ஸ்ரீ தாம்ரபர்ணி மாஹாத்மியம்
- பி.ஆர்.கண்ணன், நவி மும்பை
காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஶ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள் அருளாணைப்படி, ஶ்ரீ தாம்ரபர்ணி புஷ்கர விழா மிகுந்த உற்சாகத்துடன் தாம்ரபர்ணி நதி தீரத்தின் எல்லா தீர்த்தகட்டங்களிலும், க்ஷேத்திரங்களிலும் நிகழும் 2018 அக்டோபர் 12 முதல் 23 வரை, 12 நாட்களுக்குக் கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஶ்ரீநெல்லையப்பர்-காந்திமதி புகழ் க்ஷேத்திரமான திருநெல்வேலி, அதனருகிலுள்ள ஶ்ரீ புடார்ஜுனம் - திருப்புடைமருதூர் புண்ணியஸ்தலங்களில் விஶேஷ விமரிசையாக நடத்த, ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குரு பகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் முதல் 12 நாட்கள் ஶ்ரீதாம்ரபர்ணி நதியில் புஷ்கர காலமாகும்.
ஶ்ரீவேதவியாஸர் அருளிச்செய்த ஶ்ரீ தாம்ரபர்ணி மாஹாத்மியம் என்கிற புராணத்தின் வாயிலாக இந்நதியின் பெருமைகள் நமக்கு மிகத் தெளிவாகவும், விரிவாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன. 64 அத்தியாயங்கள், 6400 ஸ்லோகங்கள் கொண்ட இப்புராணம் ஶ்ரீதாம்ரபர்ணிதேவியின் உத்பவம், பல அருள்லீலைகள், பலதீர்த்தகட்டங்கள், கரைகளில் மிளிரும் எண்ணற்ற சிவ-விஷ்ணு-தேவி க்ஷேத்திரங்களின் மஹிமை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்றது. இந்நதி ஏதோ ஸாதாரண நதியல்ல, ஸாக்ஷாத் ஆதிபராசக்தியின் ஸ்வரூபமேயாகும் என்பதை விளக்குகின்றது. அதுமட்டுமல்லாமல், எல்லா புராணங்களுக்கும் உள்ள முக்கிய குறிக்கோளான தர்ம உபதேசங்களை வியாஸர் ஏராளமாக அருளியிருக்கிறார். நித்திய, நைமித்திக கர்மம், பக்தி, யோகம், ஞானம் எல்லாவற்றையும் விசேஷமான எளிதான முறையிலே கதைகளின் மூலம் அள்ளி வழங்குகிறார். வியாஸர் சுகப்பிரம்ம மஹரிஷிக்கும், ஸூதபௌராணிகருக்கும் உபதேசித்து, பின்னர் ஸூதபௌராணிகர் நைமிசாரண்யத்தில் சௌனகாதி மஹரிஷிகளுக்கு உபதேசித்து நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பொக்கிஷமாகும் இந்நூல். வியாஸர் வாக்கின்படி,
स्मरणात्दर्शनात्ध्यानात्स्नानात्पानादपिध्रुवम्।कर्मविच्छेदिनीसर्वजन्तूनांमोक्षदायिनी॥
ஸ்மரணாத்தர்ஶநாத்த்யாநாத்ஸ்நாநாத்பாநாதபித்ருவம்|கர்மவிச்சேதிநீஸர்வஜந்தூநாம்மோக்ஷதாயிநீ||
"ஶ்ரீதாம்ரபர்ணி நதியின் ஸ்மரணை, தரிசனம், தியானம், ஸ்னானம், பானம் ஆகியவை, எல்லா ஜந்துக்களுக்குமே, எல்லா கர்மவினையினையும் முற்றிலும் அழித்து, நிச்சயமாக மோக்ஷத்தையே கொடுக்கவல்லது."
மலயபர்வதம்
ஶ்ரீ தாம்ரபர்ணி நதி, காவேரியைப்போலவே, அகஸ்திய மாமுனிவரால் தென் பாரத தேசத்துக்குக் கொண்டுவந்து அருளப்பட்டதாகும். ஹிமவானின் தலைநகரமான ஓஷதிப்பிரஸ்தம் என்கிற பட்டிணத்தில் நடைபெற்ற சிவ-பார்வதி விவாகத்திலிருந்து நம் கதை தொடங்குகின்றது. ஸாக்ஷாத் ஆதிபராசக்தியானவள் ஒரு மாலையைப் பார்வதி தேவிக்கு விவாக கட்டத்தில் கொடுக்க, அதைப் பார்வதி சிவனின் கழுத்தில் அணிவிக்க, சிவன் அதைக்கழற்றி, அகஸ்தியமாமுனிவரிடம் தரவே, அத்தருணத்தில் அம்மாலையானது ஒரு ஒப்புயர்வற்ற சுந்தரி கன்னிகையாக, ஸர்வாபரணபூஷிதையாக மாறினாள். தேவர்கள் மிக்க குதூகலத்துடன் அக்கன்னிகைக்குப் பரிசுகள் வழங்கினர். எல்லாதேவர்களின் தேஜஸ் அக்கன்னிகையிடம் புகுந்தது. அகஸ்தியபத்தினி லோபாமுத்திரை ’निधिं लब्ध्वैव निर्धनः’ - தரித்திரன் பொக்கிஷம் அடைந்ததுபோல் சந்தோஷித்தாள். கன்னிகையின் பொலிவைக்கண்ட தேவர்கள், தாம்ரபர்ணி (தாமிரம்போல் பிரகாசிப்பவள்), தாம்ரா, மணிகர்ப்பா (மணிகளைத் தோற்றுவிப்பவள்), பரா (எல்லாவற்றையும் மிஞ்சியவள்) என்றெல்லாம் அன்புடன் அவளை அழைத்தனர். விவாகத்தின்போது, வடதிசையில் எல்லா தேவர்களும், உயிரினங்களும் கூடவே, பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்து, பூமிக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகவே, சிவன் அகஸ்தியரை தன் பத்தினி லோபாமுத்திரை, தாம்ரபர்ணியாகிற கன்னிகை இவர்களுடன் தென்திசை செல்லுமாறு ஆக்ஞாபித்தார். அகஸ்தியருக்கு கல்யாணகோல தரிசனம் அங்கேயே கிடைக்குமாறு அருளினார்.
அகஸ்தியர் கேதாரம், காசி, காஞ்சி, சிதம்பரம் உட்பட பல திவ்விய க்ஷேத்திர தரிசனம் செய்துகொண்டு, இயற்கையழகு பூத்துக்குலுங்கும் மலயபர்வதத்தினை அடைந்தார். அதே சமயம், தும்புரு, பர்வதர் இருவரும் அங்கு வந்து, சிவபெருமானின் ஆக்ஞையைக் கூறினர். அதாவது, மலயபர்வதீஸ்வரர், தன் பூர்வ தபஸ் பலனாக, தாம்ரபர்ணியைப் பெண்ணாகப் பெற்றுள்ளார்; எல்லோருக்கும் அனுக்கிரகிக்கும் புண்ணிய நதியாக அவள் மாறுவாள் என்பதே. அப்போதே, சிவலிங்கத்திலிருந்து வெளிவந்து காட்சியளித்த ஸ்ரீபரமேஸ்வரன், அகஸ்தியரையும், மலயராஜனையும் அனுக்கிரகித்து, அகஸ்தியரிடம் மேலே செய்யவேண்டியவற்றைக் கூறியருளினார். அந்த பிராந்தியம் ’தேவதத்தம்’ என்கிற புகழ் உடையது என்றார்.
அவ்வாறே, அகஸ்திய பகவான், லோபாமுத்திரை, தாம்ரபர்ணி, மலயராஜன், தும்புரு, பர்வதர் ஆகியோருடன் கிளம்பி, திரிகூடமலை வந்துசேர்ந்தார். முதலில் சித்திரசபையில் நடனமாடும் நடராஜரைத் தரிசித்து, பின்னர் திரிகூடேஸ்வரர் ஆலயம் சென்றார். தன்னை அனுமதிக்காத வைஷ்ணவர்களின் கர்வத்தை அடக்க, வைஷ்ணவ வேடம் பூண்டு, உள்ளே சென்று, மூர்த்தியை அமுக்கி சிவலிங்கமாக மாற்றினார். வைஷ்ணவர்களுடன் ஏற்பட்ட தத்துவ விவாதத்தில், ஆதிபராசக்தியே வந்து, நீதிபதியாக இருந்து, அகஸ்தியர் வெற்றிபெற்றார். திரிகூடமலையில்தான், ஆதிபராசக்தி, பிரளயம் முடிந்து, ஸ்ருஷ்டி தொடங்குகையில், சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் கொண்ட மாயையின்மூலம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திரிதேவர்களைத் தோற்றுவித்து, வாஸம் செய்கிறாள், சம்பகதேவி என்னும் துர்க்கையாக. இந்த தேவிதான் முன்னர் விக்ரகத்திலிருந்து வெளிவந்து, உதும்பரன் என்கிற அசுரனை (நிசும்பனின் மாமனை)யும், அவன் சேனையையும் அழித்தாள். சில அசுரர்கள் பூதகணங்களாயினர். தேவி அத்தருணத்தில் சொன்னது:
यथायथाहिधर्मस्यग्लानिर्भवतिभूतले।तथातथानुरूपेणनाशयिष्यामिविप्लवम्॥
யதாயதாஹிதர்மஸ்யக்லாநிர்பவதிபூதலே|ததாததாநுரூபேணநாஶயிஷ்யாமிவிப்லவம்||
"பூமியில் எவ்வாறு தர்மச்சிதைவு ஏற்படுகிறதோ, அவ்வாறு ஸஜ்ஜனங்களுக்கு அனுகூலமாக நான் துன்பத்தை அழிக்கிறேன்" என்று. ஒவ்வொரு யுகத்திலும் தன் மூர்த்தியில் சைதன்யத்தை அளிக்கிறாள் தேவி.
அகஸ்தியர் மறுநாள் தாம்ரபர்ணியை எழுப்பும் ஸுப்ரபாதம் மிக அழகானது.
शिवभक्तिमाये पुण्ये विष्णुभक्तिप्रवाहिनी । ब्रह्मशक्तिरसासि त्वमुत्तिष्ठामृतवाहिनी ॥
अन्नदा वसुदा भूरि पुण्यदा मज्जतां नृणाम् । त्वमेव परमा शक्ति: प्रसीद मलयात्मजे ॥
ஶிவபக்திமாயே புண்யே விஷ்ணுபக்திப்ரவாஹிநீ | ப்ரஹ்மஶக்திரஸாஸி த்வமுத்திஷ்டாம்ருதவாஹிநீ ||
அந்நதா வஸுதா பூரி புண்யதா மஜ்ஜதாம் ந்ருணாம் | த்வமேவ பரமா ஶக்தி: ப்ரஸீத மலயாத்மஜே ||
"அம்ருதம் பெருகும் புண்ணியஸ்வரூபிணியே, நீ சிவபக்தியினில் உண்டாகி, விஷ்ணுபக்தியே பிரவாகமாக, பிரம்மாவின் சக்தியே ரஸமாக உள்ளாய்; எழுந்திரம்மா. ஸ்னானம் செய்பவர்களுக்கு அன்னம், செல்வம், புண்ணியம் இவற்றை வழங்கும் நீ பரம ஆதிசக்தியே ஆவாய். மலயராஜன் மகளே, அனுக்கிரகிப்பாய்" என்று. தாம்ரபர்ணி கன்னிகை எழுந்து வருகையில், அவள் கால் சலங்கை ரத்தினங்கள் சிதறி, ஒரு ரத்தினத்தில் தேவியின் பிரதிபிம்பம் நதியாகுமாறு தேவி பணிக்க, ரத்தினத்தின் பல வர்ணங்கள் கொண்ட சித்திரா நதி, சித்திரா பௌர்ணமியன்று உற்பத்தியாயிற்று. பின்னர் தாம்ரபர்ணி நதியுடன் சேருவது சித்திரா நதி. அங்கிருந்து எல்லோரும் கிளம்பிச் செல்லும்போது, தாம்ரபர்ணி தேவி பல லீலைகளை நிகழ்த்தினாள். பலருக்கு சாபவிமோசனம், விசேஷ அனுக்கிரகம் வழங்கினாள்.
அத்ரி, ஹயக்கிரீவர்
போகும் வழியில் சிவசைலம் என்கிற இடத்தில் அத்ரி மஹரிஷி தரிசித்து, தேவியை ஸ்தோத்திரம் செய்தார். இந்த இடத்தில்தான் மலயராஜன் பூர்வத்தில் கடுந்தபஸ் செய்து சிவதரிசனம் பெற்றிருந்தார். அத்ரி மஹரிஷி சொன்னது:
यदम्बुपानतोमर्त्या: चिरंजीवन्त्यरोगिण: ।यत्तीर्थाप्लुतदेहस्यमोक्षलक्ष्मीकरस्थिता॥
யதம்புபாநதோமர்த்யா: சிரம்ஜீவந்த்யரோகிண: |யத்தீர்த்தாப்லுததேஹஸ்யமோக்ஷலக்ஷ்மீகரஸ்திதா||
"உன் தீர்த்தத்தினை பானம் செய்த மனிதர் ஸர்வரோகங்களிலிருந்தும் விடுபடுவர். ஸ்னானம் செய்தாலோ, மோக்ஷலக்ஷ்மி கையில் உறைவாள்" என்று. நீயே கங்கை, யமுனை, ஸரஸ்வதி என்றார். தேவியானவள் மஹரிஷிக்கு அனுக்கிரகித்து, கடனா (घटना) நதியை தன் ஸங்கல்பத்தினால் பிரவஹிக்குமாறு அருளினாள். இப்பெயரினாலேயே இந்நதி घटयति - எல்லா வாஞ்சைகளையும் செயல்படுத்துபவள் என்பது பொருள். சிவசைலவதி, தாம்ரானுஜா என்கிற பெயர்களும் இந்நதிக்கு உண்டு. பின்னர் தாம்ரபர்ணியுடன் கலக்கும் நதி.
அடுத்து எல்லோரும் ஹயக்ரீவர் ரிஷியாக வாசம் செய்யும் குகைக்குச் சென்றனர். பரமசந்தோஷத்தை அடைந்த அவர் தாம்ரபர்ணி தேவியை வெகுவாக ஸ்தோத்திரம் செய்தார்.
अस्याः प्रतिष्ठितो मूर्ध्नि शंकरो लोक शंकरः । हृदये वर्तते ब्रह्मा ललाटे गरुडध्वजः ॥
एनामाश्रित्यतीर्थानिलभन्तेतीर्थतांपुन: ॥
सर्वेदेवाश्चमन्त्राश्चगायत्र्यासाकमत्रहि।अनयाधार्यतेलोकंपाल्यतेपापगह्वरात् ||
அஸ்யாஃ ப்ரதிஷ்டிதோ மூர்த்நி ஶம்கரோ லோக ஶம்கரஃ | ஹ்ருதயே வர்ததே ப்ரஹ்மா லலாடே கருடத்வஜஃ ||
ஏநாமாஶ்ரித்யதீர்த்தாநிலபந்தேதீர்த்ததாம்புந: ||
ஸர்வேதேவாஶ்சமந்த்ராஶ்சகாயத்ர்யாஸாகமத்ரஹி|அநயாதார்யதேலோகம்பால்யதேபாபகஹ்வராத் ||
"இத்தேவியின் சிரஸில் உலகிற்கெல்லாம் மங்களங்களை வழங்கும் ஸாக்ஷாத் பரமேஸ்வரன் வீற்றிருக்கிறார். ஹ்ருதயத்தில் பிரம்மாவும், நெற்றியில் விஷ்ணுவும் உல்ளனர். இத்தேவியினை அண்டி எல்லா தீர்த்தங்களும் புண்ணியதீர்த்தத்தன்மையை மறுபடியும் அடைகின்றனர். இவளிடம் எல்லா தேவர்களும், காயத்திரி உள்பட எல்லா மந்திரங்களும் உறைகின்றனர். இத்தேவியினால் உலகம் தாங்கப்படுகிறது; பாபங்களிலிருந்து காக்கப்படுகிறது" என்று. ஹயக்ரீவரும் அகஸ்தியர் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு மேலே சென்றார்.
ஶ்ரீபுரம்
விஸ்வகர்மா (தேவத்தச்சன்) இப்போது வந்து, சிவ ஆக்ஞைப்படி, அகஸ்தியருக்காக மலய மலையின் நான்கு மிக உயர்ந்த மலைச்சிகரங்களின் நடுவில் ’குப்திச்ருங்கி’ என்ற இடத்தில் ஒரு விசேஷ ஆஸ்ரமம் நிர்மாணம் செய்தார். சிவபெருமானாலேயே ’பிரணவாலயம்’ என்று பிரசம்ஸை செய்யப்பட்ட ஸ்தலம் இது. எல்லோரும் அருகிலுள்ள ஶ்ரீபுரம் (தற்போதைய ஆழ்வார் திருநகரி) சென்றனர். கபிலரும், நாரதரும் வந்துசேர்ந்தனர். ஶ்ரீபுரத்தில் ஸாக்ஷாத் ஆதிபராசக்தி - ராஜராஜேஸ்வரி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியோர் நான்கு கால்களாக விளங்கும் கட்டிலில், ஸதாசிவனாகிய படுக்கையில், ஸதாசிவன் மடியினில் கொலு வீற்றிருக்கிறாள். இஷா (இச்சாசக்தி), ஊர்ஜா (கிரியாசக்தி) தடாகங்களைத் தரிசித்து, உத்தர, தக்ஷிண, பூர்வ, பச்சிம ஆம்னாய (ஆம்னாயம் வேதத்தைக் குறிக்கும்) தடாகங்களில் அகஸ்தியாதியர் ஸ்னானம் செய்தனர். தங்கமயமான வ்ருக்ஷங்கள், மணிமயமான படிக்கட்டுகள், வண்டுகளின் ரீங்காரம், பக்ஷிகளின் அரவம், எங்கும் கண்கொள்ளாக் காட்சி. அம்பாளின் பவனத்தில் உள்ளே சென்று தரிசித்து, ஸ்தோத்திரம் செய்தனர்.
यत: प्रवृत्तिर्जगतां यत्साक्षित्वे विवर्तते । येन विश्वमिदं व्याप्तं यत् प्राप्य निवर्तते ॥
मनो वच: तथा बुद्धि: विषया न स्पृशन्ति यत् । तत् ब्रह्म परमं तेज: परमानन्दनिर्भरम् ॥
யத: ப்ரவ்ருத்திர் ஜகதாம் யத்ஸாக்ஷித்வே விவர்ததே | யேந விஶ்வமிதம் வ்யாப்தம் யத் ப்ராப்ய நிவர்ததே ||
மநோ வச: ததா புத்தி: விஷயா ந ஸ்ப்ருஶந்தி யத் | தத் ப்ரஹ்ம பரமம் தேஜ: பரமானந்தநிர்பரம் ||
"தேவியிடமிருந்து ஜகத் உன்டாகின்றது; தேவியின் ஸாந்நித்தியத்தில் நிலைபெறுகிறது; தேவியினால் பிரம்மாண்டம் முழுதும் வ்யாபிக்கப்பட்டுள்ளது. தேவியை அடைந்து ஜகத் மறைகிறது. தேவியை மனம், வாக்கு, புத்தி, விஷயங்கள் தொடுவதில்லை. அந்த தேவியே பரப் பிரம்மம்; பரமமான ஒளி; பரமானந்தத்தின் நிலைகளன்" என்று.
தாம்ரபர்ணி தேவிக்கு பல புண்ணிய நதிகளின் நீரினால் ஆதிபராசக்தியே அபிஷேகம் செய்தாள். சிவபெருமான், பார்வதி, விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் எல்லோரும் அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றனர். ஸமுத்திரராஜனும் வந்திருந்தார். அவருடன் தாம்ரபர்ணி தேவிக்கு கோலாகலமாக விவாகம் செய்வித்தாள் பராசக்தி. இதுதான் தாம்ரபர்ணி நதிரூபம் எடுக்கும் தருணம்.
வைசாக பௌர்ணமி, விசாக நக்ஷத்திர நன்னாளில் தாம்ரபர்ணி தேவி, நதிரூபமெடுத்து எல்லோர் ஆசியுடனும், பேரிறைச்சலுடன் கிளம்பினாள். கூடவே, அகஸ்தியாதியர் ஒரு திவ்விய விமானத்தில் நதியின் போக்கிலேயே புறப்பட்டனர். பகீரதன் ரதத்திற்குப்பின்னால், கங்கை எவ்வாறு சென்றாளோ, அவ்வாறே தாம்ரபர்ணியும் அகஸ்தியர் விமானத்தைத் தொடர்ந்து சென்றாள். தாம்ரபர்ணியின் விரைந்த, மந்தமான, பலவித போக்கை கவியாகிய வ்யாஸர் மிக அழகாக வர்ணிக்கிறார். நதியானது சில இடங்களில் யானை போலவும், வேறு இடங்களில் பாம்பு போலவும், மேகம் போலவும், விமானம் போலவும் தோற்றமளிப்பதாகச் சொல்கிறார். வியாஸ பகவான் பல நதிதீர தீர்த்த கட்டங்கள், தேவி-சிவ-விஷ்ணுக்ஷேத்திரங்கள் ஆகியவற்றை பல லீலைகள், அனுக்கிரகங்கள், சாபவிமோசனங்கள் இவைகளுடன் வெகுவிஸ்தாரமாக வர்ணிக்கிறார். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், எல்லோரும் பெரும்பயன் அடைவதை பல ஸ்வாரஸ்யமான கதைகளின் மூலம் எடுத்துக் காட்டுகிறார். வியாஸர் சொல்வது:
ब्रह्माण्डोदरसंस्थानि तीर्थानि विविधान्यपि । ताम्रातीर्थत्रयैकस्य कलां नार्हन्ति षोडशीम् ॥
धर्मद्रवा भगवती ताम्रा मलयनन्दिनी । परापरामृतस्यन्दा तेजिष्ठा कर्मनाशिनी ॥
मुक्तिमुद्रा रुद्रकला कलिकल्मषनाशिनी । नारायणी ब्रह्मनादा मालेयी मङ्गलालया ॥
मरुद्वत्यम्बरवती मणिमाता महोदया । तापघ्नी निष्कलानन्दा त्रयी त्रिपथगात्मिका ॥
चतुर्विंशति नामानि पुण्यान्येतानि भूपते । ये पठन्ति जना भक्त्या तेषां मुक्ति: करे स्थिता ॥
ப்ரஹ்மாண்டோதரஸம்ஸ்தாநி தீர்த்தாநி விவிதாந்யபி | தாம்ராதீர்த்தத்ரயைகஸ்ய கலாம் நார்ஹந்தி ஷோடஶீம் ||
தர்மத்ரவா பகவதீ தாம்ரா மலயநந்திநீ | பராபராம்ருதஸ்யந்தா தேஜிஷ்டா கர்மநாஶிநீ ||
முக்திமுத்ரா ருத்ரகலா கலிகல்மஷநாஶிநீ | நாராயணீ ப்ரஹ்மநாதா மாலேயீ மங்கலாலயா ||
மருத்வத்யம்பரவதீ மணிமாதா மஹோதயா | தாபக்நீ நிஷ்கலாநந்தா த்ரயீ த்ரிபதகாத்மிகா ||
சதுர்விம்ஶதி நாமாநி புண்யாந்யேதாநி பூபதே | யே படந்தி ஜநா பக்த்யா தேஷாம் முக்தி: கரே ஸ்திதா ||
"பிரம்மாண்டத்தில் இருக்கும் பல புன்ணிய தீர்த்தங்களும் தாம்ரபர்ணியின் மூன்றில் ஒன்றை எடுத்து, பின் அதன் பதினாறில் ஒரு பாகத்திற்குக்கூட ஈடாகாது. பின்வரும் 24 புண்ணிய நாமங்களைப் பக்தியுடன் படிப்பவருக்கு மோக்ஷம் கைத்தலத்திலுள்ளது.
தர்மத்ரவா, பகவதி, தாம்ரா, மலயநந்தினி, பராபரா, அம்ருதஸ்யந்தா, தேஜிஷ்டா, கர்மநாசினி, முக்திமுத்ரா, ருத்ரகலா, கலிகல்மஷநாசினி, நாராயணி, பிரம்மநாதா, மாலேயி, மங்களாலயா, மருத்வதி, அம்பரவதி, மணிமாதா, மகோதயா, தாபக்னீ, நிஷ்கலா, நந்தா, த்ரயீ, த்ரிபதகாத்மிகா" என்று.
சிவக்ஷேத்திரங்கள்
தாம்ரபர்ணி நதி தீரத்தில் அமைந்துள்ள பல சிவ க்ஷேத்ரங்களுள் ஸ்ரேஷ்டமானது திருநெல்வேலி. இதனை பிரம்மவ்ருத்தபுரி என்று புராணம் வர்ணிக்கிறது. வேணுவனத்திலுள்ள இந்த ஸ்தலத்தை ’பரானுபூதி’ என்று தேவர்களே கொண்டாடுகிறார்கள். ஸாக்ஷாத் ஶ்ரீதேவியே ஒரு பக்தைக்கு கம்பா நதி சூழ்ந்த காஞ்சிபுரத்தை இங்கு காட்டியதால், இதனை ’தக்ஷிண காஞ்சி’ என்றும் சொல்வர்.
अत्रैव दर्शयामास काञ्चीं कम्पापरिष्कृताम् । अत एव पुरीमेनां काञ्चिमाहुर्हि दक्षिणाम् ॥
அத்ரைவ தர்ஶயாமாஸ காஞ்சீம் கம்பாபரிஷ்க்ருதாம் | அத ஏவ புரீமேநாம் காஞ்சிமாஹுர்ஹி தக்ஷிணாம் ||
பரமேஸ்வரன், பாண்டிய ராஜாவாக, சுந்தர பாண்டியன் என்கிற பெயரில் மதுரையில் ஆட்சி செய்தபோது, இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாதானங்கள் செய்த பெருமை இதற்கு உண்டு. அம்பாள் 32 தர்மங்கள் செய்த இடம். சிவன் நெற்கதிர்களைக்காக்கத் தானே வேலியாக இருந்ததால் இது ’திருநெல்வேலி’ ஆயிற்று. சிவன் அதனால் ’शालिशङ्करः’ என்றும், இந்நகரம் ’शालिवाटिपुरी’ என்றும் பெயர் பெற்றன. ஶ்ரீநடராஜர் ஐந்து சபைகளில் ஒன்றான ’தாம்ர சபை’யில் நடனமாடும் ஸ்தலம். சிவனே சொல்கிறார்:
एतत् हि परमम् क्षेत्रं मामकं ब्रह्मसंज्ञकम् ॥ दर्शनात् एव जन्तूनां भोगमोक्षैकसाधनम् ।
क्षिप्तपुष्पवतीतीर्थं स्वर्णपुष्करिणीपय: । ज्योतिर्लिङ्गार्चनं चैव मद्रूपस्य च दर्शनम् ॥
कान्तिमत्या: पदद्वन्द्वे नमस्या पुरुषोत्तमे । एतानि मुक्तिलोकस्य साक्षात् सोपान पद्धति: ॥
ஏதத் ஹி பரமம் க்ஷேத்ரம் மாமகம் ப்ரஹ்மஸம்ஜ்ஞகம் || தர்ஶநாத் ஏவ ஜந்தூநாம் போகமோக்ஷைகஸாதநம் |
க்ஷிப்தபுஷ்பவதீதீர்த்தம் ஸ்வர்ணபுஷ்கரிணீபய: | ஜ்யோதிர்லிங்கார்சநம் சைவ மத்ரூபஸ்ய ச தர்ஶநம் ||
காந்திமத்யா: பதத்வந்த்வே நமஸ்யா புருஷோத்தமே | ஏதாநி முக்திலோகஸ்ய ஸாக்ஷாத் ஸோபாந பத்ததி: ||
"இந்த என்னுடைய பிரம்மம் என்பதான பரம க்ஷேத்ரம், தரிசனமாத்திரத்திலேயே ஸர்வ உயிரினங்களுக்கும் போகம், மோக்ஷம் இரண்டையும் தரக்கூடிய ஒரே ஸாதனம். க்ஷிப்தபுஷ்பவதி (தற்போது சிந்துபூந்துறை), ஸ்வர்ணபுஷ்கரிணீ (பொற்றாமரை) தீர்த்தங்களில் தாம்ரபர்ணியில் ஸ்னானமும், பானமும்,ஜ்யோதிர்லிங்கத்தில் (நெல்லையப்பர்) என் ரூப தரிசனம், பூஜையும் செய்து, விஷ்ணு உபாஸிக்கும் காந்திமதியின் பாதமிரண்டையும் வணங்கினால், இவையே முக்தி உலகிற்கு நேரான படிக்கட்டுகளாகும்" என்று.
அகஸ்தியாதியர் இந்கு ஸ்னானம், பூஜை செய்து, பின்னர் சிவாக்ஞைப்படி, பக்கத்திலுள்ள கௌண்டீரவனத்தில் புடார்ஜுன க்ஷேத்ரத்தினை அடைந்து (தற்போது திருப்புடைமருதூர்) மருதமரப் பொந்தில் அத்புதமான சிவலிங்க தரிசனம் செய்தனர். வடக்கே ஶ்ரீசைலத்தில், மல்லிகார்ஜுனராகவும், இடையில் தஞ்சாவூர் ஜில்லாவில் திருவிடைமருதூரில் (மத்தியார்ஜுனத்தில்) மஹாலிங்கேஸ்வரராகவும் காட்சியளிக்கும் ஸ்ரீபரமேஸ்வரன், இங்கு தெற்கே, புடார்ஜுனராக தர்சனம் தருகிறார். கோமதி அம்மனுடன் சிவன் பிரகாசிக்கும் இந்த ஸ்தலத்தில் பல தீர்த்தங்கள் தாம்ரபர்ணி நதியில் அமைந்துள்ளன. சிவனாலேயே காசிக்கு சமமான க்ஷேத்ரம் என்று புகழப்பட்ட ஸ்தலம் இது. திருநெல்வேலியிலும், இங்கும் தாம்ரபர்ணி நதி உத்தர வாஹினியாக (வடக்கு நோக்கி) பிரவஹிக்கிறாள். முன்னர் தேவேந்திரன், த்வஷ்டா ப்ரஜாபதியின் புத்திரன், தேவபுரோஹிதரான விஸ்வரூபரை வதம் செய்து அடைந்த பிரம்மஹத்தி தோஷத்தினை இந்கு வந்து சிவனை உபாஸித்து, கௌதமதீர்த்தத்தில் ஸ்னானம் செய்து நிவர்த்தி செய்துகொண்டார். அகஸ்தியருக்கு இப்போது லிங்கத்திலிருந்து சிவன் வெளிவந்து அர்த்தநாரீஸ்வரராக தரிசனம் தந்து அனுக்ரகித்தார்.
அகஸ்தியர் குப்திசிருங்கி ஆஸ்ரமத்தில் சென்று வசிக்கையில், பக்கத்தில் மூர்த்தீகரித்து இருந்த தாம்ரபர்ணி தேவியின் முகத்தில் ஒரு சமயம் கரும் புள்ளிகள் காலையில் தோன்றுவதும், மாலையில் மறைவதுமாக இருந்தது கண்டு அவள் மிகவும் வருந்தவே, அகஸ்திய பகவான் சொன்னார்: பஞ்சமாபாதகங்கள் செய்தோர் உன் தீர்த்தத்தில் ஸ்னானம் செய்வதால் இது ஏற்பட்டுள்ளது. பக்கத்திலுள்ள இந்த்ரகிலம் என்கிற சிவக்ஷேத்ரத்தில் சிவ-பார்வதியை உபாஸிக்கும் முறையைக் கூறியருளினார் முனிவர். மார்கழி மாதத்தில் விரதமிருந்து, தான் உபதேசித்த விதானப்படி நதி ஸ்னானம் செய்து, சிவ-பார்வதி உபாஸனை செய்து, ஹவிஸ் மாத்திரம் ஆகாரமாகக் கொண்டு, கபிலா பசு தானம் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்யுமாறு பணித்தார். ஐந்து நாள் பூஜையானவுடனேயே, சிவன் தோன்றி எப்போதுமே பாபங்கள் ஒட்டாதவாறு அனுக்கிரகித்தார். இந்த ஸ்தலம் ’பாபவிநாசம்’ என்கிற அழகான பெயரைப் பெற்றது. (நவ கைலாஸம் என்று புகழ்பெற்ற ஒன்பது சிவஸ்தலங்களுள் இது ஒன்று.) இந்திரகிலம் என்ற பெயர் ஏற்கெனவே வந்த விவரம்: தேவேந்திரன், வ்ருத்ராஸுரனை வதம் செய்ய எண்ணி, விஷ்ணுவின் ஆக்ஞையால், ததீசி என்கிற மஹரிஷியை அணுகி, அவருடைய முதுகெலும்பினைப் பெற்று, விஸ்வகர்மா மூலமாக வஜ்ராயுதத்தினைச் செய்து முடித்தார். விஸ்வகர்மா அந்த வஜ்ராயுதத்தை பூமியில் வைக்க, பூமி அதன் பாரம் தாங்கமுடியாமல், வெகுவாக நடுங்கவே, விஷ்ணுவும், இந்திரனும் 16 மாமலைகளில், ததீசி மஹரிஷியின் மற்ற எலும்புகளைக்கொண்டே, ஆணிகளை அறைந்து பூமியை நிலைப்படுத்தினார். அந்த 16 மலைகளில் ஒன்று மலயபர்வதம். மற்றவை மேரு, ஹிமாலயம், விந்தியம், மந்தரம், மஹேந்திரம் முதலியன. இந்த 16 இடங்களுமே பெரிய புண்ணிய க்ஷேத்திரங்களாகும். இவை இந்திரகிலம் (இந்திரன் அடித்த ஆணி) என்று பெயர் பெற்றன. வஜ்ராயுதத்திற்கு மிகுந்த சக்தியை வ்ருத்திரவதத்தின் பொருட்டு பகவான் அருளியதனால், பூமியே நடுங்குமளவிற்கு பாரம் அதிகமாயிற்று என்று கொள்ளவேண்டும். இப்போது சிவனின் அனுக்ரகத்தினால் மலயபர்வத இந்திரகிலம் பாபவிநாச ஸ்தலமாகவும் ஆயிற்று. இங்கும் தாம்ரபர்ணி உத்தரவாஹினியாகும். சிவன் தாம்ரபர்ணிக்கு செய்த அனுக்கிரகம்:.
त्वन्नामकीर्तनात्ध्यानात्स्पर्शनादपिमज्जनात्।ब्रह्महत्यादय: पापा: भस्मीभूताभवन्तुच॥
"உன் நாம கீர்த்தனம், தியானம், ஸ்பரிசம், ஸ்னானம் இவற்றால், பிரம்மஹத்தியாதி பாபங்கள் கூட பொசுங்கிவிடும்."
ஸ்ரீபரமேஸ்வரன் சுந்தர பாண்டியனாக, தடாதகை (மீனாக்ஷி) தேவியுடன் மதுரையில் ஆட்சி செய்கையில், அவர்களுக்கு ஐந்து புத்திரர்கள் இருந்தனர். மூத்த புத்திரன் உக்ரஸ்ரீபலதி என்பவர் ஸாக்ஷாத் ஸுப்ரமணிய ஸ்வாமியே ஆவார். அவர் உக்ரபாண்டியன் என்கிற பெயரில் மேருமலையின் தென் பாகம் முழுவதையும் ஆண்டுவந்தார். அவருடைய ராஜதானி தாம்ரபர்ணி தீரத்திலுள்ள மணலூர்புரமாகும். நாரதர் சொல்லின்பேரில், இந்திரன் தேரில் மானஸரோவரின் வடக்கே சென்று, தாரகாசுரன் பேரனான குண்டோதரன் என்ற அசுரனை வதைத்த பெருமை கொண்டவர். ஒருநாள் ராஜஸபையில் ஆகாயத்திலிருந்து மூன்று சிவலிங்கங்கள், ரத்தின மழை ஆகியவை கீழே விழ, ஆகாசவாணி அந்த லிங்கங்களை நல்ல பிரகாசமான ஜ்யோதியானது எப்பொழுதும் நிரந்தரமாக ஒளிவிடக்கூடிய இடத்தில் ஸ்தாபிக்குமாறு பணித்தது. ஸனாதன ரிஷி அப்போது ஆங்கு வந்து, தாம்ரபர்ணி தீரத்திலுள்ள ஜ்யோதிர்வனம் என்ற இடமே உகந்தது என்று கூறி, அவ்விடத்தில் ஸ்தாபிக்குமாறு கூறினார். ஜ்யோதிர்வனத்தின் பெருமைகளை விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அங்குதான் தக்ஷயக்ஞ விநாசத்தின் போது கண்பார்வை இழந்த பகன் என்கிற தேவதை கண்ணைத் திரும்பப் பெற்றது, கும்பாடகன் என்ற ராஜகுமாரன் மாத்ருஹத்தி தோஷத்தினை நிவிருத்தி செய்துகொண்டது போன்ற பல விருத்தாந்தங்களைக் கூறியருளினார். ஸ்ரீபலதியும் அவருடைய கூற்றுப்படி, ஜ்யோதிர்வனத்தில் சிவலிங்க ப்ரதிஷ்டை செய்தார். அப்போது லிங்கத்திலிருந்து ஜ்யோதி வெளிவந்து, ஸ்ரீபலதி அந்த ஜ்யோதியில் புகுந்து, மதுரையைக் கண்டு, பிதாவான ஸ்ரீசுந்தரபாண்டியனுடைய உபதேசத்தைப் பெற்றார். ஜ்யோதிர்வனத்தில் ஒரு நகரையும் நிர்மாணம் செய்தார். அவருடைய புத்திரர்கள் பாக்கியிருந்த இரண்டு சிவலிங்கங்களையும் அங்கேயே ஸ்தாபித்தனர். தாம்ரபர்ணி கரையில் இவ்விடத்தில் பல தீர்த்தங்களையும், அவற்றின் பெருமைகளையும் வியாஸ பகவான் விவரித்துள்ளார்.
சந்திரன் ஒருசமயம் தக்ஷனுடைய சாபத்திற்கு ஆளாகி க்ஷயரோகத்தினால் மிகவும் வருந்தியபோது, பரத்வாஜ மஹரிஷியின் மந்திரோபதேசம் பெற்று, மூன்று வருஷம் ஹிமாசலத்தில் தபஸ் செய்தார். கங்கா தேவி பிரத்தியக்ஷமாகி தாம்ரபர்ணி நதிக்குச் செல்லுமாறு கூறினார். அவ்வாறே சந்திரன் தாம்ரபர்ணி நதிக்கு வந்து, சிலாத ரிஷியின் ஆஸ்ரமம் அடைந்தார். சிலாதரிஷி, தன் மாதா கோபத்தினால் புத்திரப்ராப்தியில்லை என்று சாபம் கொடுத்தும், தன் பத்தினி தாம்ரபர்ணி ஸ்னான மஹிமையால் புத்திர ப்ராப்தி அடைந்த விவரம் கூறினார். அப்புத்திரன் ஸாக்ஷாத் நந்திகேசராக உயர்ந்தார். சிலாதரிஷியின் ஆலோசனைப்படி சந்திரன் ரதஸப்தமியன்று 27 பத்தினிகளுடன் ஸ்னானம் செய்தார். சிவன், பார்வதி, விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் ஸஹிதம் வந்து, சந்திரனுக்கு சாப நிவ்ருத்தியாகி, புகழ், ஞானம், ஒஷதிகளின் தலைவன் என்ற பட்டம் எல்லாம் கிடைக்குமாறு அருளினார். சந்திரன் பெருமையை ஸ்ரீமத்பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு விளக்குகிறார்:
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा । पुष्णामि चौषधीः सर्वा सोमो भूत्वा रसात्मकः ॥
காமாவிஶ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா | புஷ்ணாமி சௌஷதீஃ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மகஃ ||
"பூமியில் பிரவேசித்து எல்லா உயிர்களையும் நான் தரிக்கிறேன். ரஸ வடிவான சந்திரனாக ஆகி நான் ஒஷதிகளை (தானியங்களை) சத்துள்ளதாக ஆக்குகிறேன்"என்று. சிவன் அனுக்ரகத்தின்படி, சுக்லபக்ஷத்தில் தேவர்கள் சந்திரகலையிலிருந்து அம்ருதம் புசிப்பர்; பித்ருக்கள் கிருஷ்ணபக்ஷத்தில் அம்ருதம் பருகுவர். சிவன், கங்கை முதலிய நதிகளுடன் இங்கேயே வசிப்பேன் என்று அருளினார். சந்திரன் ஸோமேஸ்வர லிங்கம் பிரதிஷ்டை செய்து உபாஸித்தார். தீர்த்தம் ஸோமதீர்த்தம் என்று பெயர் பெற்றது.
கேகய தேசத்தில் பீமதன்வா என்ற ராஜா பல யாகங்கள் இயற்றியும் புத்திரபாக்கியமில்லாமல் வருந்தவே, அகஸ்தியர் பூர்வஜன்மாவில் அவர் இழைத்திருந்த பாவத்தினை அவருக்கு அறிவுறுத்தினார். பூர்வத்தில் சோழராஜா தனகேதுவின் மரணத்திற்குப்பின் அவருடைய புத்திரர்கள் தீமான், க்ரது இருவரும் சேர்ந்து ப்ரத்யாப்திக (ஆண்டுதோறும் செய்யவேண்டிய) ஸ்ராத்தம் செய்தனர். பாகப்பிரிவினை ஏற்பட்டு, ஸகோதரர்கள் தனித்தனியாக வாழ்கை நடத்துகையில், சாஸ்திரப்பிரகாரம் ஸ்ராத்தம் தனித்தனியாகத்தான் செய்யவேண்டும் என்ற நியதியை கருமித்தனத்தினால் மீறி, இளையவனான க்ரது அண்ணனான தீமானுடன் சேர்ந்தே ஸ்ராத்தம் செய்தான். இருவரும் யுத்தத்தில் மடிந்தனர். தீமானின் விமானம் தடையின்றி வீரஸ்வர்க்கம் சென்றது. க்ரதுவின் விமானம் வழியில் நின்றது. நாரதர் காரணம் பித்ருஸ்ராத்தம் சரிவரச் செய்யாததே என்று கூறினார். அடுத்த ஜன்மாவில் க்ரது பீமதன்வாவாகப் பிறந்து, அகஸ்தியர் உபதேசத்தின்படி, மலயபர்வதம் சென்று, தாம்ரபர்ணியில் ராமதீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, ஸ்ராத்தம், தானங்கள் எல்லாம் நன்றாக நிகழ்த்தி பெரும்பயனடைந்தார். ஆகாசவாணியின்படியே, பாபநிவ்ருத்தியாகி, சூரியனைப்போல் பிரகாசமடைந்து, ஐந்து புத்திர ரத்தினங்களைப் பெற்று, 5000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் செய்து, ஹிமாசலத்தில் ஜீவன்முக்தராகவே விளங்கினார். ராமதீர்த்தத்தின் விசேஷம் என்னவென்றால், ராமர் ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரம் செய்தபோது, ஸ்ரீபரமேஸ்வரன் பிரத்யக்ஷமாகி, தாம்ரபர்ணியைச் சேர்ந்த ஜடாயுதீர்த்தம், ராமதீர்த்தம், சிவதீர்த்தம் இவற்றில் ஸ்னானம் செய்பவருக்கு ஸகல பாப நிவ்ருத்தியும், இஹலோக புக்தி, பரலோக முக்தி எல்லாம் கிடைக்கும் என்று அருளியிருந்தார்.
விஷ்ணுக்ஷேத்ரங்கள்
தாம்ரபர்ணி நதி தீரத்தில் அமைந்துள்ள பல விஷ்ணு க்ஷேத்ரங்களுள் ஸ்ரேஷ்டமானது நாதாம்புஜம் என்பதே (தற்போதைய சேரன்மாதேவி). ஒரு சமயம் வ்யாஸ பகவான் ப்ரம்மலோகம் சென்று, பிரம்மாவிடம் மோக்ஷத்திற்கான வழியை உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார். பிரம்மா சொன்னது: ஹரி உபாஸனையே மார்க்கம். ஹரி க்ஷேத்ரங்கள் பூலோகத்தில் முக்கியமாக 40 உள்ளன. அவற்றில் 10 க்ஷேத்திரங்கள் பாரததேசத்திற்கு வெளியில் உள்ளன; அவையெல்லாம் சுகஸ்தானங்கள். பாரதத்திலிருப்பவற்றில் 20 க்ஷேத்ரங்கள் கர்மஸ்தானங்கள்; ரஜஸ் சார்ந்தவை; அஷ்டமகாசித்திகளை அருளுபவை. மீதமுள்ள 10 க்ஷேத்ரங்களே ஞானக்ஷேத்ரங்கள்; ஸத்வம் சார்ந்தவை. அவையாவன: காசி, பூரி, ஸ்ரீரங்கம், கமலாபுரம், பதரி, வராகம், தனுஷ்கோடி, பிரம்மநாபம், ஸஹ்யாமலகம் (காவிரி நதியின் உத்பத்தி ஸ்தானம்; ஸஹ்யமலையிலுல்ள நெல்லி மரம்); நாதாம்புஜம்.
இவற்றுள்ளும் நாதாம்புஜம் ஸௌலப்யம் மிகுந்தது; தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதுபோல் ஞானம், மோக்ஷம் அருளுவது. ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரம்மா இங்கு 1000 வருஷம் தபஸ் செய்தார், ஸ்ருஷ்டி சக்தியை அடைய. அப்போது ஒரு பெரிய ஜ்யோதிப்பிழம்பு காட்சியளித்தது. மாபெரும் சப்தம் கேட்டது. ப்ரணவஸ்வரூபத்தின் நடுவில் 8 இதழ் தங்கக் கமலம், அதிலிருந்து ஹம்ஸபக்ஷி, ஸத்தியமே தங்க, வெள்ளி இறக்கைகளாக. எல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் தரிசனம். அதன் மேல் விஷ்ணு தரிசனமளித்தார். ஓங்கார நாதம், அம்புஜம் சேர்ந்து இந்த க்ஷேத்ரம் நாதாம்புஜமாயிற்று. அம்புஜம் (தாமரை) ஸ்தூலம்; நாதம் (ஜ்யோதி) ஸூக்ஷ்மம். ஸூக்ஷ்ம நாதத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் உண்டாவதை எடுத்துக் காட்டுவது. விஷ்ணுவின் அனுக்ரகத்தினால் பிரம்மா ஸ்ருஷ்டி சக்தியைப் பெற்றார்.
வ்யாஸர் நாதாம்புஜ க்ஷேத்ரத்திற்கு வந்தார். வழியில் ஹிமாசலத்தில் கங்கை முதலிய நதி தேவதைகள் சரீரத்தில் அதீதமான ரணங்களுடன் செல்வதைப் பார்த்தார். அவர்களும் தாங்கள் பக்தர்கள் மூலம் சேர்ந்த பாபத்தினைப் போக்கிக்கொள்ள நாதாம்புஜம் சென்றுகொண்டிருந்ததாகக் கூறினர். வ்யாஸரும் அவர்களுடன் நாதாம்புஜ தீர்த்தத்தில் தாம்ரபர்ணி ஸ்னானம் செய்து ஜ்யோதி தரிசனம் பெற்றார். தாம்ரபர்ணியை மிக அழகாக வ்யாஸர் ஸ்தோத்திரம் செய்தார்.
नमोऽस्तु तीर्थराजाय हरिपादाब्जभूतये । त्वदम्भसाहमात्मानं क्षालयामि प्रसीद मे ॥
महामङ्गलदे मात: मलयाद्रिसमुद्भवे । दातुमर्हसि मे तीर्थं मज्जनात् मलिनापहम् ॥
माया मलयजा पुण्या ताम्रा मुक्ताफलप्रसू: । गौरी मरुद्वृधा गङ्गा शिवचूडा शिवोद्भवा ॥
सर्वतीर्थेडिता सत्या सर्वपापप्रणाशिनी । ज्ञानप्रदीपिका नन्दा हरिसायुज्यदायिनी ॥
षोडशैतानिनामानिताम्रायामुनिपुङ्गव : ।
நமோஸ்து தீர்த்தராஜாய ஹரிபாதாப்ஜபூதயே | த்வதம்பஸாஹமாத்மாநம் க்ஷாலயாமி ப்ரஸீத மே ||
மஹாமங்கலதே மாத: மலயாத்ரிஸமுத்பவே | தாதுமர்ஹஸி மே தீர்தம் மஜ்ஜநாத் மலிநாபஹம் ||
மாயா மலயஜா புண்யா தாம்ரா முக்தாபலப்ரஸூ: | கௌரீ மருத்வ்ருதா கங்கா ஶிவசூடா ஶிவோத்பவா ||
ஸர்வதீர்தேடிதா ஸத்யா ஸர்வபாபப்ரணாஶிநீ | ஜ்ஞாநப்ரதீபிகா நந்தா ஹரிஸாயுஜ்யதாயிநீ ||
ஷோடஶைதாநிநாமாநிதாம்ராயாமுநிபுங்கவ: |
"தீர்த்தராஜனே, ஹரியின் பாதாரவிந்தத்திலிருந்து தோன்றியவளே, உன் தீர்த்தத்தினால் நான் என்னை சுத்திப்படுத்திக்கொள்கிறேன்; நமஸ்காரம்; மகா மங்களங்களை அருளுபவளே, மாதாவே, மலயமலைக் குமாரியே, உன் தீர்த்தம் ஸ்னானத்தினால் ஸர்வ தோஷங்களையும் போக்கவல்லது. அனுக்ரகிக்கவும். உன் விசேஷ நாமங்கள் 24 ஆகும். அவையாவன: மாயா, மலயஜா, புண்யா, தாம்ரா, முக்தாபலப்ரஸூ (முத்தினை நல்குபவள்), கௌரி, மருத்வ்ருதா, கங்கா, சிவசூடா, சிவோத்பவா, ஸர்வதீர்த்தேடிதா, ஸத்யா, ஸர்வபாபப்ரணாசினி, ஞானப்ரதீபிகா, நந்தா, ஹரிஸாயுஜ்யதாயினி" என்று.
விஸ்வகர்மாவின்மூலம் விஷ்ணுவின் விக்ரகத்தை நிர்மாணித்து ப்ரதிஷ்டை செய்தார் வ்யாஸர். 100 வருஷம் தபஸ் செய்தார். விஷ்ணு தரிசனம் கொடுக்க, ஸ்தோத்திரம் செய்தார். விஷ்ணு, வ்யாஸரை ஞானமுத்திரையுடன் பிரளயம் வரை இங்கு இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தருமாறு பணித்து, பின் மோக்ஷம் கிடைக்குமென்றார். வ்யாஸர் ஸாக்ஷாத் விஷ்ணு பகவானின் அம்சாவதாரமே; ஸகல சாஸ்திரங்களையும் உலகுக்கு போதித்தவர்; மோக்ஷ தர்மத்தை நிலைநாட்ட பிரம்ம ஸூத்ரங்களை இயற்றியவர். அவருக்கு மோக்ஷ உபதேசத்திற்காக பிரம்மாவிடம் செல்ல வேண்டிய அவசியம் எவ்வாறு ஏற்பட்டது? வேதசாஸ்திரங்களின் அடிப்படையில் ஆதிசங்கரர் " शास्त्रज्ञोऽपि स्वातन्त्र्येण ब्रह्मान्वेषणं न कुर्यात्"
"ஶாஸ்த்ரஜ்ஞோபி ஸ்வாதந்த்ர்யேண ப்ரஹ்மாந்வேஷணம் ந குர்யாத்" என்கிறார். அதாவது, சாஸ்திரம் அறிந்தவனாயினும், ஸ்வதந்திரமாக பிரம்ம விசாரம் செய்யக்கூடாது. பிரம்மநிஷ்டரான குருவை நாடி அவருடைய மார்க்கதரிசனத்தில்தான் பிரம்ம விசாரம் செய்யவேண்டும்; அதுதான் பயனளிக்கும். இதை நம்போன்ற மானிடருக்கு உணர்த்தவே, வ்யாஸ பகவான் பிரம்மாவை நாடி மோக்ஷமார்க்கத்தைப்பற்றி உபதேசம் வேண்டினார்.
முன்னர் விஷ்ணு, தர்மத்தினை நான்கு பாகங்களாகப் பிரித்து - ஸத்தியம், க்ரது, மந்த்ரம், தீர்த்தம் - தேவர்களிடம் தந்திருந்தார். ஜீவர்களின் பாபங்களை நீக்குமாறு சொல்லியிருந்தார். விஷ்ணுவின் ஆக்ஞைப்படி, அந்த நால்வரும் தங்கள் சுத்திக்காக, வருஷம் ஒருமுறை நாதாம்புஜம் வந்து ஸ்னானம் செய்து சுத்தி செய்துகொள்கிறார்கள். மார்கழி மாதம் வ்யதீபாதம் ஸ்ரேஷ்டம்.
இன்னொரு சமயம், பாண்டியராஜா இந்த்ரத்யும்னன் ராஜாங்கத்தில் தர்மம் நான்கு கால்களிலும் நின்று முழுமையாகப் பிரகாசித்தது. ராஜா 12000 வருஷம் ராஜ்யபரிபாலனம் செய்தார். பல யாகங்களை நன்கு செயலாற்றினார். பிறகு புத்திரன் மணிவர்ணனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு, தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். தாம்ரபர்ணி நதி தீரத்தில் விஷ்ணுபூஜை செய்துகொண்டிருக்கும்போது, அகஸ்தியர் வரவே, பூஜையில் ஆழ்ந்திருந்த ராஜா எழுந்திருந்து மரியாதையாக மாமுனிவரை வரவேற்காத தோஷத்திற்கு ஆளானார். அகஸ்தியர் அவரைக் காட்டுயானையாகுமாறு சபித்தார். சாபவிமோசனம் விஷ்ணுதரிசனத்தினால் கிடைக்குமென்றார். கஜேந்திரனாக, யானையாக 500 வருஷங்கள் 5 யுகங்கள்போல் கழிந்தன. பஞ்சம் மேலிட, தாம்ரபர்ணியின் தடாகத்தில் மற்ற யானைகளுடன் ஜலக்கிரீடை செய்யுங்கால், ஒரு முதலை யானையின் காலைப்பற்ற, மற்ற யானைகளெல்லாம் தப்பித்துக் கரையேறின. 12 நாள் கடும் சண்டை நடந்தது. கஜேந்திரன் பகவானை ஸ்தோத்திரம் செய்ய, விஷ்ணு கருடன்மேல் விரைந்து வந்தார். சக்கிரத்தினால் முதலை அழிந்தது. கஜேந்திரன் மோக்ஷம் அடைந்தான். முதலையும் சாபவிமோசனம் அடைந்து, யக்ஷனாக மாறிச் சென்றது. விஷ்ணு தாம்ரபர்ணிக்கு அனுக்ரகம் செய்தார்: अत्रमज्जन्तियेमर्त्या: तीर्थेत्वन्मोक्षदायिनि।तेषांदास्यामिनिर्वाणपदवींनात्रसंशय: ॥
अत्रैवनिवसन्नित्यमहंक्षीरार्णवेयथा॥ भक्तानांसंप्रदास्यामिसत्यमेवमनोरथान्।
அத்ரமஜ்ஜந்தியேமர்த்யா: தீர்தேத்வந்மோக்ஷதாயிநி|தேஷாம்தாஸ்யாமிநிர்வாணபதவீம்நாத்ரஸம்ஶய: ||
அத்ரைவநிவஸந்நித்யமஹம்க்ஷீரார்ணவேயதா|| பக்தாநாம்ஸம்ப்ரதாஸ்யாமிஸத்யமேவமநோரதாந்|
"மோக்ஷத்தையே அருளும் உன் தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யும் மனிதர்களுக்கு நிர்வாணபதவியை நான் அனுக்ரகிக்கிறேன்; இதில் ஸந்தேகமில்லை. பாற்கடலில் இருப்பதுபோல் நான் இங்கு எப்போதுமே வசிப்பேன். உபாஸிக்கும் பக்தர்களுக்கு எல்லா மனோரதங்களையும் நிச்சயமாக நிறைவேற்றிவைப்பேன்" என்று.
வேறொரு சந்தர்ப்பத்தில் தேவாஸுர யுத்தம் கடுமையாக நடந்து, அசுரர் நாசமடைந்தனர். மிஞ்சிய சில அசுரர்கள் சமுத்திரத்தில் தஞ்சமடைந்தனர். அசுரமாதாவான திதிதேவி அசுரகுருவான சுக்ராசாரியரிடம் அடைக்கலம் புகுந்தாள். சுக்ரமாதாவுக்கு (ப்ருகு மஹரிஷியின் பத்தினிக்கு) கோபம் மேலிட்டது. அவள் ’நான் விஷ்ணுசக்ரம், சேனை, மருத்கணங்களை அழிப்பேன்; பிரம்மாண்டத்தையே விழுங்குவேன்.‘ என்று சபதமிட்டு, பயங்கரமான பெரிய விஸ்வரூபம் எடுத்தாள். தேவர்கள் நடுங்கி, விஷ்ணு பகவானிடம் சரணடைந்தனர். விஷ்ணு சக்ரத்தை ஏவி, சுக்ரமாதாவின் தலையைச் சீவினார். விஷ்ணு சக்ரம் வைகுண்டம் திரும்புகையில், ஸப்தரிஷி மண்டலத்தில் மேலே செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. கபில வாஸுதேவர் வந்து, ‘ஸ்திரீஹத்திதோஷம் உனக்கு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டாய். அதனால் தாம்ரபர்ணியில் ஸ்னானம் செய்து, விஷ்ணுவனத்தில் விஷ்ணு உபாஸனை செய்து, தோஷநிவ்ருத்தி பெறுவாயாக‘ என்றார். அவர் தாம்ரபர்ணியின் மஹிமையை வெகுவாகப் புகழ்ந்தார்.
यापरापरमाशक्ति: जगत्कारणरूपिणी।उमागौरीतिविख्याताकमलाभारतीतिच॥
सर्वमन्त्रमयीशक्ति: सर्वतीर्थैकरूपिणी।भक्तिभाजांफलाकारासूक्ष्माकारादुरत्यया॥
ब्रह्मरुद्रमुखैर्देवै: पूज्यमानादिनेदिने।सैषाभगवतीशक्ति: मूलप्रकृतिसंज्ञिता॥
क्लिश्यमानंजनंदृष्ट्वाकर्मपाशानुपाशितम्।यातायातंप्रकुर्वन्तंजन्मंमृत्युजरातुरम्॥
परित्राणायवैतस्यकर्मविच्छेदहेतवे।प्रार्थिताशङ्करेणापिहरिणावेधसापुन: ॥
तेषामभीप्सितंकामंपूरयन्तिदयात्मिका।कृत्वात्मानंतीर्थरूपंजातामलयनन्दिनी॥
तदम्बुपानात्स्नानाद्वादर्शनात्स्पर्शनादपि।मोचयिष्येजनंपापात्मुक्तिंदास्याम्यसंशयम्॥
इतिकल्पितदीक्षासावर्ततेदक्षिणापथे।
யாபராபரமாஶக்தி: ஜகத்காரணரூபிணீ|உமாகௌரீதிவிக்யாதாகமலாபாரதீதிச||
ஸர்வமந்த்ரமயீஶக்தி: ஸர்வதீர்தைகரூபிணீ|பக்திபாஜாம்பலாகாராஸூக்ஷ்மாகாராதுரத்யயா||
ப்ரஹ்மருத்ரமுகைர்தேவை: பூஜ்யமாநாதிநேதிநே|ஸைஷாபகவதீஶக்தி: மூலப்ரக்ருதிஸம்ஜ்ஞிதா||
க்லிஶ்யமாநம்ஜநம்த்ருஷ்ட்வாகர்மபாஶாநுபாஶிதம்|யாதாயாதம்ப்ரகுர்வந்தம்ஜந்மம்ம்ருத்யுஜராதுரம்||
பரித்ராணாயவைதஸ்யகர்மவிச்சேதஹேதவே|ப்ரார்த்திதாஶங்கரேணாபிஹரிணாவேதஸாபுந: ||
தேஷாமபீப்ஸிதம்காமம்பூரயந்திதயாத்மிகா|க்ருத்வாத்மாநம்தீர்த்தரூபம்ஜாதாமலயநந்திநீ||
ததம்புபாநாத்ஸ்நாநாத்வாதர்ஶநாத்ஸ்பர்ஶநாதபி|மோசயிஷ்யேஜநம்பாபாத்முக்திம்தாஸ்யாம்யஸம்ஶயம்||
இதிகல்பிததீக்ஷாஸாவர்ததேதக்ஷிணாபதே|
"தாம்ரபர்ணியானவள் ஸாக்ஷாத் ஆதிபராசக்தியே; ஸர்வ ஜகத்திற்கும் காரணமாக உள்ளவள்; உமா, கௌரி, கமலா, பாரதி என்றெல்லாம் பிரஸித்தியாக இருப்பவள் அவளே; அவளே ஸர்வ மந்த்ரமயமானவள்; ஸர்வதீர்த்தங்களுக்கும் ஒரே நிறைவுஸ்தானமாக இருப்பவள்; பக்தர்களுக்கு பலஸ்வரூமாக இருப்பவள்; ஸூக்ஷ்மவடிவினள்; யாராலும் மீறமுடியாதவள்; பிரம்மா, ருத்ரன் போன்ற தேவர்களால் தினந்தோறும் ஸ்தோத்திரிக்கப்படுபவள்; பகவதி சக்தியாக இருப்பவள்; மூலப்ரக்ருதி என்ற பெயருடையவள். ஜனங்கள் ஜனன மரண மூப்பு என்ற சக்கிரத்தில் சுழன்று, கர்மபாசத்தினால் பந்தப்பட்டு, வருந்துவதைக்கண்ட தேவி, அவர்களுடைய கர்மவினையை அறுத்தெறிந்து அவர்களைக் காக்குமாறு, சிவன், விஷ்ணு, பிரம்மாவினால் வேண்டப்பட்டாள். தயையே உருவான தேவி அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றவே, தன்னைத் தீர்த்தரூபமாக செய்துகொண்டு, மலயராஜனின் பெண்ணாகத் தோன்றினாள். தென்திசையில், தாம்ரபர்ணியின் தீர்த்தத்தை பானமோ, ஸ்னானமோ, தரிசனமோ, ஸ்பரிசமோ செய்கின்ற ஜனங்களை பாபத்திலிருந்து விடுவித்து, ஸந்தேகமில்லாமல் முக்தியை அளிப்பேன் என்று தீக்ஷை பூண்டுள்ளாள்" என்று. வ்யாஸர் சக்ரம் ஸ்னானம் செய்த தாம்ரபர்ணி தீர்த்தகட்டத்தின் பெருமையை விளக்குங்கால், விஸ்வேதேவர்கள் பித்ருக்களை முன்னர் அலக்ஷியப்படுத்திய தோஷத்தை போக்கிக்கொண்ட ஸ்தலம் என்று வர்ணிக்கிறார். சக்ரம் ஸ்னானம், தர்ப்பணம், தானம், விஷ்ணு உபாஸனை எல்லாம் முறையாகச் செய்தார். ஆகாசவாணி அப்போது சொன்னபடி, அஸ்வமேதயாகமும் செய்தார். விஷ்ணு, சிவன், தேவர்களுடன் தரிசனம் தந்து அனுக்ரகித்தார். சக்ரம் மேலும் யாகங்கள் செய்து, விஷ்ணுவின் விக்ரகப் பிரதிஷ்டை செய்து, பூஜித்தார். விஷ்ணு மறுபடியும் தரிசனம் தந்து, அங்கேயே ஸாந்நித்தியம் கொள்வதாகக் கூறி, சக்ரத்துடன் வைகுண்டம் ஏகினார். இந்த ஸ்தலம் விஷ்ணுவனம் (தற்போதைய சீவலிப்பாறை) என்று புகழ் பெற்றது.
இன்னொரு சமயம், பாண்டியராஜா ப்ரதாபாங்கதன் ஆட்சியில், ராஜ்யத்தை ம்லேச்சர்கள் கைப்பற்றவே, ராஜா தாம்ரபர்ணி சென்று, விஷ்ணுவை உபாஸித்தார். விஷ்ணு தரிசனம் தந்து, மடியில் உட்காரவைத்து, பாஞ்சஜன்ய சங்கினில் தாம்ரபர்ணி ஜலத்தை நிரப்பி, ராஜாவுக்கு அவரே அபிஷேகம் செய்தார். அப்போது பேரதிசயம் நடந்தது. சிம்மாசனத்தின் கால்களிலிருந்து கோடிக்கணக்கான படைவீரர்கள் வெளிப்பட்டு, ம்லேச்ச சேனையுடன் யுத்தம் செய்து, விரட்டினர். பாண்டியன் ராஜ்யத்தைத் திரும்பவும் பெற்றான். இத்தீர்த்தம் பாஞ்சஜன்ய தீர்த்தம் என்று பெயர்பெற்றது. க்ஷேத்ரம் விஜயாஸனம் என்று புகழடைந்தது. தாம்ரபர்ணி தீரத்திலுள்ள, நவ திருப்பதி என்று பெருமை படைத்த, ஒன்பது முக்கிய விஷ்ணு க்ஷேத்ரங்களில் இது ஒன்று.
தாம்ரபர்ணி ஸமுத்திரத்துடன் ஸங்கமமாகும் ஸ்தலத்தில் மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற பான்மை வியத்தற்குரியது. மூன்று வேதங்களை (ரிக், யஜுர், ஸாம), மூன்று அக்னிகளை (ஆகவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி) குறிப்பதுபோலுள்ளது. ஒரு சமயம், காவிரியின் தென்கரையில், சந்திரசாலா நகரில் நந்தகன் என்கிற பிராம்மணனுக்கு, பர்ணாவதி என்ற பெண் இருந்தாள். அவள் தனியாக இருக்கையில், ஸுத்யும்னன் என்ற யோகி வந்து, உணவருந்தி, சந்தோஷத்தினால், இரண்டு மந்த்ரங்களை பர்ணாவதிக்கு உபதேசித்தார். யாரையும் வசீகரணம் செய்யவல்ல மந்த்ரம் அது. பின்னர், ஒரு இளைய முனிவரைப் பார்த்த பர்ணாவதி, ஆசையினால் மந்த்ர பிரயோகம் செய்யவே, முனிவர் வசீகரிக்கப்பட்டு வந்து, பெண்ணுடன் சேர்ந்து, பிறகு தபஸ் வீணான காரணத்தினால் சபித்துச் சென்றார். பர்ணாவதி பிசாசாக ஆனாள். 100 குழந்தைகள் பிறந்து, அவர்களெல்லோரும் பிசாசுகளாயினர். அவர்கள் காட்டில் சுற்றித் திரிகையில், யோகி ஸுத்யும்னன் கண்டு, மந்த்ரத்தை சரியான பாத்திரத்திற்கு உபதேசிக்காமல் போனதற்கு வருந்தியும், அவர்கள்பாலுள்ள கருணையினால், மந்த்ரசக்தியுடன் யோகபலத்தினால் அவர்கள் எல்லோரையும் கட்டி, தாம்ரபர்ணி ஸங்கம க்ஷேத்ரத்திற்கு இழுத்துச் சென்றார். அங்கு ஸங்கல்ப ஸ்னானம், சாந்திஸூக்தம் ஜபம் செய்து, தாம்ரபர்ணி தேவியின் தரிசனம் அவர்களுக்குக் கிட்டியது. பாபநிவ்ருத்தியாகி, ஏற்கெனவே கூடிய முனிவர் வத்ஸகன் அங்கு வந்து, பர்ணாவதியை விவாகம் செய்து கொண்டார். புத்திரர்கள் யாவரும் சாபம் நீங்கி, பரமயோகிகள், பிரம்மஞானிகளாக ஆனார்கள். இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சுப்பிரமணிய ஸ்வாமி பக்கத்தில் திருச்செந்தூரில் வீற்றிருந்து இந்த க்ஷேத்ரத்தைக் காக்கிறார். அகஸ்தியர் இங்கு மூன்று இடங்களில் ஸ்னானம் செய்து, தேவி தாம்ரபர்ணியின் மூர்த்தியை ஸ்தாபித்து வழிபட்டார். ப்ரார்த்தித்தார்:
नमस्ते देवि कल्याणि महापातकनाशिनि । ताम्रपर्णि त्वयि स्नास्ये त्राहि मां भवसागरात् ॥
நமஸ்தே தேவி கல்யாணி மஹாபாதகநாஶிநி | தாம்ரபர்ணி த்வயி ஸ்நாஸ்யே த்ராஹி மாம் பவஸாகராத் ||
"தாம்ரபர்ணி தேவியே, கல்யாணியே, மாபாதங்களையும் நசிப்பவளே, நான் உன்னில் ஸ்னானம் செய்கிறேன். என்னை பிறப்புக்கடலிலிருந்து காக்கவும்."
தாம்ரபர்ணியின் பெருமை சொல்லிலடங்காதது. புராணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைகளோ ஏராளம். சாபநிவ்ருத்தி, எதிரேபார்க்காத விசேஷ அனுக்ரகம் அடைந்த தேவர்கள், மனிதர்கள், பசுபக்ஷிகள், பூச்சிகள் எண்ணிறந்தவை. பல தீர்த்தகட்டங்கள் இருப்பினும், 64 கட்டங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறார் வ்யாஸ பகவான். ஸ்ரீமத்பாகவதத்தில், வரப்போகும் கல்கி அவதாரம் தாம்ரபர்ணி நதி தீரத்திலுல்ள க்ஷேத்ரத்தில்தான் நிகழப்போவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
வரும் புஷ்கரத்தில் ஸங்கல்ப ஸ்னானம், ஜபம், பூஜை, தீர்த்த ஸ்ராத்தம், பலவகை தானங்கள் எல்லாம் நன்றாகச்செய்து பெரும்பயன் அடைவோமாக. தேவியின் அருள், ஆசாரியாளின் அனுக்ரகம் ஒருங்கே பெறுவோமாக.
For more information, visit http://tamraparnipushkaram.info