ச்ரவண – மனன – நிதித்யாஸன லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உபதேசத்தைத் திரும்பத் திரும்ப மனஸிலே புரட்டிப் புரட்டி அலசி ஆராய்ந்து தெளிகிறது ‘மனனம்’. அப்புறம் புரட்டல், அலசல், ஆராய்ச்சி என்று பலதுக்கு இடம் கொடுக்காமல், எந்த ஆத்ம தத்வத்தைப் பற்றித் தெளிவு ஏற்பட்டதோ அதிலேயே சித்தத்தை ஆடாமல் அசையாமல் வைத்துத் தன்மயமாகப் போவது ‘நிதித்யாஸனம்’.

கேள்வியும் பதிலுமாக வசனநடையில் ‘ஆத்மாநாத்ம விவேகம்’ என்று ஆசார்யாள் [ஒரு பிரகரண நூல்] அநுக்ரஹித்திருக்கிறார். அதில் ச்ராவணம் என்ன, மனனம் என்ன, நிதித்யாஸனம் என்ன என்று ரத்னச் சுருக்கமாக லக்ஷணம் கொடுத்திருக்கிறார். ஒரு விஷயத்தை நிலைநாட்டுவதற்கான ஆறு அங்கங்களாலும் அத்வைத ஸத்யத்தைத்தான் வேதம் சொல்லியிருக்கிறதென்று குரு உபதேசிப்பார். அதைக் கேட்டுக்கொள்வதுதான் ச்ரவணம். அவ்வாறு ச்ரவணம் செய்த அத்விதீய வஸ்துவை வேதசாஸ்திரங்களை அநுஸரித்தே போகும் யுக்தியால் ஆராய்ந்து ஆராய்ந்து தெளிவதுதான் மனனம். “வேத சாஸ்திரங்களை அநுஸரித்தே போகிற யுக்தி” என்பதை குறிப்பாகக் கவனிக்க வேண்டும். ஸாதன சதுஷ்டயமும், குறிப்பாக அதில் வரும் ச்ரத்தையும், அப்புறம் சொன்ன பக்தியும் ஒருவனுடைய புத்தியை இந்த விதமாகவே யுக்தி செய்யும்படிப் பண்படுத்தியிருக்கும். சிற்றறிவுக்குப் பகுத்தறிவு என்று பெத்தப் பேர் கொடுத்துக் குயுக்தி பண்ணாமல் குரு[வின்] உபதேசத்தை மனனம் செய்ய வேண்டும். “குயுக்தியை விட்டொழி! ச்ருதி தாத்பர்யத்திற்கு இசைவான யுக்தியையே மேற்கொண்டு அலசிப் பாரு! – துஸ்தர்காத்- ஸுவிரம்யதாம்; ச்ருதி மதஸ்-தர்கோநுஸந்தீயதாம்” என்று ‘ஸோபான பஞ்சக’த்திலும் (ஆசார்யாள்) சொல்லியிருக்கிறார்1. அதுதான் மனனம். அப்படி அறிவால் தெளிந்ததை அநுபவிப்பதற்காக, வேறே எந்த சிந்தனையும் கலக்காமல், ஏகப் பிரவாஹமாகச் சித்தத்தை ஒருமுகமாக்கி நினைப்பது தான் நிதித்யாஸனம். இப்படி [“ஆத்மாநாத்ம விவேக”த்தில்] டிஃபைன் செய்திருக்கிறார்………

நடுப்பற [பேச்சின் நடுவில்] ஆறு அங்கத்தால் ஒரு விஷயத்தை நிலைநாட்டுவது என்றேனே, அந்த ஆறு என்னவென்றால்: ஒரு புஸ்தகத்தில் ஆரம்பமும் முடிவும் பார்த்தாலே இரண்டிலும் சொல்லியிருப்பதிலிருந்து அந்தப் புஸ்தகம் ஸ்தாபிக்கும் ஸப்ஜெக்ட் என்னவென்று தெரிந்து விடும். இதற்கு ‘உபக்ரம உபஸம்ஹாரம்’ என்று பேர். ஆறு அங்கத்தில் இது முதல். இரண்டாவது: திரும்பத் திரும்பப் புஸ்தகத்தில் ஒரு விஷயம் சொல்லியிருந்தால் அதுதான் ஸப்ஜெக்ட் என்பது ஸ்பஷ்டம். இதற்குப் பேர் ‘அப்யாஸம்’. மூன்றாவது: புதுசான முறையில் ஒரு கருத்தை அழுத்தம் கொடுத்துச் சொன்னால் அதுதான் ஸப்ஜெக்ட். இது ‘அபூர்வம்’. நான்காவது: ஏதோ ஒன்று சொல்லி, அது இன்னின்ன நல்ல பலன்களைத் தரும் என்று சொன்னால் அந்த ஒன்றே ஸப்ஜெக்ட் என்று அர்த்தம். இதற்குப் பேர் ‘பலம்’. ஐந்து: ஆஹா, ஒஹோ என்று ஒரு விஷயத்தை ஸ்தோத்ரித்தால் அதுவே ஸப்ஜெக்ட். இப்படி ஸ்தோத்ரிப்பது ‘அர்த்தவாதம்’. கடைசியாக ஆறாவது: ‘உபபத்தி’ என்பது. காரணம் காட்டி, பொருத்தம் காட்டி யுக்தியால் இதுதான் ‘ஸப்ஜெக்ட்’ என்று நிலைநாட்டுவது……


1 ச்லோ. 3.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஒரே குறியில் ஈடுபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸித்திக்கு முன்னிலையில்
Next