ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர்
இறைவன் தொண்டர் உள்ளத்தொடுக்கம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிது என்றார் ஔவை. தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்றார் மற்றவர். இந்தச் சொற்களுக்கு ஒரு விளக்கமாய்த் தோன்றிய பெரியார் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதேந்திரர். ’பரித்ராணாய ஸாதூநாம்’ என்று இறைவன் கீதையிலே சொன்னது நமக்குத் தெரியும். இம்மாதிரியான ஒரு நிலை. அசுர சக்திகள் மேலோங்கித் தெய்வ சக்திகளை நெருக்கும்பொழுது, நல்லோர் துன்புறும் பொழுது இறைவன் தானே வந்து தடுத்து ஆட்கொள்வதும் உண்டு. தனது அம்சமாக மகான்களைத் தோற்றுவித்து இடர்களைக் களைந்து மக்களை வாழ்விப்பதும் நமக்குத் தெரியும்.
இத்தகைய ஒரு நிலை நம் நாட்டிலே பல முறையும் தோன்றியதுண்டு. ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள் தோன்றி நமது சமயத்துக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தாமே சென்று பிற மதத்தினரை வென்று ஆறு மதங்களை ஸ்தாபித்து நம்மை வாழ்வித்தார். இதேபோல மற்றொரு முறை நேர்ந்தபொழுது சீர்காழியிலே கௌண்டிய கோத்திரத்திலே ஞானசம்பந்தப் பெருமானாகத் தோன்றிச் சைவ சமயத்தைக் காத்து நிலைநிறுத்தியதும் நமக்குத் தெரியும்.
இம்மாதிரியான ஒரு நிலை சுமார் நானூறு வருஷங்களுக்கு முன்பு தோன்றிய பொழுது சாக்ஷாத் சிவபெருமானது அவதாரம் என்றே சொல்லும்படி தோன்றிய மகான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள். ஆளுடைய பிள்ளையார் என்ற ஞானசம்பந்தரின் பெற்றோர் இட்ட பெயர் நமக்குத் தெரியாது. ஆனால் ஸ்ரீ அப்ய்யரின் பிள்ளைத் திருநாமம் விநாயக ஸுப்ரஹ்மண்யம் என்று கர்ண பரம்பரை சொல்லும். அப்பய்யர் என்பது செல்லப் பெயர். அதுவே வழங்கலாயிற்று.
இவரது மத சம்பந்தமான வாழ்க்கையை மூன்று பகுதிகளாகச் சொல்வர். முதற் பகுதி வேதாத்தியயனம், சிவ தீக்ஷை-தம் தந்தையிடமே பயின்று இருபது வயதிலேயே மிக மிகச் சிறந்த கல்வியறிவு பெற்றது. இரண்டாம் பகுதி, ஸ்ரீ பகவத் பாதர்களின் நூல்களையும் வியாஸர் தொடங்கி மற்றுமுள்ளவற்றையும் பயின்று அரிய பெரிய விளக்க நூல்களை (பாஷ்யங்கள்) எழுதியது.
மூன்றாம் பகுதியிலே சிறந்த ஸ்ரீவித்யா உபாஸகராக விளங்கினார் என்று ஜே. என். பார்குஹார் என்ற ஆங்கிலப் பேராசிரியர், தமது நூலில் மிக மிகப் பெருமையுடன் குறித்திருக்கிறார்.
இவரது வாழ்க்கை வரலாறு அற்புதங்கள் நிறைந்தது. ஆனால் இவர் அற்புதங்கள் செய்து மக்களை வசீகரிக்க வேண்டுமென்றோ, தமது அத்வைத மதப் பிராசாரத்துக்கு அவற்றை ஒரு கருவியாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனோ செய்தவை அல்ல. இவரது பெருமையை பிறர் உணரும் வண்ணம் இறைவன் தத் செயலாக நிகழ்வித்த திருவிளையாடல்களே அவை.
வேளச்சேரி என்ற கிராமம் சென்னைக்குச் சமீபத்தில் உள்ளது. இதன் பழைய பெயர் வேதச்ரேணி என்பது. இங்கே ஒரு சமயம் அப்பய்ய தீக்ஷிதர் வசித்து வந்தார். பாடல் பெற்ற தலமாகிய திருவான்மியூருக்கு நாள்தோறும் சென்று சிவதரிசன்ம் செய்தபிறகே இவர் உணவு கொள்வாராம். ஒரு சமயம் கடல் பொங்கி எழுந்து எதிர்த்து வந்தது. திருவான்மியூர் ஒரே வெள்ளத்தில் மூழ்கியது. ’இன்று உமது தரிசனமின்றியே உண்ண வேண்டுமா?’ என்று உரத்த குரலில் சிவபெருமானை இவர் கேட்டாராம். கிழக்கு நோக்கி இருந்த இறைவனது சந்நிதி மேற்கு முகமாய்த் திரும்பியது என்றும் ஒரு வரலாறு சொல்லும். இப்பொழுதும் திருவான்மியூர் மருந்தீசர் சந்நிதியில் முதற் பிரகாரத்தில் அப்பய்ய திக்ஷிதரின் சிலையைக் காணாலாம். இன்று வேளச்சேரியில் கருணாம்பிகையுடன் உறையும் இறைவனது ஆலயம் பிற்காலம் எழுந்ததோ! |