ஒரே குறியில் ஈடுபாடு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு குருவிடமிருந்து உபதேசம் பெற்றுக் கொண்டாகிவிட்டது. அப்புறம் ஒரு ஸந்நியாஸி என்ன பண்ணவேண்டுமென்றால், நான் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேனோ அந்த மாதிரிப் பண்ணவே கூடாது! [சிரித்து] நான் ஊர் விஷயமெல்லாம் உழக்கால் அளந்து கொண்டிருக்கிறேனோல்லியோ? ஹிஸ்டரி, ஜாகரஃபி, இன்னும் ஊர் அக்கப்போர் எல்லாம் அடித்துக் கொண்டிருக்கிறேனோல்லியோ? நிஜ ஸந்நியாஸிக்கு இதெல்லாம் உதவவே உதவாது1. அவன் ஸதா ஸர்வகாலமும் ஆத்மாவே நினைப்பாக, பேச்சாக, குறியாக இருக்க வேண்டும். “ஆத்மாவுக்கு அந்நியமான வார்த்தையை விடு. ப்ரணவத்திலேயே (அதாவது மஹாவாக்யத்திலேயே) தநுஸில் ஒரு அம்பைக் கோக்கிற மாதிரி உன்னைக் கோத்துக் கொண்டு ப்ரஹ்மம் என்பதே குறியாகப் போய் அப்படியே பதிந்துவிடு” என்று ஒரு உபநிஷத் சொல்கிறது2. “திருவார்த்தை” என்கிற ஜீவப்ரஹ்ம அபேத வாக்யமான ஒரு வார்த்தை தவிர எதையும் நினைக்கப்படாது. மற்ற பேச்செல்லாம் தொண்டைக்கு ச்ரமந்தான் என்கிறது இன்னொரு உபநிஷத்3. க்ருஷ்ண பரமாத்மா அடுக்கிக் கொண்டே போகிறாரே, “தத்-புத்தய:, தத் ஆத்மான:, தந்-நிஷ்டா:, தத்-பராயணா:” என்று, அப்படி ஆத்மாவிலேயே புத்தியை வைத்து, உயிரை வைத்து, அதிலேயே நிஷ்டை என்று சொக்கிச் சொருகிக் கொண்டு, அதுதான் நாம் சேரவேண்டிய உசந்த புகலிடம் என்று இருக்க வேண்டும்4. இது “ஸந்நியாஸ யோக”த்திலே ஸ்வாமி சொன்னது. “விபூதி யோகத்”திலே சொல்லும்போது, அவர்தான் ஸகலமுமாக ஆகி விளையாடுவது என்று தெரிந்து கொண்டவர்கள் அவரே சித்தமாக, அவரே உயிராக, அவருடைய தத்வங்களையே ஒருவருக்கொருவர் போதித்துக் கொண்டும், அவருடைய மஹிமைகளையே கதை பேசிக் கொண்டும் பரமதிருப்தியாகக் களிக்கூத்தாடுகிறார்கள் என்கிறார்.

மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்|
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச || 5.

இதே நினைவில் சொன்னாற்போல வித்யாரண்ய ஸ்வாமிகள் நிர்குண உபாஸனை பற்றி (அதுதான் ஸந்நியாஸி பண்ண வேண்டியது; அதைப்பற்றிச்) சொல்லும்போது, ‘ப்ரம்மமே சிந்தனை, அதொன்றைப் பற்றியே ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வது, போதித்துக் கொள்வது’: ‘தத்-சிந்தனம் தத்- கதனம் அந்யோந்யம் தத்-ப்ரபோதநம்’ என்கிறார்6. இப்படி அந்த ஒரே குறியில் முழு கவனமுமாக ஸந்நியாஸி இருக்க வேண்டும்.

பல ஸந்நியாஸிகள் ஸங்கமாயிருந்தால் ஒருத்தருக்கொருத்தர் ‘போதயந்த: பரஸ்பரம்’, ‘அந்யோந்யம் தத் ப்ரபோதனம்’ எல்லாம். ஆனால் ஒருத்தருக்கு மேலே ஸந்நியாஸிகள் கூட்டம் போட்டுக்கொண்டு ஸங்கமாக வஸிக்கிறதைக்கூட சிலாக்யமாகச் சொல்லியிருக்கவில்லை. பலபேர் ஒன்றுகூடி இருந்தால் பாசம், த்வேஷம், போட்டி, பொறாமை, அபிப்ராய பேதங்கள் வர இடமுண்டுதானே? அதனால் ஸந்நியாஸியானவிட்டு அவனவனும் ஏகாந்தமாக ஓடிவிட வேண்டும்; ஒரு இடத்திலேயும் பாசபந்தம் ஏற்பட்டு விடப்படாது என்பதால் மூன்று நாளுக்கு மேல் தங்காமல், பரிவ்ராஜகன் என்பதாக இடம் விட்டு இடம் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கணுமென்றுதான் உயர்நிலை பரமஹம்ஸ ஸந்நியாஸி தர்மமாக வைத்திருக்கிறது7.

மொத்தத்தில் உபதேசம் வாங்கிக் கொண்டபின் ஒரு ஸந்நியாஸி என்ன செய்யவேண்டுமென்றால் அந்த உபதேசப் பொருளான அத்வைத அநுபவத்தை, பிரம்மாநுபவத்தை ஸொந்தத்தில் பெற வேண்டும் என்பதிலேயே ஸதாவும் குறியாக இருக்க வேண்டும்.

இதை ஸாதிப்பதற்காக மனனம், நிதித்யாஸனம் என்று இரண்டு வைத்திருக்கிறது. [‘நிதித்யாஸனம்’ என்பதை] ‘நிதித்யாஸம்’ என்று சொன்னாலும் ஸரிதான்.

ச்ரவண – மனன – நிதித்யாஸனத்தோடு ஸாதனை என்று ஸவிஸ்தாரமாகச் சொல்லி வந்த ஸமாசாரம் பூர்த்தியாக முடிந்து போகிறது.



1
சித்தி அடைவதற்கு முந்தைய ஸாதகர் நிலையிலுள்ள ஸந்நியஸிக்கான தர்மத்தையே இனி ஸ்ரீசரணர்கள் எடுத்துரைக்கிறார்கள். தாம் அதற்கு மாறாக இருப்பதாக விநயமும் நகைச்சுவையும் கலந்த ஓர் உணர்வில் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் ஸித்தி கண்ட ஜீவன்முக்தர்கள். அவர்கள் என்னவும் செய்யலாம், எப்படியும் இருக்கலாம். அவர்களைக் கட்டுப்படுத்த எந்த தர்மவிதியுமில்லை.

2 முண்டகோபநிஷத் II. 2.


3
ப்ருஹதாரண்யகம் IV. 4.21


4
கீதை V. 17


5
கீதை X. 9.


6
பஞ்சசதீ VII. 106; XIII. 83. இதனை வித்யாரண்யர் ‘ஜீவன் முக்தி விவேக’த்தில் ‘யோக வாஸிஷ்ட’ மேற்கோளாகக் காட்டியுள்ளார்.


7
தர்மபீடமாகிய மடங்களில் இருந்துகொண்டு மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய குருமாரகிய ஸந்நியாஸிகளுக்கு இந்த தர்மம் பொருந்தாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ச்ரவண - மனன- நிதித்யாஸன லக்ஷணம்
Next