புராணங்கள் காஞ்சி ஸ்ரீ ஜகத்குரு பரமாசார்யர்கள் அருளுரை புராணம் என்றாலே இந்தக் காலத்தில் மிகவும் மட்டமாகத் தோன்றுகிறது. அதைக்காட்டிலும் ஸ்தல புராணம் என்றால் மிகவும் மட்டமாகத் தெரிகிறது. மிகச் சமீப காலத்தில், பொழுது போகாததற்காகச் சிலர் இப்படிக் கட்டி விட்ட கதைகள் என்றுகூட ஆராய்ச்சி பண்ணுகிறவர்களுக்கு அபிப்ராயம். புராணங்களில் பதினெண் புராணங்கள் என்று ஒரு வகை உண்டு. கூர்ம புராணம், ஸ்காந்த புராணம் என்பவை போன்றவை. இவற்றை எல்லாம் கொஞ்சம் பழையவை என்கிற காரணத்தால் ஒப்புக்கொள்வோம். க்ஷேத்திர புராணம், ஸ்தலபுராணம் இல்லை என்றால் கொஞ்சங்கூட மதிப்பில்லை. எனக்கு என்னவோ இதிகாசத்தைக் காட்டிலும் ஸ்தல புராணங்களில் அதிகத் தத்துவம் இருக்கிறது என்று தோன்றுகிறது. புராணங்கள், ஸ்தல புராணங்கள் எல்லாவற்றையும் அந்தக் காலத்தில் ஏட்டுச் சுவடியில்தான் எழுதி வைத்திருக்கிறார்கள். பெரியவர்கள் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக அவற்றை ரட்சித்து வந்தார்கள். வீட்டில் உள்ள சுவடிகளில் உள்ளவற்றை எல்லாம் எழுதிக் கொள்வது. அப்புரம் பழைய சுவடிகளை சப்பரத்தில் வைத்துப் பதினெட்டாம் பெருக்கு அன்றைக்கு காவேரிக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவது என்பது வழக்கம். அப்புறம் அச்சுப் போட்ட புஸ்தகங்கள் வர ஆரம்பித்து விட்டன. க்ரந்த எழுத்தும் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. எழுத்தாணி பிடித்து எழுதுவது என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்படி எல்லாம் ஆனது காரணமாக அநேகமாக எல்லாப் புத்தகங்களையுமே ஆற்றில் இழுத்து விட்டு விட்டார்கள். அங்கங்கே புத்தக சாலைகளில் சேகரித்து வைத்திருக்கும் சுவடிகளிலும் ஸ்தல புராணங்கள் இல்லவே இல்லை. இவர்களும் ஸ்தல புராணத்தைச் சேகரிக்கமல் விட்டுவிட்டார்கள். அவை அடியோடு போய் விட்டன என்றே சொல்லிவிடலாம். எனக்கு என்னவோ ஸ்தல புராணங்களில்தான் அதிகமான சமாச்சாரம், தத்துவம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. கிடைக்கக்கூடிய ஒன்றிரண்டு ஸ்தல புராணங்களை பார்க்கின்றபோது, ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையதாகவும் தெரிகிறது. மற்றப் புராணங்களுக்குக்கூட இது உபகாரம் (சப்ளிமெண்டு) செய்வதாகத் தோன்றுகிறது. ராமேசுவரத்தைப் பற்றி கவனித்தால், ப்ரம்மஹத்தி தோஷம் போவதற்காக ராமர் ஈசுவரனை அந்த இடத்தில் பிரதிஷ்டை பண்ணிப் பூஜை செய்தார் என்று தெரிகிறது. ப்ரம்ம குலத்தில் பிறந்தவனைக் கொன்றால் அது ஒரு தோஷந்தான். ஆனால் அநேக அக்கிரமங்களைப் பண்ணின அவனைக் கொல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. சாதுக்களை ரட்சிக்கத்தான் கொல்லவேண்டி வந்தது என்றாலும், கொன்ற பிறகு அந்தத் தோஷத்துக்கு நிவர்த்தி தேடிக்கொள்வது அவசியம் என்பதைப் பகவான் அந்த இடத்தில் காட்டியிருக்கிறார். பெரிய வீரனாக இருந்தால் அவனை ஸம்ஹாரம் பண்ணினாலும் தோஷம் உண்டு. மகாவீரன் என்றால் உலகம் அவனை மறக்கவே மறக்காது. நெல்சன் மறைந்து விடுவான். நெப்போலியன் போர் மறைவதில்லை. அப்படி மாவீரனாக இருந்த ராவணனை ஸம்ஹாரம் பண்ணின வீரஹத்தி தோஷத்திற்காக ஒர் இடத்தில் ராமர் ஈசுவரப் பிரதிஷ்டை பண்ணிப் பூஜித்தார் என்று இருக்கிறது. அதேமாதிரி சாயாஹத்தி தோஷம் என்று ஒன்று. ஒரு வீரனிடைய உருவத்தை அழிப்பதோடுகூட அவனுடைய நிழல்போல அவனுக்கு இருந்த பேர் புகழ் எல்லாவற்றையும் அழிப்பதைச் சாயாஹத்தி தோஷத்திற்காக, ஒர் இடத்தில் ஈசுவரப் பிரதிஷ்டை பண்ணி ராமர் பூஜித்ததாக இருக்கிறது. இப்படி ஸ்தல புராணங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனதாகவே இருக்கின்றன.
|