ஆதிசங்கரரும் கூறும் ஈசனது ஞானக் கொடை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நம்முடைய ஆசார்யாளும் ஈச்வர க்ருபையாலேயே முடிவான ஞானம் உண்டாவதை அங்கங்கே சொல்லாமல் போகவில்லை.

‘ஸெளந்தர்ய லஹரி’, ‘சிவாநந்த லஹரி’ முதலான அவருடைய பக்தி ஸ்தோத்ரங்களில் அவர் மாயையைப் போக்கி மோக்ஷத்தைப் பரமாத்மாவே அருள்வதாகச் சொல்வது மட்டுமில்லை; தமது ஞான க்ரந்தங்களிலும் அங்கங்கே இப்படிச் சொல்லாமல் விட்டுவிடவில்லை. பக்தி ஸ்தோத்ரத்தில் இப்படிச் சொன்னதில் விசேஷமில்லை. ஞான மார்க்க ஸாதகர்களுக்கு த்வைதமான ஈச்வராநுக்ரஹத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாமென்று விட்டுவிட்டதாகச் சொன்னது போலவே இதற்கும் காரணம் சொல்லிவிடலாம். “பக்தி வழியிலே போகிறவர்களுக்கு ஞான விசாரமான நிதித்யாஸனத்தினால்தான் லக்ஷ்யஸித்தி என்று சொல்லவேண்டாம். பக்தி பண்ணிக்கொண்டே போனால், அதனால் ஒருமுகப்படப் பழகிவிட்ட மனஸ் அப்புறம் தானாகத் தன் ஆதாரத்தைத் தேடிக்கொண்டு ஞானமாகப் போக ஆரம்பித்து, முடிவிலே, ஸித்தி வரும். தானாக நடப்பது நடந்தே தீரும். அதை நாம் இப்போது பிடித்தே சொல்லவேண்டாம். ஈச்வர பக்திக்கு மேலே ஞானம், அத்வைதம் என்று எதற்கோ போகவேண்டுமா என்று பக்தி மார்க்கத்தில் போகிறவருக்குத் தோன்றிவிடலாம். அல்லது ‘மோக்ஷத்துக்கு அதுதான் நேர்வழி என்றால், இந்த பக்தி எதற்கு?’ என்று பக்தி பண்ணுவதை விட்டுவிடத் தோன்றலாம். ஆனாலும் ஞான விசாரம் என்றால் அதற்கு வேண்டிய சித்த ஐகாக்ரியம் இவர்களுக்கு இல்லையே; அதை உண்டாக்கத்தானே முதலில் பக்தியைச் சொல்லியிருப்பது? இப்படிப் பல தினுஸாக ஆலோசித்துத்தான் இப்போது இவர்கள் உள்ள நிலையில் ஒரு குழப்பத்தை உண்டாக்காமல் இவர்கள் மனஸுக்கு ஏற்கும்படியாக ஈச்வராநுக்ரஹத்தாலேயே ஞானம், மோக்ஷம், அத்வைதம் எல்லாம் ஸித்திப்பதாக சொல்லிவிடலாம்” என்று நினைத்து இம்மாதிரிச் சொன்னதாக அர்த்தம் செய்துகொள்ள இடமுண்டு. ஆகையால் தம்முடைய பக்தி ஸ்தோத்ரங்களில்லாமல் ஞான நூல்களான பாஷ்ய க்ரந்தங்கள், ப்ரகரண க்ரந்தங்கள்1 ஆகியவற்றில் ஆசார்யாள் இவ்விஷயமாகச் சொல்லியிருந்தால்தான் இதற்கு “வால்யூ” அதிகம். இதை அவர் அத்வைத நூல்களில் விரிவாகவோ அழுத்தமாகவோ சொல்ல முடியாது என்பதற்குக் காரணம் பார்த்தோம். ஆனாலுங்கூட இந்த உண்மையை அடியோடு சொல்லாமல் விட்டுவிடக்கூடாது என்பதுபோல, சில இடங்களிலாவது அவர் சொல்லிவிட்டும்தான் போயிருக்கிறார்.2

‘ஈச்வரனையே ஸர்வபாவத்தினாலும் நீ சரணடை; அவன் அநுக்ரஹத்தால் சாச்வதமான பரம சாந்த பதம் அடைவாய்’ என்கிற (கீதா வாசகம்) மாதிரியான இடங்களுக்கு பாஷ்யம் பண்ணும்போது ஆசார்யாள் இவ் விஷயத்தைச் சொல்லியிருந்தால்கூட அது பெரிசில்லை. மூல க்ரந்தத்தில் ஈச்வராநுக்ரஹத்தைப் பற்றிக் குறிப்பாக இல்லாத இடங்களிலும் கூட சில ஸமயங்களில் ஆசார்யாள் தம்முடைய பாஷ்யங்களில் அதைப் புகுத்தி அதனுடைய பெருமையைச் சொல்லியிருப்பதுதான் பெரிசு. உதாரணமாக, ஸர்வ பாவத்தினாலும் சரணாகதி செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு முந்தி, அந்த (பதினெட்டாம்) அத்யாயத்திலேயே பகவான், “ஒருத்தன் தனக்கென்று ஏற்பட்ட கர்மத்தை விடவே படாது. ஸ்வகர்ம, ஸ்வதர்மங்களையே ஈச்வர ப்ரீதியாக, ஈச்வர ஆராதனையாகப் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் அவனுக்கு ஸித்தி கிடைக்கிறது. அதாவது (ஆசார்ய பாஷ்யப்படி) ஞான நிஷ்டைக்கான யோக்யதை கிடைக்கிறது. அப்புறம் அவன் எப்படி ஞானத்தின் உச்சமான நிஷ்டையான ப்ரஹ்மத்தையே சேர்கிறானோ அதைச் சொல்கிறேன் கேள்”. என்கிறார்.3  ஈச்வரார்ப்பணமாகத் தன் கர்மாவைச் செய்பவன் ஞான விசாரத்துக்குப் பக்குவமடைவதாகவும், அப்புறம் அவன் பண்ணவேண்டியது இன்னவென்றுந்தான் இந்த இடத்தில் பகவான் சொல்கிறார். ஈச்வரன்தான் இந்தப் பக்வத்தை அநுக்ரஹிப்பதாக இந்த இடத்தில் அவர் சொல்லவில்லை. ஆனாலும் ஆசார்யாள், “ஸ்வகர்மாவினால் ஈச்வரனை ஆராதனை பண்ணி, அவனுடைய அநுக்ரஹத்தினால் பிறந்த ஞான நிஷ்டா யோக்யதை எனும் ஸித்தியை அடைந்து”, “என்று இங்கே4  ஈச்வர க்ருபையைக் கொண்டுவருகிறார்! “தத்ப்ரஸாதஜாம்”” என்பதாக, மூலத்தில் இந்த இடத்தில் சொல்லாத ஈச்வர ப்ரஸாதத்தை ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்திலே குறிப்பிட்டு, ஸ்வகர்மாநுஷ்டானம் அதுவாகவே ஞான விசாரத்துக்கான தகுதியைத் தருவதில்லை என்றும், அதற்குப் பலனாக ஈச்வரன் அநுக்ரஹித்தே அந்தத் தகுதி உண்டாகிறது என்றும் தெளிவுபடுத்துகிறார். மூலத்தில் சொல்லாத இடத்திலும் அவர் பாஷ்யத்தில் சேர்த்திருப்பதற்குத் தனியான விசேஷம் உண்டு.

ஈச்வரன்தான் கர்மாவுக்குப் பலன் தருபவன், கர்மா தானாகவே பலனைத் தருவதில்லை என்பதுதான் அத்வைதிகள் கொள்கை, ‘கர்மாவே பலனைத் தருகிறது; ஈச்வரன் என்று ஒருத்தனைக் கொண்டுவரவேண்டாம்’ என்று அபிப்ராயம் கொண்ட பூர்வ மீமாம்ஸகர்களை அத்வைதிகள் நன்றாகக் கண்டித்து, ஸகலத்துக்கும் பலதாதா லோக வ்யாபாரத்தையெல்லாம் நடத்தும் ஈச்வரன்தான் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் மாயைக்கு உட்பட்ட கர்ம லோகத்திலேதான் அவனைப் பலதாதாவாகச் சொல்லியிருக்கிறார்களே தவிர மாயையிலிருந்து விடுபடும் ஞான ஸாதனையிலும் அதன் ஒவ்வொரு ஸ்டேஜிலும் பலன் தருகிறவன் ஈச்வரன் தான் என்று அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை. ‘கர்ம யோகத்தினால் சித்த சுத்தி ஏற்படுகிறது; சித்தம் சுத்தமான பின் ஞான விசாரம் பண்ண ஜீவன் பக்வமாகிறான்’ என்று சொல்வார்களே தவிர, ‘கர்மயோகத்துக்குப் பலனாக ஈச்வரன் சித்த சுத்தி அநுக்ரஹித்து ஞான நிஷ்டைக்கு ஒரு ஜீவனைப் பக்வப்படுத்துகிறான்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கே ஆசார்யாள் இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கிறார்.

கர்மத்திலிருந்து ஞானத்துக்குப் போக ஈச்வர க்ருபை வேண்டுமென்பதைக் கர்மா எல்லாம் போய் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதையே முக்யமாக விவரிக்கும் (கீதையின்) கடைசி அத்யாயத்தில் ஆசார்யாள் சொன்னார். இதற்கு முதல்படி இரண்டாம் அத்யாயத்தில் ஆரம்பிக்கிறது. அங்கே முதலில் ரொம்பவும் ஞானவேதாந்த தத்வங்களைச் சொல்லிவிட்டு, “இதுவரை ஸாங்க்யம் சொன்னேன். இனிமேலே யோகம் சொல்கிறேன்” என்று, கர்ம யோகத்தைப் பற்றி பகவான் ஆரம்பிக்கிறார்.5 ஸாதாரணமாக ஸாங்க்யம் என்றால் கபிலர் சொன்ன ஸாங்க்ய சாஸ்த்ரமென்றும், யோகம் என்றால் பதஞ்ஜலி சொன்ன ராஜயோகமென்றும் நினைப்போம். இங்கே பகவானோ ஞான மார்க்கத்தையே ஸாங்க்யமென்றும், கர்ம மார்க்கத்தை யோகமென்றும் பெயர் கொடுத்துச் சொல்கிறார். இப்படி ஸ்வகர்மாநுஷ்டானத்தைப் பற்றில்லாமல் செய்யும் யோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே, “இது கர்மா செய்கிற யோகமானாலும் இதுவேதான் கர்ம பந்தத்தை அறுக்கிறது” என்கிறார். ஆசையின் மேலே, பலனை உத்தேசித்து கர்மா பண்ணினால் அது ஸம்ஸார பந்தத்தை உண்டுபண்ணுகிறது. ஆசையை விட்டு, பலனை உத்தேசிக்காமல், லோக க்ஷேமத்துக்காகவும், சித்த சுத்திக்காவும் சாஸ்த்ரீய கர்மாவைச் செய்தால் அது பந்தத்தை அறுக்கிறது. ‘இம்மாதிரி அறு அப்பா’ என்றுதான் அந்த ச்லோகத்தில் பகவான் சொல்லியிருக்கிறார், ‘கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி’ – கர்மக் கட்டை அறுத்துப் போடுவாய்” என்கிறார்.

இங்கேயும் அவர் சொல்லாவிட்டாலும் தாம் சொல்லாமலிருக்கக் கூடாது என்று ஆசார்யாள் நினைத்துத் தம்முடைய பாஷ்யத்தில், ‘ஈச்வராநுக்ரஹத்தைக் காரணமாகக் கொண்டு ஞானத்தை அடைந்து தர்ம அதர்மங்கள் எனப்படுகிற கட்டான கர்மாக்கட்டை அறுப்பாய்’ என்று விளக்கியிருக்கிறார். அதாவது கர்ம யோகம் அதுவாகவே பலன் தராமல் ஈச்வரன்தான் பலதாதாவாக இருப்பதை நிச்சயப்டுத்துகிறார். இங்கே இன்னொரு முக்யமான விஷயம். ‘ஈச்வர ப்ரஸாத நிமித்த’ என்பதாக ஈச்வராநுக்ரஹம் என்ற காரணத்தைச் சொல்வதோடு மட்டும் ஆசார்யாள் நிறுத்தவில்லை. ஸ்வதர்ம கர்மாவைப் பண்ணினவனின் கர்மாக்கட்டை (அதாவது பூர்வ வினைத்தளையை) ஈச்வரன் வெட்டிவிடுவது எப்படியென்றால், ஜீவனுக்கு ஞான ப்ராப்தி உண்டாக்குவதாலேயே இப்படி அவன் செய்கிறானென்று தெளிவு செய்கிறார். “ஈச்வர ப்ரஸாத நிமித்த ஞான ப்ராப்தே:” என்று பாஷ்யத்தில் இருக்கிறது. கர்மாபோவதை விட ஞானம் வருவது முக்யம். ஞானத்தை அடைவதற்கு வழியாகவே ஒருவன் கர்மாவைப் போக்கிக் கொள்வதற்கு ஈச்வரன் அநுக்ரஹிக்கிறான் என்ற அபிப்ராயத்தை ஆசார்யாள் நிஸ்ஸந்தேஹமாக வெளியிட்டிருக்கிறார்.

இப்படியாக கீதையில் கர்ம யோகத்துக்கு விதை விதைக்கிற ஆரம்பத்திலிருந்து அது தானாகவே பட்டுப்போய் நிஷ்கர்மத்திலே கொண்டுவிடுகிற முடிவுவரை ஈச்வர க்ருபையே இந்த யோகத்தினால் கர்ம நாசத்தைப் பண்ணி ஜீவனை ஞானத்தில் சேர்க்கிறது என்று ஆசார்யாள் காட்டியிருக்கிறார். அப்படி முடிக்கிற இடத்திலே6 “புத்தியால் எப்படி ஆத்மாவைப் பிடிக்க முடியும்?” என்று கேட்கிறவர்களுக்கு பதிலாக, “குரு ப்ரஸாதத்தை அடைந்து தன்னிலேயே ப்ரஸாதம் பெறுகிறவர்களுக்கு இது எப்படி என்று தெரியும்” என்கிறார். “லப்த குர்வாத்ம ப்ரஸாதாநாம்” என்கிறார். “குரு ப்ரஸாதம்” என்கிற இடத்தில் ப்ரஸாதம் என்றால் ‘அநுக்ரஹம்’ என்று அர்த்தம். “ஆத்ம ப்ரஸாதம்” என்கிற இடத்தில் ப்ரஸாதம் என்றால் ‘தெளிந்த நிலை’ என்று அர்த்தம். குருவின் அநுக்ரஹத்தால் அந்தஃகரணம் தெளிவு பெற்றவர்களுக்கு ஆத்மாவைப் பிடிக்க முடியும் என்பது தாத்பர்யம் த்வைதமாய் இருந்த, அந்தஃகரணம் (புத்தியும் அதில் சேர்ந்ததுதான்) அத்வைதமாய் மாறிக்கொண்டே போய் அத்வைத ஆத்மாவில் ஐக்யப்படுவதாக முன்னே சொன்னதற்கு ஆதரவாக இப்படிச் சொல்லியிருக்கிறார். இங்கேயும் ஜீவனின் அந்தஃகரணத் தெளிவை மாத்திரம் சொல்லாமல், அவனுக்கு வேறு மாதிரியுள்ள குருவின் அநுக்ரஹ சக்தியையும் சொல்லியிருக்கிறார். மூலத்தில் இதைப்பற்றிக் குறிப்பே இல்லாவிட்டாலும், அநுக்ரஹத்தின் விசேஷத்தைச் சொல்லியே ஆகவேண்டுமென்பதால் தம்முடைய பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

குரு என்பவர் ஈச்வரனுக்கு ப்ரதிநிதிதான். எல்லா குருக்களுக்கும் முதல் குரு. ஈச்வரனேதான். “ஸ பூர்வேஷாமபி குரு:” 7-ஈச்வரனே எல்லா குருக்களுக்கும் முந்தைய முதல் குரு. ஈச்வரனேதான் குருவாக வந்து ஜீவனை நல்ல வழியில் கொண்டுபோகிறான் என்பதே நம் மதத்தின் கொள்கை. ஆனபடியால் இங்கே சொன்ன குரு ப்ரஸாதம் என்பது ஈச்வர ப்ரஸாதம்தான்; ஈசன் க்ருபைதான்.

இதிலிருந்து இன்னொரு முக்யமான விஷயமும் ஏற்படுகிறது. அத்வைத சாஸ்த்ரங்கள் முழுவதுமே ஞானமார்க்கத்தில் போவதற்கு ஓரளவு பக்குவப்பட்டவருக்குத்தான். அதனால்தான் அவற்றில், கர்மாநுஷ்டானமும் பக்தியுபாஸனையுமே ஆரம்ப நிலைகள் என்று சொல்லியிருந்தாலுங்கூட இவற்றைக் குறித்த விதிமுறைகளை விவரிக்காமல் தத்வ சோதனத்துக்கே முக்யம் கொடுத்து விளக்கியிருப்பது. அத்வைதமாகவே வாதத்தைக் கொண்டுபோக வேண்டுமென்றுதான் கடைசி கட்டத்தில் கிட்டுகிற ஈச்வராநுக்ரஹத்தை அவற்றில் சொல்வதில்லை என்று பார்த்தோம். இப்படி ஆசார்யாள் செய்துள்ள அத்வைத க்ரந்தங்களிலும் கீதை, உபநிஷத், ப்ரஹ்ம ஸூத்ரம் ஆகியவற்றுக்குச் செய்துள்ள பாஷ்யங்களைவிட, அவரே செய்துள்ள ப்ரகரண க்ரந்தங்களான ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ்ரீ’, ‘அபரோக்ஷாநுபதி’ முதலிய நூல்கள் ‘அத்வைதந்தான் நம்முடைய லக்ஷ்யம்’ என்று வைத்துக் கொண்டிருப்பவர்களையே உத்தேசித்தவையாகும். இதே மாதிரிதான் ஆசார்யாளுக்குப் பிந்தி வந்திருப்பவர்கள் செய்துள்ள நூல்களும் அத்வைதத்தில் ஓரளவு ‘advanced student’ -களுக்கே உத்தேசிக்கப்பபட்டவை எனலாம். ஆகையினால் இவற்றில் த்வைதமான ஈச்வராநுக்ரஹ ஸமாசாரம் ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுவதில்லை. ஆனாலுங்கூட இதைத்தான் ‘முக்யமான விஷயம்’ என்று சொன்னேன் – இந்தப் புஸ்தகங்கள் எல்லாவற்றிலுங்கூட எடுத்தவுடன் மங்கள ச்லோகமாக ஈச்வரனுக்கோ குருவுக்கோ வந்தனம் சொல்லியிருக்கும். அவருடைய அநுக்ரஹத்தாலேயே ஞானம் உண்டாவதாகவும் அதில் ஸ்தோத்திரித்திருக்கும்.

‘விவேக சூடாமணி’ போன்ற அநேக அத்வைத க்ரந்தங்களில் சிஷ்யன் குருவுக்கு அப்படியே சரணாகதி செய்து அவர்தான் கதி என்று கிடப்பதாக ஆரம்பித்திருக்கும். கடைசியில் அவருடைய அநுக்ரஹத்தாலேயே தனக்கு மிகவும் உயர்ந்ததான அத்வைதாநுபவம் ஏற்பட்டதாக ரொம்பவும் நன்றியுடன் நமஸ்காரம் தெரிவித்திருக்கும். இவை எல்லாம் ஈச்வராநுக்ரஹத்தால் ஞான ப்ராப்தி என்பதை அத்வைதம் ஒப்புக்கொள்வதற்கு ப்ரூஃப்தான்.


1 நமக்கு முன்னமே இருந்த ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷத், கீதை முதலியவற்றுக்கு ஆசார்யர்கள் அளித்த விரிவுரைகளுக்கு பாஷ்யம் என்றும், அவரே சொந்தமாக இயற்றியருளிய ஞான நூல்களான ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ்ரீ’, அபரோக்ஷாநுபூதி’, முதலியவற்றுக்கு ப்ரகரண க்ரந்தங்கள் என்றும் பெயர்.

2 இவ்வுரையின் பல பகுதிகளைத் தெரிவித்தவர், தற்போது மறைந்துவிட்ட ஆஞ்சநேய ஸ்வாமிகள் என்னும் ஸ்ரீ அனந்தானந்தேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். ஈச்வர க்ருபையால் ஞானம் கிடைக்கிறது என்ற ப்ரஸ்தாவம் பகவத் பாதர்களின் நூல்களில் எங்கெல்லாம் வருகிறது என்று ஒரு ஸமயம் ஸ்ரீசரணர்கள் தேடிப் பார்த்துச் சேகரித்ததாகக் கூறி இவற்றில் தமக்குக் குறிப்பாக நினைவு வரும் சிலவற்றையும் தெரிவித்தார். அவற்றில், நாம் எதிபார்க்க முடியாத சில இடங்களில்கூட ஈசனருளாலேயே ஸம்ஸார பந்தம் விளகுவதாக பகவத் பாதர்கள் கூறியிருப்பதில் ஓரிரண்டை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.

3 கீதை அத். 18, ச்லோ. 46,50

4 கீதை அத். 18 ச்லோ. 50

5 கீதை அத். 2, ச்லோ. 39

6 பதினெட்டாம் அத்தியாயத்தின் ஐம்பதாவது ச்லோகத்தின் பாஷ்யத்தில்.

7 யோக ஸூத்ரம் : 1:26

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈசன் செய்வதற்கு சாஸ்த்ரம் எதற்கு?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குரு என்ற த்வைதம் இடறுவதில்லை
Next