காலை முதல் இரவு வரை
வாயை வெந்நீரில் கொப்பளித்த பிறகு புகை பிடிப்பதற்கு யானை வணங்கி, கொம்பரக்கு, பெருஞ்ஜீரகம் தாமரை நெய்தல், ஆல், அத்தி, அரசு, இத்தி, வெள்ளை லோத்ரம் இவற்றின் பட்டை, சர்க்கரை, அதிமதுரம், கொன்றப்பட்டை, யதிமுகம், மஞ்சட்டி போன்ற மருந்து சரக்குகளை அரைத்து நாணற் குச்சியில் ஐந்து முறை தடவ வேண்டும். பூச்சானது கட்டைவிரல் பருமனுள்ளதாகவும், பார்லிவிதை நுழையக்கூடிய துவாரம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். நிழலில் உலர்த்த வேண்டும். காய்ந்த பின் நாணற் குச்சியை எடுத்து விடவேண்டும். நெய்யைத் தடவி தூமக் குழாயில் வைத்து ஒரு முனையை அக்னியில் கொளுத்தி தூமபானம் செய்ய வேண்டும்.
கண்ணில் மையிடுதல் மூலமாக தோஷங்கள் உருகி மூக்கில் சேரும். அதை மூக்கில் மருந்து இடுவதன் மூலம் நீங்கி விடும். ஆயினும் சிறிது தோஷம் வாயினுள் செல்வதால் வாய் கொப்பளித்தல் மூலமாக நீங்கி விடும். அதன் மூலம் சிறிது வாயினுள் மீதமுள்ள அழுக்கினை அகற்ற புகைபிடிப்பு மூலம் வாத கப தோஷங்கள் அறவே நீங்கி விடுகின்றன. நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமமிடுதல், பெண்கள் பூச்சூடுதல் போன்ற முக அலங்காரங்களால் ஆண், பெண்ணிற்கே உரிய நளினத்தையும், தன தான்ய விருத்திக்கும் வழி வகை செய்யும் செயல்களாகும். கந்தல் துணி, அழுக்கு, சிவப்பு நிறம் கூடிய ஆடைகளை அணியக்கூடாது. வேரொருவர் அணிந்திருந்த துணி, பூமாலை, காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது. ருசி, வாய்சுத்தம், நறுமணம் ஆகிவற்றை விரும்பும் ஒருவன் இரண்டு கொழுந்து வெற்றிலைகளுடன் பாக்கு, ஜாதிக்காய், லவங்கம், கர்பூரம், தக்கோலம், மிளகு ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பை இலையில் தடவி நடு நரம்பு மற்றும் வெற்றிலை நுனி கிள்ளிவிட்டு அனைத்தையும் ஒன்றாக மடித்து வாயிலிட்டு மெல்ல வேண்டும். சக்கையை துப்பி விடுதல் நலம். தூங்கி எழுந்ததும், சாப்பிட்ட பிறகும், குளித்த பிறகும், வாந்தி ஆனவுடனும் வெற்றிலை சாப்பிடுவது பத்யமாகும். ஆனால் ரத்த வாந்தி, ரத்தபேதி, ரத்தமாக இருமி காரித்துப்புதல், ஜ்வரம், விஷத்தீண்டல், தொண்டை வாய் உலர்ந்திருக்கையில், கண் நோய் இவைகளில் வெற்றிலையை சாப்பிடக் கூடாது. அதன் பிறகு தனம் ஈட்டித்தருகின்ற வேலைகளில் அதிக சிரத்தையுடன் ஈடுபடவேண்டும். ஒருவனுக்கு ஆயுஸ் தீர்க்கமாக இருந்தாலும் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான பொருள் கூட இல்லாமற் போனால், அவனுக்கு மற்றவரால் நல்ல பெயர் கிடைக்காது. பொருள் சம்பாத்யத்திற்கு விவசாயம், வியாபாரம், பசுபாலனம், அரசாங்க உத்யோகம் ஆகியவை சிறந்தது. செய்யும் தொழில் எதுவாகயிருந்தாலும் இம்மையிலும் மறுமையிலும் சுகம் தரும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிரயாணம், தூக்கம், உணவு, சதஸ், புணர்ச்சி இவைகளை செய்வதற்கு இயற்கை வேகங்களை அடக்காமல் அவைகளை நீக்கிய பிறகே செய்ய வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் ரத்தினக்கல், வீட்டிலுள்ள பெரியவர்கள், நெய், மங்கள வஸ்து ஆகியவையில் ஒன்றை பக்தியுடன் தொட்ட பிறகு இறங்க வேண்டும். குடை, காலணி அணிந்து இரண்டு முழங்கை நீளம் மட்டுமே நேராக பார்வையை செலுத்தி நடக்க வேண்டும். கோவிலின் நிழல், மதிப்பிற்குரியவர், கொடிமரம், மங்களவஸ்து ஆகியவற்றின் நிழல், சாம்பல், உமி, மட்டமான பொருள் ஆகியவற்றை கால்களால் தாண்டாமல், கால் அவைகளின் மேல் படாமல் செல்ல வேண்டும். சரளைகற்கள், மண்கட்டிகள், பலிபீடம், குளியலறை, ஆகியவற்றை தாண்டாமல் தள்ளி செல்ல வேண்டும். மத்யானம், சந்தி வேளை, இரவு, நடு இரவு ஆகிய நேரங்களில் நான்கு பாதைகள் சந்திக்கும் இடத்தில் போகக்கூடாது. இரவில் பெரிய மரங்களருகில் செல்லக் கூடாது. கொலைக்களம், காடு, பாழடைந்த, மனிதர்களில்லாத வீடு, சுடுகாடு ஆகிய இடங்களுக்கு பகலிலும் போகக்கூடாது. இறந்த மனிதரின் உடலை நிந்திக்கக் கூடாது. மதிப்பிற்குரியவர், தனக்கு மரியாதைக்குரியவர், மங்கள வஸ்து இவைகளை பிரதக்ஷிணமாகத்தான் கடந்து செல்ல வேண்டும். மற்றவைகளை பிரதக்ஷிணம் செய்யக்கூடாது. நான்கு பாதைகள் சந்திக்குமிடம், பூஜைக்கு உகந்த மரங்களாகிய அரசமரம், பலாசம் போன்றவைகளை கண்டவுடன் தலை குனிந்து நமஸ்கரிக்க வேண்டும். வெளியே செல்லும் போது தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். எதிரிகளுடன் பயணம் கூடாது. பழக்கமில்லாதவர்களுடன் பயணம் கூடாது. தனியாக பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். நோயாளி, வயதில் பெரியவர், பெண்கள், தலையில் பாரம் சுமப்பவர், வண்டிகள், பிராமணர் இவர்களுக்கு வழி கொடுக்க வேண்டும். குளி, சாப்பாடு, பானம் இவை தன்னை நம்பியிருக்கும் பிராணிகளுக்கு செய்த பிறகே தான் செய்ய வேண்டும். கொழுந்து விட்டெரியும் நெருப்பினருகில் செல்லக்கூடாது. சந்தேகத்திற்கிடமான மலைப் பாதை, படகு, மரம் ஆகியவற்றை தவிர்க்கவும். நம்மை விரும்பாதவர் வீட்டிற்குச் செல்ல வேண்டாம். ஆசனத்தில் உரிமையாளர் அனுமதியின்றி தானாகவே ஏறி அமரக்கூடாது. நன்றாக தூங்குபவனை எழுப்பலாகாது. கை, வாய், கால், கண், வயிறு இவைகளால் கேலி செய்யும் வகையும் அசைக்கக்கூடாது. பதினைந்து நாட்களில் மூன்று முறை தலைமுடி, தாடி, நகம் இவற்றை வெட்டிக் கொள்ள வேண்டும். தன் கையாலேயே தலைமுடி, தாடி வெட்டக்கூடாது. நகமும் அதுபோல பல்லால் கடித்து துப்பக்கூடாது.
பிறகு பசியும் தாகமும் நன்கு ஏற்பட்டவுடன் வாயுவை குறைப்பதும், நறுமணத்துடன் கூடிய, குளிர்காலத்தில் சூடு செய்தும், வெயில் காலத்தில் சூடாக்காமலும் நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். எண்ணெய் குளியல் உடலிலுள்ள வாதத்தை குறைத்து புஷ்டி, தூக்கம், திடம், பருமன் ஆகியவற்றை கொடுப்பதும், தீக்காயம், எலும்பு முறிவு, அடி, வலி, தளர்ச்சி, உற்சாகமின்மை தோல் சுருக்கம் ஆகியவை நீக்கும் சக்தியை உடையது. தேர் அச்சாணி, தோல்குடம் இவையில் எண்ணை தேய்ப்பதால் நீண்ட நாள் கேடு வராமல் உழைப்பது போல் உடலில் எண்ணை தேய்ப்பதால் நோயின்றி உடல் பாதுகாக்கப்படுகிறது. வாயு தொடு உணர்ச்சி புலனில் அதிகமாயுள்ளது. இந்தப் புலன் நம்முடலில் தோலில்தான் உள்ளது. அதனால் எண்ணெய் தேய்ப்பு தோலிற்கு சிறந்தது. அதனால் அதை நாம் தினமும் கடைபிடிக்க வேண்டும். தலை, காது, பாதம் ஆகிய இடங்களில் எண்ணெயை அதிகம் பயன்படுத்த வேண்டும். தலையில் எண்ணெய் தேய்ப்பதால் முடிக்கு நல்லதும், கபாலத்திலுள்ள ஐம்புலன்களுக்கும் புஷ்டியை கொடுக்கிறது. காதில் எண்ணெயை நிரப்புவதால் தாவாக்கட்டை, கழுத்திலுள்ள நரம்புகள், தலை மற்றும் காது இவ்விடங்களில் ஏற்படும் வலி நீங்குகின்றன. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால் கால்களுக்கு தெம்பு, தூக்கம் மற்றும் கண்பார்வை பிரகாசமடைதல் போன்றவை ஏற்படுகின்றன. மட்டுமல்ல, கால்மரத்துப் போன தன்மை, தளர்வு, நீட்டி மடக்க முடியாத நிலை, கொக்கி போட்டு இழுப்பது போன்ற வலி, வெடிப்பு ஆகியவை நீங்கவும் பாதத்தில் எண்ணை தேய்ப்பு உதவுகின்றது. இவ்வளவு சிறப்புகளை எண்ணெய் தேய்ப்பு பெற்றிருந்தாலும் கபத்தினால் பாதிக்கப்பட்டவர், உடலை வாந்தி பேதி மூலம் சுத்தம் செய்து கொண்டவர், அஜீர்ணம் ஆகிய நிலைகளில் தவிர்க்க வேண்டும். தேகப்பயிற்சி என்பது உடலுக்கு ஆயாசத்தை தரக்கூடிய செயலே ஆகும். தேகப்பயிற்சியால் உடல் பளு குறைந்து லேசாகவும், வேலைகளை எளிதில் செய்யக்கூடிய சாமர்த்யத்தையும், ஜீர்ண உறுப்புகள் சுறு சுறுப்படையவும், கொழுப்பு குறையவும், திரண்டுருண்ட தசைகளும் ஒருவனால் பெறமுடியும். இருப்பினும் வாதபித்தங்களால் துன்புறும் போதும், குழந்தைகள், வயோதிகர் மற்றும் அஜீர்ணமுள்ளவரும் தேகப்பயிற்சியை தவிர்த்தல் நலம். பலசாலியும், உணவில் எண்ணெய், நெய் போன்றவற்றை சேர்த்துன்பவரும் குளிர்காலம் மற்றும் வஸந்த ருது எனும் சித்திரை-வைகாசியில் தன்பலத்தின் பாதியளவே தேகப்பயிற்சிக்காக செலவிட வேண்டும். மற்ற பருவ காலங்களில் மிகக் குறைந்த அளவே தேகப்பயிற்சினை செய்ய வேண்டும். தேகப்பயிற்சி முடிந்தவுடன் உடல் முழுவதும் நன்கு பிடித்துவிட வேண்டும். வியர்வையை உடலிலேயே தேய்க்க வேண்டும் என்று யோகாப்யாஸத்தில் கூறப்பட்டுள்ளது. அதிகமான தேகப்பயிற்சியால் தண்ணீர் தாகம், உடல் இளைப்பு, மூச்சிழுப்பு, ரத்தவாந்தி, பேதி, உடல் தளர்வு, சோர்வு ஆகியவை ஏற்படும். இருமல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் தோன்றும். தேகப்பயிற்சி-இரவில் கண் விழித்தல்-அதிக தூரம் நடத்தல்-புணர்ச்சி-அதிக சிரிப்பு-பிரசங்கம் போன்றவைகளை அதிகமாக செய்பவன் யானையை சண்டைக்கு அழைக்கும் சிங்கம் போல் விரைவில் மடிவான்.
-சுபம்-
மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net