சைவத்தில் 'கஜேந்திர மோக்ஷம்' ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவானைக்கா பல சிறப்புகளை

சைவத்தில் 'கஜேந்திர மோக்ஷம்'

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

திருவானைக்கா பல சிறப்புகளைக் கொண்ட ஷேத்ரம். ஈஸ்வரன், அம்பாள் இருவரின் மகிமைகளையும் கூறும் ஷேத்ரம். ஈஸ்வரன் பஞ்சலிங்கங்களில் இங்கு ஜலத்தில் எழந்தருளியுள்ள லிங்கமாகக்குடி கொண்டுள்ளார். இவரை இங்கு வழிப்பட்ட யானைக்கும்,சிலந்திக்கும்,ஜம்பு எனும் ரிஷிக்கும் மோஷத்தை மிகச் சிறப்பாகச் சொல்வார்கள். ஆதிமூலமே என அழைத்த கஜேந்திரனுக்கு ஸ்ரீமந் நாரயணன் மோக்ஷம் அளித்தார். அதே போல சைவத்தில் கஜேந்திர மோக்ஷம் நடந்த ஷேத்ரம் இது. கஜேந்திரன் ஈஸ்வரனை வழிப்பட்டு முக்தியடைந்த ஸ்தலம். கோயில்களில் யானைமீது தீர்த்தத்தைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள். இங்கு யானையே தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்த ஸ்தலம்.

அதே போல அம்பாளுக்கும் சிறப்பான ஷேத்ரம் இது. ஆதிசங்கரர் பூமிக்குள் இருந்த பத்ரிநாரயணனை வெளிக்கொணர்ந்து பத்ரியிலே பிரதிஷ்டை செய்தார். கொல்லூரிலே அம்பாளுக்கு ஸ்ரீ சக்ரத்தினைத் தாடங்கமாக பிரதிஷ்டை செய்தார்.

எல்லா கோயில்களிலேயும் ஸ்வாமிக்கு முன்னால் அவரவர் வாகனங்கள் இருக்கும். கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு. முருகனுக்கு முன்னால் மயில். பெருமாளுக்கு கருடன். இப்படி அம்பாளுக்கு முன்னால் சிம்மம். திருவானைக்காவில் அம்பாளுக்கு எதிரே விநாயகரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். வேறு எந்தக் கோயிலிலோயும் இதுபோன்ற அமைப்பு கிடையாது. அம்பாள் ஒரு காலத்தில் உக்கிரமாக இருந்ததாகவும் அவளை சாந்தப்படுத்த வேண்டி அவளுடைய பிள்ளை விநாயகரை, நேர் முன்னால் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறுகிறார்கள்.

தாடங்கங்களும் இதே போல உக்கிரசொரூபியாக இருந்த அம்பாளை சாந்தப்படுத்த வேண்டியே ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார் என்பார்கள். எப்பேர்ப்பட்ட தாடங்கம் சௌந்தர்யலஹரியிலே இத்தாடங்கத்தின் மகிமையைப் பற்றிக் சொல்லியிருக்கிறார் ஆச்சாரியார்.

எல்லோரும் தங்கள் கஷ்டம் போகவேண்டி ஏதேனும் செய்ய முயலுவார்கள். தேவர்கள் தங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, எப்போதும் ஆயுசோடு சாவே இல்லாதவர்களாக இருக்க அமிர்தம் சாப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும், அவர்களுடைய அரசன் இந்திரனுக்கும் கஷ்டங்கள் இருந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் கஷ்டங்களைத் தருவதும், ஆயுசைப்பறிப்பதுமான ஒன்றைச் சாப்பிட்டு ஒருவர் பரமசுகத்துடன் இருந்தார்.

அவர் யார் என்றால் பரமேச்வரன். மகா பெரிய விஷத்தைச் சாப்பிட்ட பரமேச்வரன் கண்டத்திலே அம்பாளின் கரஸ்பரிசம் பட்டவுடனேயே அதன் கொடுமை மறைந்து ஈச்வரன் நித்யஸ்வருபியானார். அப்படி ஈச்வரனுக்கே ஆயுசையும், நலத்தையும் தந்ததேவி காதில் அணிந்துள்ள தாடங்கங்கள் என அம்பாளின் தாடங்க மகிமையை ஸெந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் கூறுகிறார். அப்பேர்ப்பட்ட தாடக்ங்களை ஸ்ரீசக்ரங்களாக அணிந்து அருள் பாலிக்கும் இடம் திருவானைக்கா. மகிமை வாய்ந்த இந்த தாடங்கங்களை நம்முடைய சங்கராச்சார்யர்கள். அவ்வப்போது செப்பனிட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்து வருவது வழக்கமாக உள்ளது.

இப்படி ஈஸ்வரன், அம்பாள் மகிமைகளோடு,ரிஷிகளுக்கும், அரசனுக்கும், விலங்குகளுக்கும் மோக்ஷம் கிடைத்த மிக அற்புதமான ஷேத்திரமாக விளங்குகிறது திருவானைக்கா. இங்கு மிகச் சிறப்பாக இப்போது கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள் பெறுமாறு ஆசீர்வதிக்கிறோம்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர