மனம் மனித மனம் உடலில் எங்கிருந்து செயல்படுகிறது என்று இன்று வரை அறிய முடியவில்லை ஏனென்றால் மனம் அணுப்பிரமாணம் உடலில் இருக்குமிடமே தெரியவில்லை மனித மனப்பான்மை எ

மனம்

மனித மனம் உடலில் எங்கிருந்து செயல்படுகிறது என்று இன்று வரை அறிய முடியவில்லை. ஏனென்றால் மனம் அணுப்பிரமாணம் உடலில் இருக்குமிடமே தெரியவில்லை. மனித மனப்பான்மை எண்ணங்களிலும் செய்கைகளிலும் பலவிதமான மாறறங்களாக காணப்படுகின்றன. காஷ்மீரில் தீவிரவாதிகளின் குண்டு வைத்தல், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடந்தேறும் கொடுமைகள் மனித வெடிகுண்டு கலாச்சாரம் என்று மனித மனம் குரங்காக மாறியதற்கு பொருள்பற்றும் ஈஸ்வர சிந்தனை குறைந்ததுமே முக்கிய காரணங்களாகும். மனிதரின் மனப்பான்மைகளுடைய பலதரப்பட்ட வகைகளுக்கெல்லாம் மூலப்பொருள்கள் மனதில் அடங்கிய ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களே என்று ஆயுர்வேதம் கண்டுபிடித்து உபதேசித்துள்ளது. மனிதரின் மனதில் அலுவல்கள் அனைவற்றையும் மூன்று குணங்களும் ஒன்று சேர்ந்தே நிறைவேற்றுகின்றன. மனது உருவத்தில் அணுவாயினும் அதன் குணங்கள் அகில அலுவல்களுக்கும் அதிபதியாக அதிகாரியாக விளங்குவதினால் ஸத்வம் ரஜஸ் தமஸ்ஸுகள் மஹாகுணங்கள் என்று சாஸ்திரங்களில் பிரசித்தம். ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்களின் ஏற்ற இறக்கங்களால் ஸத்வகுணம் மிகுதியாக கொண்ட மனதை ஸாத்வீகம் என்றும், ரஜஸ் அதிகமானதை ராஜஸம் என்றும், தமோகுணம் மிகுந்தவரை தாமஸம் என்றும் மனஸை மூன்று விதமாய் பிரிக்கின்றனர். ஸத்வகுணம் நிறைந்த மனிதரின் சுபாவம் பரம சுத்தம், தூய்மை, நேர்மையுடன் கூடியதாகும். மேலும் வேதசாஸ்திரம், மறுபிறவி பாப புண்ய கருமங்களுக்குப் பலன் இவைகளில் பூர்ண நம்பிக்கை, தனக்கு நேரும் கஷ்டங்கள், செய்யும் விரோதங்கள் முதலியவைகளை பொருத்துக் கொள்ளுதல், புத்தி மேதை ஞாபக சக்திகள், பிரயோசனம் சிறிதும் எதிர்பாராமல், தேசசேவை, பரோபகாரம், தர்ம கர்ம விரதாநுஷ்டானம் செய்தல், ஆன்ம ஞானத்தில் ஈடுபடுதல்.

ரஜோகுணம் மிகுந்த மனிதரின் சுபாவம் புத்திமேதை, தேஜஸ், சுறுசுறுப்பு, சௌர்யம், வீர்யம், பொறாமை, ஸந்தோஷம், பொய் பேசுதல், தயவின்மை, டாம்பீகம், அகந்தை, கர்வம், காமம், குரோதம், துக்கம், ஹிம்ஸை முதலியவைகள்.

தமோகுணத்தின் சுபாவம் துக்கப்படவேண்டிய அவசியம் இல்லாதகார்யத்திலும், அனாவசியம் துக்கப்படுதல், நாஸ்திக சுபாவம், அதர்ம கார்யங்களில் ஈடுபடுதல், புத்திக்குத் தடங்கல், தெளிவின்மை, பகுத்தறிவின்மை, தோஷமுள்ள எண்ணம், ஒரு கார்யத்திலும் பிரவிருத்தியில்லாத சோம்பேறித்தனம், பகல் ராத்திரி ஸதா தூங்குதல் ஆகியவை.

மனோ குணங்களை தீர்மானிப்பதில் தாயின் சினை முட்டையும் தந்தையின் விந்து சேர்க்கையினாலும் அவர்களின் மனோகுணங்களையும் அநுஸரித்து உண்டாகின்றன. இது மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது பூர்வ ஜனமங்களில் இருந்த பழக்க வழக்கங்கள், ஆஹாரங்கள், மனப்பான்மைகளையும் அநுசரித்து இந்தப் பிறவியிலும் தொடர்ந்து ஏற்படுகின்றன. ஆகையால் மனதின் ஸத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் தானாக மாறுவதில்லை. தாய் தந்தையரின் விசேஷ தீவிர முயற்சியால் குழந்தையின் மனோகுணங்களை பெற்றோரின் விருப்பப்படிக்கு ஓரளவு மாற்ற முடியும். மாமிச உணவுகளை முழுவதும் நிறுத்தி காய்கனிகள் மற்றும் உடலுக்கும் மனதிற்கும் அமைதியை தரக்கூடிய உணவுகளினால் மனம் சோர்வு நீங்கி பலம் அடைவதுடன் மனதில் ஸத்வகுணத்தின் அளவு அதிமாகிறது. ஸத்வகுணம் நிறைந்த புத்திரர்களை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் அறிஞர்களின் மரபு. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தன் உபதேசத்தில் கூறும்போது 'ஒரு மனிதன் தன்னுடன் நிறைய பணத்துடன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான், தீடீரென்று மூன்று திருடர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். முதல் திருடன் அவனிடமிருந்த பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மற்ற இருவரிடம் 'இவனை விட்டுவிட்டால் ஆபத்து, கொன்று விடுவோம்'என்று கூறி கூர்வாளை உயர்த்தினான். இரண்டாவது திருடன் அவனை நிறுத்தி 'கொல்ல வேண்டாம், கை, கால்களை கட்டி தரையில் வீசிவிடுவோம்'என்றும் கூறி கை கால்களை இறுக்கமாகக் கட்டி கீழே தள்ளி விட்டு சென்றுவிட்டனர். சிலமணி நேரங்கள் கழித்து மூன்றாவது திருடன் திரும்பிச் செல்லும்போது "அடடா, இன்னுமா c இங்கே கிடக்கிறாய்" என்று கூறி கட்டுகளை அவிழ்த்து'நேராக சென்று வலம்புறம் சென்றால் உன் ஊர் வரும் செல் என்று கூறினான். 'மூவரில் c நல்லவனாகத் தெரிவதால் என்னுடன் வீட்டிற்கு வருகிறாயா?' என்று அம்மனிதன் அழைக்க திருடன் மறுத்து 'வழிகாட்டுவேன் வர இயலாது'என்று கூறிச்சென்றான் என்கிறார்.

அம்மனிதன் வேறுயாருமல்ல,நாம்தான்! பணம், நாம் சேர்த்து வைத்த புண்யமும், ஒழுக்கமும் காடு இந்த உலகம், மூன்று திருடர்கள் ஸத்வம், ரஜஸ், தமஸாகும். 'கொல்வோம்'என்று கூறியவன் தமஸ். நம்மை அழித்து விடும். 'கட்டிப்போடுவோம்'என்றது ரஜஸ். உலகில் பந்த பாசத்துடன் நம்மை இணைத்து சம்சார பந்தத்தை விடமுடியாமல் மஹா மாயையினால் கட்டுண்டு கிடக்கச் செய்வது. கட்டுக்களை அவிழ்த்து மாயயை விடுவித்து மோக்ஷத்திற்கு வழிகாண்பிப்பது ஸத்வகுணம். ஆனால் அதுவும் நம்முடன் வராது. மூன்று மஹாகுணங்களையும் விட்டொழித்து சமாதி என்னும் நிலையை அடையத் தெரிந்தவருக்கே மறு ஜன்மமின்றி பரமாத்ம நிலை ஏற்படும் என்கிறார்.

ஆகையால் நாம் ஒவ்வொரும் ஸத்வ குணத்தின் சுபாவத்தைப் பெற உணவில் மிகுந்த ச்ரத்தையுடனும், உயர்சிந்தனைகளாகிய ஈஸ்வர பக்தி, தர்ம கர்ம விரதானுஷ்டானம் ஆகியவைகளில் ஈடுபாட்டுடன் இருந்து மோக்ஷ ப்ராப்திக்கு முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net