மாறுபாடான இரு பாவனைகள் விலக : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

எத்தனைதான் பக்வப்பட்ட மனோ புத்திகளானாலும் ஸாக்ஷாத்காரம் உண்டாகும்வரை மாயை விட்டு வைக்காது …. மாயையின் தலையில் பழியைப் போடுவது கூட அவ்வளவு ஸரியில்லை. ஸாக்ஷாத்காரம் என்பது அநுபவத்தின் உச்சிக் கொம்பு. கர்மா முழுக்கத் தீர்ந்தாலொழிய அதை பிடிக்க முடியாது. இத்தனை ஸாதனை பண்ணியிருந்தாலும் [பூர்வத்தில்] பண்ணின கர்மா அதைவிட எத்தனையோ மடங்கு இருந்தால் என்ன பண்ணுவது? அதுவும் தீர்கிறதற்காகவே இப்போது – மாயா சேஷ்டிதமாக இல்லை; ஈச்வர ப்ரஸாதமாகவே என்று வைத்துக் கொள்ளலாம் – இவனை [ஸாதகனை] ஒரு ஆட்டு ஆட்டிவைப்பதாக வேண்டாத எண்ணங்கள் கிளம்பக்கூடும். அப்படியென்றால் காம, க்ரோதாதிகள் இல்லை. அதுகளை முன்னேயே துடைத்துப் போட்டாயிருக்கும். ஆனால், வேறே வேண்டாத எண்ணங்கள் இரண்டு. ஒன்றை “அஸம்பாவனா” என்பார்கள். மற்றது “விபரீத பாவனா” என்பது1. “என்னவோ ஸாதனை, ஸாதனை என்று பண்ணிக்கொண்டு போகிறோமே, நாமாவது பிரம்மமாவதாவது? எத்தனூண்டு ஆஸாமி நாம்? பிரம்மம் எத்தனை பெரிசு? அகண்ட மஹாதத்வமாக இருக்கப்பட்ட அதுவாக நாம் ஆகிறதாவது? இது எங்கேயாவது ஸம்பவிக்கக் கூடிய ஸமாசாரமா?” என்ற எண்ணந்தான் ‘அஸம்பாவனா’. அத்வைதாநுபவம் ஸம்பவிப்பது ஸாத்யமா என்ற கேள்வி இன்னும் முற்றி, கேள்வியாயில்லாமல் பதிலாகவே, “ஸாத்யமில்லை. த்வைதம் தான் ஸாத்யம், ஸத்யம். ஜீவன் வேறேதான்; ப்ரம்மம் வேறேதான்” என்றே தோன்றும் எண்ணம் ‘விபரீத பாவனா’. ‘இத்தனை பாடுபட்டும் நாம் தனி ஜீவனாகத் தானே இருந்து கொண்டருக்கிறோம்?’ என்பதனால் நாம் இப்படியே தனியாக, த்வைதமாகத்தான் எப்போதும் இருக்க முடியுமென்று தோன்றி, அதனால் உண்டாகும் பாவனை.

இந்த இரண்டில் ‘அஸம்பாவனை’ போகவே மனனம்; ‘விபரீதபாவனை’ போக த்யானம் (நிதித்யாஸனம்) என்று சொல்லியிருக்கிறது.

பாசி மூடுவதுபோல் அஸம்பாவனை வந்து மூடினாலும் பண்பட்ட, பக்குவப்பட்ட புத்தியால் அப்போது வேதாந்த சாஸ்திர வாசகங்களை அலசிக் கொண்டும், வீர்யவத்தான மஹாவாக்ய மந்திரங்களை உருவேற்றிக் கொண்டுமிருந்தால், அஸல் அநுபவம் உடனே வராவிட்டாலுங்கூட அது ஸம்பவிக்கக் கூடியது ஸாத்யந்தான் என்ற தெளிவு பிறந்துவிடும்.

[ஸாக்ஷாத்காரம்] ஸம்பவிக்கக்கூடும் என்று மனன அலசல் உறுதிப்படுத்துவது ஸரி! ஆனால் ஸம்பவித்தே விட்டது என்று கண்டுகொண்டு ஸம்சயம் அடியோடு தீர்வதற்கு அது எப்படிப் போதும்? த்வைதம் இப்போது ப்ரத்யக்ஷ அநுபவமாயிருக்கிறது. ப்ரம்மம் வேறே, நாம் வேறே என்றுதானே இப்போது நிதர்சனமாக எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம்? அத்வைதந்தான் ஸத்யமென்றால் அதுவும் எப்படி ப்ரத்யக்ஷ அநுபவமாக வாய்த்தாலொழிய எப்படி உறுதிப்படும்? அதாவது ஸாக்ஷாத்காரம் ஸம்பவித்தே விட்டது என்று ஆனாலொழிய விபரீத பாவனை எப்படிப் போகும்? ஒரே த்யானமாக நிதித்யஸித்தால்தான் அந்த ஸொந்த அநுபவம் வரும். வேறே வழியே இல்லை. பஞ்சாம்ருதத்தின் காம்போஸிஷனைத் தேன், பால், நெய் என்று தெரிந்து கொண்டு, ஆகையால் அது தித்திப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணுவது மனனம். ஆனாலும் ஏதோ ஒரு ஸம்சயம், ‘அது நிஜமாகவே தித்திக்கத்தான் செய்யுமா? தித்திப்பு வஸ்துக்களே ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் கசப்பாகக்கூட ஆகுமோ என்னமோ, யார் கண்டா?’ என்று விபரீத ஸந்தேஹம் உண்டானால், அப்போது தானே அதை ருசித்துப் பார்த்தாலொழிய எப்படித் தெளிவு உண்டாகும்?

இருந்துதான் ஆகணும் என்ற மனனத்தால் முடிவு கண்ட அந்த ஸத்வஸ்து அநுபவத்திற்கு வந்தேயாகணும் என்று பூரண ‘டெடிகேஷ’னோடு நிதித்யாஸனம் செய்தால் அது அப்பப்போ டேஸ்ட் காட்டியே தீரும். டேஸ்ட் காட்டுவது என்று சொன்னாலும், டேஸ்ட், டேஸ்ட் பண்ணுகிறவன், அதைக் கொடுக்கிறவன் எல்லாம் ஒன்றாகப் போய்விட்டிருக்கும்! அந்த ஸ்திதி அப்புறம் கழன்றுவிட்டாலுங்கூட, ‘நிச்சயமாக அத்வைதாநுபவம் உண்டு’ என்று உறுதிப்பட்டு விடும். அப்புறம் விபரீத பாவனை எப்படி நிற்கும்?

அந்த மூன்றாம் ஸ்டேஜில் இப்படிப்பட்ட மாறுபாடான பாவனைகள் தோன்றுவதே ஒரு விதத்தில் இவனுக்குப் பெரிய ஸஹாயமாக ஈச்வரன் அனுப்பி வைப்பதுதான் என்றுகூடச் சொல்லலாம்! அதனால்தான் ஒருவன் அத்வைதம் நிச்சயம் உண்டு என்று தத்வமாக அந்தஃகரண லெவலிலும் ஸொந்தமாகவே அதன் அநுபவச் சாயைகளை அந்தராத்ம லெவலிலும் தெரிந்து கொள்வதற்காக முழுமூச்சோடு மனன நிதித்யாஸனங்கள் செய்யத் தூண்டுதல் பெறுகிறான்! இல்லாவிட்டால் கொஞ்சம் ‘ஈஸிகோயிங்’ – ஆக இருந்து ஸித்தியைக் கோட்டை விட்டு விடக்கூடும்! கோட்டை விடாவிட்டால்கூட ரொம்பத் தள்ளிப் போடுவதாக ஆகிவிடும். எதிராகவும் ஒன்று தோன்றினால்தான் ‘இரண்டில் ஒன்று தீர்த்து விடுகிறேன்’ என்று கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பது. அப்படித்தான் இந்த எதிரிடை எண்ணங்களான அஸம்பாவனையும் விபரீத பாவனையுமே ‘இன்ஸென்டி’வாக அநுகூலம் பண்ணுவது!


1 தொகுப்பாசிரியருக்குத் தெரியவரும் அளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நிச்சலதாஸரால் ஹிந்தியில் எழுதப்பட்டுப் பின்னர் ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்ட”விசார ஸாகரம்” எனும் நூலின் முதல் ‘தரங்க’த்திலேயே இவ்விரு பெயர்கள் காண்கின்றன. பொதுவாக அத்வைத சாஸ்திரங்களில் ‘அஸம்பாவனை’ என்பது ‘ஸந்தேஹம்’ என்றும், ‘விபரீத பாவனை’ என்பது ‘விபர்யயம்’ என்றும் கூறப்படும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிற்றறிவு கடந்த மனனம் ; மனவுணர்ச்சி கடந்த நிதித்யாஸனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மனன - நிதித்யாஸனங்களின் பெருஞ்சிறப்பு
Next