கர்ம பந்தம் ஈசனால்; ஞான ஸித்தியும் அவனாலேயே! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்தை எடுத்துக்கொண்டாலும் இப்படியே மூலக்ரந்தத்தில் ஈச்வராநுக்ரஹத்தைச் சொல்லாத இடத்திலும்கூட ஆசார்ய பாஷ்யத்தில் அதை ஞானத்துக்குக் காரணமாகச் சொல்லும் த்ருஷ்டாந்தங்கள் இருக்கின்றன. ஸூத்ர மூலத்திலேயே ஒரு இடத்தில் ‘ஜீவாத்மா – பரமாத்மா அபேத ஞானம் ஜீவனிடம் மறைந்து கிடைக்கிறது. பரமேச்வரனை த்யானிப்பதால் மறைந்துள்ள ஞானம் வெளிப்பட்டுவிடும். ஏனென்றால், அவனிடமிருந்தே தான் ஜீவனுக்கு பந்தம் (கட்டு) , மோக்ஷம் (விடுதலை) இரண்டும்’ என்று இருக்கிறது.1 இம்மாதிரியான இடங்களில் ஆசார்யாள் ஈச்வராநுக்ரஹத்தால் அத்வைத ஸித்தி ஏற்படுவதைச் சொன்னால் அதில் விசேஷமில்லை. இந்த ப்ரஹ்ம ஸூத்ரத்திலேயே இன்னொரிடத்தில்,2 ஜீவன் கர்த்தாவா, இவன் கார்யம் செய்கிற கர்த்தா என்றால் கார்யமில்லாத ஸமாதி இவனுக்கு எப்படி ஏற்படும் என்கிற விஷயங்களை ஆராய்ந்து, ‘அவன் கர்த்தாவுந்தான்; கார்யமில்லாமல் ஆத்மாவாக இருப்பவனுன்தான்” என்று முடிவு தெரிவித்திருக்கிறது. ‘(அதெப்படி இரண்டும் முடியும்?”‘ என்று கேட்டால், ‘தச்சன் மாதிரி’ என்று பதில் சொல்லியிருக்கிறது. தச்சு வேலை செய்கிறபோது ரம்பம், இழைப்புளி முதலான கருவிகளை கொண்டு வேலை செய்கிற தச்சனே, அந்தக் கருவிகளைப் போட்டுவிட்டு வீட்டில் வந்து ‘ரெஸ்ட்’ எடுத்துக்கொள்ளும்போது வேலையில்லாமல் இருக்கிறானோல்லியோ? இப்படியே இந்த்ரியக் கருவிகளைக் கொண்டு கர்த்தாவாயுள்ள ஜீவன் ஸமாதியில் அவற்றை விட்டு விட்டு அகர்த்தாவாக இருக்கிற ஆத்மாவில் ‘ரெஸ்ட்’ பண்ணிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லிவிட்டு, இப்படி ஜீவனுக்கு ஒரு கர்த்ருத்வம் ஏற்பட்டது பரமேச்வரனிடமிருந்தேயாகும் என்று கூறியிருக்கிறது. ஈச்வரனால் கர்த்ருத்வம், அதாவது கார்யமும் அதன் பந்தமும் ஜீவனுக்கு ஏற்படுவதைப் பற்றித்தான் இங்கே சொல்லியிருக்கிறது. இந்த பந்தத்திலிருந்து விடுவிக்கிற ஞானத்தைப் பற்றியோ, அதை அடைவிப்பதில் ஈச்வரனின் பங்கைப் பற்றியோ ஒன்றும் மூல நூலில் இந்த இடத்தில் இல்லை. ஆனாலும் ஆசார்யாள் இங்கே பாஷ்யம் செய்யும் போது, கார்யம் செய்து அநுபோகங்களைப் பெறும் கர்த்ருத்வ, போக்த்ருத்வத்தினால் ஜீவனுக்கு ஸம்ஸார வாழ்வு ஏற்படுவது ஈச்வராக்ஞையினாலேயே என்று சொல்வதோடு நிறுத்தாமல், இதே ஜீவன் உத்தம ஞானத்தினால் மோக்ஷ ஸித்திக்கு அருகதை பெறுவதற்கும் அதே ஈச்வரனின் அநுக்ரஹம் தான் காரணம் என்கிறார். “ஈச்வராத் தத் அநுஜ்ஞயா கர்த்ருத்வ போக்த்ருத்வ லக்ஷணஸ்ய ஸம்ஸார ஸித்தி:” என்பதோடேயே நிறுத்தியிருக்கலாம். மூலத்தில் அதற்கு மேலே விளக்க இல்லை. ஆனாலும் ஆசார்யாள் ஸம்ஸார பந்தத்துக்கு ஈச்வரன் காரணம் என்று மட்டும் குற்றம் சொல்கிறதுபோல முடித்து விடக்கூடாது; இதிலிருந்து நிவ்ருத்திக்கும் அவன் அநுக்ரஹம்தான் காரணம் என்று கையோடேயே சொல்லிவிடத்தான் வேண்டுமென்று நினைத்து, ‘தத் அநுக்ரஹ ஹேதுகேநைவ ச விஜ்ஞாநேந மோக்ஷ ஸித்திர் பவதும் அர்ஹதி’ என்று சேர்த்திருக்கிறார். அதாவது, “ஈச்வரனுடைய அநுக்ரஹம் என்ற காரணத்தைக் கொண்டே உயர்ந்த ஞானத்தின் மூலம் மோக்ஷ ஸித்தி அடையவும் ஜீவன் தகுதி பெறுகிறான்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் இதை அத்வைத ஸாதகர்களுக்கே ஏற்பட்ட சாஸ்த்ரங்களில் சொல்லித்தானாக வேண்டுமென்றில்லை; சொல்லாமல் விடுவதற்கு நிரம்ப நியாயமிருக்கிறது என்று பார்த்தோம். அதனால்தான் ஈச்வர க்ருபா விசேஷத்தால் மோக்ஷம் ஸித்திருப்பதை நன்றாக வெளியிட்டுச் சொல்லும் கீதையிலேயே கூட, மிகவும் ஞானமார்க்கமாக உபதேசித்துக்கொண்டு போகும்போது பகவானே இதைச் சொல்லாமல் விடுவதும் உண்டு. அப்படித்தான், இந்த்ரியத்திலிருந்து மனஸ், புத்தி, ஆத்மா என்று ஒன்றைவிட ஒன்று உயர்த்திச் சொல்லி, “புத்திக்கும் பரதத்வத்தை அறிந்து, மனஸை அடக்கி, ஆசை என்ற எதிரியை அழி” என்பதாக, ஜீவன் தானாகவே எல்லாவற்றையும் ஸாதித்துக் கொண்டு விடுவதைப் போலச் சொல்லி (அந்த மூன்றாம் அத்யாத்தை) முடித்துவிடுகிறார்.


1 ப்ரஹ்ம ஸூத்ரம் 3-2-5.
1 2-ம் அத்யாயம் 3-ம் பாதத்தில்; குறிப்பாக 40.41 ஸூத்ரங்களில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மாயாசக்தியே ஞானமும் அளிப்பது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈஸ்வரனைப் பற்றி ஸ¨ஸனை
Next