காலை முதல் இரவு வரை - Part II ஆரோக்யம், ஆயுஸ், ஐஸ்வர்யம், அறிவு ஆகியவை நிலைநிற்கும், வேண்டிய அளவு கிடைத்துவிட்டதாக பெருமை கொள்ள வேண்டாம் சவம் எரியூட்டும் போது அதிலிரு

காலை முதல் இரவு வரை - Part II

ஆரோக்யம், ஆயுஸ், ஐஸ்வர்யம், அறிவு ஆகியவை நிலைநிற்கும், வேண்டிய அளவு கிடைத்துவிட்டதாக பெருமை கொள்ள வேண்டாம். சவம் எரியூட்டும் போது அதிலிருந்து வரும் புகை, மத்யபானத்தில் அதிக ஆர்வம், பெண்ணிடம் நம்பிக்கை, அகிகம் சிரித்து பேசுதல் போன்றவை தவிர்க்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்பிரகாரம் கட்டாத வீட்டில் ஒரு நாள் கூட தங்க வேண்டாம். நோய்கள் அதிகமுள்ள தேசத்தில் வசிக்க வேண்டாம். மருத்துவர் இல்லாத ஊரில் வாழ்வது தவறாகும். தலைவனில்லாத ஊரில் வசிககக் கூடாது. தர்ம நிஷ்டையில்லாத ஜனங்கள் அதிகமுள்ள ஊரிலும் வசிக்கக் கூடாது. தொற்று நோய் கிருமிகள் அதிகமுள்ள இடத்திலும் வசித்தல் தவறு. மலைப் பிரதேசத்திலும் வசிக்கக் கூடாது. நல்ல தண்ணீரும், மருந்தும், சமித்து, பூ, புல், விறகு ஆகியவை தாராளமுள்ளதும், ஐஸ்வர்யமும், மங்களகரமானதும், ரம்யமானதும், பண்டிதர்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டணத்தில் வாசம் செய்ய வேண்டும்.
மனிதர்களையும், தேவர்களையும், சித்தர்களையும், சாஸ்திரங்களையும் நிந்திக்காதவனாகவும், தர்மார்த்த சுகங்களை ஏற்றமும் குறைவுமில்லாமல் ஆராதிப்பவனாகவும் யோக்யதைக்கு தக்கபடி ஜனங்களை மதிப்பவனாகவும், தன்னுள்ளேயுள்ள எதிரிகள் ஜெயித்துக் கொண்டு பத்து வகையான கர்ம மார்கங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 1.ஹிம்ஸை (உயிர்களை துன்புறுத்தல்) , 2.பிறர் பொருள் களவாடுதல், 3.பல பெண்களிடம் இச்சை, 4.மற்றவரைப் பற்றி தவறாக பிறரிடம் பேசுதல், 5.கடுமையான வார்த்தைகளை பேசுதல், 6.பொய் பேசுதல், 7.சம்பந்தமில்லாத முன்னுக்கு பின் முரணாகப் பேசுதல், 8.பிறருக்கு ஆபத்தை விரும்புதல், 9.களவாடும் எண்ணம், 10.சாஸ்திரம் மற்றும் தர்ம விருத்தமான எண்ணம் ஆகிய பத்தும் பாபமான கர்மங்களாகும். முதல் மூன்றும் உடலாலும், அடுத்த நான்கும் வாக்கினாலும், இறுதி மூன்றும் மனதாலும் செய்யக் கூடிய தவறுகள் அவைகளை மனிதன் தவிர்க்க வேண்டும்.
பிறருக்கு நாசத்தை ஏற்படுத்தி தனக்கு ஐஸ்வர்ய சம்பாதனம் தேவையில்லை. தர்மத்தின் வழியில் சம்பாதித்த தனம் தானம் செய்வதற்கு ஒருவனால் முடியாமற் போனாலும் ஸ்வர்க்கத்திலும், மோக்ஷத்திலும் சுகங்களை எந்தவித பிரயாஸமுமில்லாமல் அவனால் சம்பாதித்து விடமுடியும். மாலையில் எளிதில் ஜீர்ணமாகக் கூடியதும் உடலுக்கு ஆரோக்யத்தை தரக்கூடிய உணவை சாப்பிட்ட பிறகு, மனசை சமாதானத்துடன், சுத்தமாக, ஈஸ்வர சிந்தனையுடன், அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து சுத்தமான கூட்டமில்லாத இடத்தில் இரண்டு அல்லது மூன்று நம்பத்தகுந்த சேவகர்களுடன் படுக்க வேண்டும். சுகம் தரும் அளவு உயரமுள்ள தலையணையும், நன்றாக விரிக்கப்பட்டதும், விஸ்தாரத்துடன் மேடுபள்ளமில்லாத சுகத்தை தரக்கூடிய, மிருதுவான, மங்களகரமான படுக்கையை கால்முட்டியின் அளவு உயரமுள்ள கட்டிலில் படுப்பதற்கும் அதே விதத்திலுள்ள ஆசனத்தையும் பயன்படுத்த வேண்டும். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்து குருவின் நேராக கால்களை நீட்டாமல் படுக்க வேண்டும். படுக்கையறை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கிலோ அமையும் படி இருக்க வேண்டும். படுக்கும் தருவாயில் தர்மத்தை நினைவில் கொள்ள வேண்டும். இப்படியாக சதா ஆசாரம் கொண்டு அழிந்து போகக்கூடிய உடலினால் எப்பொழுதும் நாசமில்லாத வஸ்துவை அடைய முயற்சி செய்ய வேண்டும். எப்போது நிகழும் என்று அறியமுடியாத மரணத்தை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பயந்து ஆரோக்யம், ஐஸ்வர்யம், விவேகம், இளமை ஆகியவற்றிற்கு அனுசரித்து தன் நிலையுணர்ந்து கடமையை செய்பவனின் ஆயுஸ் சுகத்தைத் தருவதும் சுபத்தைக் கொடுப்பதுமாகவும் அமையும். பூமியில் நமக்கு குருவாக விளங்குபவர் அனைத்து பிரதாபங்களையும் இருப்பிடமாகக் கொண்டவராவார். அதனால் பக்தியுடன் அவருக்கு கோபம் வராத விதத்தில் சிரத்தையுடன் சேவையை செய்து வர வேண்டும். அவருடைய அருகாமையில் உள்ளபோது கட்டிலில் அமர்தல், தலையணையில் சாய்ந்து உட்காருதல், கோபப்படுதல், சிரித்தல், வாதப்பிரதிவாதம் செய்தல், கொட்டாவி விடுதல், ஆகியவற்றை செய்யக்கூடாது. இப்படியாக எல்லா ஜீவராசிகளும் சார்ந்திருக்கக்கூடிய ஆசாரங்களை அனுஷ்டிப்பவன் பிரசித்தங்களும், பிரசஸ்தங்களுமாகிய குணங்களைக் கொண்ட ஸமூஹத்தால் நம்பிக்கையை சம்பாதித்து தேவர்களால் காப்பாற்றப்பட்டு நூறு வயதிற்கும் மேலாக வாழ்ந்து, ஆனந்தமாக, நிரந்தர புண்ய கார்யங்களை செய்பவனாக இந்த ஜன்மத்தில் மட்டுமல்லாது அடுத்த ஜன்மத்திலும் அல்லது சரீர நாசத்திற்குப் பிறகு மோக்ஷத்தை அடைந்து சந்தோஷத்தை அடைவான்.

-சுபம்-

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net