நாடு முழுவதும் காஞ்சி சங்கர மடத்தின் கிளைகளில் ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா

26-04-2023

நாடு முழுவதும் காஞ்சி சங்கர மடத்தின் கிளைகளில் ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா

அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா நேற்று இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் கொண்டாடப்பட்டது. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில் சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார்.

இவரது 2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் நேற்று கொண்டாடப்பட்டது. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் குறித்த வேத செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் இவரது ஜெயந்தி விழா அமைந்துள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபாள், வாராணசி, அசாம் - காமாக்யா, ராணிபூல், சிக்கிம், பூரி,புது டெல்லி, பஞ்சாப், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆதிசங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியன நடைபெற்றன.

#kamakoti
Back to news page