நடை - உடை - பாவனை ஆயுர்வேதம் மனிதனின் நடை, உட்காரும் விதம், படுத்துறங்கும் முறை போன்றவற்றை உடல் அமைப்பிற்கு தகுந்தவாறு எடுத்துரைத்துள்ளது ஒரு மனிதனின் நடையை வைத

நடை - உடை - பாவனை.

ஆயுர்வேதம் மனிதனின் நடை, உட்காரும் விதம், படுத்துறங்கும் முறை போன்றவற்றை உடல் அமைப்பிற்கு தகுந்தவாறு எடுத்துரைத்துள்ளது. ஒரு மனிதனின் நடையை வைத்தே அவனுடைய உள்மனதை நம்மால் கிரஹிக்க முடியும். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை ஒருவரின் உள்ளம் திடமானது என்று நாம் அவருடன் பழகும் போது அறிய முடியும். பஸ்ஸில் பயணம் செய்யும்போது நின்று கொண்டே பயணம் செய்ய நேர்ந்தால் நீண்ட நேரம் மேல்கம்பிகளை அழுத்தமாக பிடிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக வராமல் கைமரத்தது போல ஆகிவிடும். சீட்டிற்கு மேல் உள்ள கம்பிகளைப் பிடித்து பயணம் செய்வது நல்லது. கால்களை சற்று அகட்டி நேராக நின்று பஸ்போகும் பாதையில் பார்வையை வைக்காமல் இரண்டு பக்க சீட்டுகளில் ஏதேனும் ஒரு பக்கமாக நிற்பது நல்லது. அதுபோல அமரும் நிலைகளில் தரையில் அமரும்போது நேராக அமர்ந்து கைகளை தரையில் ஊன்றாமல் கால்களை மடக்கி அமருவது மற்றவருக்கு நாம் செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, உடல் வலி ஏதும் வராமலும் ஒரு பாதுகாப்பையுமளிக்கும். ஆஸனத்தில் அமரும்போதும், பாதங்கள் நன்கு தரையில் படும்படி, நேராக அமர வேண்டும். நேராக அமர்வதால் மனம் விஷயங்களில் லயிக்கிறது. சிரத்தை கூடுகிறது. கேட்கும் விஷயங்களை ஆராய்ந்து தகுந்த பதில்களை முதுகெலும்பு நேராக இருக்கும் போது மூளை தயாரித்துத் தருகிறது. கூண் போட்டு அமர்ந்தால் சோம்பலும், கொட்டாவியும் அடிக்கடி ஏற்படும். நேராக நிமிர்ந்து அமர்ந்தாலும் விரைப்பாக அமரக் கூடாது. விரைப்புடன் அமர்ந்து நிலையில் நரம்புகளில் வலியை ஏற்படுத்தும்.

படுக்கும்போது இடது பக்கமாக சரிந்து, கால்களை நன்கு நீட்டி, கைகளை ஒருக்களித்து படுத்தல் நலம். நமது உடலில் ரத்த ஓட்டம் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக செல்வதாலும, உணவை ஜீர்ணம் செய்யும் திரவமனைத்தும் உணவுப் பையின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்தீற்கு வீழ்வதாலும் இடது பக்கம் சரிந்து படுப்பதால் ஹிருதயத்தின் வேலை சுலபமாகவும், உணவும் எளிதில் ஜீர்ணமாகும். நேராக படுப்பதாலும் விரோதமில்லை, குப்புறப்படுப்பது மிகவும் கெடுதல்.

உடைகள் எப்போதும் காலத்திற்குத் தகுந்தவாறு அணிய வேண்டும். உஷ்ணமான பூமியில் பருத்தி ஆடைகளை அணிவது நலம். குளிர் பிரதேசங்களில் கனமான குளிர்காற்று எளிதில் புகமுடியாத ஆடையே நலம் தரும். சிவப்பான ஆடைகளை அணியக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அவ்வகை ஆடை சாதாரண ஜனங்களுக்கு உகந்ததல்ல, பிறர் நம்மீது பார்வை படும்படியான வண்ணங்களை ஆடையாக உடுத்தல் கூடாது. இன்றைய இளைய சமுதாயம் ஆடைகளின் விஷயத்தில் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர். பள்ளிகளில் உடையின் மேன்மையை குழந்தைகள் மனதில் நன்கு பதியும் படியான வகுப்புகளை அசிரிய, ஆசிரியைகள் எடுக்க வேண்டும்.

பாவனைகள் மிகவும் முக்கியமானவை. பேசும்போது கைகால்களை ஆட்டி பேசுதல் கூடாது. சிலர் பேசும்போது கண் மற்றவரை சந்திக்காமல் அலைபாயும், இது மிகவும் தவறு. நாம் மற்றவருடன் பேசும்போது உடைகளை திருத்திக் கொள்வது, முதலையை கையால் தொடுவது, நகத்தைக் கடிப்பது போன்ற செயல்கள் வெறுப்பை ஏற்படுத்தும். மிகுந்த அன்யோன்யத்தையும், மரியாதையுயும் நம்முடைய பாவனைகள் நமக்கு சம்பாதித்துத் தரும் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். கடல் நீர் மேலே ஆர்பரித்தாலும் ஆழ் கடலில் அமைதி நிலவுகிறது. அது போல சாந்தமான மனதை உடையவர் நம்மை தம் சாந்தமான பாவனையால்கவர்ந்து விடுகிறார். நடை, உடை, பாவனைகளில் திருத்தமான நிலையை உடையவர்களை நாம் போற்றிப் புகழவேண்டும். அவர் வழியை நாமும் கடைபிடிக்கவேண்டும்.