ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 10    கீலக வருஷம் மாசி மாதம் 12-2-1969   இதழ் :1


ஸ்ரீ காமகோடி ப்ரதீபத்தின் ஒன்பது ஆண்டு ஸேவை

விகாரி வருஷம் மாசி மாதம் முதல் தேதி (பிப்ரவரி, 1960) ‘ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்‘ என்ற மாதப் பத்திரிகையின் முதல் இதழ் ஆரம்பமாயிற்று. 1969 ஆம் ஆண்டு ஜனவரி இதழுடன் ஒன்பது ஆண்டுகள் பூர்த்தி அடைகின்றன. இந்த ஒன்பது ஆண்டுகளில் மாதந்தோறும் தவறாமல், சந்தாதார்களுக்கும் வாசகர்களுக்கும் நம் பத்திரிகை பல அரிய விஷயங்களை வழங்கியிருக்கிறது. ஆசிரியர் குழுவின் ஒத்துழைப்பினாலும், ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் அநுக்கிரகத்தினாலும் இந்தப் பத்திரிகை ஸநாதன தர்மத்துக்குச் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறது.
நம்முடைய தர்ம விசேஷங்களை மக்களுக்கு அளிக்கும் பத்திரிகைகள் நம் நாட்டில் வெகு சிலவே உள்ளன. இந்தப் பத்திரிகை, தொன்றுதொட்டுள்ள பாரத தர்மத்தை நன்றாகப் பிரசாரம் செய்து, தர்மத்தின் அடிப்படைகளை மக்கள் உணரச் செய்து வருகிறது. தர்மத்தினால் சமூக ஒற்றுமையை வளர்க்கிறது. ஏற்கனவே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பொருட்படுத்தாமல்,
தர்மாநுஷ்டானத்தில் மக்களை ஒன்று படச் செய்கிறது. ஆதிசங்கர பகவத்பாதர் ஸ்தாபித்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் வரலாற்றையும், அதன் பெருமையையும், காஞ்சியிலுள்ள ஸ்ரீ காமாஷி தேவியின் மகிமையையும், ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சீபுரத்தின் பெருமையையும் தக்க சான்றுகளுடன் விவரித்து அறிஞர்கள் அவ்வப்போது எழுதிய பல கட்டுரைகள் ப்ரதீபத்தில் வெளிவந்துள்ளன. நம் பத்திரிகையின் சந்தாதார்களும் வாசகர்களும், மேலே குறிப்பிட்ட விஷயங்கள் யாவற்றையும் படித்துப் பெரும் பயனை அடைந்திருப்பார்கள் என்பதில் ஜயமில்லை.
ஆண்டுதோறும் வரும் இந்துக்களுடைய விரதங்களையும் பூஜைகளையும் அவற்றைச் செய்யும் முறைகளையும் ப்ரதீபம் தாங்கி வந்திருக்கிறது. வரலக்ஷ்மீ வ்ரதம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ணாஷ்டமி, சிவராத்திரி, மகரஸங்க்ராந்தி, ஸுர்யபூஜை முதலியவை பலருக்கு உதவியுள்ளன. தமிழகத்தைச் சார்ந்த பலர், வெளியூர்களில் பூஜைகளைச் செய்விக்க உபாத்தியாயர்கள் கிடைக்காத குறை இந்தக் கல்பங்களை வெளியிட்டதன் வாயிலாக நீங்கியதாக அறிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தை ஸ்தாபித்தது முதல் இதுவரை உள்ள வரலாறுகளைக் குறிப்பிட்டும், இந்த மடத்தைப் பற்றின தப்பு அபிப்பிராயங்களைக் கண்டித்தும், அவை சரியல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் எழுதிய தலையங்கங்களையும் கட்டுரைகளையும் வாசகர்கள் ஆர்வத்துடன் படித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த மடத்தில் பக்தியுள்ள சிஷ்யர்களுக்கு, மடத்தின் பெருமையைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் பெரிதும் பயன்பட்டன.
ஸ்ரீ காமகோடி பீட ஸ்ரீ மடம், ஸ்ரீ மடங்களின் ஆம்னாய தத்துவங்கள், மஹாவாக்கியங்களின் ஸ்வரூபம், ஸ்ரீ மடத்தைப் பற்றிய மாறான அபிப்பிராயங்களை வெளியிடுகிறவர்களின் கருத்துக்கள் இவை யாவற்றையும் விவரித்துச் சிறிதும் பக்ஷபாதமில்லாமல், ஆராய்ச்சிகளின் மூலம், தக்க சான்றுகளுடன் பல கட்டுரைகளை எழுதி அளித்த (காலஞ்சென்ற) போலகம் சாஸ்திர ரத்னாகர ஸ்ரீ ராம சாஸ்திரிகளுக்கு ஸ்ரீ காமகோடி பக்தர்களான நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
இந்து தர்மத்துக்கு எல்லா மடங்களும் இக்காலத்தில் செய்ய வேண்டிய சில முக்கியத் தொண்டுகளைப் பற்றியும் அவ்வப்போது நம் பத்திரிகையின் வாயிலாக ஞாபகப்படுத்தியுள்ளோம்.
ராமாயணம், பாரதம், பாகவதம் முதலான இதிஹாஸ புராணங்களை ஆதாரமாகக்கொண்டு, நம் தர்மத்துக்கு வழிகாட்டிகளாக இருந்த பெரியோர்களைப் பற்றியும், சம்பவங்களைப் பற்றியும் பல கட்டுரைகள் ப்ரதீபத்தில் வெளிவந்துள்ளன.
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளுடைய அருள்வாக்குகளை மக்கள் படித்துப் புண்ணியத்தை அடைய, அவ்வப்போது அவற்றை வெளியிட்டுள்ளோம்.
நம்முடைய தர்மத்துக்குச் சேவை செய்துள்ள வெளிநாட்டுப் பேரறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் செய்த பணிகளையும் மக்கள் அறியும்படியாகத் தெரிவித்துள்ளோம்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப்படிப் பல நல்ல விஷயங்கலை வாசகர்களுக்கு அளித்து, நல்ல முறையில் ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் செயற்பட்டு வந்துள்ளதற்கு வாசகர்களின் அன்பும் ஆதரவுமே உறுதுணை அகும். வாசர்கள் தொடர்ந்து தாங்கள் சந்தாதார்களாக இருப்பதுடன், தங்கள் நண்பர்களையும் சந்தாதார்களாகச் சேரச்செய்து, தொடர்ந்து ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் மக்களுக்குச் சேவை செய்ய உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறோம். நமது பத்திரிகையின் பெருமையைப் போற்றிப் பல அன்பர்களிடமிருந்து கடிதங்கள் வருகின்றன. நேரிலும் பலர் தெரிவிக்கின்றனர். இவை யாவும் மேலும் நமக்கு ஊக்கத்தை அளிக்கின்றன என்பதில் ஜயமில்லை.
இந்தப் பத்திரிகைக்குப் பல அறிஞர்கள் கட்டுரைகளை எழுதி உதவியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழாம் அளிக்கும் ஒத்துழைப்புக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
மிகுந்த அக்கறை கொண்டு இதை அச்சிட்டுக் குறித்த காலத்தில் அளிக்கும் லிபர்ட்டி அச்சகத்தாருக்கும், மிகப் பிரயாசையுடன் சந்தாதார்களுக்குப் பிரதி மாதமும் பத்திரிகையை அனுப்பி வைத்து, இது சம்பந்தப்பட்ட எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று நடத்தி வரும் பி.ஜி. பால் கம்பெனியாருக்கும் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். தமிழ்ப் பேரறிஞரும் பல மொழிகளில் வித்வானுமான ஸ்ரீ கா. ஸ்ரீ. ஸ்ரீ. அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு மாத இதழின் ப்ரூப்களையும் நன்றாகப் பார்த்துச் சிறிதும் பிழையின்றி, நல்ல முறையில் பத்திரிகை வெளிவர அவர் பேருதவி செய்கிறார்.
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பரிபூர்ண அநுக்கிரகம் என்றென்றும் துணை புரியவேண்டும் என்று ஸர்வேச்வரனைப் பிரார்த்திக்கிறோம்.

Home Page