திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருநனிபள்ளி ( புஞ்சை)
மக்கள் "புஞ்சை" என்று வழங்குகின்றனர். மயிலாடு துறையிலிருந்து செல்லலாம். அடிக்கடி பேருந்து செல்கிறது. செம்பொனார் கோயிலுக்கு அருகில் உள்ளது. சம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதரித்த பதி.
சம்பந்தர், தன் தந்தையார் தோளிலிருந்து இத்தலப்பதிகத்தை அருளினார் என்பது வரலாறு. இதை அத்தலப்பதிகத்தின் கடைசி பாடலால் அறிகிறோம். பாலையாக இருந்த இவ்வூரை நெய்தல் நிலமாக மாறுமாறு பாடியருளியதாகவும், நெய்தலைப் பின்னும் கானகமும் வயலுமாக ஆக்கியருளினார் என்பர்.
இறைவன் - நற்றுணையப்பர்.
இறைவி - பர்வதபுத்திரி.
தீர்த்தம் - சொர்ணதீர்த்தம்.
மூவர் பாடல் பெற்றது.
கிழக்கு நோக்கிய கோயில் இக்கோயில் கருவறை அழகான வேலைப்பாடடையது. கோயிலருகில் தீர்த்தமுள்ளது. கோபுர வாயிலில் பஞ்சமூர்த்திகள் சுதைசிற்பங்கள் உள்ளன. சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசசபை உள்ளது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சோழர் காலக்கல்வெட்டில் இத்தலம் "ஜயங் கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரமதேயமாகிய நனிபள்ளி" என்று குறிக்கப்படுகிறது.
"கடல்வரை ஓதமல்கு கழி கானல் பானல்
கமல் காழி என்று கருதப்
படுபொருளாறு நாலுமுள தாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யன்ற அத்தர் பியன் மேலிருந் (து)
இன் இசையால் உரைத்த பனுவல்
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணைநமதே." (சம்பந்தர்)
"புலர்ந்தகால் பூவுநீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அரளவல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே." (அப்பர்)
"ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கரிய
சோதியன் சொற் பொருளாயச் சுருங்காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம் பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே". (சுந்தரர்)
-இன்புள்ளித்
தெள்ளியார் போற்றுத் திகழும் திருநன்னிப்
பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. நற்றுணையப்பர் திருக்கோயில்
புஞ்சை - கிடாரங்கொண்டான் அஞ்சல்
(மாயவரம்) கீழையூர் S.O. -609 304
மயிலாடுதுறை RMS - மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்.