“கணக்காயிருக்கணும்” : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“கணக்காயிருக்கணும்” என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டண்ட் ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் – அவர்கள் பணக் கணக்குகளை சரிபார்க்கிறவர்கள் அல்லவா? – எனக்கு இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது.

பண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம் – இதை நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஒரு வஸ்துவுக்கு அதன் விலையைவிட ஒரு பைசா அதிகம் கொடுப்போமா? மாட்டோம். பணத்தில் கணக்காக இருப்பது உண்மை. ஆனாலும் பணத்தைக் கொடுத்து பல வஸ்துக்களை வாங்குகின்றோம். அவற்றில்தான் இத்தனை வஸ்துக்கள் போதும் என்று கணக்காயிருக்க மாட்டேன் என்கிறோம். நாம் நிம்மதியாக உயிர் வாழ்வதற்குச் சொற்ப வஸ்துக்கள் போதும். இந்த வஸ்துக்களுக்குத் தேவைப்படும் பணத்தை மட்டுமே நாம் சம்பாதனம் செய்வதென்றால், இப்போதுபோல் ஆலாப் பறக்கவே வேண்டாம் – தேசம் விட்டு, கண்டம் விட்டு எங்கெங்கோ போய் ஆசாரங்களை விட வேண்டாம். சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஆத்ம விசாரத்திற்கும் ஈஸ்வர தியானத்துக்கும் பரோபகாரத்துக்கும் செலவிட வேண்டிய காலத்தை எல்லாம் கணக்கில்லாமல் விரயம் செய்யவேண்டியிருக்கிறது. இரண்டு தினுசில் கால விரயம். முதலில் சம்பாதிப்பதால் கால விரயம். அப்புறம் வேண்டாத வஸ்துக்களைத் தேடித் தேடிப் போவதில் கால விரயம். நிகர விளைவாகவோ ஆத்ம சாந்தியைக் குலைத்துக் கொள்கிறோம். திருப்தியே இல்லாமல் ஆசை வேகத்திலும், பல சந்தர்ப்பங்களில் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்திலும் மொத்துப்பட்டு அவஸ்தைப்படுகிறோம்.

நாம் உயிர் வாழ இந்த வஸ்து அவசியம்தானா என்று பார்த்துக் கணக்காகச் செலவு செய்வதே உண்மையில் “கணக்காயிருப்பதாகும்”. வேண்டாத வஸ்துக்களுக்குப் பேரம் பண்ணி, சாமர்த்தியமாக விலைபேசி, அதற்கு ஒரு பைசாகூட அதிகம் கொடுக்கவில்லை என்பதால் கணக்காயிருந்ததாகாது.

பணம் மட்டுமில்லை. இப்படியே வார்த்தைகளை உபயோகிக்கும்போது ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது, அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வளவளவென்றும் பேசாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டாலே புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் (energy) வீண் (waste) ஆகாமல் இருக்கும். எத்தனையோ சண்டை சாடிகளும் மிச்சமாகும். “கொட்டிவிடலாம், வாரிவிட முடியுமா?” என்று பாமர ஜனங்கள்கூடக் கேட்கிறார்கள். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப் படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். ஆனால், இப்போது லோகம் முழுக்க ஒரே பேச்சு யுகமாகத்தான் ஆகியிருக்கிறது. நியூஸ் பேப்பர்கள் எல்லாம், ‘அவர் பிரசங்கம், இவர் பிரசங்கம்’ என்றுதான் போட்டு நிரப்புகின்றன. காரியத்தில் ஏதாவது நடக்கின்றதா என்றால் ஸைபர்தான். அநேகமாக, காரியத்தில் நடக்கிவில்லை என்பது தெரியாமலிருப்பதற்கே சண்டப் பிரசங்கமாகப் பேசி ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்ட மாதிரி பிரமையை உண்டு பண்ணி வருகிறார்கள்.

பணம், பேச்சு, அப்புறம் நாம் செய்கிற காரியம் – காரியத்திலும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக, அவசியமில்லாத, அல்லது கெட்டதான காரியங்களைச் செய்யவே கூடாது. ஆத்ம சிரேயசுக்கோ, லோகக்ஷமத்துக்கோ பிரயோஜனமில்லாத காரியங்களில் ஈடுபடவே கூடாது.

எல்லாவற்றையும்விட முக்கியம், எண்ணத்தில் கணக்காயிருப்பது. இப்போது நம் சித்தம், ஒரு க்ஷணத்தில் கோடி எண்ணங்களை எண்ணிவிடுகிறது. எண்ணத்துக்கு ஒரு கணக்கு வழக்கே இல்லாமல் இருக்கிறது. இப்படி அதைத் தறிகெட்டுப் போக விடக்கூடாது. எத்தனை கஷ்டப்பட்டாகிலும், கொஞ்சம் கொஞ்சமாக பிரயத்தனம் பண்ணி, இந்த எண்ண ஓட்டத்துக்கு அணைபோட்டேயாக வேண்டும். ஒரே வஸ்துவை நினைப்பது – நினைப்பதுகூட இல்லாமல் அதுவேகூட ஆவது – இதெல்லாம் இப்போது முடியாத காரியம். ஆனாலும், இப்போதிலிருந்து கூடிய வரையில் ஸத்விஷயங்களை மட்டுமே எண்ண ஆரம்பிக்க வேண்டும். சித்தம் சிதறச்சிதற அத்தனைக்கத்தனை அதற்கு பலக்குறைவுதான். அணை போட்டு ஒருசில நல்ல விஷயங்களில் மட்டும் அதைத் திருப்பிவிட்டால், அது சக்தியுடன் செயலாற்றி உத்தமமான பிரயோஜனங்களை உண்டாக்கும். அவசியமில்லாத எண்ணங்களில் மனஸை ஓடவிட்டுக் கொண்டேயிராமல், இது இதைத்தான் நினைப்பது என்று “கணக்காயிருக்கணும்”.

பண விஷயமே நமக்கு முக்கியமாக இருப்பதால், அதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக எல்லா விஷயங்களிலும் – பேச்சு, காரியம், நினைப்பு எல்லாவற்றிலும் – கணக்காயிருக்கணும்.

இந்த நடைமுறை உலகில் மனுஷ்யர்கள் எல்லோரும் ‘பணமே வேண்டாம்’ என்று இருப்பது சாத்தியமே இல்லை. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று திருவள்ளுவரே சொல்லிவிட்டார். ஆனாலும் அவசிய மில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்த மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் ரொம்பப் பிசகு. போதும் என்ற மனஸோடு சம்பாதனம் செய்து, அதைக் கவனத்துடன் செலவழிக்க வேண்டும். சொந்தச் செலவுகளை அதமபட்சமாக்கிக் கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும். செலவுகளுக்குள் நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பது தான் உண்மையில் நமக்கு ‘வரவு’. இதனால் புண்ணிய வரவு கிடைக்கிறது. தனக்கென்று செலவழிப்பதால் பெறமுடியாத ஆத்ம சிரேயஸை இதனாலேயே பெறுகிறோம். சொந்த விஷயங்களில் ‘கணக்காயிருந்தால்’ ஏழை எளியவர்களாலும்கூட ஒரு பைசாவாவது தர்மம் பண்ண முடியும். அப்படி அவர்கள் கொடுக்கிற பைசாவை ஈஸ்வரன் கோடியாக மதித்து அநுக்கிரகம் செய்வான். பரம ஏழைகளாக இருந்து கொண்டு தங்களால் முடிந்த ஸத்காரியங்களுக்கு உதவுகிற எத்தனையோபேர் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருப்பார்கள்.

ஓரொரு பணக்காரனுக்கும் தன்னைவிடப் பணம் படைத்த ஒருத்தனைப்போல் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆடம்பரத்துக்கும் டாம்பீகத்துக்கும் ஊதாரித்தனமாகச் செலவழித்துக் கடன்படுகிறான். உலகத்தில் பணக்காரனுக்குத்தான் ஜாஸ்திக் கடன் இருக்கிறது. இது விசித்திரமாக, வேடிக்கையாகத் தோன்றினாலும், வாஸ்தவ நிலை இதுதான். ஏழைகள் எத்தனையோ பேர் கடனில்லாமல் இருக்கிறார்கள். பணக்காரர்களில் கடனில்லாமல் இருப்பவர்கள் துர்லபமாகத்தான் இருப்பார்கள். போலி அந்தஸ்தை விட்டால், அவனுக்கு இத்தனை செலவு, கடன் இருக்கவே இருக்காது. லோகத்தில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிறபோது நாம் இத்தனை டாம்பீகங்கள் செய்வது நியாயமா என்று அவரவரும் கேட்டுக்கொண்டு, செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால் எத்தனையோ தான, தர்மம், பரோபகாரம் செய்யலாம். லோகத்தில் ஒருத்தருக்கும் சாப்பாடு இல்லை, துணி இல்லை என்ற குறையில்லாமல் செய்து விடலாம். இப்போது செய்கிற டாம்பீகத்தால் ஒரு நாளும் பெறமுடியாத ஈஸ்வரானுக்கிரகத்தையும் இந்த பரோபகாரத்தினால் பெற்று விடமுடியும். ஏழைதான் என்றில்லை. பணக்காரனும்கூட, ‘இந்த வஸ்து நமக்குத் தேவைதானா? இது இல்லாவிட்டால் பிராணன் போய்விடுமா? இது இல்லாமல் ஜீவிக்க முடியாதா? நம் அப்பாவும் தாத்தாவும் இது இல்லாமல் சௌக்கியமாக இல்லையா?’ என்று அவ்வப்போதும் கேட்டுக் கொண்டு செலவழிப்பதில் கணக்காயிருக்கணும். இப்படிச் செய்தால் கொடுப்பதில் கணக்கில்லாமலிருக்க முடியும். எடுக்க எடுக்க ஊற்றில் ஜலம் வருகிற மாதிரி கொடுக்கக் கொடுக்க மகாலக்ஷ்மியின் அநுக்கிரகம் மேலும் வளரும்.

நம் தேசத்தில் ஜலத்தைக்கூட அதிகமாகக் கொட்டிச் செலவழிக்ககூடாது என்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்கனம் இல்லாவிட்டால், இதே மனோபாவம் மற்ற எல்லாவற்றிலும் வந்துவிடும் என்பதால் இப்படிச் சொன்னார்கள். சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் “கணக்காயிருப்பது” தான் சிக்கனம். இதுவே கருமித்தனம் இல்லாமல் தானமும் தர்மமும் செய்வதற்கு உதவும்.

இதோடு பேச்சில் கணக்காயிருப்பதைக் குறிப்பாக இக்காலத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சமயத்தில் எந்தத் தொத்து வியாதி ரொம்பவும் உக்கிரமாக பரவியிருக்கிறதோ அதற்குத்தானே முக்கியமாக சிகித்ஸை செய்ய வேண்டும்? இன்று பேச்சுதான் ரொம்ப உக்கிரமாகப் பரவியிருக்கிறது. நம் நீதி நூல்களில் ‘மௌனம் கலகம் நாஸ்தி’ என்றார்கள். பேச்சுக் குறைந்தால் சண்டையும் குறையும் – மேல்நாட்டில்கூட, ‘பேச்சு வெள்ளி என்றால், மௌனம் தான் தங்கம் (Speech is silver silence is golden)’ என்கிறார்கள். ஆத்ம சிரோயஸுக்கு ரொம்பவும் வற்புறுத்தப்பட்ட விஷயம் இது. ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்றார்கள். அந்த வரம்புக்குப் போய், ஒரே மௌனமாயிருக்க நம்மால் முடியாவிட்டாலும், நாம் பேச்சை ரொம்பவும் குறைத்துக்கொள்ளப் பாடுபடவேண்டும். ‘பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வருகிற இத்தனை பேச்சால், வாதங்களும் பிரதி வாதங்களும் உண்டாகி மண்டை உருளுவதைத்தவிர, ஏதாவது உருப்படியான விளைவு இருக்கிறதா? அதில் வருவது போதாது என்று இதைப்பற்றி நாம் வேறு தொண்டைத் தண்ணீர் வற்ற விமர்சிப்பதால் தான் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி சக்தி எல்லாம் விருதாவாகலாமா?’ என்று யோசித்துப் பார்க்க வேண்டும். வாக்குக் கட்டுப்பாட்டை அநுஷ்டானத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனஸைப் புண்படுத்தாத பேச்சையே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்த்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும். எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். அது இப்போது நம்மால் முடியாமல் போனாலும் பாதகமில்லை. ஆனால், எண்ணியதை எல்லாம் பேசிப்பேசி இப்போது செய்து வருகிற உற்பாதத்தை நாம் நிச்சயம் குறைக்க வேண்டும். பேச்சில் கணக்காயிருக்கணும் என்று இப்போது நான் பேசுகிறேனே, இதில்கூட நானே “கணக்காயிருக்கணும்”. இல்லாவிட்டால், பேச்சு சுவாரஸ்யம் இழுத்துக்கொண்டு போய், இதிலிருந்தே வியர்த்தமான சர்ச்சைகள் கிளம்பக்கூடும். அதோடுகூட வளவளவென்று சொல்வதால், இது மனஸிலும் சுருக்கென்று தைக்காமல் பிசுபிசுத்துப் போய்விடும்.

படிப்படியாக நம் சொற்கள், செயல்கள், சிந்தனைகள் – word, deed and thought – எல்லாவற்றிலும் ஒரு வரையறை, கணக்கு வேண்டும். முடிவில், மனோ, வாக்கு, காயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனசு சிந்திப்பது, வாக்கு பேசுவது, காயம்தான் காரியம் செய்வது. இவை எல்லாம் கட்டுப்பாட்டின்கீழ் வந்தாலே ஆத்ம க்ஷேமகரமாகும். இவற்றோடு பணத்தைச் செலவு செய்வதை முதலில் சொன்னேன்.

கட்டுப்பாடுதான் யோகம், யோகம் என்பது. சிதறிப் போகாமல் ஒன்றிக் கட்டுப்பட்டிருப்பதுதான் யோகம்.

கிருஷ்ண பரமாத்மாகூட இப்படித்தான் கீதையில் சொல்லியிருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அதிலே ‘சாங்கியமும் யோகமும் ஒன்றுதான்’ என்கிறார். அவர் ‘சாங்கியம்’ என்ற சித்தாந்தத்தைப் பற்றி பண்டிதர்கள் பல தினுசாக தருகிற விளக்கங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். நேராக அந்தச் சொல்லின் பொருளைப் பார்த்தால் ‘சாங்கியம்’ என்பது ‘சங்கியை’ என்பதிலிருந்தே வந்திருக்கிறது. ‘சங்கியை’ என்றால் கணக்கெடுப்பது என்று அர்த்தம். ‘ஜனசங்கியை’ என்று சொல்கிறோமல்லவா அது மாதிரி! எதிலும் சரியாக கணக்கிடுகிற புத்தி வந்துவிட்டால், புத்தி இப்படி ஒரு கணக்கிலே கட்டுப்பட்டு நின்று விட்டால், அதுவே சலனமில்லாத சமநிலையில் நிற்பதற்குப் பழக்கி விட்டுவிடும். இப்படி சம நிலையில் நிற்பதன் முற்றிய ஸ்தானம்தான் ‘யோகம்’.

பரம லௌகிகமாக, பணவிஷயத்தில் ஆரம்பித்து ‘கணக்காயிருக்கணும்’ என்றேன். அதுவே பரம வேதாந்தத்தில் கொண்டு சேர்த்து விட்டது! திருமூலரும் திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்கிறார். ‘உண்மையான கல்வி ஈஸ்வர தத்வத்தை அறிவதுதான்’ என்று சொல்ல வந்த திருமூலர்.

‘கணக்கறிந்தார் கல்வி கற்றறிந்தாரே’ என்கிறார். இது அவசியம், இது அநாவசியம்; இது நல்லது, இது கெட்டது; இது மெய், இது பொய் என்று கணக்குப் பண்ணி, தள்ளுவதைத் தள்ளி, எடுத்துக் கொள்ள வேண்டியதை கொண்டாலன்றி, ஈஸ்வர தத்வத்தைக் காண முடியாது. அதாவது அநுபவ பூர்வமாக உணர முடியாது என்கிறார்:

கணக்கறிந் தார்க்கன்றி காணவொண் ணாதது

கணக்கறிந் தார்க்கன்றி கைகூடாக் காட்சி.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is எளிய வாழ்வு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க
Next