பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாகப் வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப்போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால் அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான். இதற்கு மிஞ்சிப் பொழுதும் சக்தியும் இருந்தால் பொதுப்பணிகளும் செய்யலாம். இவை ஸ்த்ரீ லக்ஷணத்துக்கு உரியதாக, ‘பெண்மை’ என்று ஒன்றை வார்த்தையாகவாவது இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அதற்கு ஏற்றபடியான தொண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது அடக்கத்துடன் செய்வதாக இருக்க வேண்டும். தேஹ ச்ரமமும் அதிகம் இருக்கக்கூடாது. கோயில்களில் கட்டுக் கட்டாகக் கோலம் போடுவது; பஜனை – ஸந்தர்ப்பணை நடக்கிற இடத்தில் பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து உபகாரம் பண்ணுவது; பிரஸவ ஆஸ்பத்திரி மாதிரியான பெண்களுக்கு மட்டுமே உரிய இடங்களில் பிரஸாதங்கள் விநியோகம் பண்ணுவது; அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கிற இடங்களுக்குப் போய் அதுகளுக்குப் புது வஸ்திரம், பக்ஷணம் கொடுத்து ஏதோ கொஞ்சம் பஜனை, ஸ்தோத்ரம் சொல்லித் தருவது என்று இப்படிப்பட்டப் பணிகளைப் பெண்கள் செய்யலாம்.
ஸமுதாயம் அடங்கலும் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகக் குளம் வெட்டுகிற வேலையில் மட்டும், அது கொஞ்சம் ச்ரமமானதாக இருந்தாலுங்கூட, நானே பெண்களையும் ஈடுபடுத்தியிருக்கிறேன்.
இருந்தாலும் பொதுவாக ‘ச்ரமம்தான்’ என்பதில் கடும் சரீர உழைப்புத் தேவைப்படுகிற தொண்டுகளைப் பெண்களிடம் காட்டாமல் புருஷர்களே பண்ணுவதுதான் உசிதம்.