விஷயமாக ஒன்றை அலசிப் பார்த்துத் தெளிகிற மனனம் அவ்வப்போது அதையே அநுபவமாகத் தெரிந்து கொண்டு அடங்கிப் போகிற நிதித்யாஸனத்தில் கொண்டு கொண்டு சேர்க்கும். அப்புறம் அலசல் கிலசல் இல்லாமல் அதே சிந்தனைதான், த்யானந்தான். அதைச் சொல்ல ஆசார்யாளுக்கு favourite-ஆன ஒரு வாக்கியம் உண்டு. ‘ஸமாந – ப்ரத்யய – ப்ரவாஹகரணம்’ என்பார். பல இடங்களில் இந்த வாக்கியத்தைப் போட்டிருக்கிறார்1. ஜலப் பிரவாஹம் எப்படி ஒரே திசையாக ஒருமித்துப் பாய்கிறதோ அப்படி ஒரே விஷயமாக எண்ணம் ஒருமித்துப் போவது தான் த்யானம் என்று அர்த்தம். பிசிரே இல்லாமல் எப்படி எண்ணெயை விட்டால் கம்பி மாதிரி ஒரே சீராக விழுகிறதோ அப்படி – ‘தைலதாரவத்’ – என்றும் சொல்வார்2.
முனிவர் என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். பரம ஞானியாகவும், மஹா சக்தர்களாகவும் இருக்கிற மஹான்களை அப்படிச் சொல்கிறோம். ‘முனி’ என்பதுதான் மூலமான [ஸம்ஸ்கிருத] வார்த்தை. தமிழ்மொழிப் பண்புப்படி மரியாதையைக் காட்டும் விகுதியைச் சேர்ந்து ‘முனிவர்’ என்கிறோம். எதனாலோ தமிழிலே ‘முனி’ என்றால் கிராம தேவதை, உக்ரதேவதை என்று அர்த்தமாகி விட்டது. தமிழில் ‘முனிவு’ என்றால் மஹா கோபம் என்று அர்த்தமிருப்பதால் அதை வைத்து இப்படி உண்டாயிற்றோ என்னவோ? அதிருக்கட்டும். ரிஷி சிரேஷ்டரான முனி ஸமாசாரத்தைச் சொல்ல வந்தேன். ‘மனனம்’ பண்ணுகிறதில் சிறப்பு வாய்ந்தவருக்கே ‘முனி’ என்று பெயர் ஏற்பட்டது. “மனனான் முநிரிதி [ச] வ்யுத்பத்தி ஸம்பவாத்” என்று அந்த வார்த்தை இப்படித்தான் ஏற்ப்பட்டதாக ஆசார்யாள் ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்3. முனி என்கிற சப்தத்திற்கு ஞானத்தில் சிறப்பான தாத்பர்யம் இருப்பதாகவும் அங்கே சொல்கிறார் – “ஞான அதிசய அர்த்தத்வாத்” என்று. ஆகையினாலே மனனம் என்பது வெறுமனே உருப்போட்டுக் கொண்டிருப்பதோ, அல்லது நமக்கெல்லாம் தெரிகிற முறையில் புத்தியினால் தர்க்க யுக்தி பண்ணி மூளை மட்டத்தில் மாத்திரம் அத்யாத்ம ஸத்யங்களை இறக்கிக் கொள்வதோ இல்லை. அதற்கு ரொம்ப மேலே ‘இன்ட்யூஷ’னைத் தொட்டுக் கொண்டு தெளிகிற விஷயாலோசனையாகவே அது இருக்கும்.
குருவிடமிருந்து பெறும் உபதேச ச்ரவணத்திற்கு ரொம்பவும் பூஜிதையான ஸ்தானம் கொடுத்தவர் நம்முடைய ஆசார்யாள். அப்படிப்பட்டவரே, ‘ச்ரவணத்தை விட மனனம் நூறு மடங்கு உசத்தி என்று தெரிந்துகொள்ள வேண்டும்: ச்ருதே : சதகுணம் வித்யான்-மனனம் என்கிறாரென்றால்4 அது எத்தனை உயர்ந்த லெவலாக இருக்க வேண்டும்?
அதோடு அவர் முடித்து டவில்லை. ச்ரவணத்தை விட மனனம் நூறு பங்கு உசத்தி என்றால், மனனத்தை விடவோ நிதித்யாஸம் லக்ஷம் பங்கு உசத்தி என்கிறார்: “மனனாதபி நிதித்யாஸம் லக்ஷகுணம்4.”
மனனம் வெற்றறிவு இல்லை, உயிரறிவு என்றாலுங்கூட, அந்த அறிவும் அநுபவம் என்பதன் முன் அல்பந்தான். சர்க்கரையைப் பற்றி மூட்டை மூட்டையாக எத்தனை தெரிந்து கொண்டிருந்தாலும், அல்லது மூட்டை மூட்டையாகவே வாங்கி வைத்துக்கொண்டு அது எத்தனை உசத்தி ரக பூரா என்று விஸ்தாரமாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் ஒரு சிட்டிகை வாயிலே போட்டுக் கொண்டு ருசியநுபவம் பெறுவதற்கு ஈடாகுமோ? அதனால்தான், மனனத்தைவிட நிதித்யாஸம் லக்ஷம் மடங்கு என்றார்.
நிதித்யாஸத்திலும் ஒரே போடாகப் போட்டு இவன் சாச்வதமாக ப்ரம்மாநுபவத்தில் நிலைத்து விடுவதில்லை. தன்முயற்சி என்று ஒன்று இருந்தே இவன் நிதித்யாஸம் என்று ஒன்றைப் பண்ணுகிறான். இவன் பண்ணுகிறான், பண்ணி ப்ரம்மாநுபவத்தின் flash-களைப் பெறுகிறான் என்றெல்லாம் சொல்லும்போது த்வைதம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ப்ரம்மாநுபவம் மினுக்கி விட்டுப் போகாமல் அந்த மின்னல் இவனை அப்படியே ‘எலெக்ட்ரோக்யூட்’ பண்ணி, தனி ஜீவனாக இவன் இருப்பதைச் சாக அடித்து, அம்ருதமான ப்ரம்மமாகவே ஆக்குகிறதுதான் முடிவு; அதுதான் ஸித்தி ஸ்தானம். ஸாதனை அப்படியே நின்றுபோய் ஸாதகனே ஸாத்யமாகிவிடும் ஸ்தானம்!
கை, கால் கார்யம் செய்கிற மாதிரி ஒருத்தன் செய்கிற நினைப்புக் கார்யந்தானே நிதித்யாஸமும்? அது எத்தனை உசத்தியாகத்தானிருக்கட்டும், கார்யம் என்றும் கர்த்தா என்றும் இருக்கிறவரை அது எப்படி ஏக ஸத்யமாக தன்னில் தானாகவே இருந்து கொண்டிருப்பதாகும்?
ஆனாலும் ஜீவன் என்று ஒருத்தன் இருந்து கொண்டிருக்கும் வரை, அப்படி இருக்க வேண்டாமே என்பதற்காக அவன் பண்ணக்கூடிய உச்சியான கார்யம் ப்ரம்மத்தையே நினைத்துக் கொண்டிருப்பதுதானாகையால் அந்தக் கார்யமான நிதித்யாஸனத்தை இறுகப் பிடித்துக் கொண்டு இடைவிடாமல் செய்ய வேண்டியதுதான்.
1 உதாரணம் : ஸூத்ர பாஷ்யம் IV. 1. 7, 8; கீதா பாஷ்யம் XII. 3
2 கீதா பாஷ்யம் XII. 3
3 III. 4. 47
4 விவேக சூடாமணி 364 (அ) 365