஸ்ரீவித்யா தந்த்ரம் என்கிற லலிதோபாஸனையில் தெரிய வந்திருக்கிற அநேக விஷயங்கள் முக்யமாக ‘லலிதா ஸஹஸ்ரநாம’த்துக்கு பாஸ்கரராயர் பண்ணின பாஷ்யத்திலிருந்து கிடைத்திருப்பதுதான். ஸஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கரராயர் போல, ஸெளந்தர்ய ஸஹரிக்கு லக்ஷ்மீதரர். வேறு இரண்டு பெரியவர்கள்2 செய்த ‘ஸெளபாக்ய வர்த்தினி’, ‘அருணாமோதினி’ என்ற பாஷ்யங்களும் ஓரளவு பிரஸித்தியடைந்திருக்கின்றன. நேபாள ராஜாங்கத்தின் மானுஸ்க்ரிப்ட் லைப்ரரியிலிருந்து [கைப்பிரதி நூல் நிலையத்திலிருந்து] ஆனந்தகிரி பாஷ்யம் என்று ஒன்று ஸமீபத்தில் கிடைத்திருக்கிறது. மந்த்ர சாஸ்த்ரத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற அந்த ஆனந்தகிரி என்பவர் இந்த பாஷ்யத்தைத் தன்னுடைய நாளிலிருந்த ஒரு சங்கர மடத்தின் ஆசார்ய ஸ்வாமிகளுடைய ஆக்ஞையின்பேரில் எழுதியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்3. ஆசார்யாளின் நேர் சிஷ்யர்களில் ஆனந்தகிரி என்று ஒருத்தர் இருந்திருக்கிறார்; தோடகாசார்யார் என்பது அவர்தான் என்று நம்பிக்கை. ஆசார்ய பாஷ்யங்களில் பலவற்றுக்கு ‘டீகை’ என்ற விளக்கவுரை செய்தவராகவும் ஆனந்தகிரி என்று ஒருவர் இருக்கிறார். ‘சங்கர விஜய’ங்கள் என்ற ஆசார்யாள் சரித்ரங்களைச் செய்தவர்களிலும் ஒரு ஆனந்தகிரி இருக்கிறார். ‘ஸெளந்தர்ய லஹரி’யின் பழைய பாஷ்யகாரர்களிலும் அந்தப் பெயர் கொண்ட ஒருவர் இருப்பதாக இப்போது தெரியவந்திருக்கிறது…
ஸெளந்தர்ய லஹரிக்கு இருக்கும் பல பாஷ்யங்களில் “கோபாலஸுந்தரீ” என்று ஒன்றுக்குப் பேர். அதில் என்ன வேடிக்கையென்றால், ச்லோகங்களுக்கு தேவீபரமாக பாஷ்யம் பண்ணியிருப்பதோடு அவை விஷ்ணுவையும் ஸ்துதிக்கின்றன என்று காட்டி விஷ்ணுபரமாகவும் அர்த்தம் பண்ணியிருக்கிறது! லலிதாம்பாளையும் கிருஷ்ணரையும் கோபாலஸுந்தரீ என்று இணைத்து விசேஷமாக மந்த்ரமும் இருக்கிறதற்கேற்றாற்போல் இப்படி நம் ஸ்துதிக்கு விஷ்ணு பரமான வ்யாக்யானமும் இருக்கிறது! “சிவ மஹிம்ந ஸ்தோத்ரத்”திற்கு மதுஸுதன ஸரஸ்வதி என்று அத்வைத சாஸ்திரத்தில் பெரியவராக இருக்கப்பட்டவர் இதேபோல விஷ்ணு பரமாகவும் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.
இங்கே தஞ்சாவூரில் ஸரஸ்வதி மஹால் லைப்ரரி, பூனாவிலுள்ள பண்டர்கார் ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட், பரோடா லைப்ரரி என்றிப்படி தேசம் பூராவும் ஸெளந்தர்ய லஹரி ஏட்டுச் சுவடிகளும், பாஷ்யங்களும் கிடைப்பதிலிருந்து அதன் பிரக்யாதி தெரிகிறது. காஷ்மீர்க்காரர்கள் தங்கள் ஊரில்தான் அதை ஆசார்யாள் பண்ணினார் என்று பெரிசாகக் கதைசொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
சுவடியில் எழுதி வைப்பதற்கு மேலே இதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்திருக்கிறது! திருச்சி மலைக்கோட்டை மாத்ருபூதேச்வரர் கோவிலில் ஸுகந்த குந்தளாம்பாள் ஸந்நிதி ரொம்பவும் ஸாந்நித்ய விசேஷத்தோடு இருக்கிறது. ‘மட்டுவார் குழலி’ என்று அந்த அம்பாளைத் தமிழில் சொல்வார்கள். ‘மாத்ருபூதேச்வரர்’ என்பது ‘தாயுமானவர்’ – ‘தாயும் ஆனவர்’ – என்று ரொம்ப அருமையாகத் தமிழில் இருக்கிறது. அங்கே தாயாகவே இருப்பது மட்டுவார்குழலி. இந்த அம்பாள் ஸந்நிதியே ஸ்ரீசக்ராகாரமானது. [ஸ்ரீசக்ர வடிவிலானது]. ஆசார்யாள்தான் பக்கத்தில் ஜம்புகேச்வரத்தில் [திருவானைக்காவில்] அகிலாண்டேச்வரிக்கு ஸ்ரீசக்ர தாடங்கம் பிரதிஷ்டை செய்தமாதிரி, இங்கே ஸந்நிதியை இப்படிப் புனர் நிர்மாணம் பண்ணிக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இந்த ஸந்நிதியில் ‘ஸெளந்தர்ய லஹரி’யின் ‘ஆனந்தலஹரி’ப் பகுதியான முதல் 41 ச்லோகங்களையும் வெகுகாலத்துக்கு முன்பே கல்லில் வெட்டி வைத்திருக்கிறது. ஆசார்யாள் உத்தரவிலேயே அப்படிச் செய்ததாகச் சொல்கிறார்கள். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேசாதிபாத வர்ணனையில் ஆரம்பத்திலேயே [ச்லோ. 43] ஆசார்யாள் ‘சிகுர நிகுரும்பம்…லஹஜ ளெஸரப்யம் ‘ — ‘இயற்கையாகவே ஸுகந்தமுடைய குந்தளம்’ (குந்தளம்தான் ‘குழலி’யில் வரும் குழல்) என்று அம்பாளின் கேசபாரத்தைச் சிறப்பித்திருப்பதால் இந்த ஸந்நிதிக்கு ஆசார்ய ஸம்பந்தம் சொல்வது பொருத்தமாகவே தெரிகிறது.
கைலாஸத்தில் பார்வதீ பரமேச்வராளுடைய ப்ராஸாதத்தின் [மாளிகையின்] ப்ராகாரத்திலேயே ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பொறித்திருப்பதாகவும், மஹாபாரதத்தை மேருவில் எழுதின பிள்ளையாரேதான் இதையும் பொறித்து வைத்தார் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ‘சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்’ செய்த கந்தர்வரான புஷ்பதந்தர் கைலாஸச் சுற்றுச்சுவரில் ஸெளந்தர்ய லஹரியைக் கல்வெட்டில் எழுதியதாக இன்னொரு கதை இருக்கிறது.
இப்படிப் பல கதை இருப்பது இந்த ஸ்தோத்திரத்தின் சிறப்பைக் காட்டுகிறது.
இதிலெல்லாம் வெறும் கதையும் இருக்கக்கூடும் என்று நினைக்கிற நவீனர்கள்கூட ஆச்சர்யப்படும்படியாக இன்னொரு யதார்த்த உண்மையைச் சொல்கிறேன். இந்த ஸமாசாரம் கைலாஸத்துக்கெல்லாம் ரொம்பவும் தாண்டி அமெரிக்கா வரைக்கும் ‘ஸெளந்தர்ய லஹரி’யைக் கொண்டு போய்விடுகிறது! அமெரிக்காவில் பென்ஸில்வேனியா ஸ்டேட்டில் ஃபிலடெல்ஃபியா ஸிடி என்று இருக்கிறதல்லவா? அங்கேயுள்ள ஃபிலடெல்ஃபியா மியுஸீயம் ஆஃப் ஆர்ட் என்ற கலைக்கூடத்தில் அநேக ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றிய ஒன்றும் இருக்கிறது! இதிலே விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ச்லோகத்துக்கும் அதனுடைய கருத்துக்கு ஏற்றபடி அம்பாளின் ஒவ்வொரு சித்திரமும் பக்கத்திலேயே எழுதியிருக்கிறதாம். ஒவ்வொரு ஏட்டிலும் மூன்று ச்லோகம், மூன்று சித்திரம் வீதம் மொத்தம் 36 ஏடோ என்னவோ இருக்கிறதாம். [பாரதப் பண்பாடு ஸம்பந்தப்பட்டதான] ‘இன்டாலஜி’யில் ‘இன்ட்ரெஸ்ட்’ உள்ளவர்கள் அங்கே இருக்கிறார்கள். Art treasure (கலைப் பொக்கிஷம்) என்று சொல்லி நிறையப் பணம் கொடுத்து இதுகளை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் மூன்று ச்லோகங்கள் கொண்ட ஒரு ஏட்டை பென்ஸில்வேனியா யூனிவர்ஸிடியின் ஸம்ஸ்க்ருத ப்ரொஃபஸர் இங்கே மெட்ராஸ் யூனிவர்ஸிடியிலிருந்த ராகவனுக்கு4 அனுப்பி, இந்தச் சித்திரங்களில் ச்லோக தாத்பர்யங்கள் எப்படித் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன என்று விளக்கம் கேட்டு அனுப்பியிருந்தார். நானே யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போனபோது அந்த மூன்று ச்லோக-சித்திர ஏட்டைப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு ச்லோகத்துக்கும் பக்கத்தில் ஒவ்வொரு சித்திரமும் இருந்தது. அதிலே ரூபவர்ணனையாக இல்லாமல், ‘நீதான் மனஸ்; நீதான் ஆகாசம், வாயு முதலான பூதங்கள் என்றெல்லாம் தத்வமாகச் சொல்லியிருக்கிற “மநஸ்த்வம்” என்ற (35-வது) ச்லோகமும் ஒன்று; இதற்குக்கூட ‘ஸிம்பாலிக்’காக [உருவகமாக] சித்திரம் போட்டிருந்தது.
இந்த ஏட்டுச் சுவடியுடைய இன்னொரு பிரதி பரோடா மியுஸீயத்தில் இருக்கிறது. ஒரு காப்பி எப்படியோ அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது!
தமிழ்நாட்டில் ஸெளந்தர்ய லஹரி எப்போதுமே பிரஸித்தமாயிருந்திருக்கிறது. கவிதா ரூபத்திலேயே அதை ரொம்ப நாள் முந்தி வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்5. தற்போது ‘ஸெளந்தர்ய லஹரி’க்கு ரொம்ப மவுஸு ஏற்பட்டிருக்கிறது. இதை ஸ்திரீகள் கோஷ்டி சேர்ந்து ராகமாலிகையாகப் பாடுவது ஊருக்கு ஊர் வளர்ந்துவருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு விசேஷம்: அம்பாளுக்கு இருக்கப்பட்ட பல ரூபங்களில் ‘ஸெளந்தர்ய லஹரி’ சொல்கிற ஸுந்தரியான ராஜராஜேச்வரி மூர்த்தமாக அவள் இருப்பது நம் மடத்துக் கோவிலான காஞ்சி காமகோஷ்டத்தில்தான். அங்கே இருக்கப்பட்ட காமாக்ஷிதான் ராஜராஜேச்வரி. அந்த ஆலயத்திற்கு ஆசார்ய ஸம்பந்தம் நிறைய உண்டு. அங்கேதான் நடுவிலே மங்கிப் போயிருந்த காமகோடி பீடத்தை மறுபடி ஜீவசக்தியோடு ஸ்ரீசக்ரத்தில் ஆசார்யாள் ஸ்தாபனம் பண்ணினார். அங்கேயேதான் ஸர்வஜ்ஞ பீடமும் ஸ்தாபித்து ஆரோஹணம் பண்ணினார். விதேஹ மூக்தியும் அங்கே தான் அடைந்தார். வேறெங்கேயுமில்லாதபடி, பெரிய மநுஷ்யாக்ருதியில் அங்கே ஆசார்யாள் பிம்பரூபத்தில் ஸந்நிதி கொண்டிருக்கிறார். காஞ்சி காமாக்ஷி கோவிலில் அவருக்கு முக்யத்வம் அதிகம். அவருடைய ஜயந்தியை ஜனனோத்ஸவமாக வைசாக சுக்ல பஞ்சமியிலிருந்து ஆரம்பித்து பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது பிரதி தினமும் ஆசார்யாளின் உத்ஸவ விக்ரஹத்தைப் புறப்பாடு பண்ணி, காயத்ரி மண்டபத்துக்கு வெளியில் அம்பாளுக்கு நேரே பீடம் போட்டு அமர்த்தி, இந்த ‘ஸெளந்தர்ய லஹரி’யின் நூறு ச்லோகங்களைத்தான் தினமும் பத்து வீதம் பாராயணம் பண்ணுகிறார்கள். கடைசி பத்து ச்லோகங்களை மட்டும் வெளிப் பிராகாரத்தில் சுக்ரவார மண்டபத்தில் இதே மாதிரி ஆசார்யாளையும் அம்பாளின் உத்ஸவ விக்ரஹத்தையும் எழுந்தருளப் பண்ணி அர்ப்பணம் செய்கிறார்கள். பூர்த்தி பண்ணி ஆசார்யாளுக்குப் பரிவட்டம் சூட்டி மரியாதை செய்வது வழக்கமாயிருக்கிறது. ஆசார்யாளுக்குப் பரிவட்டம், பட்டாபிஷேகம் எல்லாம் முக்யமாக இந்த ‘ஸெளந்தர்ய லஹரி’ பண்ணினதாலேயே என்று நினைக்கும் படியிருக்கிறது!
இதற்கு இத்தனை சிறப்பு, வசீகரம் இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், முக்யமாக இது மாத்ரு ரூபத்தில் – அம்மா என்கிற உருவத்தில் – பரமாத்மாவை நம் முன் நிறுத்துவதுதான்.
1 இவற்றில் முக்கியமான ஒன்பதின் சம்ஸ்கிருத மூல வ்யாக்யானங்களோடு, ஆங்கிலத்திலும் தமிழிலும் சுருக்கமும் சேர்த்து உறையூர் ஸ்ரீ எ. குப்புஸ்வாமி பதிப்பித்திருக்கிறார். மேல் விவரங்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சேவா சமாஜம், 8, நாகரத்தினம் காலனி, சல்லிவன் கார்டன் சாலை, மயிலை, சென்னை – 600 004-ல் பெறலாம்.
2 முறையே கைவல்யாசி்ரமர், காமேச்வர ஸூரி.
3 மேற்படி ஆசார்ய ஸ்வாமிகளின் பெயர் ஆனந்தவார க்ருத்ஸ்ன சங்கராச்சாரியர் என்று ஆனந்தகிரியின் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. ஆனந்தகிரியின் காலமோ, அவர் குறிப்பிடும் ஸ்வாமிகள் எந்த மடத்தின் அதிபதியாயிருந்தவரென்பதோ இதுவரை (1992) உறுதி செய்யப்படவில்லை
4 அமரர் டாக்டர் வே. ராகவன்
5 ஸ்ரீ அ. வே. ரா. கிருஷ்ணஸ்வாமி செட்டியாரும் “அழகு வெள்ளம்” என்ற தலைப்பில் 1970-ல் ஒரு செயுளுருவத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.