அருளுரை - புராண ரீதியாக கிரஹணங்கள்
சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் என்று கிரஹணங்கள் இரண்டு வகைப்படும். கிரஹணம் ஏற்படுவதற்கான காரணம், தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்து, அமிர்தத்தை எடுத்தார்கள். அப்பொழுது தேவர்கள் மாத்திரம் அமிர்தத்தைப் பருகுவதற்காக உட்கார்ந்திருந்தார்கள். ஒரே ஒரு அசுரன் மாத்திரம் தேவர்கள் கூட்டத்தின் மத்தியில் உட்கார்ந்து விட்டான். அமிர்தத்தைச் சாப்பிடுகிறவர்கள் வெகுகாலம் ஜீவித்திருப்பார்கள் என்பது புராண வரலாறு.
அதன்படி அசுரர்கள் அமிர்தத்தைச் சாப்பிட்டு விட்டால் வெகுநாள் சாகாமல் பலவித துன்பங்களைக் கொடுப்பார்கள் ஆகையால் தேவர்கள் மாத்திரமே அமிர்தத்தைப் பருகுவார்கள் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவினுடைய கட்டளைப்படி உட்கார்ந்திருந்தார்கள். ஸ்ரீ மஹாவிஷ்ணு அமிர்தத்தை எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டே வந்தார். சூரியனுக்கும் - சந்திரனுக்கும் மத்தியில் ஒரு அசுரன்
அமர்ந்திருந்தான். அசுரன், "இரண்டு (சூரிய சந்திர) ஒளிகளுக்கிடையே நாம் அமர்ந்துவிட்டால், நம்மை சரியாக கவனிக்காமல் நமக்கும் பரிமாறிவிடுவார்கள்', என்று உத்தேசம் செய்து உட்கார்ந்திருந்தான். ஆனால் "நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்", என்பதற்கு ஏற்றவாறு, சூரிய - சந்திரனின் ஒளிகளுக்கிடையே உட்கார்ந்திருந்த அசுரனை அந்த ஒளியிலேயே கண்டு விட்டார் ஸ்ரீமஹாவிஷ்ணு, ஆகையால அமிர்தம் பரிமாறிக் கொண்டிருந்த அந்த கரண்டியாலேயே அசுரனின் மீது ஒரு அடிபோட்டார். அதனால் அந்த அசுரனின் தலை, கழுத்து ஒரு பாகமாகவும், அதன் கீழுள்ள உறுப்புகள் மற்றொரு பாகமாகவும் போய்விட்டது. அப்பொழுது இரண்டு பாகங்களாகப் பிரிந்த அந்த அசுரனுடைய வடிவம் ஒரு பிரதிக்ஞை செய்தது. "நம்மைக் காட்டிக் கொடுத்த அந்த சூரிய - சந்திரர்களை நாம் ஒரு பொழுது விழுங்கி விட வேண்டும்" என்று நிச்சயித்தது. அப்படி இரண்டாகப் பிரிந்த பாகங்களில் ஒன்று ராகுவாகவும் - ஒன்று கேதுவாகவும் மாறியது. அமிர்த சம்பந்தம் ஏற்பட்டதினால் அவர்கள் நவகிரஹங்களில் இரு கிரஹங்களுக்கு உள்ள நிலை ராகு - கேதுவிற்கு கிடையாது. ராகு - கேது தவிர மற்ற ஏழு - கிரஹங்களின் பெயரை வைத்துத் தான் ஏழு நாட்களின் பெயர்கள் வருகின்றன. கிரஹணம் பிடிக்கும்போது ராகுசிரஸ்தோதயம் - கேது சிரஸ்தோதயம் என்று கிரஹணத்தைச் சொல்வார்கள். சந்திர கிரஹணம் பௌர்ணமியில் பிடிக்கும். சூரிய கிரஹணம் அமாவாசையில் பிடிக்கும். பௌர்ணமி நிறைந்திருந்தால் அன்று ராகுவோ - கேதுவோ சந்திரனைப் பிடிப்பார்கள். அமாவாசையன்று சந்திரன் இருக்க மாட்டானானதால் ராகுவோ - கேதுவோ சூரியனைப் பிடிப்பார்கள். இந்த ஆண்டு ஜுன் மாதம் நான்காம் தேதி சந்திர கிரஹணம் வருகிறது. இது ராகு சிரஸ்தமாகும். கிரஹண காலத்தில் உணவு உட்கொள்வது, கூடாது. எப்பொழுது கிரஹணம் தொடங்குகிறதோ, அதற்கு மூன்று ஜாமம், அதாவது ஒன்பது மணிநேரம் முன்னதாகவே உணவு உட்கொண்டு விடவேண்டும். குழந்தைகள், வயோதிகர்கள், வியாதியஸ்தர்கள் ஆகியோர்களுக்கு ஆகார நியமம் கிடையாது. கிரஹண காலங்களில் செய்யப்படும் ஸ்னானம், ஜபம், தானம், பூஜை இவைகளுக்கு, சாதாரண நாட்களில் செய்வதால் உண்டாகும் பலனை விட, ஆயிரம் பங்கு கூடுதலாக உண்டாகும்.
சூரிய கிரஹணம் - சந்திர கிரஹணம் ஆகிய எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கிரஹணமும் முறையே அமாவாசை - பௌர்ணமி முடிவில்தான் தோன்றும். பொதுவாக தினந்தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஆனால் கிரஹண காலத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்.