06-05-2023
ஸ்ரீசீதா கல்யாண மஹோத்ஸவம்
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில் சீதா கல்யாண மஹோத்ஸவம் நான்கு நாட்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 31வது ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள யாத்ரி நிவாஸில் கடந்த 4ல் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாளான மே 5ல் கலச ஸ்தாபனம், சுவாசினி விளக்கு பூஜையும், மறுநாள் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ராமருக்கு லட்சார்ச்சனை, மஹா தீபஆராதனை நடந்தது.
சீதா கல்யாண மஹோத்ஸவ தினமான நேற்று பாகவத சம்பிரதாய முறைப்படி, மாயவரம் ஞானகுரு பாகவதர் குழுவினரால் சீதா கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி வீதியுலாவும், ஆஞ்சநேயர் உற்சவமும் நடந்தது.
காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பதியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
விழா ஏற்பாட்டை ஸ்ரீசீதா ராம பஜனைமண்டலியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.