தர்ப்பைப்புல்

Latin Name        – Desmotachya bipinnata
Family                    –  Poaceae (यवकुलम्)
English Name   – Sacrificial grass
Sanskrit Name – दर्भः, कुशः

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.
சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு ஹிமகஷாயம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

  • தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.
  • தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
  • சிறுநீரகக்  கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
  • தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
  • மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
  • நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் எழுதுகிறார்கள்.” என்று கூறுகிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.

दर्भस्तु दीर्घपत्रः क्षुरपत्रो यज्ञसंस्तरणः।
बर्हि स्याद् दृष्टिशस्त्रं याज्ञीयाह्नः कुशः समन्तश्च॥
राजदर्भो महादर्भो महामूलो महाकुशः।
महापत्रीति कथितः शब्दैः पर्यायवाचकैः॥ (अभिधानमञ्जरी)
कुशो दर्भस्तथा बर्हिः सुच्यग्रो यज्ञभूषणः।
ततोऽन्यो दीर्घपत्रः स्यात्क्षुरपत्रस्तथैव च॥ (भावप्रकाशम्)
सितदर्भो ह्रस्वकुम्भो पूतो यज्ञियपत्रकः।
वज्रो ब्रह्मपवित्रश्च तीक्ष्णो यज्ञस्य भूषणः॥
सूचीमुखः पुण्यतृणो वह्निः पूततृणो द्विषट्।
कुशोऽन्यः शरपत्रश्च हरिद्गर्भः पृथुच्छदः॥
शारी च रूक्षदर्भश्च दीर्घपत्रः पवित्रकः। (राजनिघण्टु)
दर्भद्वयं त्रिदोषघ्नं मधुरं तुवरं हिमम्।
मूत्रकृच्छ्राश्मरीतृष्णाबस्तिरुक्प्रदरास्रजित्॥ (भावप्रकाशम्)
दर्भमूलं हिमं रुच्यं मधुरं पित्तनाशनम्।
रक्तज्वरतृषाश्वासकामलादोषशोषहृत्॥
दर्भौ द्वौ च गुणे तुल्यौ तथापि च सितोऽधिकः।
यदि श्वेतकुशाभावास्त्वपरं योजयेत् भिषक्॥ (राजनिघण्टु)
दर्भयुग्मं पवित्रं स्यात् मूत्रकृच्छ्रघ्नशीतळम्।
रक्तपित्तप्रशमनं केवलं पित्तनाशनम्॥ (धन्वन्तरिनिघण्टु)
दर्भः शीतो रुचिकरो मधुरस्तुवरो मतः।
स्निग्धः कफकरः शुक्ळरक्तशुद्धिकरो मतः॥
कफं रक्तं रक्तपित्तं पित्तं श्वासं तृषां तथा।
मूत्रकृच्छ्रं वस्तिशूलं कामलां प्रदरं तथा॥
रक्तदोषं विसर्पं च छर्दिं मूर्च्छां तथाश्मरीम्।
नाशयेदिति च प्रोक्तो मूलं तस्य तु शीतळम्॥
रुच्यं च मधुरं रक्तज्वरतृट्श्वासकामलाम्।
पित्तं च नाशयत्येवं मुनिभिः परिकीर्त्तितम्॥ (निघण्टुरत्नाकरः)
दर्भः स्निग्धो हिमः स्वादुः कषायः कफपित्तहा।
विसर्पदाहकृच्छ्राश्मतृष्णावस्तिविकारनुत्॥ (कैय्यदेवनिघण्टु)

 

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்