ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


க்ஷேமேந்திரரின் அறிவுரைகள்
(ஆர். முத்துக்ருஷ்ண சாஸ்திரிகள்)

ஈசனை வழிபட்டபின்பே உன் வேலையை தொடங்கு:

     ந குர்வீத க்ரியாம் காஞ்சிதநப்யர்ச்ய மஹேச்வரம் |
ஈசார்ச்சநரதம் ச்வேதம் நாபூந்நேதும் யம: க்ஷம: ||

     கருத்துரை: ஸ்ரீ மஹேச்வரனைப் பூஜை செய்யாமல் எந்த வேலையும் செய்யலாகாது.  "ச்வேதன்" என்ற முனிவர் சிவபூஜையைத் தவறாமல் செய்துவந்தார்.  அதன் மகிமையால் அவர் ஆயுள் காலம் முடிந்துங்கூட யமன் அவரை அழைத்துச் செல்ல சக்தியற்றவனாக இருந்தான்.

     விளக்கம்:  "ச்வேதன்" என்ற பெயருள்ள முனிவர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் பிரதிதினம் தவறாமல் பால்யம் முதல் சிவபூஜை செய்து வந்தார்.  ஒரு சமயம் ஒரு மலையின் குஹையில் அவர் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருடைய ஆயுள் முடிந்துவிட்டது.  யார் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் யமன் தன் வேலையைச் செய்வதுதானே வழக்கம்!  அதன்படி அவரிடமும் வந்தான், அவர் ஸ்ரீருத்ரம் முதலிய மஹா மந்திரங்களால் பரமேச்வரனைத் துதித்துக்கொண்டிருந்தார்.  பலகாலம் அவர் செய்துவந்த சிவபூஜையின் மகிமையால் அவரை அணுகி அவரை எழுத்துக் செல்ல இயலாமல் யமன் வெறுங்கையுடன் திரும்பச் சென்றான்."  இவ்வாறு லிங்கபுராணம் பூர்வார்த்தம் 30ஆவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது.
தஸ்மாத் ம்ருத்யுஞ்ஜயம் சைவ பக்த்யா ஸம்பூஜயேத் த்விஜ: |
முக்திதம் புக்திதஞ்சைவ ஸர்வேஷாமபி சங்கரம் ||

     ஆதலால் யமனை ஜயித்து யம பயத்தை அகற்றக் கூடியவரும் அனைவருக்கும் போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கக் கூடியவருமான சங்கரனை பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.

சிராத்தத்தை முறைப்படி செய்

     ச்ராத்தம் ச்ரத்தாந்விதம் சூர்யாத் சாஸ்த்ரோக்தேநைவ வர்த்மநா |
புவி பிண்டம் ததௌ வித்வாந் பீஷ்ம: பாணௌ ந சந்தநோ:

     கருத்துரை: சிராத்தம் என்னும் பித்ருகார்யங்களைச் சிரத்தையுடன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட முறைப்படியே செய்ய வேண்டும்.  எல்லாமறிந்த பீஷ்மர் அவர் செய்யும் சிராத்தத்தில்  பிண்டப்ரதானத்தில் கொடுக்க வேண்டிய பிண்டத்தைப் பூமியில் தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலேயே வைத்தார்.  தகப்பனான சந்தனுவின் கையில் கொடுக்கவில்லை.

            விளக்கம்: சிராத்தம் என்ற ஸம்ஸ்கிருத சொல்லே பித்ருகார்யங்களுக்குச் சிரத்தை மிக அவசியம் என்பதைக் குறிப்பிடுகின்றது.  சிரத்தையென்றால் குருவின் மொழிகள், வேத வாக்யங்கள் முதலியவை உண்மையையே உரைக்கின்றன என்ற உறுதி.  மற்றக் கர்மாக்களைவிடப் பித்ருகர்மாக்களைச் சிரத்தையுடனேயே செய்யவேண்டுமாதலால் அவை சிராத்தம் என்றே வழங்கப்படுகின்றன.   ஆகவே அவை சாஸ்திரங்களில் கூறப்பட்ட முறை தவறாமல் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.   காலம் நியமம், தேச நியமம், கர்த்ரு நியமம், போக்த்ரு நியமம், திரவ்ய நியமம் முதலிய பல நியமங்கள் அவற்றிக்கு உண்டு. அவையெல்லாவற்றிற்கும் சாஸ்திரங்களையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.  நமக்குத் தோன்றியபடி செய்யலாகாது.

            பீஷ்மர் ஒரு சமயம் பித்ரு ச்ராத்தம் செய்தார்.  அப்பொழுது அவருக்குள்ள சஸ்திர நம்பிக்கையைப் பரீக்ஷை செய்ய பிண்டப்ரதான காலத்தில் அவருடைய தந்தை சந்தனு பூமியைப் பிளந்துகொண்டு கையை நீட்டிப் பிண்டத்தை கையில் கொடுக்கும் படி கேட்டார்.  ஆனால் பீஷ்மர் அதை ஏற்றுக் கொள்ளமல் தந்தையின் கையை அகற்றிவிட்டு பூமியில் பரப்பிய தர்ப்பங்களின் மீதே பிண்டத்தை வைத்தார்.  சாஸ்திரங்களில் பிண்டத்தை தந்தை கையில் கொடுக்கும்படி விதிக்கவில்லை.  ஆதலால் அவ்விதம் செய்ய பீஷ்மர் துணியவில்லை.

     யோ வா பிண்டம் பிது: பாணௌ விஞ்ஞாதேபி ந தத்தவாந் |
சாஸ்த்ரார்த்தாதிக்ரமாத் பீத: ........................
(தந்திரவார்த்திகம்)

"சாஸ்திரத்தை மீறிச் செய்ய பயந்து தந்தையின் கைதான் என்று நன்கு அறிந்திருந்தும் அதில் பீஷ்மர் பிண்டத்தை அளிக்கவில்லையே" என்று குமரிலபட்டர் பீஷ்மரைப் போற்றியுள்ளார்.  ஆதலால் சஸ்திரம் கூறுகின்றபடியே சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

தெற்கேயோ கிழக்கேயோ தலை வைத்துப்படுக்க வேண்டும்

     நோத்தரஸ்யாம் ப்ரதீச்யாம் வா குர்வீத சயநே சிர: |
சய்யா விபர்யயாத் கர்போ திதே: சக்ரேண பாதித: ||

     கருத்துரை: படுக்கும்போது வடக்குத் திக்கிலோ அல்லது மேற்குத் திக்கிலோ தலையை வைத்துக்கொள்ளலாகாது.  படுக்கையில் சில மாறுதல்கள் ஏற்பட்ட காரணத்தால் திதிதேவியின் கர்ப்பம் இந்திரனால் வெட்டிக் கீழே தள்ளப்பட்டது.

            ப்ராக் சிராஸ்து ஸ்வபேந் நித்யம் ததாவை தக்ஷிணாசிர: |
உதக்சிரா ந ஸ்வபேத்து ததா ப்ரத்யக்சிரா ந ச ||

     விளக்கம்: இந்த ஆசாரஸார வாக்யத்தால் கிழக்குத் திக்கிலோ அல்லது தெற்குத் திக்கிலோ தலையை வைத்துப் படுக்கவேண்டும் என்றும் வடக்குத் திக்கிலும் மேற்குத் திக்கிலும் தலையை வைத்துக்கொள்ளகூடாது என்றும் தெரிகிறது.  இந்த நியமத்தை மீறியதால் அஸுரர்களின் தாயான திதிதேவிக்கு உண்டான ஆபத்தை இங்கே கவி குறிப்பிடுகிறார்.

     காச்யபருக்குத் திதியிடம் பிறந்தவர்கள் அஸுரர்கள்.   அதிதியிடம் ஜனித்தவர்கள் தேவர்கள்.  ஒரு சமயம் தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் மூண்ட போரில் அசுரர்கள் மாண்டனர்.  அப்பொழுது மிகவும் வருத்தமடைந்த திதி காச்யபரை அணுகி தேவேந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு மகனை எனக்குத் தந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள்.  மனைவியின் கெட்ட எண்ணத்தை அறிந்து மிகக் கோபங்கொண்டவரானாலும் அவளுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்க அவரால் முடியவில்லை.  தன் மகனான இந்திரனைக் கொல்லவும் மனமில்லை.  ஆதலால் திதிக்கு "பும்ஸுவன வ்ரதம்" என்ற ஒரு விரதத்தை எடுத்துரைத்து எதை ஒரு வருஷ காலம் நியமம் தவறாமல் அனுஷ்டித்து வந்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.  திதியும் அதற்கு இணங்கி விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கினாள்.  கர்ப்பிணியாகவும் ஆனாள்.  விரதபூர்த்திக்குச் சில தினங்களுக்கு முன் ஸந்தியா காலத்தில் மிகவும் சோர்வடைந்து வடக்குத் திக்கிலோ மேற்கு திக்கிலோ தலையை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டாள். திதிக்கு எப்படியாவது விரத பங்கம் ஏற்பட வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டே அவளுக்குப் பணிவிடை செய்து வந்த தேவேந்திரன் இச்சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு தன் யோக சக்தியினால் கையில் வஜ்ராயுதத்துடன் அவள் வயிற்றுக்குள் புகுந்து அங்குள்ள அழகிய சிசுவை முதலில் ஏழு துண்டுகளாகவும், பிறகு ஒவ்வொரு துண்டையும் ஏழு துண்டுகளாகவும் வெட்டிவிட்டான்.  திதியின் எண்ணம் நிறைவேறவில்லை.  இம்மாதிரி வெட்டப்பட்ட துண்டுகள் ஈசனுடைய அநுக்ரஹத்தால் உயிர்பெற்று "ஸப்த மருத் கணங்கள்" என்றும் ௪௯ மறுத்துக்கள் என்றும் வழங்கப்பட்டுத் தேவர்களுடன் சேர்த்துக்கொள்ளபட்டன.

            ஆதலால் வடக்கேயும் மேற்கேயும் தலைவைத்துப் படுக்கலாகாது.

     கார்கி ரிஷி இயற்றிய ஸ்ம்ருதியில் திசைகளைப்பற்றி இப்படிக் காணப்படுகிறது.

     ஸ்வக்ருஹே ப்ராக்சிரா: சேதே ச்வாசுரே தக்ஷிணா சிரா: |
ப்ரத்யக்சிரா: ப்ரவாஸே து ந கதாசித் உதக் சிரா: ||

     தன் வீட்டில் கிழக்குத் தலையாகவும், மாமனார் வீட்டில் தெற்குத் தலையாகவும், அயலூரில் மேற்குத் தலையாகவும் படுக்க வேண்டும்.  ஒருபொழுதும் எந்த இடத்திலும் வடக்குத் தலையாகப் படுக்ககூடாது.

~~~~~~~

Home Page