ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


அடிமையும் கடமையும்

அ.ரா.சதாசிவன்

அடிமை என்னும் பெயரை நோக்கி மயங்க வேண்டியதில்லை. மக்களாய் ஜனித்த யாவரும் உலகில் உதித்த நாள் முதல் அடிமைகளே!

’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ எனப் பறை சாற்றினும் பெயர் மட்டிலும் வேறுபட்ட அடிமை என்பது தாங்களாக உணர வேண்டிய ஒன்று.

அடிமை என்பதை அணுவணுவாக ஆராயின் முடிவான பொருள் கடமை என யாவரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். கடமை ஒவ்வொருவனுக்கும் உண்டு. ’தன் உயிரே போமாயினும் கடமையை முடித்து விடுக’ என்று பெரியோர் நவில்வர்.  ’என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்பது ஆன்றோர் வாக்கு.

இனி இக்கடமையினைக் காவியங்கொண்டு ஆராய்வோம்:-

இராமபிரானது முடிசூட்டு விழா வசிஷ்டன் வாயால் நிகழ்ந்துவிட்டது. தசரதன் செயலால் நிகழ வேண்டியதே இனி. இந்நிலையில் தசரதன், தன் அருமை மனைவி, ’கேகயர் கோன் கொம்பு’ ஆசைக்கு அருங்கலமாகிய கைகேயியிடம் தன் ஆனந்த வெள்ளத்தை வாரி வீசச் செல்லுகிறான். முடிவென்ன? காடாள ராமன் சென்றான். வீடாள தசரதன் சுவர்க்கம் புக்கினான்.

இராமனை அழைத்தாள் கைகேயி. ’பதினான்கு வருஷம் உனக்கு வனவாசம்; இது ராஜ ஆக்ஞை’ என்றாள். இதையே கம்பர் தம் வாயால் மலர்ந்தருளினார். ’பூமி வெங்ஙானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி, ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினான் அரசன் என்றாள்’ என.

இராமபிரான் சோர்ந்தனனா? முகமலர்வுடன் முறுவல் பூத்தான். அகமகிழ்ந்தான். ஆயினும் சிறிது கிலேசத்துடன் கைகேயியை நோக்கிக் கூறுகிறான்: "தாயே கடமைக்கு அடிமையல்லவா நான். இவ்வடிமைக்குத் தாங்கள் வாசகம் ஒன்று போதாதா! அரசரது ஆணையா வேண்டும். மன்னவன் பணியன்றேனும் நும் பணி மறுப்பனோ யான்?", எனச் சொல்லிக் கானகம் செல்லக் கால்களைச் செலுத்துகிறான்.

சீதையும் உடன் கிளம்பத் துவங்கினாள். தடுத்தான் அழகன் இராமன். தேவியின் முகம் வாடிற்று. அவள் முகக் குறிப்பு ’கணவன் இல்லாத இல்லத்தில் காரிகைக்கு யாது பயன்? பத்தினியைப் போற்றும் பண்பை உணராத கடமையறியாக் கணவனல்லவா நீ" என்பது போன்றிருந்தது. உடன் உணர்ந்தான் கடமையை. கடமைக்கு அடிமையாகிக் காரிகை சீதையையும் உடன் கொண்டு செல்ல இசைந்தான்; மனமும் சாந்தி பெற்றது.

உடன் செல்லத் துணிந்தான் இளைய பெருமாள் இலக்ஷ்மணபிரான். அப்பொழுது அவனது தாய் சுமத்திரை கூறுகிறாள்:"குழந்தாய்! உன் தமயனே தகப்பன். தாயே தேவி சீதை. அவ்விருவரும் உனது இரு கண்கள். அல்லும் பகலும் அனவரதமும் அவர்களுக்கே பாடுபடு! அவர்களுக்கு ஏதேனும் இன்னல் தோன்றின் உடன் அதை ஒழிக்க முயற்சி செய். முயற்சி திருவினை ஆக்காவிடின் உன்னை நீயாக அவர்களது பிராண வியோகத்திற்கு முன் மாய்த்துக் கொள். இதுவே உன் முதற் கடன்" என்றாள். ’செய் அல்லது செத்துமடி’ என்பதும் பெரியோரின் பொன் மொழியல்லவா!

அடிமை ஆராய்ச்சி எவ்வாறு கடைதலை அடைந்து கடமையாகத் திரிகிறது பாருங்கள். ஆயினும், ஏன்! வால்மீகியும், கம்பனும் இவர்களை எல்லாம் கடமை தெரிந்தவர்களாகக் கருதவே இல்லை? பட்டம் துறந்து பரதேசிக் கோலம் தாங்கிய பரதனைக்கூட கடமையை அறிந்தவனாகக் காட்டவில்லை. ’பார்க்கின் பரதனையும் இராமனையும் பார்’ என்ற அதிவீரராம பாண்டியன் மதனி கூறியது பெண்மைக்கு உரிய பேதைமையாவென்பது வெளிப்படை.

ஆயின் ஆதிகவியும், அமரகவி கம்பநாட்டாரும் கடமை தெரிந்த பொருளாக எதனைக் கருதினர் என ஆராய்வோம்.

தன் அருமை மகன் கான் ஏகின்றான் என வான் ஏகினான் தசரதன். இராஜ்யத்தைத்தான் நினைத்தானா? குடிகளைத்தான் கருத்தில் கொண்டானா? நாட்டை அரசன் இல்லாமல் நாசமாக்கினவனல்லவா அக்கிழவன்!

இராமனைத்தான் சிறிது பார்ப்போமே. அவனுந்தான் ராஜ்யத்தையும், மக்களையும் சிறிதாவது நினைத்தானா? சிறிதும் எண்ணவில்லை. பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ணினான் எனத் திண்ணை வேதாந்தம் பேசிப் பயன் என்ன? அவனும் நாட்டையும் நாட்டு மக்களையும் நையப் செய்து காடேகினான்.

பூவினைத் துறந்து பொன்மனை புகுந்த நங்கை சீதைதான் என்ன செய்தாள்? கணவனுடன் செல்வது கடமை என நினைத்தாள். இவளாவது கோசல தேசத்தைச் சிந்தையில் நினைத்தாளா? இல்லை.

இலக்ஷ்மணனும் தன் திறமை வெளிப்பட ராகவனைப் பின்தொடர்ந்தானேயல்லாமல் நாட்டிற்கு யாது செய்தான்!

பார் புகழும் பரதன் தான் கவிகளுக்கு விலக்கானவனா என்ன? இராகவனை அழைக்கக் கானகம் நண்ணி குகனால் போற்றுதலைப் பெற்றான். காகுஸ்தனின் கருணைக்கு இலக்கான இலக்ஷ்மணனை க்ஷணநேரத்தில் தலை குனியச் செய்தான். இவைகளால் கோசல தேசம் அடைந்த பயன் யாது? ஒன்றுமில்லை.

இவற்றை எல்லாம் நோக்கின் தேசமும், பிரஜைகளும் அவர்களுக்கு முக்யமாகத் தோன்றவில்லை.

இவர்களை எல்லாம் வால்மீகியும், கம்பரும் கடமை தெரிந்தவர்களாகக் கருதுவார்களா? ஒருபோதுமில்லை. சுயநலம் கருதாது அடிமை வாழ்விலேயே கடமை ஆற்றிய ஒர் உயிரற்ற பொருளையே கடமையுணர்ந்த ஒன்றாகக் கருதினார்கள். அதைச் சிறப்பித்து உலகில் ஒரு பழமொழியையும் நிலைநாட்டினார்கள். அப்பழமொழிதான் தடுமாறுகிறவர்களால் சொல்லிக் கொள்ளப்படுகிற "என் புத்தியை மிதியடி கொண்டடி" என்பது ஆகும்.

மனிதர் போற்றும்படி மிதியடிக்கு அப்பெருமை கொடுக்கும் பழமொழியை ஆராய்வோம்.

கானகம் சென்ற இராகவனை மீட்கச் சதுரங்க சேனையுடன் கங்கைக் கரையை அடைந்தான் பரதன். வசிஷ்ட வாமதேவாதிகள் வாழ்த்தொலி முழங்கினர். தாய்மார்கள் துயரம் நீங்கினர். குகன் மூலம் அண்ணலை அடைந்தான் பரதன். பலவாறு வேண்டியும் பயனொன்றும் இல்லை. இரவிகுலத் திலகன் திரும்ப மறுத்து விட்டான். வழியிலே விழி வைக்க மனமில்லாது விழித்தான் பரதன். இதே தக்க சமயமென வால்மீகியும், கம்பனும் நினைத்தனர் போலும்; வசிஷ்டனைக் காரணிகன் என்னும் மத்தியஸ்தனாக நிறுவுகின்றனர்.

வசிஷ்டர் நோக்கினார் பரதனை. "குழந்தாய் பரதா! இராகவனும் வாரான். நீயும் வந்திலை. யானும் குடிகளும் நாடு செல்வதால் பயன் என்ன? யானொரு நீதியுரைக்கின்றேன். நீவீர் இருவரும் ஏற்பீராக" என்றார். இருவரும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயினர்.

அந்நீதி வருமாறு:

பரதனது வேண்டுகோளுக்கு இணங்க தசரத இராமன் வராவிடினும் அவனடிகளைத் தாங்கிய பாதுகைகளை நாடாளக் கொடுக்க வேண்டியது. பரதனும் அதை சிரஸில் வஹித்துக், அரசுரிமை கொடுத்து, இராகவன் மீளும்வரை அதற்கு அடிமையாக இருந்து அரசாள வேண்டியது. இம்முடிவை ஏற்றனர் இருவரும்:

நந்திக்கிராமத்தில் பாதுகைக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. இக்கட்டமல்லவா இரு பெரிய ராமாயணங்களிலும் சிறப்புற விளங்குகிறது. காரணம் என்ன? இராகவனது இன்னலிலும் இன்பத்திலும் திருவடிகளின் அடியிலேயே இருந்து அடிமையெனத் தானே விளம்பிய பாதுகையல்லவா சுயநலமற்றது. சுநலமற்றவருக்கு அரசுரிமை என்பதே தகுதி. சூரிய குலத் தசரதனும், இராமனும், பரதனும் நாட்டை நினையாததை எடுத்துக் காட்ட நினைத்தனர் இரு கவிகளும். பாதுகைக்கு இராமனையும் தலை வணங்கும்படி செய்தனர். பரதனைத் தலையில் சுமக்க வைத்தனர். தசரதன் பாதுகையினும் பாமரன் என்பதை விளக்க, பாதுகைக்குச் சிங்காசனமளித்தனர். தசக்ரீவனை வென்று மீளுங்கால் இராமனாலும் ஸுக்ரீவ, விபீஷணாதிகளாலும் வணங்கத்தக்க நிலையைப் பாதுகைக்கு அளித்தனர். அடிமையாக வந்து அரசுரிமை பெற்றவர் சுக்ரீவனும், விபீஷணனும் என்பது யாவரும் அறிந்ததே. அரசர்களும், அரசர் போற்றும் இராகவனும் வணங்கத்தக்க பெருமை பாதுகைக்கு அல்லவா கிட்டியது! அப்பொழுதும் பாதுகை கர்வம் கொள்ளாது, ’அடியவருக்கு அடியவன் இராகவன்’ என்ற பெருமையை அவனுக்கே அளித்துவிட்டது. இதனாலேயே மேற்கூறிய "என் புத்தியை மிதியடி கொண்டடி" என்ற பழமொழியும் பலிதமாயிற்று அல்லவா?

இதுதான் அடிமை வாழ்வின் மஹத்துவம். இதுவே கடமை என்னும் தத்துவமும் ஆகும். அடிமை எவ்வளவு உயர்வைப் பெறுகிறது பாருங்கள். நமது புராண காவியங்கள் எல்லாம் பொழுதுபோக்குக் கதைகளல்ல. கல்வி நயம் கண்ட கலைஞர்களுக்குக் கவித்வத்தையளிக்க மட்டிலும் வந்தவைகளும் அல்ல. உலகநீதியை உணராது உழல்கின்ற மக்களைத் திருத்தியமைக்க தோன்றியவைகளே அவை.

அடிமை என்னும் கடமை யாவருக்கும் பொது. கர்ணன் கொடைக்கு அடிமையானான். ஹரிச்சந்திரன் வாய்மைக்கு அடிமையானான். சங்க கால மன்னர் புலவர்களுக்கும், புலமைக்கும் அடிமை ஆயினர்.

கடமை அடிமையிலேதான் ஆவின் பாலின்கண் வெண்ணையைப் போல தோன்றுகிறது. தமிழ் நாட்டின் தன்மையும், தமிழ் பாஷையின் தொன்மையும் யாவருமறிந்ததே. சங்க நூலின் கண் ’பொன்முடியார்’ என்னும் பெண் புலவரின் வாக்கை நோக்குங்கள்:

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே,
நல்நடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிருவான் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."

பழமைச் சான்றைப் பார்த்தோம் அல்லவா? இத்தொழில்களிடையே அடிமையாகாது கடமை செலுத்த முடியுமா? பழமையில் பொலிந்த அடிமையும், ஆண்மையும் ஒவ்வொருவரது உள்ளத்திலும் பொருந்த வேண்டும். அப்பொழுது தான் நம் தேசம் சீரும், சிறப்பும், பேறும், புகழும் பெற்றுத் தழைத்தோங்கும்.

( நன்றி: காமகோடி )

Home Page