ஶ்ரீ ஸிந்து நத மாஹாத்மியம்
- பி.ஆர்.கண்ணன், நவி மும்பை
ஸிந்து புஷ்கரம்சென்ற வருஷங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாம்ரபர்ணி நதிகளின் புஷ்கர விழாக்களைப்போன்று, இவ்வருஷம் 2019 நவம்பர் மாதம் 4 ந்தேதி முதல் 15 ந்தேதி வரை 12 நாட்களுக்கு ஸிந்து நத புஷ்கரவிழா கொண்டாடுவதற்கு ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராசாரிய ஸ்வாமிகள் அருளியுள்ளார்கள். இவ்விழா காஷ்மீர மாநிலத்திலுள்ள லதாக் பகுதியில் "லே" என்கிற ஊரில் ஸிந்து நதி தீரத்தில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுர் ராசியில் நவம்பர் 4ந்தேதி பிரவேசித்து, ஒருவருஷகாலம் தனுர்ராசியில் இருக்கும்போது, புஷ்கர தேவதை ஸிந்து நதியில் ஸாந்நித்தியம் கொண்டிருப்பார். அந்த காலத்தின் முதல் 12 நாட்கள் விசேஷ பலன் வழங்குபவை. இந்நாட்களில் ஸ்னானம், ஜபம், பித்ரு தர்ப்பணம், நதிபூஜை, தானம் முதலியவை வெகு விசேஷ பலன் அளிப்பவையாக சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. லதாக்கிலுள்ள லே என்கிற இடத்தில் ஸிந்து நதியில் முதல் முறையாக நம் ஆசாரியாள் ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சிலவருஷங்களுக்கு முன்னர் ஸ்னானம் செய்து, விழா நடத்தி, வைதீக அனுஷ்டானங்களையெல்லாம் ஆற்றி, வருஷா வருஷம் குரு பூர்ணிமையன்று விமரிசையாக ஸிந்து பூஜை நடத்தவும் வழிகாட்டியுள்ளார்கள்.
நம்முடைய சாஸ்திரங்களில் ஆறுகளை இருவிதமாகப்பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள் - நதி யென்பது, கிழக்குக்கடலில் சங்கமிக்கும் ஆறாகும்; நதம் என்பது மேற்குக்கடலில் இணையும் ஆறாகும். ஆகவே ஸிந்து ஆறானது, நதம் என்று குறிக்கப்படுகின்றது.
ஸப்தஸிந்துரிக்வேதத்திலும் யஜுர்வேதத்தின் அகமர்ஷண ஸூக்தத்திலும் வரும் பிரசித்தி பெற்ற நதி ஸ்துதி ஸூக்தமானது, ஸிந்து, அதன் கிளைநதிகள், கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆக மொத்தம் ஏழு நதிகளை ஸ்தோத்திரம் செய்கின்றது.
இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி ஶுதுத்ரி ஸ்தோமம் ஸசதா பருஷ்ண்யா |
அஸிக்ந்யா மருத்வ்ருதே விதஸ்தயார்ஜீகீயே ஶ்ருணுஹ்யா ஸுஷோமயா || (8.3.6.10)
இந்த ஏழு நதிகளையும் சேர்த்து, ’ஸப்தஸிந்து’ என்று ரிக்வேதத்தின் பல இடங்களில் போற்றிப் பேசுகிறார்கள் மகரிஷிகள். இங்கு, ’ஸிந்து’ என்கிற பதம் ஆறு (நதி) என்கிற பொது அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏழு நதிகளாவன: 1.கங்கை, 2.யமுனை, 3.ஸரஸ்வதி, 4.ஸுதுத்ரி, 5.மருத்வ்ருதா (விதஸ்தா என்றும் வருகிறது) (அதன் கிளைநதிகளான பருஷ்ணி, அஸிக்னியுடன்), 6.ஆர்ஜிகியா (விபாசா என்ற பெயரும் உண்டு) 7.ஸுஷோமா (இது தான் ஸிந்து).
இந்த நதிகளின் தற்காலப் பெயர்களாவன: ஸிந்து, ஸுதுத்ரி- ஸட்லெஜ், விதஸ்தா-ஜீலம், பருஷ்ணி- ராவி, அஸிக்னி- சீனாப், விபாசா- பீயாஸ். கங்கை, யமுனை தவிர்த்து, பாக்கி ஐந்து நதிகளும் சேர்ந்து, பஞ்சநதா என்று அழைக்கப்பட்டன; அவ்விடமே பஞ்சாப் என்றாயிற்று.
ஸிந்து என்ற பதம் ஸம்ஸ்கிருதத்தில் ’ஸ்யந்தநாத் ஸிந்து:” என்றபடி,”வெகுவாகப் பிரவஹித்துப் பாய்வதினால் ஸிந்து’ என்று பொருள்படுகிறது.
விபாசா (பீயாஸ்) என்பது, வஸிஷ்ட முனிவரின் (பாசம்-கட்டு) கட்டுகளைக் களைந்ததினால் ஏற்பட்ட பெயர். இக்கதை ரிக்வேதத்தில் வருகிறது. அதாவது, காமதேனுவை வஸிஷ்டர் தர மறுத்ததால் விஸ்வாமித்திரருக்கும், வஸிஷ்டருக்கும் ஏற்பட்ட கடும் யுத்தத்தில், விஸ்வாமித்திரர் படுதோல்வி அடைந்தபின், வஸிஷ்டரின் நூறு புதல்வர்களைக் கோபத்துடன் கொன்று தீர்த்தார். மனமுடைந்த வஸிஷ்டர், கழுத்திலும், சரீரத்தின் பிற பாகங்களிலும் கயிற்றைக் கட்டிக்கொண்டு, விபாசா நதியில் மூழ்கினார். ஆனால், விபாசா நதியின் கடும் வேகத்தில் அவருடைய கயிறுகள் அறுந்துபோய், அவர் பிழைத்துக்கொண்டார். அதனால் அந்நதிக்கு விபாசா என்ற பெயர் உண்டாயிற்று. மகாபாரதத்தில் இக்கதை தொடர்கிறது. பிறகு, வஸிஷ்டர் காடு, மலைகளிலெல்லாம் சுற்றி, ஹைமவதி என்கிற நதியில் மூழ்க முயற்சித்தார்.
ஸா தமக்நிஸமம் விப்ரமநுசிந்த்ய ஸரித்வரா |
ஶததா வித்ருதா யஸ்மாச்சதத்ருரிதி விஶ்ருதா ||
முனிவரின் அக்கினிபோன்ற தேஜஸ்ஸைக்கண்ட நதி, உடனே தன்னை நூறு கிளைகளாகப் பிரித்துக்கொண்டு, முனிவரைக் காப்பாற்றியது. அந்நதியே ’ஸதத்ரு’ (ஸுதுத்ரி) (ஸட்லெஜ்) என்றாயிற்று.
ரிக்வேதத்தில் விபாசா-ஸுதுத்ரி நதிகள் இணையும் இடத்தின் பெருமையைக் கூறும் கதையொன்று உள்ளது. விஶ்வாமித்திரர் ஒரு சமயம் இவ்விடம் வந்து அந்நதிகளைப் பிரார்த்தித்தார்: "நான் பெரும் காரியங்களை இயற்றிய குசிகரின் புத்திரன். நான் இந்நதிகளைக்கடந்து, யாகத்திற்கு வேண்டிய ஸோமலதையினைச் சேகரிப்பதற்காக, அக்கரை போய்த்திரும்பும் வரை, ஒரு முகூர்த்தம் நீங்கள் உங்கள் வழக்கமான வேகத்தினையும் பெருக்கினையும் குறைத்து, மெல்லோட்டமாகச் செல்வீர்." நதிகள் கூறினர்: "ஸர்வலோகங்களுக்கும் காரணமான, பலவானான, வஜ்ரஹஸ்தனான இந்திரன், பெருமழை பொழிந்து, நாங்கள் ஆழமாக்கப்பட்டு, பெரும் நீர்ப்பெருக்குடன், கடலுக்குச் செல்கிறோம். இந்திரன் ஆணைப்படி செல்லும் நாங்கள், தங்களுக்காக பெருக்கினைக் குறைக்கமுடியாது." என்றனர். பிறகு, விஸ்வாமித்திரர் லோகக்ஷேமத்திற்காகச் செய்யும் யாகத்திற்கு, தங்களாலியன்ற உபகாரம் செய்ய எண்ணி, மனம் மாறிய நதி தேவதைகள் சொன்னார்கள்: "வெகு தூரத்திலிருந்து ரதத்தில் வந்துள்ள தங்களுக்கு நாங்கள் உபகாரம் செய்கிறோம்." என்று கூறி, தங்கள் பெருக்கினைக் குறைத்துக்கொண்டனர்.
ஸ்காந்தபுராணத்தில் (ரேவா கண்டம்) விபாசா நதியை வெகுவாக ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள். ஜீவாத்மாவை மலம் நிறைந்த சரீரத்துடன் இணைக்கும் ஸம்ஸார பந்தத்தினை - பாசத்தினை- அறுத்தெறியும் நதி விபாசா என்று மிக அழகாகக் கூறுகிறார்கள்.
விண்மூத்ரநிசயாம் கோராம் பாம்ஶுசோணிதகர்தமாம் ||
பாஶைர்நித்யம் து ஸம்பாதாம் யஸ்மாந் மோசயதே ப்ருஶம் |
விபாஶேதி ச ஸா ப்ரோக்தா ஸம்ஸார்ணவதாரிணீ ||
பருஷ்ணி (ராவி) நதிக்கு இராவதி (அ) ஐராவதி என்ற பெயரும் புராணங்களில் உண்டு.
அஸிக்னி (சீனாப்) நதி புராணங்களில் சந்திரபாகா என்ற பெயரில் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிறது.
ஸிந்து நதியின் பெருமை ரிக்வேதத்தில் பல மந்திரங்களில் வருகிறது. முக்கியமாக யாகங்களில் ஸிந்து நதியின் பங்கு போற்றப்படுகிறது.
"தீர்த்தங்களே, யஜமானனின் யாகசாலையிலிருந்து நாங்கள் தங்கள் பெருமையை வெகுவாகப் போற்றுகிறோம். நதிகள் ஏழு ரூபங்களாக, மூன்று லோகங்களிலும் (பூலோகம், அந்தரிக்ஷம், ஸ்வர்க்கலோகம்) ப்ரவகிக்கின்றன. அவற்றுள் ஸிந்து நதியானது தன் சக்தியினால் மற்ற எல்லா நதிகளையும் விட உயர்ந்து நிற்கிறது." (8.3.6.10)
"ஸிந்து தேவியே, வருணன் தங்கள் பிரவாகத்திற்காக வழியை உண்டுபண்ணுகிறார். மற்ற எல்லா நதிகளையும் விட அதீத சக்தியுடன் தாங்கள் பிரவகித்து, உணவுப்பொருட்களை ஏராளமாக உற்பத்தி செய்கிறீர். மலைமுகட்டுகளில் உடைத்துக்கொண்டு பெருகி, பூமியில் ஸகல ஜீவராசிகளுக்கும் பொருட்செல்வத்தை வாரி வழங்குகிறீர்." (8.3.6.10)
"ஸிந்து நதியின் ரதம் வெகு நேர்த்தி; குதிரைகள் மனோகரமானவை. அவள் அழகிய தங்க ஆபரணங்களைப் பூண்டு, பரிசுத்தமாகக் காட்சியளிக்கிறாள். எப்போதும் இளமையுடன் (நீர் நிறைந்து) உள்ளாள். ஏராளமான உணவுகள், கம்பளிகள் முதலானவற்றை வழங்குகிறாள். ஸில்னா முதலிய மருந்துசத்துகள் அவளுடைய நீரில் உள்ளன. தேன் தரும் நிர்குண்டி முதலான மூலிகைகளை (கரைகளில்) வழங்குகிறாள்." (8.3.7.10)
"பால் நிறைய வழங்கும் பசுக்கள், யக்ஞவேதியில் அக்கினிஹோத்ரம் முதலான யாகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அக்கினியை எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், ஸிந்து போன்ற நதிகளும் மலைப்பிரதேசங்களிலிருந்து பூமியின் சமதரைகளுக்கு பெருகி, அக்கினியின் நல்லெண்ணத்தை எதிர்பார்க்கிறார்கள்; ஸமித் முதலான யாகப்பொருட்களை அக்கினிக்காகவே வளர்க்கிறார்கள்." (1.5.20.1)
"வயதுமுதிர்ச்சியே தாக்காத அஸ்வினிகுமாரர்களே, தாங்கள் ஸிந்து நதி, தேன் போன்ற இனிய நீருடன் பெருகவும், ஒருக்காலும் வற்றாமலிருக்கவும் காப்பாற்றுகிறீர்." (1.7.34.1)
"ஏழு ரித்விக்குகள் யக்ஞத்தை முறைப்படி இயற்றி, தர்மத்தைக் கறக்கிறார்கள். ரிஷிகள் வசிக்கும் பிரசித்தமான ஸிந்து நதி தீரத்தை யாகம் செய்ய தகுந்த தீர்த்தமாக தேர்ந்தெடுத்தார்கள்." (6.5.15.8)
"ஸிந்து மற்றும் பிற நதிகளே, தங்கள் ஸாரமே எங்கள் கர்மாக்களில் பங்குகொண்டு, காண்பதும், காணாததுமான இருவகைப் பலன்களையும் வழங்குகிறது. இந்திராதி தேவர்கள் பருகி திருப்தியடையும் நீரைப் பெருக்குங்கள். ஸோமலதையின் ஸாரத்துடன் சேரத் தயாராக உள்ளன இந்த நீர்கள். அந்தரிக்ஷத்திலிருந்து மழையாகப் பொழிந்து, இந்நீர்கள் மூவுலகங்களிலும் பரவுகின்றன. யாகப் பாண்டங்களில் நிரம்பி, அவை தேவர்களை அடைகின்றன (ஆஹுதிகள் மூலமாக)." (7.7.25.10)
இதுபோன்ற விசேஷ குறிப்புகள் - தானிய வளம், யாகங்கள், தேவர்களுக்கு ஆஹுதி முதலானவை - யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் ஆகியவற்றிலும் வெகுவாக அமைந்திருக்கின்றன.
பிரம்மவைவர்த்தபுராணத்தில், நாம் அன்றாடம் சொல்லும் பிரசித்தமான ஸ்லோகம் வருகிறது.
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||
ஏழு பிரதான நதிகளில் ஸிந்துவைச் சேர்த்திருக்கிறார்கள்.
நாராயண ஸரோவர மாஹாத்மியம் கூறும்:
"ஸிந்து நதி ஸமுத்திரத்தில் ஸங்கமிக்கும் ஸ்தானத்தைப்போன்ற தீர்த்தம் -இதைத்தான் நாராயண ஸரோவர் என்கிறார்கள்- (இவ்விடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உலகில் இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. தேவர்களே அங்கு சரீரத்தைவிட விரும்புகிறார்கள்; பிறரைப்பற்றி என்ன சொல்வது?
ஸிந்தூததிஸமம் தீர்த்தம் ந பூதம் ந பவிஷ்யதி |
அமரா ம்ருத்யுமிச்சந்தி ஹ்யந்யேஷாம் தத்ர கா கதா ||
கயா, குருக்ஷேத்ராதி க்ஷேத்ரங்கள் சென்று, அதுவும் சூரிய க்ரகணம் போன்ற புண்ணிய காலங்களில் பலவித தானங்களை - பூமி, யானை, குதிரை, பொன் போன்றவை - நான்கு வேதங்களையும் கற்றறிந்த பிராம்மணனுக்கு அளித்தால் கிடைக்கும் புண்ணியத்தைவிட அதிக புண்ணியம் ஸிந்து ஜலத்தில் ஸ்னானம் செய்வதால் கிடைக்கிறது. தேவன், அசுரன், மனிதன், நாகன் யாருமே ஸிந்துவின் பெருமையைக்கூற சக்தியற்றவரே."
"ஸிந்துவில் சென்று பித்ருகாரியங்களைச் செய்யவேண்டுமென்று பித்ருக்கள் ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு செய்பவன் வாழ்க்கை ஸார்த்தகமாக ஆகும்."
கிருஷ்ண பகவான் யுதிஷ்டிரரிடம் ஸிந்துவின் பெருமையைப்பற்றிக் கூறுகிறார்:
த்ருஷ்ட்வா ஜந்மஶதம் பாபம் ஸ்ப்ருஷ்ட்வா ஜந்மஶதத்ரயம் |
ஸ்நாத்வா ஜந்மஸஹஸ்ராணாம் ஹந்தி ஸிந்தோர்மஹஜ்ஜலம் ||
"ஸிந்து நதி தரிசனமே நூறு ஜன்மங்களின் பாபங்களைப்போக்கும். ஸ்பரிசம் முந்நூறு ஜன்ம பாபங்களை அழிக்கும். ஸ்னானத்தினால் ஆயிரம் ஜன்ம பாபங்கள் தொலையும்."
இதனை விளக்க ஒரு கதை சொல்கிறார் பகவான். கான்யகுப்ஜ அரசன் ஒரு சமயம் வேட்டையாட காட்டிற்குச் சென்று ஒரு பன்றியைத்துரத்தி அம்பெய்ய, நாராயண ஸரோவர் க்ஷேத்திரத்தில் அப்பன்றி விழுந்து பிராணனை விட்டது. வாழ்க்கையின் கடைசி நொடியினில் ராஜாவை நினத்து உயிரை விட்ட பன்றி, ராஜாவின் பெண்ணாகப் பிறந்தது. ஆனால் முகம் பன்றியாகவும், கழுத்திற்குக்கீழ் மானிடப்பெண்ணாகவும் இருந்த அப்பெண்ணைக்கண்டு, பெண் ஸத்குணங்கள் பெற்றிருந்தாலும், பெருந்துயரத்தில் ஆழ்ந்தார் ராஜா. ஒரு நாள் ராஜஸபைக்கு விஜயம் செய்த கபில வாஸுதேவ மாமுனிவரிடம் ராஜா தன் துயரத்தைத் தெரிவித்தார். முனிவர் தியானம் செய்து ராஜாவிடம் சொன்னது பேராச்சரியமாக இருந்தது. "பன்றி பிராணனை விட்டபோது உன்னை தியானித்ததால் உன் பெண்ணாகப் பிறந்தது. பன்றியின் சரீரத்தின் கீழ்ப்பாகம் அம்பின் வேகத்தினால் ஸிந்து நதியில் வீசப்பட்டதால், ஸிந்து நதியின் மஹிமையினால், மானிட சரீரமாக அப்பகுதி பிறந்துள்ளது. ஆனால் முகபாகம் வள்ளிக்கொடிகளில் சிக்கிக்கொண்டு அங்கேயே இருந்துவிட்டபடியால், பெண்ணின் முகம் பன்றிரூபமாக உள்ளது. நீ இப்போது அந்த இறந்த பன்றியின் முகத்தைத் தேடி எடுத்து, ஸிந்து நதியில் சேர்த்துவிட்டால், இப்பெண்ணின் முகம் மானிடமுகமாக மாறிவிடும்" என்றார். ராஜாவும் அவ்வாறே செய்ய, பன்றியின் முகத்தை ஸிந்துவில் சேர்த்துவிட்ட உடனேயே, பெண்ணின் முகம் பேராச்சரியமாக சந்திரபிம்பம் போன்ற அழகிய பெண் உருவமாக மாறிற்று. அதீத ஆனந்தமடைந்த ராஜா பெரிய யாகம் செய்து, ஏராளமான தானங்களை அளித்தார். இக்கதையை சிரவணம் செய்வதே ஆயிரம் கோதானபலனைக் கொடுக்கும்.
ஸிந்து நதியின் மணலை சிரஸில் தரிப்பதால், அக்ஞானம் மறைந்து, சிவ ஸ்வரூபத்தை அடைகிறான் மனிதன் என்கிறது புராணம். ஸிந்து ஜல தரிசனம், ஸ்பரிசம், பானம் ஆகியவற்றால் மனிதனின் முன்னேழு, பின்னேழு தலைமுறைகளை முன்னேற்றமுடியும்.
பிரம்மபுராணத்தில் ஸிந்து நதியின் பெருமைகளைப் பலவாக விவரிக்கும்போது, ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று (மஹா ஜ்யைஷ்டி) ஶ்ரீகிருஷ்ண தரிசன பலனுக்கு சமமாக, ஸிந்து, விதஸ்தா, சந்திரபாகா, ஸதத்ரு, விபாசா, கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகிய நதிகளில் ஸ்னானமும், தானமும் பலனையளிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பத்மபுராணம் ஸிந்து, சந்திரபாகா, ஸரயு, கண்டகி, கௌசிகி நதிகளில் ஒரு மாதம் ஸ்னானம் செய்தால் மோக்ஷமே ஸித்திக்கும் என்கிறது. பல க்ஷேத்திரங்களின் மகிமையைச் சொல்லுங்கால், சந்திரபாகா கங்கையுடன் இணையும் ஸ்தலத்தில், துக்தேஸ்வரர் க்ஷேத்திரப் பெருமையை புராணம் விவரிக்கிறது . மேலும், ஸிந்து நதிக்கரையில், தேவதைகளே ’மௌலிஸ்தான்’ (தற்கால மூல்டான்) என்கிற சிறந்த பட்டிணத்தை நிறுவியதைக் கூறுகிறது. ஸிந்துவின் பிரவாஹப்பேரோசை இந்நகரத்தில் கேட்பதாகவும், கலியுகத்தில் ம்லேச்சர்களும், பாபிகளும் இங்கு குடியேறுவார்கள் என்றும் சொல்கிறது.
சந்திரபாகா ஸிந்துவுடன் இணையும் துக்ததீர்த்தத்தில் ஸ்ராத்தம் செய்து, எள், பிண்டங்கள் பித்ருக்களுக்கு ஸமர்ப்பிப்பவன் விஷ்ணுபதத்தை அடைகிறான்.
பிரம்மாண்டபுராணத்தில் ஸிந்துவும், சந்திரபாகாவும் மானஸ ஸரோவரில் உற்பத்தியாகி, எல்லா ஜீவராசிகளையும், முக்கியமாக தர்மம் தவறாதவர்களை புனிதப்படுத்துவதாக கூறப்பட்டிருக்கிறது.
ஶ்ரீமத் பாகவதத்தில், ஜம்பூத்வீப வர்ணனையில், சில நதிகளின் பெயர்களை உச்சரித்தாலே புனிதம் கிடைக்கும் என்னும்போது, பாரததேச மக்களுக்கு அந்நதிகளின் ஸ்பரிச பாக்கியம் கிடைத்துள்ளது என்று கூறி, ஸிந்து, ஸுஷோமா, ஸதத்ரு, சந்திரபாகா, மருத்வ்ருதா, விதஸ்தா, அஸிக்னி, கங்கை, யமுனை, ஸரஸ்வதி நதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஶ்ரீதேவிபாகவதத்தில், சக்திபீடங்கள் வரிசையில், விபாசாவில் அமோகாக்ஷி, சந்திரபாகாவில் காலதேவி ஆகிய மூர்த்தங்களும், மற்றும் ஸிந்து பிரதேசத்தில் பல தேவி க்ஷேத்திரங்களும் ஸ்தோத்திரிக்கப்படுகின்றன.
பவிஷ்யபுராணத்தில், ஶ்ரீகிருஷ்ணருக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த ஸாம்பன் கதை வருகிறது. துர்வாஸருடைய சாபம் காரணமாக குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்ட ஸாம்பன், ஸூரிய உபாஸனை செய்து, ரோகநிவாரணம் அடைந்தான். பிறகு சந்திரபாகா நதிக்கரையில் ஸாம்பா என்ற இடத்தில் சூரியன் ஸாம்பனுக்கு தரிசனம் தந்து ஸத்கதி நல்கி, எல்லோருக்கும் அனுக்ரகம் செய்துகொண்டிருக்கிறார்.
வராஹபுராணத்தில், பிரம்மகபாலம் கையில் ஒட்டிக்கொள்ளவே, பூமியில் பல தீர்த்தங்களில் ஶ்ரீருத்திரன் ஸ்னானம் செய்ததைக் கூறுகிறார்கள். அப்போது ஸிந்து, விதஸ்தா, சந்திரபாகா நதிகளில் ஸ்ரீருத்திரன் ஸ்னானம் செய்து, சந்திரபாகா தீரத்தில் சந்திரேஸ்வரரை உபாஸித்து, ஸிந்துவின் சக்கிரதீர்த்தத்தில் ஸ்னானம் செய்தார்.
ஸ்காந்தபுராணத்தில், சிவபெருமான் அக்கினிதேவரிடம் சில நதிகளைக் குறிப்பிட்டு, அவர்களை அக்கினி விவாகம் செய்துகொண்டு, அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளே, யாகங்களில் உபயோகமாகும் அக்கினிகளாவார்கள் என்றார். பதினாறு நதிகள், திஷ்ணி என்ற பெயருடன் அக்கினி பத்தினிகளாகின்றனர். அவர்கள்: நர்மதா, காவேரி, கிருஷ்ணவேணி, ரேவா, யமுனை, கோதாவரி, விதஸ்தா, சந்திரபாகா, இராவதி, விபாசா, ஶதருத்ரிகா, கௌசிகி, ஸரயு, ஷிப்ரா, ஶரஸ்வதி, ஹ்லாதினி. அக்கினிக்கு இவர்களிடம் பிறந்த புத்திரர்களான அக்கினிகளுக்கு ’திஷ்ண்யர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது.
மேலும், சந்திரபாகா தீரத்தில் சந்திரன் ஆயிரம் வருஷங்கள் தபஸ் செய்து, கோகர்ணேஸ்வரர் (சிவன்) தரிசனம் தந்து, சந்திரனுடைய தேஜஸ் கொண்ட சந்திரபாகா நதி பிரகடனமான கதை வருகிறது.
வாமனபுராணத்தில், ஒரு கோரமான தோற்றம் கொண்ட பிராம்மணன் கதை கூறப்பட்டிருக்கிறது. ஒரு அழகான பிராம்மணப் பெண்ணை அவன் விவாகம் செய்துகொண்டபிறகு, இருவர் மனத்திலும் மிக்க துக்கம் மேலிடவே, அவன் காடு சென்று கடும் தபஸ் செய்தான். ஐராவதி நதிதீரத்தில் விஷ்ணு பகவான் தரிசனம் கொடுக்க, அவருடைய கிருபையினால் விஷ்ணு போன்ற ரூபத்தை அடைந்தான்.
மத்ஸ்யபுராணம் ஐராவதி நதியைப்பற்றி சொல்வதாவது: பக்தர்களின் பாபங்களைச் சடுதியில் தீர்ப்பது; பல சிறிய ஆறுகளை தன்னுடன் இணைப்பது; ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள் எல்லோரும் சேவிப்பது; மனிதர்களைப் புத்திரர் போல் காப்பது; தடையின்றி பெருக்கெடுத்தோடுவது; பொன்னைக்கொண்டது.
காளிகா புராணத்தில், வஸிஷ்ட மகரிஷி சந்திரபாகா நதிக்கரையில் பிரம்மாவின் ஆணைப்படி அருந்ததியை விவாகம் செய்துகொண்டார் என்று வருகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் சந்திரபாகாவில் ஸ்னானம் செய்து, ஶ்ரீவிஷ்ணுவை உபாஸிப்பவன் மோக்ஷமடைகிறான்.
வால்மீகி ராமாயணத்தில் ஸிந்து நதியின் கீர்த்தி பல இடங்களில் பேசப்படுகிறது. ஸமுத்திரராஜன் ஶ்ரீராமரை கடல்கரையில் தரிசனம் செய்ய வந்தபோது ஸிந்து நதியும் பிரதானமாக கூட வந்தாள் என்று வருகிறது.
கங்காஸிந்துப்ரதாநாபிராபகாபிஃ ஸமாவ்ருதஃ |
ஸாகரஃ ஸமுபக்ரம்ய பூர்வமாமந்த்ர்ய வீர்ய்யவாந் ||
அப்ரவீத்ப்ராஞ்சலிர்வாக்யம் ராகவம் ஶரபாணிநம் ||
மகாபாரதத்திலும் ஸிந்து நதி, கிளை நதிகள் பற்றி வர்ணனை, விரிவான புண்ணியபலன்கள் எல்லாம் கூறப்பட்டிருக்கின்றன.
ஹேமாத்ரி என்கிற தர்ம சாஸ்திர புத்தகத்தில், ஸ்னான ஸங்கல்ப மந்திரத்தில், நதிகளைப்பற்றி குறிப்பிட்டு,
மஹிதநயேத்யநேக-புண்யநதீபிர்-விலஸிதே
ப்ரஹ்மபுத்ர-ஸிந்துநதாதி-பரமபவித்ர-ஜலவிராஜிதே இத்யாதி |
ஸிந்து நதி பரம பவித்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஸாதுபேலா
ஸிந்து நதியின் மத்தியில் பாகிஸ்தானிலுள்ள ஸிந்த் மாநிலத்தில் ஸுக்கூர் என்ற இடத்தில் ஸாதுபேலா என்கிற விசேஷ க்ஷேத்திரம் அமைந்துள்ளது. 1823ல் ஸ்வாமி பரகண்டி மகராஜ் என்பவரால் இது எழுப்பப்பட்டது. நேபாளத்திலிருந்து வந்த இந்த ஸ்வாமிஜி 40 வருஷம் இங்கு தபஸில் ஈடுபட்டு, அன்னபூரணா தேவியை உபாஸித்து, அந்த பிரதேசத்தில் அன்ன ஸம்ருத்தியை உண்டாக்கினார். இந்துக்களுக்கு மிகவும் புனிதமான க்ஷேத்திரமாக இது கொண்டாடப்படுகிறது. ஸிந்து நதியில் ஒரு தீவு போன்ற ஸ்தலத்தில் அமைந்துள்ள இக்கோவில் மிக அழகானது. படகில் போய் தரிசிக்கவேண்டியது. உதாஸீன என்கிற ஆன்மீக இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பண்டைக்காலத்தில் இந்த க்ஷேத்திரத்தில் பல யாகங்கள் நிகழ்த்தப்பட்டதாக அறிகிறோம். விஷ்ணுகாட், குசவ்ரதகாட், ராமகாட், சக்கிரதீர்த்தம் போன்ற தீர்த்தகட்டங்கள் இங்குதான் இருப்பதாக ஆதாரம் உள்ளது. வருணபகவான் குரு நானக் தேவருக்கு இங்கு தரிசனம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
(கட்டுரை ஆதாரம்: "ஶ்ரீஸிந்து-ஸப்தநத-ஸாதுபேலாதீர்த்த-மாஹாத்ம்யம்" - பண்டித ஶ்ரீதிவாகாந்த சர்மா ஸம்ஸ்கிருதம், ஹிந்தியில் எழுதி, மும்பையில் 1917ல் வெளியிடப்பட்ட பழைய புஸ்தகம். தற்போது சென்னை குப்புஸ்வாமி சாஸ்திரி ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட் பெருமுயற்சியால் கிடைக்கப்பெற்றது.)