ஸாதனையில் அஹங்காரம் : இரு கட்டங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘அன்பு, உறவு என்றால் இரண்டு பேர் இருக்க வேண்டும். அதனால் அது த்வைதம், அத்வைத ஸாதனையில் கிட்டே வரப்படாது’ என்பது பொது அபிப்ராயம். ஸாதனை ஆரம்பித்து பஹுகாலம் அப்படித்தான் [அன்புறவு கொள்வதென்பது த்வைதத்தில் சேர்ப்பதாக] இருக்கும். அதாவது அன்பு என்றால் ஏதோ ப்ரியமாக இருப்பதுதான் என்ற அளவிலேயே அதைப் புரிந்து கொண்டு கார்யத்தில் நடத்துகிறவரை அது கிட்டே வரப்படாதுதான். அப்புறம் ஸாதனை பண்ணிப் பண்பட்டதனாலேயே நிஜ அன்பைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படி உண்டாக்கிக் கொள்ளும் உறவு த்வைதமாக இல்லாமல் உறவு கொண்டாடுகிற தான் தன்னையே [உறவு] கொண்டாடப்படுகிற வஸ்துவுக்குக் கொடுத்துக் கொண்டு, கரைந்து போய், இரண்டு பேரில்லை, அது ஒன்றேதான் என்று ஆக்குவதற்காகவே என்று தெரியும். தெரிந்ததை அப்யஸிக்கும் பக்குவமும் அப்போது வந்திருக்கும். அங்கே தான் அந்த அன்பை பக்தி என்று பேர் கொடுத்து ஆசார்யாள் வைத்திருக்கிறார். அதை அப்யஸித்துக் கொண்டே போய் பக்குவம் பரிபக்குவமாகப் பழுத்து விட்டால் அப்புறம் இரண்டில்லாத கரைப்புதான்!

ஸாதனை எதற்கு என்று நினைத்து ஒருத்தன் ஆரம்பிக்கிறான்? ‘நான் ப்ரம்மத்தை அடையணும். நான் ப்ரம்மமாகணும்’ என்பதையே லக்ஷ்யமாக நினைத்துத்தான் ஆரம்பிக்கிறான். அப்புறம் தொடர்ந்து பண்ணிக் கொண்டும் போகிறான். ஆனால் அவன் லக்ஷ்யத்தை அடைகிறபோது ‘நான்’ என்ற இந்த எவனோ ஒருத்தனா ப்ரம்மமாகிறான்? இல்லவே இல்லை. இப்படி ‘நான்’ சொல்லிக் கொள்ள ஒருத்தன் அப்போது இல்லவே இல்லை! பிரம்மந்தான் இருக்கிறது! ‘நான்’-காரன் அழிந்தால்தான் ஸாக்ஷாத்காரம். ‘ஸாக்ஷாத்காரம்’ என்பதும் ஒளபசாரிகந்தான் [உபசாரத்திற்கு சொல்வதுதான்]. ‘பிரம்மத்தை ஒருத்தன் ஸாக்ஷாத்கரிக்கிறான்’ என்கிறதே, பார்க்கப்போனால், பிசகுதான். பிரம்மத்தை எவனும், எதுவும் பண்ண முடியாது. ‘ஸாக்ஷாத்’தும் கிடையாது, கரிக்கிறதும்’ கிடையாது! அதனிடம் ஒன்றும் பலிக்காது! வாஸ்தவத்தில் என்ன நடக்கிறதென்றால் இந்த ஒருத்தனே அந்த முடிவு நிலையில் இல்லாமல் போய்விடுகிறான்! எவன் ஸாதனை பண்ணினானோ அவனே ஸாதனாந்தத்தில் இல்லாமல் போய், லக்ஷ்யம் மட்டுமே நிற்கிறது! இதைத்தான், உப்புப் பொம்மை ஸமுத்ரத்தை ஆழம் பார்க்கப் போன கதையாக [இவனுடைய ஸாதனை முடிகிறது] என்று ஒரு பெரியவர்1 சொன்னது.

அது இப்படித் தன்னை வாரி முழுங்கப் பண்ணுவதற்கு ஆர்வமாக, ஆசையாக இவன் தன்னை பலி கொடுத்து கொள்ளத் தயாராக வேண்டும். அதுதான் இங்கே சொல்லும் ஹையர் க்ரேட் பக்தி.

‘நாம் விடுபட வேண்டும், நாம் பிரம்மத்தை அடைய வேண்டும்; நாம் பிரம்மமாக வேண்டும்’ என்றெல்லாம் ‘நாம்’ போட்டுக் கொண்டுதான் ஸாதனை ஆரம்பிப்பது. அப்போதே அந்த நானை பலி கொடுக்க வேண்டுமென்றால் முடியாது. அப்படி நினைத்தாலே பயமாகக்கூட இருக்கும். புத்தி சக்தியிலும், தைர்யத்திலும் நல்ல பலசாலிகளாக இருக்கிற வெள்ளைக்காரர்களில் பல பேர் ஜீவ பாவத்தை – தனியாக நான் என்று இருப்பதை – அழித்து விட வேண்டுமென்றால், “ஐயையோ! இன்டிவிஜுவாலிடியை ஸாக்ரிஃபைஸ் பண்ணவாவது?” என்றுதான் பயப்படுகிறார்கள்!ஆரம்பத்திலிருந்தே ஒருத்தன் பயப்படாமல் இருந்தாலுங்கூட அதற்காக ஜீவபாவம் உடனே போய்விடாதுதான். பழைய கர்மா, வாஸனை தீர்ந்தால் தான் அது போகும். அதை [ஜீவபாவத்தை]க் கொண்டே தான் அவற்றைப் போகப் பண்ணிக் கொள்ளவும் வேண்டும். அதற்குத்தான் ஸாதன சதுஷ்டயம். ‘நாம் விவேகம் ஸம்பாதிச்சுக்கணும்’ என்று முயற்சி பண்ணி அப்புறம், ‘நாம் ஓரளவு விவேகம் ஸம்பாதிச்சுண்டாச்சு’ என்று ஆகவேண்டும்’. ‘நாம் வைராக்யம் ஸம்பாதிச்சுக்கணும்’ என்று முயற்சி பண்ணி அப்புறம், ‘நாம் ஓரளவு அதையும் ஸம்பாதிச்சுண்டாச்சு’ என்றிப்படி ‘நாம்’ போட்டுக் கொண்டு, ‘நாம்’ என்பதை base பண்ணி முயற்சி எடுத்துத்தான் [ஸாதனை] பண்ணிக்கொண்டு போக வேண்டும். முயற்சியில் நம்மை உத்ஸாஹப்படுத்தவே இந்தத் தனி-நான் என்கிற அஹங்கார உணர்ச்சி அப்போதெல்லாம் இருக்கலாம்தான். அதனால் தப்பேயில்லை. முன்னேறுவதில் உத்ஸாஹப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமில்லை. வழுக்கி விழுகிற ஸமயங்களில் வேதனை விசாரப்பட்டுத் திருத்திக் கொள்வதற்குந்தான். தான் தனி ஜீவன் என்கிற உணர்ச்சி இருந்தால்தான், ‘வழுக்கிக் கொண்டு விட்டோமே! இனிமேல் இன்னும் ஜாக்ரதையாக, கண்டிப்பாக அப்யாஸம் பண்ண வேண்டும்’ என்ற எண்ணம் உண்டாகும். ‘தனி ஜீவன் பொய்தானே? இதிலே வழுக்கல் என்ன, ஸ்டெடியாயிருப்பதென்ன?’ என்று அசட்டு வேதாந்தம் கொண்டாடினால் அபிவ்ருத்திக்கு வழி இல்லாமலே போகும். ‘நானே இல்லை’ என்ற உச்ச பாவத்தை சும்மாவுக்காகக் கல்பனை பண்ணிக் கொண்டு, ஆனாலும் பூர்வ வாஸனை போட்டுப் பிடுங்கிக் கொண்டிருந்து, அதை போகப் பண்ணத் தன்முயற்சி வேண்டாமென்று இருந்து கொண்டிருந்தால் ஒரு பிடிப்புமில்லாமல் வீணாகப் போவதாகத்தான் ஆகும். ஸாதனை என்று எப்போது ஏற்பட்டிருக்கிறதோ அப்போது அது அஹங்கார நான்-காரனுக்குத்தானே? இல்லாவிட்டால் அது ஆத்மாவுக்கு என்று ஆகிவிடும்! ஆத்மாவே தன்னை அடைய ஸாதனை பண்ணிக்கொள்ள வேண்டுமா என்ன? எதுவுமே பண்ணாமல் தான் தானாக இருந்து கொண்டிருப்பதல்லவா அது? ஆனபடியால் தனி ஜீவன்தான், அந்தத் தனித் தன்மைக்குக் காரணமான அஹங்காரத்தை வைத்துக் கொண்டேதான் ஸாதனை பண்ணிக்கொண்டு போகவேண்டும்.

ஆனாலும் அப்புறம் இந்திரிய மனோ புத்திகளை அடக்கும் முயற்சிகளில் நிறைய வெற்றி கண்டு, தள்ள வேண்டியவைகளைப் பெருமளவுக்குத் தள்ளிவிட்டு, சேர வேண்டிய ஆத்மாவைப் பற்றி உபதேசம் பெற்று, அதே சிந்தனையாக இருப்பதற்குத் தயாராகிற கட்டத்தில் அஹங்காரத்தையும் தள்ளவேண்டியவைகளில் ஒன்றாகத் தான் ஆக்கிவிட வேண்டும். இனி மேலே வரப்போகிறதெல்லாம் ஜீவனின் ஸாதனையாக இவன் ஸம்பாதித்துக் கொள்வதாக இல்லாமல், பரமாத்மாவின் கிருபையால் தன்னைக் கரைத்துக் கொள்வதற்காகச் செய்கிறவை. அதனால்தான் ஸாதன சதுஷ்டயம் என்பதை முமுக்ஷுத்வத்தோடு ஆசார்யாள் முடித்து விட்டார். அப்புறம் நடப்பதெல்லாம் இவனுடைய ஸம்பாத்யம் இல்லை; இவனுக்கு ஸம்பாத்யமும் இல்லை; இவன் தன்னையே பறிகொடுத்துக் கொள்வதற்காகச் செய்ய வேண்டியவையே அவை; ச்ரவண – மனன நிதித்யாஸனம் என்கிறவை.

வாணம் முதலில் மருந்தெல்லாம் கிட்டித்து, அடைத்து வைத்துத்தான் தயார் செய்வது; கொரனாத் தகடெல்லாம் ஒட்டி அழகு பண்ணி வைப்பது. இதனையும் பண்ணியது எதற்கென்றால் முடிவில் திரியில் நெருப்பை வைத்து வாணேமே இல்லாமல் வெடித்துப் போய்விடுவதற்காகத்தான். வெடித்து இல்லாமல் போகிறதற்கே வாணம் பண்ணிய மாதிரிதான் இங்கேயும் அஹங்காரம் வெடித்து நிர்வாணம் ஆவதற்காகத்தான் அதைக் கொண்டே ஸாதனையெல்லாம் பண்ணியது.

ஆரம்பத்திலிருந்தே கிருபையால்தான் எதுவும் நடக்கிறதென்றாலும் அங்கேயெல்லாம் ஜீவாத்மா தன்னை சுத்தி செய்து கொள்கிற ஸாதனையே முக்யமாயிருந்து, அது நல்லபடி நடக்கக் கிருபையும் ஸஹாயம் செய்வதாக இருந்தது. இப்போது சுத்திகரண கார்யம் பெருமளவுக்கு ஆகிவிட்டது. சுத்தியான அந்தஃகரணம் அநுபவத்தைப் பெறப் படிப்படியாகப் போக வேண்டும். “பெற” என்கிறதோ – ரொம்பவும் விசித்ரமாக – “கொடுக்கிறதாக” இருக்கிறது! அல்லது மாணிக்கவாசகர் சொன்னாற்போல2 ரொம்பவும் ஸாமர்த்ய வியாபாரமாக ஜீவபாவத்தைக் கொடுத்து சிவ ஸ்திதியைப் பெறுவதாக இருக்கிறதென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்! பக்தி ரஸத்தில், கவி ரஸத்தில் ‘வைத்துக் கொள்ளலாமே’ தவிர வாஸ்தவத்தில் ஜீவன் என்ற ஒருத்தன் இருந்துகொண்டு சிவனைப் பெறவில்லை. ஜீவன் போய்தான் சிவனே மிஞ்சி நிற்கிறான்.

அந்த அஹங்கார நசிப்புக்குப் பக்வம் பண்ண வேண்டுமென்றுதான் பக்தியை வைத்தது. “ஸாதனை என்று பண்ணி ஷட்க ஸம்பத்து, வைராக்ய ஸம்பத்து, விவேக ஸம்பத்து முதலானவற்றை நிறைய ஸம்பாதித்துச் சேர்த்துக் கொண்டு விட்டாய். இனிமேலே கொடுத்துக் காலியாவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் பக்தியை வைத்திருக்கிறேன்” என்று [ஆசார்யாள்] விதி செய்திருக்கிறார்.


1 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

2 தந்த(து)உன் றன்னை; கொண்ட(து)என் றன்னை;

சங்கரா! ஆர்கொலோ சதுரர்?

(கோயிற்றிருப்பதிகம்,10)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is செருக்கு நீங்கும் பொருட்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பக்தியும் ஹ்ருதயமும்
Next