Deepavali - Anugraha Bhashanam (Video message)

04-11-2021

Deepavali - Anugraha Bhashanam of HH Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal - 4 Nov. 2021.
Shrimatam Camp - Kanchi Mahaswami Manimandapam, Orikkai
 



தீபாவளி அனுக்ரக பாஷணம்

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஸ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எந்த சமயத்திலே தர்ம சிந்தனையை வளர்க்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறதோ, தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது. மக்களுக்கு பல்வேறு விதமான ஸ்ரமங்கள் ஏற்படும் காலத்திலே, எல்லாம் வல்ல இறைவன், கருணா மூர்த்தியாக இருக்கக் கூடியவர், மனித உருவத்திலே வந்து, இந்த பூவுலகத்திலே வந்து, அவதாரம் செய்து, மக்களைக் காப்பாற்றி அருள்பாலிக்கிறார்.

அப்படி தசாவதாரங்கள் நிகழ்கின்றன். கூர்மாவதாரம், மச்சாவதாரம், வராஹா அவதாரம், நரசிம்ஹா அவதாரம், பரசுராமாவதாரம், ராமா அவதாரம், வாமனாவதாரம் இந்த வரிசையிலே கிருஷ்ணாவதாரமானது ஏற்ப்பட்டது.

மக்களை நல்ல உபதேசங்கள் மூலமாக நல்வழிப்படுத்தி, இறைவன் குருவாகவும் திகழ்கிறார். ஜகத் குருவாகவும் திகழ்கிறார். அதுதான் கிருஷ்ண அவதாரத்தின் தனிச் சிறப்பு. இன்னல்களைப் போக்கி, இடர்பாடுகளைப் நீக்கி, ஹிம்சை அளித்தவர்களை அழித்து, இப்படி அவதாரங்கள் பொதுவாக இருக்கின்றன.

இந்த கிருஷ்ணாவதாரத்திலே, பகவத்கீதையின் மூலமாக மனிதன் நாகரீகம் வளர்வதற்கான தெளிவான உபதேசங்களை அளித்திருக்கிறார். மனிதப் பிறவி என்பது இறைவனின் அருளால் நமக்கு கிடைக்கக் கூடிய ஒரு வரட்பிரசாதம். இந்த அறிய பிறவியிலே இறைவனுடைய தத்துவங்களை நாம் அறிய முற்ப்பட வேண்டும். இந்தப் பிறவியானது புனிதப் பிறவியாக உயர்வதற்கு நம்மால் முடிந்த பரோபகாரங்களை நாம் செய்ய வேண்டும். பிறருக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

பசி போக்குவதற்கு, தாகம் போக்குவதற்கு, அறியாமையை போக்குவதற்கு; அதே போன்று சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களை நல்ல விதமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குரு பக்தியுடன் கல்வியை கற்க வேண்டும். மனிதப் பிறவியிலே நாம் தெய்வ பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதற்கு சத்சங்கம் என்பது தேவை. நல்லோர்களுடன் சேர்க்கை.. இந்த மனிதப் பிறவி என்பது மனிதப் பிறவி சாஸ்வதம் இல்லை என்றாலும், சாஸ்வதமான புண்ணியத்தை அளிக்கக் கூடியது, மனிதப் பிறவி சாஸ்வதம் இல்லை என்றாலும், மனிதப் பிறவியின் மூலமாக செய்யக் கூடிய நற்செயல்கள், சாஸ்வதமான புண்ணியத்தை, நிரந்தரமான ஈஸ்வரனுடைய, பெருமாளுடைய அனுக்ரகத்தைப் பெற்று தரக்கூடியது.

ஆகவே, இளமையில் கல், அறம் செய்ய விரும்பு, ஆலயம் தொழுவது சாலமும் நன்று. இது போன்ற பல அறிவுரைகளை தமிழகம் நமக்கு அளித்து இருக்கிறது. உலகளவிலே பொது மறையாகக் கருதக் கூடிய பகவத்கீதையை கிருஷ்ண பரமாத்மா நமக்கு அளித்து இருக்கிறார். அந்த கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம், இன்றைய நிலையிலே உலகனைத்திற்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் மனித நேயத்துடன் பழக வேண்டும், மனித நாகரீகத்தோடு பழக வேண்டும், நம்பிக்கையோடு பழக வேண்டும், அனைவரும் நல்லிணக்கத்தோடு பழக வேண்டும்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
என்று ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிடுவது போன்று, நாம் பல பிறவிகளை எடுத்து வருகிறோம். அந்த பல பிறவிகளிலும் நல்ல பணிகளை செய்வதற்கு, நாம் முற்ப்படுவதற்க்கு அந்த இறைவனுடைய அருள் என்பது மனித சமுதாயத்திற்க்கு மிகவும் தேவையான ஒன்று. ஆகவே, நல்ல வாழ்க்கை நமக்கு அமைவதற்கு, நல்ல சிந்தனைகள் அமைவதற்கு, நல்ல நண்பர்கள் அமைவதற்கு, பொருளாதாரம் சிறப்பான முறையில் அமைவதற்கு , வேலை வாய்ப்புகள் சிறப்பான முறையிலே இறைவன் படைத்த பொருட்களை நாம் சரியான முறையிலே பகிர்ந்து கொண்டு, அனைவருக்கும் உதவி செய்து, தியாகமும், சேவையும், அன்பும் கலந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நாமும் இன்பமாக வாழ்ந்து, நம்மைச் சார்ந்தவர்களும் இன்பமாக வாழ்வதற்கு, ஆனந்தமாக வாழ்வதற்கு, அன்புடன் வாழ்வதற்கு வேண்டிய ஒரு பக்குவமான நல்லதொரு சிந்தனைகள்,நல்லதொரு வழிமுறைகள்-ஆசாரக் கோவை போன்று . திருக்குறள் போன்ற புஸ்தகங்களைப் படித்து, நல்ல தன்மையைத் தரக் கூடிய வாழ்க்கையை, நல்ல நன்மையைத் தரக்கூடிய நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதெற்கெல்லாம் எடுத்துக் காட்டாக, வாழ்க்கையிலே ஒளி வெள்ளம் ஏற்பட வேண்டும். பிரகாசம் ஏற்பட வேண்டும். ஜோதி, பிரகாசம் ஏற்படுவதற்கு, இந்த தீபாவளிப் பண்டிகை உதாரணமாகத் திகழ்கிறது.

கிருஷ்ண பரமாத்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட, அனுகரிக்கப் பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட, தீபாவளி நரகதசி புண்ய காலத்திலே அனைவரும் காலையிலே நீராடி, லக்ஷ்மி கடாக்ஷத்தையும், கங்கை நதியிலே ஸ்நானம் செய்த புண்ணியத்தையும் -தைலே லக்ஷ்மீஹி , ஜலே கங்கா என்று சொல்வார்கள். அன்றைய தினம் கங்கா ஸ்நானம் ஆகி விட்டதா என்று பரஸ்பரம், குசலம் விசாரித்துக் கொள்வார்கள். அப்படி புனிதத் தன்மையை, எங்கேயோ இருக்கக் கூடிய, இமய மலையிலே இருக்கக் கூடிய புனிதமான கங்கையிலே நீராடிய, ஸ்நானம் செய்த புண்ணியத்தை, நாம் தமிழகத்தில் இருந்தும் சரி, வெளிநாட்டில் இருப்பவர்களும் சரி, அன்றைய தீபாவளி தினம் , புனித நீராடுதல் மூலமாக, நாம் அந்த கங்கா ஸ்நானத்தின் புண்ணியத்தைப் பெறுகிறோம். லக்ஷ்மியின் கடாக்ஷத்தை, செல்வத்தைப் பெறுகிறோம். இப்படி அருளையும், பொருளையும் பெற்று, நம்முடைய நாடு மற்றும் உலகம் மேலும் சிறப்பாக விளங்குவதற்கு, எல்லாம் வல்ல அந்த கிருஷ்ண பரமாத்வாவையும், அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி என்கிற காமாக்ஷி அம்மனையும் பிரார்த்தனை செய்வோம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர


Back to news page