குரு என்ற த்வைதம் இடறுவதில்லை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ஈச்வரன்’ என்று கண்ணிலே தெரியாத ஒரு தத்வத்தைச் சொன்னால் அது அத்வைதமாகப் போக ஆசைப்படுகிறவனுக்கு அவ்வளவாக அவச்யமில்லாத ஒரு த்வைதமாகத் தோன்றுகிறது. ஆனாலும் ப்ரத்யக்ஷத்தில் இவனுக்கும் ஒரு அநுபவியின் உபதேசமும் அநுக்ரஹமும் தேவைப்படுகிறது. ஆனபடியால் இப்படி உபகாரம் பண்ணுபவராக குரு என்று ஒருவரை இவனுடைய கண்ணுக்கு முன்னால் மநுஷ்ய ரூபத்தில் காட்டுகிறபோது அதன் த்வைதம் இவனுக்கு இடறுவதில்லை; அது அத்வைதத்துக்கு ஸஹாயமான த்வைதமாகவே தெரிகிறது.

த்ருஷ்டாந்தம் காட்டினால் புரியும்: ரமண ரிஷியிடம் வருகிறவர்கள், முக்யமாக வெள்ளைக்காரர்கள், ரொம்பவும் அத்வைத ஃபிலாஸஃபியிலேயே போகத்தான் ஆசைப்படுகிறார்கள். ஈச்வரனைக் கொண்டுவருவது அவர்களுடைய Self enquiry-க்கு (ஆத்ம விசாரத்துக்கு) ஒட்டாமல்தான் இருக்கும். ஆனாலும் அவர்களும்கூட அவரை குரு, மாஸ்டர்' என்று சொல்லி மரியாதை செய்து, அவருடைய அநுக்ரஹத்தால் தங்களுக்கு அநுபவம் வந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் தம்மை குரு என்றும் தம்மிடம் வருபவர்களை சிஷ்யர்கள் என்றும் சொல்லிக் கொள்வதேயில்லை! இதைவிடவும் அதிசயமாக, `குருவே வேண்டியதில்லை. வரையறுத்து இதுதான் ஸித்தாந்தம் என்று எதையும் வைக்கப்படாது’ என்று அபிப்ராயப்படுகிற (ஜே.) க்ருஷ்ணமூர்த்தி போன்ற ஒருவரிடம் போகிறவர்கள் கூட அவரை ஒருவிதத்தில் குரு மாதிரியாகவே மரியாதையுடன் நினைத்து, அவருடைய சக்தியினால் தங்களுக்குத் தெளிவு உண்டாவதைச் சொல்கிறார்கள்.

அதனால் ஈச்வராநுக்ரஹம் என்று சொல்லிக் கொஞ்சம் அழுத்தமாகவே த்வைத பாவத்தைக் கொண்டுவிடாவிட்டாலும் அதையே குரு ப்ரஸாதம் என்பதாக அத்வைதிகளும் சிறப்பித்துச் சொல்லித்தான் இருக்கிறார்கள். ‘குர்வஷட்கம்’ முதலான அநேக நூல்களில் நம்முடைய ஆசார்யாள் இவ் விஷயத்தை ரொம்பவும் பக்தியோடும் நன்றியோடும் ஸ்பஷ்டமாகவும் அழுத்தமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆதிசங்கரரும் கூறும் ஈசனது ஞானக் கொடை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாயாசக்தியே ஞானமும் அளிப்பது
Next