தந்தை பூஜித்த தனயர் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தகப்பனாரான ஈச்வரனையே எடுத்துக்கொள்ளலாம். அவர் த்ரிபுர ஸம்ஹாரத்துக்காகப் புறப்படுகிறபோது பிள்ளையை – அவர் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய பிள்ளையார் என்பதை மறந்து – ஸ்மரிக்காமலே கிளம்பினார். பிள்ளையார் தமக்கு வேண்டிய due-வைப் பெறாமல் விடமாட்டார்! ‘பிள்ளையாருக்கு முதல் பூஜை’ என்பது தேவதைகள் எல்லோருமாகத் தீர்மானித்தது. அப்படியிருக்க, ஒரு ரெஸொல்யூஷன் ஏகமனதாகப் பாஸ் ஆகிச் சட்டமாய் விட்டதென்றால் அதைத் தகப்பனாராகத்தான் இருக்கட்டும், அந்தத் தகப்பனார் ஸர்வ ஜகத்துக்கும் ஈச்வரராகத்தான் இருக்கட்டும், மீறினால் குற்றம் தானே? தப்புச் செய்தவரைப் பிள்ளையார் சும்மா விடமாட்டார்.

ஆகையால் த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது.

உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. ‘ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன் படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா-பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை’, என்று பரமேஸ்வரன் நினைத்தார்.

உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!) பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஓடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார்.

அதற்கப்புறம் ரதம் ஓடி, முடிவில் ‘த்ரிபுராந்தகர்’ என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜயித்தார். செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் “அச்சரப்பாக்கம்” என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன “அச்சிறுப்பாக்கம்” என்று சொல்வார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முழுமுதற் கடவுளாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸமீபகால சம்பவத்தில் புராண நிரூபணம்
Next