ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


அம்பாளின் மகிமை
வேதபாஷ்யரத்னம் ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி

உலகனைத்துக்கும் தாயாக இருப்பவள் ஸ்ரீகாமாக்ஷி, அவளுடைய குழந்தைகள்தாம் மக்கள் அனைவரும். குழைந்தைகளாகிய நாம் அறியாமையால் மற்றத் தேவர்களை வழிபட்டாலும் கூட நாம் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக ஆக முடியுமா? ஒரு குழந்தை அல்லது பசு மற்றவர் வீட்டில் நுழைந்து விட்டதால் அது அவர்களுடையதாகவோ, அரசுடைமையுடையதாகவோ ஆகுமா? அது தன் தாயைத்தானே சேரும். இதுபோல நாம் எந்த நிலையிலும் ஸ்ரீகாமக்ஷியின் குழந்தைகள்தாம் என்று அம்பாளின் பெருமையை ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் இவ்விதம் இந்த ச்லோகத்தில் கூறுகிறார்.

மௌட்யாதஹம் சரணயாமி ஸுராந்தரம் சேத்
கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய பவாமி மாத : |
அக்ஞானத : பரக்ருஹம் ப்ரவிசந் பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பசு: கிமு ராஜகீய : ||

ஸ்ரீலலிதா பரமேச்வரியாக விளங்கும் இவளது கருணை ஏற்பட்டு விட்டால் நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிட்டும். அந்த நற்பயனைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. எந்தவிதமான ஸாதனங்களும் இல்லாமலேயே உலகை வென்றுவிட முடியும். இதற்கு உதாரணம் மன்மதன். இவனுக்கு உடலே கிடையாது. இவனது வில் பூவால் ஆனது. வண்டுகள்தான் நாண்கயிறு. பானங்கள் மொத்தம் ஐந்துதான். படைபலம் கிடையாது. வஸந்தகாலம் ஒன்றுதான் துணைவன். மலயமலையின் காற்று இவனது தேர். இவ்வாறு இருப்பினும் இந்த மன்மதன் உலகனைத்திலும் வெற்றி கொள்கிறான். பரமசிவனையும் மயக்குகிறான். இதற்குக் காரணம் அம்பாளின் கடைக்கண் அருள்தான் என்று ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

தனு: பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகா :
வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத : |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே ||

பரமேச்வரரின் பெருமையும், சிரஜீவித் தன்மையும் கூட அம்பாளின் ஸௌபாக்யத்தினால்தான் ஏற்படுகிறது. தேவர்கள் அமிருதத்தை அருந்தியும் கூட விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மிகவும் கொடிய விஷமாகிய ஹாலாஹலத்தைப் பருகிக்கூட நீலகண்டரான சிவனுக்குக் காலம் முடிந்தது என்ற பேச்சே இல்லை. இதுவும் அம்பாளின் தாடங்கத்தின் மகிமைதான் என்று ஸௌந்தர்யலஹரி கூறுகிறது.

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத : |
கராளம் யத் க்ஷ்வேளம் கபளிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மன்யே தவ ஜநநி தாடங்கமஹிமா ||

அம்பாள் இவ்வாறு தன் பதிக்குப் பெருமையை வாங்கித்தந்தாலும் கூட அந்தச் சிறப்பு தனக்கே வேண்டும் என்று எண்ணுவதுமில்லை. பெருமையால் வரும் பட்டத்தை சிவனுக்கே சூட்டினாலும் பேசாமல் இருக்கிறாள். மன்மதனை இரண்டு பேருக்கும் பொதுவான (அர்த்தநாரீச்வரரின் நெற்றிக் கண்ணில் அம்பாளுக்கும் பாதி உரிமை உண்டானதால்) நெற்றிக்கண்தானே எரித்தது? சிவன் தான் மட்டுமே “ஸ்மரரிபு:" என்று பெயர் பெறுவது எப்படி ஸரியாகும்? இதுவாவது போகட்டும்! இடது கால் தானே உதைத்து யமனை ஜயித்தது? அதில் அம்பாளுக்குத் தானே முழுபங்கும் உள்ளது. இதிலும் புகழை ஈச்வரன் அடைவது பொருந்தவே பொருந்தாது. அதில் அவருக்கு என்ன பங்கு உள்ளது? என்று வேடிக்கையாக அம்பாளின் பாதிவ்ரத்யத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்:

ஸாதாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாத்யே
பாகீ சிவோ பஜது நாம யச: ஸமக்ரம்|
வாமாங்க்ரி மாத்ரகலிதே ஜனனி த்வதீயே
கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ||

கஷ்டகாலங்களில் ஜகன்மாதாவான அம்பாளைத்தான் நாம் பிரார்த்திக்க வேண்டும். கஷ்டகாலத்திலும் தாய்தான் அழைத்தவுடனே கருணை புரிவாள். நல்ல காலத்தில் நினைக்காமல் கஷ்டத்தில் மட்டும் அழைத்தால் மற்றோர் வஞ்சனையாக எண்ணி விடுவர். தாய் அவ்வாறு இல்லாமல் கருணை புரிவாள் என்கிறார் ஒரு பக்தர்:

ஆபத்ஸூமக்ன: ஸ்மரணம் த்வதீயம் கரோமி துர்கே கருணாணவேசி |
நைதச்சடத்வம் மம பாவயேதா: க்ஷுதாத்ருஷார்த்தா: ஜனனீம் ஸ்மரந்தி||

மேலும்...

Home Page