வஸந்தகால வைசாக மாதப் பொருத்தம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாள் அவதரித்தது வஸந்த காலம். மஹாத்மாக்கள் வஸந்த காலம் மாதிரி ப்ரதிப்ரயோஜனமே எதிர்பார்க்காமல் லோகத்துக்கு ஹிதம் செய்கிறார்கள் என்று சொன்னவர் அவர்.* அவரும் அப்படிப்பட்டவர் தான். அவர் அவதாரம் பண்ணியது வஸந்த ரிதுவாக இருக்கிறது!

அவர் பிறந்த மாஸம் வைசாகம் — நாம் வைகாசி என்பது. வைசாகம் என்றால் சாகை (கிளை) இல்லாதது. மரம் செடி என்றால் கிளை உண்டு. கொடிதான் கிளையில்லாதது.

வைசாகத்திற்கு மாதவ மாஸம் என்றும் ஒரு பெயர் உண்டு. சைத்ர மாஸம் ‘மது’; வைசாகம் ‘மாதவம்’. மாதவி என்பது மல்லிகையின் பெயர். கிளையில்லாமல் மல்லிகைக் கொடியும் ‘வைசாக’ மாக இருப்பதால், அந்த மாஸத்தின் இரண்டு பேரும் மல்லிகை ஸம்பந்தமுள்ளதாயிருக்கிறது. அது மாத்ரமில்லை. ‘வஸந்தம்’ என்பதன் அடியாகப் பிறப்பது ‘வாஸந்தி’ என்ற வார்த்தை. வாஸந்தி என்றும் மல்லிகைக்கே இன்னொரு பெயர்கூட இருக்கிறது.

இப்படி ஒரே மல்லிகை ஸம்பந்தத்தோடு ஆசார்யாளின் அவதார காலம் இருப்பது ரொம்பவும் பொருத்தந்தான். வெள்ளை வெளேரென்று சுத்த ஸத்வ ரூபமாக மல்லிகை இருக்கிறது. வெயில் காலத்தில் குளிர்ச்சி தருவதாகப் புஷ்பிக்கிறது. ஆசார்யாள் ஸம்ஸார வெயிலில் குளிர்ச்சி தருகிற ஒரு பெரிய மல்லிகையாக, சுத்த ஸத்வ அவதாரமாக வந்தவர்.

ஞான மல்லிகையாக வந்து லோகத்துக்கெல்லாம் ப்ரேமை என்கிற ‘சம்’மின் ஸுகந்தத்தைச் செய்த சம்கரரின் ஜயந்தியே வஸந்த மாதவ ஜயந்தியாயிருக்கிறது. அது நம் மனஸை எல்லாம் சுத்த வெளுப்பாக்கட்டும்! அன்பின் மணத்தினால் நம் மனஸை நிரப்பட்டும்! அன்பான சிவத்திலேயே ஊறிப்போய் சாந்தமான சிவஞானத்தை நாம் அடையும்படி அநுக்ரஹிக்கட்டும்!

ஞான வெளுப்பில் லயம் அடையவைக்கும் ப்ரேமையில் ஸுகந்தம்! ஸுகந்தத்தை உள்ளே தீர்க்கமாக இழுப்பது அப்படியே ப்ராணாயாமமாகி லயத்தை உண்டாக்குவது தானே?

மல்லிகை ஸம்பந்தம் மேலும் சொல்கிறேன்: மடத்தில் ஸ்ரீமுகம் கொடுக்கும்போது முதலில் ஆசார்யாளைப் பற்றி வர்ணிக்கிற வாசகம் நீளமாக வரும். அதன் நடுவில் “அதுலித ஸுதாரஸ மாதுர்ய கமலாஸன – காமிநீ தம்மில்ல ஸம்புல்ல மல்லிகா மாலிகா நிஷ்யந்த மகரந்த ஜரீ ஸெளவஸ்திக வாக் விஜ்ரும்பணாநந்த துந்திலித மநீஷி மண்டலாநாம்” என்று வருகிறது. என்ன அர்த்தமென்றால்: கமலாஸனரான ப்ரஹ்மாவின் காமினியாக ஸரஸ்வதி தேவி இருக்கிறாளே, அவளுடைய ‘தம்மில்லம்’ என்னும் கூந்தல் அலங்காரத்தில் மல்லிகை ஸரங்களை அணிந்திருக்கிறாள். அவற்றிலிருந்து பொழியும் தேன் பெருக்கும் நிகராகாது என்னும்படியாக அப்படிப்பட்ட அம்ருத ரஸம் போன்ற அருமையான வாக்கை ஆசார்யாள் ஆனந்தமாக மலர்த்திக் கொண்டு ஸமூஹத்தையெல்லாம் பூரிக்கும்படிச் செய்கிறாராம்!

ஆசார்யாளுடைய ஸர்வஜ்ஞத்வம் லோகத்திற்குத் தெரிவதற்காக ஸரஸ்வதியே அவரிடம் வாக்குவாதம் பண்ணித் தோற்றுப் போய்க் காட்டினாள். அவளை சாரதா பீடம் என்று ச்ருங்கேரியில் ஸ்தாபித்து அதில் ஸாந்நித்யத்துடன் இருக்கும்படியாக ஆசார்யாள் அமர்த்தினார். பத்து விதமான ஸந்நியாஸப் பிரிவுகளில் அவளுடைய பெயரிலேயே பாரதி, ஸரஸ்வதி என்று இரண்டை வைத்தார். ச்ருங்கேரியில் பாரதி ஸந்நியாஸிகள். இங்கே (காஞ்சி மடத்தில்) ஸரஸ்வதி ஸந்நியாஸிகள். ஸரஸ்வதி ஸந்நியாஸிகளிலேயே இரண்டு ஸம்ப்ரதாயங்கள் — ஆனந்த ஸரஸ்வதியென்றும், இந்த்ர ஸரஸ்வதியென்றும்.

இந்த மடம் இந்த்ர ஸரஸ்வதி ஸம்ப்ரதாயம். ச்ருங்கேரியில் பீடத்திற்குப் பேர் சாரதா பீடம். இங்கே நம் மடத்திற்குப் பேர் சாரதா மடம். ஸரஸ்வதி வெள்ளை வெளேரென்று மல்லிகை மாதிரி இருப்பவள். அவள் சூட்டிக்கொடுண்டுள்ள மல்லிகையின் மாதுர்யத்தையும் மிஞ்சுவதாக இருக்கிறதாம் ஆசார்யாள் வாக்கு! மல்லிகை மாஸத்தில் பிறந்தவரின் வாக்விசேஷம்!


* இப்பகுதியில் “குருமூர்த்தியும் திருமூர்த்திகளும்” என்ற உரையில் “ஆசார்யாள் அளிக்கும் ஆசார்ய லக்ஷணம்” என்ற பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸாதனையில் அஹங்காரம் : இரு கட்டங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஹ்ருதய நாடிகள் : ஞானியின் உயிர் அடங்குவதும், ஏனையோர் உயிர் பிரிவதும்
Next