உள்ளங்கவர் கள்வன்
அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் அவதாரங்கள் எடுத்து தடுத்தாட்கொள்ள தவறியதே இல்லை. குறிப்பிட்ட அந்தந்த “அசுரர்” வதமாகி தர்மம் தழைக்க ஆரம்பித்ததும் “அந்தந்த” அவதார புருஷர்களின் நினைவாக தோத்திரங்களும் மூர்த்திகளும் முக்யத்வம் பெற்று பக்திமான்களால் “பாமாலை” சூடப்பட்டு வணங்கும் பேறும் பெற்றதுண்டு. ஆனால் மத்ஸ்ய….கூர்ம….வராகாதி அவதாரங்கள் எட்டும் குறிப்பிட்ட க்ஷேத்ரங்களை தரிசிக்கும் போதும் குறிப்பிட்ட “இனத்தவர்”களிடையும் மகத்துவம் பெற்றிருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனைகள் காரணமாக மக்களாய் பிறந்தவர்கள் அனைவருமே உணரும் பெருமைக்குரியவை ராமர் கிருஷ்ணர் அவதாரங்கள் இரண்டும்தான். குருபக்தி ஏகபத்னிவிரதம் போன்ற சில நியதிகளை மக்கள் மனதில் பதியவைத்தது “ராமர்” வழிபாடு. ராமனை விட மனித உள்ளங்களை அதிக அளவுக்கு கவர்ந்தவன் “கண்ணந்தான்”. கல்வி அறிவில்லாத பாமரனும் அறிந்து அனுபவிக்கும் லீலைகள் கண்ணனுடையவை. ஜயதேவர் முதல் ஆண்டாள் வரை கண்ணனை அனுபவித்தவர்கள். ஒவ்வொருவரது அனுபவமும் நம்மையும் அனுபவிக்க செய்யும்படியானவை. அதிலும் ஊத்துக்காடு வெங்கடகவியின் அனுபவம் அலாதியானது.
“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன்” –என்று கண்ணனின் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார். “தாய்க்கு பின் தாரம்” என்பது மனித உறவு முறைகளில் மறக்கமுடியாதது. பிறப்பை கொடுத்ததாயும், உடல் இன்பம் மூலம் ஒன்றியதால் தாரமும் மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் உறவு முறையாகும். ஆகவே பால லீலைகளாலும் சிருங்கார ரசனையாலும் கண்ணனை மொத்தமாக ஒரு லட்சத்து எட்டு பாடல்களால் அனுபவித்தவர் வேங்கட கவி. சாதாரண வார்த்தை கோப்புகளால் மகத்தான தத்துவங்களை விளக்குகிறார் கவி. “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்பது பழமொழி. கோபத்தால் ஒதுக்கியதை மனதிற் கொள்ளாமல் ஆர்வமுடன் அழைத்ததும் தாவி வந்து ஒன்றுவது குழைந்தையுள்ளம்.
வெறுப்பு மேலிட்டு மறந்து விட்டாலும் விருப்புடன் அழைத்ததும், அணைந்து ஆதரிப்பவன் ஆண்டவன். இப்படி குழந்தையையும் ஆண்டவனையும் ஒன்றாக்கி ஆண்டவனையே “குழந்தை” தெய்வமாக்கி அனுபவிக்கிறார் கவி. குழந்தையை கண்டிக்கும் போதும் தண்டிக்கும் போதும் கூட அடி மனதில் கருணையை இழக்காத உள்ளம் தாயுள்ளம். ஆகவே “ தாயே யசோதா” என்று தாயைப் போன்ற பாவத்துடன் பழகத் தெரிந்தவர்களிடம் “குழந்தையாக வந்தவன் கண்ணன்” என்கிறார் கவி. ஆயர் குலத்தவரின் தொழில் மாடு மேய்ப்பது. மாட்டின் உணவு காய்ந்த வைக்கோல். தாய் பாலுக்கு பிறகு மனிதன் ஆயுட்காலம் வரை அனுபவிப்பது மாட்டுபால்தான். ஆகவே காய்ந்த வைக்கோலை தின்று மனித உணவின் முக்யத்துவமான பாலை பொழிவது மாடு. ஆகவே பலனை எதிர்பாராது ஆயுள் உள்ளளவும் உழைக்கும் பண்பாட்டை “ஆயர்” குலத்தவரை பெருமைபடுத்துகிறது கண்ணன் அவதாரம்.
நாளாக நாளாக வயதின் தள்ளாமையால் வாடுவது நமது இயல்பு. ஆனால் யுகங்கள் பல கண்டும் பாலன் பருவத்தில் இருப்பவன் கண்ணன். அதனாலே பாலனாக நினைத்து தாவி அணைந்தாள். அணைந்தவளின் வாயில் “முத்தம்” இட்டான் கண்ணன்.
ஐம்புலன்களில், கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் கூட நமக்கு நாமே தான் அனுபவிக்கமுடியும். ஆனால் வாய் திறந்து “நாமத்தை” சொல்லி விடும் போது கேட்பவர்களும் அனுபவிக்க முடியும். ஆகவே, ஐம்புலங்களில் வாய் செய்யும் புண்ணியத்துக்கு பரிசாக வாயில் முத்தம் இடுகிறான் கண்ணன். இந்த அனுபவத்தை சொல்ல கேட்டவர்கள் நால்வர். அதாவது நாலும் (நான் மறையும்) தெரிந்தவர்கள் சனக சனந்தனர். ஆகம வழிபாட்டு முறைகளால் ஆண்டவனை அடைய வழிவகுத்த நால்வரும் சாதாரண கோகுலத்து இடையர்களிடையே கண்ணன் அவதரித்து லீலை புரிந்ததை கேட்டதும். “நாம” பாராயணத்தின் பெருமையை உணரநேரிடுகிறது. கஷ்டப்பட்டு நோன்புகள் நோற்றுதான் ஆண்டவனை அடையலாம் என்று அதற்கான வேத ஆகம சாஸ்திராதி நிரூபணங்களும் வழிவகுத்தது குறித்து வெட்கப்படுகிறார்களாம். அந்த அளவுக்கு சுலபன் கண்ணன்.
அடுத்தது கண்ணன் “நடை” யழகு. பிள்ளைப்பிரான் கால்சிலம்பொலிக்க நடப்பது கூட “காலசைவும் கையசைவும் தாளமொடு இசைந்துவர நீல வண்ண கண்ணனிவன் நர்த்தனமாடுகின்றான்” என்று வியக்கிறார்.
நடையில் கூட “தவராமை”யை கடைப்பிடிப்பவன் கண்ணன். அந்த நடையழகில் லயித்த வராய் “ஆடாது அசங்காது வா கண்ணா” என்றழைக்கிறார் கவி. தில்லையில் ஆடிய பெருமான் கூட தன் ஆட்டத்தை விட்டு கண்ணன் நடையழகில் லயிக்க நேரும்போது நாம் லயிக்காமல் இருக்கமுடியுமா? அப்படி என்றென்றும் லயிக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பமும் செய்துகொள்கிறார் வேங்கட கவி. மற்ற பக்தர்களைபோல பிறவியே வேண்டாம் என்று ஒதுக்காமல், “பல கோடிபிறவி தந்தாலும்” ஏற்க மறுக்காமல் பதிலுக்கு ஒருபிறவி அது புல்லாயினும் அந்த ஒரு பிறவியை மட்டும் பிருந்தாவனத்தில் எடுக்கவேண்டும். புல்லாய் பிறந்தால் கண்ணன் மேய்த்த “ஆநிறை” பரம்பரையின் வாய்க்குணவாகும் பேறாவது கிடைக்குமே என்று ஏங்குகிறார் கவி.
கண்ணன் கையில் இருப்பது வேய்ங்குழல். வளையாத மூங்கிலை வளைத்து துளையிட்டு ஊதி ஒலி எழுப்பினால் “கானத்தில்” மயங்காதவர்களும் இருக்கமுடியுமோ? மனித பிறவியும் மூங்கிலைப்போன்றதே. வளைத்து பக்குவப்படுத்தி நாம பாராயணத்தினால் “ஜீவஒலி” எழுப்ப பழகுவோம்.
உள்ளங்களை கவரும் கள்வன் என்று ஆண்டவன் லீலைகளை வருணிப்பது உண்டு. மனதில் உள்ள “கள்ளங்களை” கவர்ந்து மாட்டையும் ஓட்டுவித்து குழலிசையில் ஆட்டுவித்து ஊக்குவிப்பவன் கண்ணன். பிறவிப்பயனை பெற இன்றே பாடுங்கள் கண்ணன் புகழை. |