ஆயுர் வேதம் சுகம் யாருக்கு? உடலுக்கும் மனதுக்கும் சுகம் தரும் விஷயங்களில் எப்போதும் நாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது விரும்புவதை அடைவதற்ககாக பிர

ஆயுர் வேதம்

சுகம் யாருக்கு?

உடலுக்கும் மனதுக்கும் சுகம் தரும் விஷயங்களில் எப்போதும் நாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. விரும்புவதை அடைவதற்ககாக பிரம்ம பிரயத்னம் செய்து இச்சையில் திருப்தியுரும் போது பரபரப்பு அடங்குகிறது. ஜனனம் முதல் மரணம் வரை இந்த போராட்டம் தொடருகிறது. டிவியில் காமெடி டைம் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அது முடிந்ததும் வீட்டுப் பிரச்னைகள் வரும்போது மனம் துவள்கிறது. வருத்தம் மறுபடியும் குடியேறுகிறது. நிரந்தரமான சுகம் யாருக்கு? அது கிடைக்க வழி என்ன? என்பதைப் பற்றி ஆயுர்வேதம் வெகு சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

1. காலோ அநுகூல - தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சிணாயனம் என்றும் காலம் இருவகைப்படும். ஆறு வகையான பருவகாலங்கள் கூறப்பட்டாலும் பொதுவாக பனிக்காலம் வெயிற்காலம் மற்றும் மழைக்காலம் என்று மூன்று பருவங்களை மட்டுமே தற்சமயம் அதிகமாக காணப்படுகின்றன.

பருவ காலங்களுக்கு தக்கபடி மனிதன் தன் வாழ்க்கையை சரியானபடி அமைத்துக் கொள்வதன் மூலம் சதா சுகம் பெறமுடியும். அதை சற்று விரிவாகப் பார்ப்போம். மார்கழி, தை (ஹேமந்தருது) மற்றும் மாசி, பங்குனி (சிசிரருது) ஆகிய மாதங்கள் முறையே பனிக்காலம், குளிர்காலம் என்றும் அழைக்கப்படுகின்றன. குளிர் காற்றினால் தாக்கப்பட்டு உடலிலுள்ள சூடு வெளியேற முடியாமல் உள் நோக்கிச் செல்வதால் வயிற்றில் ஒன்று சேர்ந்து பசியை அதிகரிக்கச் செய்யும். நல்ல பலமூட்டும் உணவையும் பானத்தையும் அப்போது உட்கொள்ளவேண்டும். இல்லையேல் விறகு இன்றி நெருப்பு அணைவது போல் உணவாகிற விறகின்றி அது அணைந்துவிடும் அல்லது பசி என்னும் நெருப்பு உடலிலுள்ள தாதுக்களையே தின்று உடலை அழித்து விடும். அதனால் நெருப்பின் துணைவனான காற்று குளிர்காலத்தில் குளிரின் சேர்க்கையால் சீற்றமடைந்துவிடும். எனவே குளிர்காலத்தில் நெய்ப்புள்ளதும், இனிப்பு, உப்பு, புளிப்புச் சுவையுள்ளதுமான பொருள்களை சாப்பிட வேண்டும். உளுந்து, கரும்புச்சாறு, பால் இவற்றால் செய்த பொருள்கள், புதிய அரிசியால் சமைத்த அன்னம் ஆகியவிற்றை உண்ண வேண்டும். உடற்பயிற்சி, உடல்பிடித்தல், எண்ணெய்க்குளயல், வேர்வை, புகை, கண்மை, வெயிலில் உடல்படும்படி நிற்பது ஆகியவை செய்தல் நலம். உடலை தூய்மை படுத்தவதற்க்கு வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். படுக்கும் அறை சற்று சூடாக இருப்பதற்கு Room Heater பயன்படுத்த வேண்டும். போர்த்திக் கொள்வதற்கு கம்பளியை உபயோகிக்க வேண்டும்.

சித்திரை, வைகாசி மாதங்களுக்கு வசந்த ருது என்று பெயர். குளிர்காலத்தில் குளிர்ந்திருந்த கபமானது, கதிரவனின் கிரணங்களால் உருகி பசியை தணியச் செய்கிறது. பசி மந்தித்துப் போவதால் பலவிதமான நோய்களைத் தோற்றுவிக்கின்றது. உருகிய கபத்தை வெளியேற்ற கடுமையான வாந்தி, புகை, வாய் கொப்பளித்தல், மூலிகை, மூக்குப் பொடி இவற்றையும், உடற்ப்பயிற்சி, உடற்பிடித்தல், தேன் கோதுமை, தோட்டம் என்பனவற்றையும் பயன்படுத்த வேண்டும். குடிப்பதற்கு கோரைக் கிழங்கு, சுக்கு முதலியவை சேர்த்துக் காய்சிசிய தண்ணீர் அல்லது கொதித்து ஆறிய தண்ணீரில் தேன் கலந்து பருகவேண்டும். சத்துள்ள உணவு அதாவது ஜீர்ணம் செய்வதற்கு கடினமானது, குளிர்ச்சியின் பொருள்கள், பகல் தூக்கம், பசை, புளிப்பு, இனிப்புச் சேர்ந்த சுவையான உணவு, புளிப்புள்ள பொருள்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆனி, ஆடி மாதங்களுக்கு க்ரீஷ்மருது அல்லது வெயிற்காலமாகும். கோடை காலத்தில் சூரியனின் கடுமையான வெப்பத்தினால் பூமியில் நீர்ப்பசை -களையெல்லாம் இழுத்துக் கொள்கிறத. எனவே, உடற்ப்பயிற்சி வெளியில் செல்லுதல், காரம், புளிப்பு, கரிப்பு என்னும் சுவைகள், உஷ்ணத்தை கிளப்பிவிடும் பொருள்கள் இவற்றை பயன்படுத்தக்கூடாது. புதிய மண்பானையில் ஊற்றப்படும் மனதுக்கு உகந்த நறுமணம் கொண்ட சர்க்கரையுடன் கூடிய குளிர்ந்த பானம், நெய் கலந்த கஞ்சி, சுவைமிகுந்த த்ரவமான குளிர்ந்த அன்னம், மார்கழி தை மாதங்களை சேர்ந்த அரிசி, பால், நெய், திராட்சை, இளநிர், சர்க்கரை, பனையோலையால் செய்த விசிறியின் காற்று இவற்றைப் பயன்படுத்தலாம். குளம், நதி, குளிர்ந்த காடு, நறுமணம் வீசும் மெல்லிய ஆடை இவைகளைப் பயன்படுத்த வேண்டும். பகலில் அறையில் உறங்க வேண்டும். இரவில் திறந்தவெளியில் கற்பூர சந்தனம் உடல் மீது பூசிக்கொண்டு நறுமணமுள்ள மலர்ப்படுக்கை மீது உறங்க வேண்டும்.

ஆவணி, புரட்டாசி மாதங்கள் வர்ஷருது என்னும் மழைக்காலமாகும். சூடான பூமியில் மழைபெய்வதால் பூமியின் ஆவி, நீரில் புளிப்புச் சுவையை ஏற்பத்தி, நீர்கெடுகிறது. அதன்காரணமாக பசிமந்தித்துப் போகிறது. உடலை சுத்தி செய்ய வாந்தி, பேதி மற்றும் ஆசனவாய் வழியாக செல்லும் (அ) வஸ்தி சிகித்ஸைகைள செய்தல் வேண்டும். பழைய அரிசி, கோதுமை இவைகளால் செய்த கஞ்சியை அருந்த வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். மழை காற்று உள்ள நாட்களில் உலர்ந்த லேசான உணவை, இனிப்பு, புளிப்பு, உப்பு என்ற சுவையுடன் கலந்து சூடாகப்பயண்படுத்த வேண்டும். தேன் கலந்த சுத்தமான அன்னபானத்தை பயன்படுத்த வேண்டும். குளிர்காற்று, மழைச்சாரல்,ஈ, கொசு, எலி இவகைள் இல்லாத, சூடான வீட்டில் தங்கவேண்டும் .கொதித்த நீரில் கரைத்த ஸத்து மாவு, பகல்தூக்கம், திரவமானஉணவு, பனி,கால்நடையாகச்செல்லுதல், உடற்பயிற்சி, சூரிய கிரணங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகிய சரத்ருதுவில் மழை, குளிர்ச்சி, இவற்றின் காரணமாக சுருங்கிய உடலில், சூடான சூரிய கிரணங்கள் பட்டு இதற்கு முந்திய பருவத்தில் சேர்ந்திருந்த பித்தம் எழுச்சியை அடைகிறது. இம்மாதங்களில் கசப்பான நெய், பேதி, குளிர்ச்சியும், எளிதில் ஜெரிக்கக்கூடிய அன்னபானங்கள், உவர்ப்பு, இனிப்பு, கசப்பு கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பசி எடுத்தல், சம்பா தானியம், 60 நாட்களில் பயிராகும் தானியம், கோதுமை, பச்சைப் பயறு, சர்ககரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை, இவற்றை அதிகமாக சாப்பிடலாம். அகஸ்திய நட்சத்திரத்தினால் சுத்தம் செய்யப்பட்டநீரை அருந்தினால் அது அமிர்த பானத்திற்குச் சமமாகும். லேசாகும், சுத்தமாகவும் உள்ள ஆடைகளை அணிந்து மாலையில் மொட்டை மாடியில் அமர்ந்து சந்திரனின் கிரணங்களைப் பார்த்து அநுபவிக்க வேண்டும். வயிறு நிறையச் சாப்பிடுதல், தயிர், எண்ணெய், எதிர்காற்று, பகலுறக்கம், பனி இவைகளை விலக்கி விட வேண்டும்.

குளிர்காலத்தில் வேண்டிய அளவு குளிர் இல்லாமலே அல்லது அளவுக்கு IP அதிகமிருந்தாலோ, அதுபோல் வெயிற்காலத்தில் போதிய அளவு இல்லாமல் குறைந்தோ அல்லது அளவுக்கு மீறிய வெயிலோ, மழைக்காலத்தில் குறைவோ அல்லது பலத்த மழையோ இருப்பின், இப்பருவகாலங்களில் எதிரான சீதோஷ்ண நிலைகள் தென்பட்டாலோ ஜீவராசிகள் நோயினால் துன்புறும். இயற்கையாக நிகழவேண்டிய இவைகள் தெய்வானுக்ரஹம் இருந்தால் மட்டுமே சரிவர நடைபெறும். இருந்தாலும் காடுகளை அழித்து நாடாக்கும் முயற்சியால் பூமியில் சூடு ஜாஸ்தியாகி கடலில் ice பாறைகள் உஷ்ணத்திணால் உருகுவதால் கடலின் தண்ணீரின் அளவு அதிகரிக்கின்றது. அப்போது தண்ணீரில் வரவு அதிகமாவதால் நிலப்பரப்பளவு குறைகிறது. மனிதன் காட்டை அழிக்க முற்படுவதால் ஏற்படும் தீங்கு இது. பருவகாலங்கள சரியாக அமைவதன் மூலமாக உடல் ஆரோக்யம் பெருகும். அதுவே சதா ஸுகமாகும்.

வேறுவகையான காலம் ஒன்று உள்ளது. முன் உண்ட உணவு, 'எனக்கு நன்கு ஜெரித்து பசி வந்துவிட்டது. அடுத்தவேளை உணவைசாப்பிடப் போகிறேன்' என்று ஒரு வைராக்யத்தை கடைபிடிப்பதன் மூலம் ஒருவருக்கு சதா சுகம் ஏற்படும். ஏப்பம் சுததமாக முன் உண்ட உணவின் மணம் ஏதும் இல்லாமல் இருத்தல், உற்சாகம், சரியான முறையில் சிறுநீர் மலம் இவற்றின் போக்கு, உடல் லேசாக இருத்தல், பசிதாகம் ஏற்படுதல், இவை உணவு ஜீர்ணமானதற்கான அறிகுறிகள்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net