ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை
கும்பகோணம்.



ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆக்ஞைப்படி “வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை” என்ற பெயருடன் இந்த ஸபை 1942 வருஷம் செப்டம்பர் மாதம் 11 (s No.1 of 1942-43 ஆக) பதிவு செய்யப்பட்டது.
ஸபையின் நோக்கங்கள்.
இந்த ஸபையின் நோக்கங்கள் :

  1. முக்கியமாக குருகுல வாஸமுறையில் வேதங்களில் நியம அத்யயனத்தை ஆதரித்து, வ்ருத்தி செய்வது.
  2. வேதங்கள், தர்மசாஸ்த்ரங்கள் இவைகளில் ஞானத்தை வ்ருத்தி செய்வது.
  3. வேதங்களையும், தர்ம சாஸ்த்ரங்களையும் சாஸ்த்ரீக முறையில் கற்பிக்கவும், பரவவும் செய்வது.
  4. வேதங்கள், வேதபாஷ்யங்கள், க்ருஹ்யஸூத்ரங்கள், தர்ம சாஸ்த்ரங்கள் இவைகளை கற்பிக்கும் ப்ராஹ்மண உபாத்யாயர்களையும், கற்கும் ப்ராஹ்மண மாணவர்களையும் ஆதரிக்க நிதியை ப்ராஹ்மணர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டு அந்த மாணவர்களுக்கு அவ்வப்பொழுது பரீக்ஷைகளில் தேறினவர்களுக்கு ஸம்பாவனைகளும், உபாத்யாயர்களுக்கு குருதக்ஷிணைகளும் கொடுப்பது.

ஸபையின் நிர்வாகம்.
ஸ்ரீ ஆசார்யாள் அவர்களால் நியமனம் செய்யப்படும் பத்து நிர்வாக அங்கத்தினர்களால் இந்த ஸபை  நடத்தப்படுகிறது. ஸபையின் வருமானத்துக்கு தகுந்தவாறு வருமானத்திலிருந்து ஸம்பாவனைகள் கொடுத்துவரப்படுகிறது. ஸபையின் சட்டப்படி ரூ. 50-ம் அதற்குமேலும் கொடுக்கப்படும் நன்கொடைகள் ஸபையின் மூலதனமாக சேர்க்கப்படுகிறது.

பரீக்ஷைகள்.
ஸபை நடத்தும் பரீக்ஷைகளின் விவரங்கள்:

  1. “தர்மக்ஞ”: இந்த பரீக்ஷை 6-வருஷங்களில் நடத்தப்படும். பரீக்ஷிக்கப்படும் க்ரந்தங்களின் விவரம் : வேதம், க்ருஹ்யம், ஸ்ம்ருதி, ஜைமினி ந்யாயமாலை, தர்க்க ஸங்க்ரஹதீபிகை, வேத பாஷ்யம், தர்ம ஸூத்ரம், சிக்ஷை, கெளமுதி, தர்சபூர்ணமாஸ சூத்ரம், உபநிஷத்பாஷ்யம், பிங்காளாசார்யர் சந்தோவிச்ருதி, மந்த்ரப்ரச்ன பாஷ்யம், யாஸ்க நிருக்தம், வேதாங்கஜ்யோதிஷம் முதலியன.
  2. “க்ருஹ்யக்ஞ” : இந்த பரீக்ஷை ஒரே வருஷத்தில் நடத்தப்படும். வேதம், க்ருஹ்யம், ஸ்ம்ருதி, தர்சபூர்ணமாஸ் ஸீத்ரம் இவைகளில் பரீக்ஷிக்கப்படும்.
  3. “வேதத்யயன”
  4. “ப்ரயோக” இரண்டு வருஷம்.
  5. “தர்மசாஸ்த்ர” இரண்டு வருஷம்.

பரீக்ஷைகளின் நியமங்கள் அச்சிட்டு ப்ரசுரப்படுத்தப் பட்டிருக்கின்றன.
பரீக்ஷைகளில் தேறினவர்களுக்கு அந்த வருஷம் ஸம்பாவனைகள் கொடுப்பதோடு அவர்களுக்கு ஆயுள் பர்யந்தம் ப்ரதி வருஷமும் ஸம்பாவனைகள் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

பரீக்ஷைகள் நடக்கும் இடங்கள்
தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள தாலுகாக்களை அடியிற்கண்டபடி 5-தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. (1) கும்பகோணம், பாபணாசம் (2) நன்னிலம் நாகபட்டினம், திருத்துரைப்பூண்டி (3) மாயவரம், சீயாழி (4) மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி (5) தஞ்சாவூர்.
ப்ரதி வருஷமும் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த தாலுகாக்களைச் சேர்ந்த ஒரு இடத்தில் ஸதஸ் கூட்டப்படும். அந்த ஸதஸ்களில் பரீக்ஷைகளை நடத்தி, பரீக்ஷைகளில் தேறினவர்களுக்கும், பரீக்ஷாதிகாரிகள், வித்வான்கள் முதலியவர்களுக்கும் ஸம்பாவனைகள் கொடுக்கப்படும். ஸம்மேளன தினங்களில் ஸ்த்ரீ புருஷர்கள் அனுஷ்டிக்கவேண்டிய அநேக தர்மங்களைக் குறித்து வித்வான்களால் உபன்யாஸங்கள் நடத்தப்படும். எல்லா இடங்களிலும் வேதாத்யயன, ப்ரயோக, தர்மசாஸ்த்ர பரீக்ஷைகள் நடத்தப்படும். அந்தந்த தாலுகாக்களில் உள்ள ப்ராஹ்மணர்கள் மாத்ரம் அந்த பரீக்ஷைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தர்மக்ஞ, க்ருஹ்யக்ஞ பரீக்ஷைகள் கும்பகோணம் பாபனாசம் தாலுகாக்களுக்காக ஏற்படுத்தபடும் ஸம்மேளனத்தில் மாத்திரம் நடத்தப்படும்.

ஸம்மேளனங்கள்.
மேற்கண்ட  திட்டப்படி இதுவரையில் அடியிற்கண்ட ஸம்மேளனனங்கள் நடத்தப்படிருக்கின்றன.
பார்த்திவ- வருஷம்  கும்பகோணம் 7to 9-3-1946
வ்யய- வருஷம்  முடிகொண்டான் 10to 14-12-1946
வ்யய- வருஷம்  கும்பகோணம் 24-2-47 to 5-3-47
வ்யய- வருஷம்  மன்னார்குடி 24to 26-3-47
ஸர்வஜித்- வருஷம்  தஞ்சாவூர் 11to 13-9-47
ஸர்வஜித்- வருஷம்  குத்தாலம் 1to 3-12-47
ஸர்வஜித்- வருஷம்  நாகபட்டினம் 18to 20-1-48
ஸர்வஜித்- வருஷம் கும்பகோணம் 29-3-48 to 7-4-48
இதுவரை சுமார் ரூ 7,000 ஸன்மானமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி ஸம்மேளனங்களின் நடவடிக்கைகளிலும் பரீக்ஷைகளிலும் ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் ஆகிய மூன்று மதஸ்தர்களும் ச்ரத்தையுடன் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள் என்ற விஷயம் பாராட்டத்தக்கது.
இந்தமாதிரி ஸம்மேளனங்கள் இதர ஜில்லாக்களிலும் நடக்கவேண்டும் என்று உத்தேசித்து தென்னாற்காடு, திருச்சி, சேலம் ஜில்லாக்களிலும் கூடிய சீக்கிரம் நடத்த ஏற்பட்டுகள் செய்யப்பட்டு வருகிறது.

ப்ரசாரம்.
பொதுஜனங்களுக்கு வேத தர்மசாஸ்த்ர ஞான அபிவ்ருத்தி அவச்யம் என்பதை விளக்கும் பொருட்டும், ஸபைகார்யத்தில் எல்லோரும் விசேஷமாக ஈடுபட ச்ரத்தை உண்டாகும் பொருட்டும் ப்ரபல வித்வான்களால் அநேக இடங்களில் உபன்யாஸங்கள் நடத்தப்படுகின்றன.

பூர்வாபரப்ரயோகம் முதலியன கற்பிக்க ஏற்பாடு.
தர்மசாஸ்த்ர ஞானத்தை வ்ருத்தி செய்யவேண்டும் என்பதும் ஸபையின் நோக்கங்களில் ஒன்று. அந்த நோக்கத்தை நிறைவேற்ற சில இடங்களில் மாத்திரம் ஸதஸ்ஸுகள் கூட்டி உபன்யாஸங்கள் செய்வது போதவில்லை. ஒவ்வொரு ப்ராஹ்மண குடும்பத்திலும் தர்மசாஸ்த்ர ஞானம் பரவ வேண்டும். அவரவர்கள் என்னென்ன தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது. அதற்காக பொது தர்ம விஷயங்கள், ப்ரயோக விஷயங்கள், மந்த்ரார்த்த விஷயங்கள் முதலியன ஸம்பந்தமாக சிறு சிறு ப்ரசுரங்களை அறிந்த அநேக பெரியோர்களின் ஸஹாயத்தையுங்கொண்டு வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதை அனுஸரித்து ப்ரசுரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த ப்ரசுரங்கள் தமிழர்கள் வஸிக்கும் அநேக இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ப்ரசுரங்களை சுற்றுப்பார்வைக்கு அனுப்பியோ, வினியோகித்தோ, பஜனை விசேஷ ப்ரஸ்துதங்கள் முதலிய ஸந்தர்ப்பங்களில் ப்ராஹ்மண ஸமுகம் சேரும் இடங்களில் படித்துக் காட்டியோ அந்தந்த ப்ரதேசங்களுக்கு உசிதமாகத்தோன்றும் வேறு முறையிலோ, எந்த முறையிலாவது எல்லா ப்ராஹ்மண குடும்பங்களும் ப்ரசுரங்களில் உள்ள விஷயங்களை அறியவேண்டும் என்ற ஸபையின் உத்தேசத்தை பூர்த்தி செய்யும்படி ஆஸ்திகர்கள்

அனைவர்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம் ப்ரசுரங்களில் உள்ள விஷயங்களை அநேகர் படித்து அறிந்து கொள்ளுகிறார்கள் என்றும், மேலும் மேலும் ப்ரசுரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்றும் ஸபைக்கு வந்திருக்கும் கடிதங்களிலிருந்து தெரிகிறது.
க்ரந்தப் ப்ரசாரம்.
ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் உள்ள சிறுவர்களும், பெரியோர்களும், சிறிய பெண்களும், பெரிய பெண்டுகளும் எல்லோரும் க்ரந்தத்தில் உள்ள ச்லோகங்களின் அர்த்தமும் தமிழ் ப்ரபந்தங்களின் அர்த்தமும் மனதிற்கு இலேசாகவாவது புரிந்துகொள்ளும்படி ஸம்ஸ்க்ருத ஞானம் அடைய வேண்டும் என்ற உத்தேசத்துடன் எந்த முறைகளில் அந்த ஞானம் ஏற்படும்படி செய்யக்கூடுமோ அந்த முறைகளை விவரமாகச் சொல்லி ஒரு வேண்டுகோள் அச்சிட்டு அநேக இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த ஞானம் ஏற்பட சப்தம் உறுப்போட்டு மனப்பாடம் பண்ண வேண்டும். க்ரந்த எழுத்தும் பழக்கமாக வேண்டும். சப்த புஸ்தகம் வரவழைத்துக்கொள்ள ஸெளகர்யமில்லாதவர்களுக்கு ஸபையிலிருந்தே புஸ்தகம் கொடுப்பதாக உத்தேசித்து சப்த புஸ்தகம் க்ரந்த எழுத்தில் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் நிர்ணய ஸபை கார்யம்.
வருங்கால ராஜ்யத்துக்கு ஆதார தத்வங்களை திட்டம் வகுத்து அந்த திட்டங்களைப்பற்றி பொதுஜனங்களின் அபிப்பிராயத்தை அரசாங்கத்தார் கேட்டிருக்கிறார்கள் மத விஷயங்களில் அரசாங்கம் தலையிடுவதற்கு இடம் கொடுக்கும் சில கோட்பாடுகளுக்கு ஆக்ஷேபம் சொல்லியும், மதஸ்தாபனங்களின் ஸ்வதந்திர உரிமையை நிலை நிறுத்தவேண்டிய அவச்யத்தை எடுத்துக்காட்டியும் சில தீர்மானங்களை ஸபையார் ஸம்மேளனத்தில் நிறைவேற்றி அந்தத் தீர்மானங்களை அரசியல் நிர்ணய ஸபைக்கு தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி ப்ரசாரமும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஸம்பாவனைகள், ப்ரசாரங்கள், ப்ரசுரங்கள் முதலிய ஸபையின் செலவுகளுக்காக ஒவ்வொரு ப்ராஹ்மண குடும்பத்தினின்றும் ரூ 1-0-0 ஒன்று விதம் ப்ரதி வருஷமும் வசூல் செய்யவேண்டும் என்று ஸ்ரீ ஆசார்யாள் ஆக்ஞை. ஸபை அதிகாரம் கொடுத்திருக்கிறவர்களிடத்தில் எல்லா ப்ராஹ்மணர்களும் நன்கொடை கொடுத்து ஸபை ரசீது பெற்றுக்கொள்ளும்படி ப்ரார்த்திக்கப்படுகிறது.
ஸ்ரீமடம் கும்பகோணம். 21-6-1948
வெ.ஸுப்ரஹ்மண்யன்.
கார்யதர்சி

-0-0-0-0-0-0-0

     Home Page