இராம இராய கவி
’ஆயுஷ்மன்’
"இப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விஞ்ஞான யுகம் அதன் பிரச்னைகளுக்கும், ஐயங்களுக்கும் தீர்வு காண வேண்டின், அது அத்வைத சித்தாந்தத்தைப் பரிபூர்ணமாகப் பின்பற்றுவதாலேயே முடியும்." இப்படி கூறுகிறார் ரோமன் ரோலெண்டு என்னும் மாபெரும் மேனாட்டு அறிஞர். இவர் மஹாத்மா காந்தியினிடத்திலும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
மேலே கூறப்பட்ட இந்த அத்வைத சித்தாந்தத்தை ஒரு பெரிய கோவிலாகக் கட்டியவர்கள் பெரும் அறிஞர்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய இணையில்லாத தத்துவ தரிசனத்தாலும், அனுபவ மெய்யறிவினாலும் அத்வைதக்கொள்கையை நிலைநாட்டினர். இந்தக் கொள்கைக்கு இனம், மொழி, மதம், இஷ்ட தேவதை போன்ற எவ்விதமான தடைகளும் இல்லாததால் மாறுபட்ட நிலையையுடையவர்கள் கூட அத்வைதிகளாக இருந்தனர். இருக்க முடியும் என்பதே தெளிவு. இவர்களுள் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிறந்து, வளர்ந்து ஆனால் அத்வைதியாக வாழ்ந்த இராமராயக் கவி என்பவர் முக்கியமானவர். ஸம்ஸ்கிருத அறிவிலும், தர்க்க அறிவிலும் இணையற்று விளங்கியவர்; தத்துவ ஞானி; மேலும் சிறந்த கவியும் கூட. அவர் செய்து அருளியுள்ள கிரந்தங்களின் எண்ணிக்கை 143. இராமராயக் கவி பிறந்த வருடம் 1875. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். தாய்-ஹனுமாம்பாள், தந்தை-மோகன ராவ். பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஆச்வலாயன சூத்திரத்தைத் தழுவியவர். உடல் நலக்குறைவினால் ஆங்கிலப் படிப்பை உதறிவிட்டு, சீதாராமய்யா என்பவரிடம் வடமொழி பயில ஆரம்பித்தார். சிறு வயதிலேயே சிறந்த விஷ்ணு பக்தராகத் திகழ்ந்தார்.
ஒரு நாள் ஹயக்ரீவர் அவர் கனவில் தோன்றி அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அருளினார். இது அவரது வாழ்வில் ஏற்பட்ட ஒரு மாபெரும் திருப்பம். ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்ததினால் கவி பாடும் திறமையைப் பெற்றார். ஆதிலட்சுமியம்மாள் என்பவளை மணந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார். மாணவர்களுக்கு ஸம்ஸ்கிருதம் போதிப்பதிலேயே வாழ்க்கையை நடத்தி வந்தார். இலக்கணத்திலும், தர்க்கத்திலும் அளவிலா காதல் கொண்டு, புரிகில்லா இராம சாஸ்திரி என்பவரிடம் அவைகளைப் பயின்றார். விரைவிலேயே மிகவும் எளிய ஆனால் தெளிவுடன் கூடிய, "ஸரத் ராத்ரீ" என்னும் பாஷ்யத்தை "சித்தாந்த கௌமுதி" என்னும் வியாகரண நூலுக்கு இயற்றினார்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவரானதால் ஸ்ரீபாஷ்யத்தையும், கீதாபாஷ்யத்தையும் (ஸ்ரீ ராமானுஜர் அருளியவை) படிப்பது அவருக்குப் பழக்கம். ஒரு தடவை ஸ்ரீ வித்யாரண்யரின் ’பஞ்சதசீ’யைப் படித்தபோது அவருக்கு ஸ்ரீ ராமானுஜரின் சித்தாந்ததில் குறைகளும், முரண்பாடுகளும் இருப்பதை அறிந்தார். ஸ்ரீ சங்கரரின் பாஷ்யம் ஒன்றே தக்க ஞானத்தைப் பொழிவதாயும் மிகுந்த பொருள் உள்ளதாகவும் அவருக்குப் பட்டது. இதற்குள்ளே அவருக்கும், அவருடைய ஆசார்யரான பிரதிவாதி பயங்கரம் ரங்காசார்யர் என்பவருக்கும் ’ஸமாச்ரயம்’ (கையில் சங்கு, சக்கரம் பொறித்துக் கொள்ளுதல்) செய்து கொள்வதில் கருத்து வேறுபாடு முற்றியது. இது நாள் வரையில் விசிஷ்டாத்வைதத்தை அனுசரித்து வந்தவர், அதையே எதிர்க்கத் தொடங்கினார். அத்வைத சித்தாந்தத்தின் சிறந்த காவலராக மாறினார். ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் கொள்கைகளைப் பின்பற்றினார். அத்வைதமே ’பிரஸ்தான த்ரய’ நூல்களின் தாத்பர்யம் என்று நம்பினார். ஸ்ரீ ராமானுஜரின், ஸ்ரீ வேதாந்த தேசிகரின் அத்வைத கண்டனத்தை எதிர்க்க உறுதி பூண்டார். இதில் எழுந்தவையே பின்வரும் மாபெரும் நூல்கள்: (1) சங்கர பாஷ்ய விமர்சனம் (2) பகவத் கீதா பாஷ்யார்க்கப் பிரகாசிகா (3) ஸித்தாந்த ஸிந்து (4) கிருஷ்ண-உத்தவ ஸம்வாத வியாக்யா.
இவை தவிர ஏராளமான சிறந்த காவ்யங்களையும், ஸ்தவங்களையும் எழுதி அருளினார். அவைகளில் சில: (1) ஸமுத்ர மதன சம்பூ (2) ருக்மிணீ பரிணய சம்பூ (3) கந்தர்ப்ப தர்ப்ப விலாஸ பாணம் (4) கிருஷ்ண லீலா தரங்கிணி. ’தர்ம மீமாம்ஸா’ என்னும் நீதிநூலையும் எழுதினார். இவருடைய ஸ்தவங்கள் மட்டும் 70ஐத் தாண்டும். இவருடைய இஷ்ட தேவதை ஹயக்ரீவர். ’ஹகாராதி’ ஹயக்ரீவ ஸஹஸ்ர நாமாவளி’, ’வகாராதி விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி’ இவையிரண்டும் இவரது மிகச் சிறந்த ஸ்தவங்களாகும்.
அத்வைத சித்தாந்தத்திற்கு இவர் செய்துள்ள தொண்டு அளவிட முடியாததாகும்.
பாரத பூமியில் தோன்றிய மகான்கள் எண்ணிலடங்கார். அவர்களில் ஒருவர் தாம் வாடிய பயிருக்கு மழைபோல் வேதங்களுக்கு, வேத மதத்திற்குப் புத்துயிரூட்ட ஞான சூரியனாகத் தோன்றிய குழந்தை, ஆர்யாம்பாள் ஈன்றெடுத்த (ஆதி) சங்கரர்.
புத்த, சமண மதங்களைக் கண்டித்து ஸநாதன தர்மத்தை நிலைநாட்ட, ஆதி சிவனே தோன்றியது போன்று ஆதிசங்கரர் அவதரித்தார்.
இயற்கை எழிலும் வளமும் கொழிக்கும் கேரள நாட்டில் ஆல்வாய்க்கு அருகில் காலடி என்று அழகியதொரு கிராமம். அங்கே நம்பூதிரி குலத்தில் சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியின் குழந்தையில்லாக் குறையை நீக்க இறைவன் திருவருளால் தோன்றினார் வேதாந்தச் சுடரான சங்கரர்.
ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னர் நந்தன வருஷம் வைகாசி சுக்ல பஞ்சமி திருவாதிரை நக்ஷத்திரத்தில் உலகமுய்ய பாரத ஜோதியாக தெய்வக் குழந்தை அவதரித்தது. பெற்றோர்களிட்ட பெயர் சங்கரன். சிறு வயதிலேயே உபநயனம் நடந்தது. குருகுலத்தில் தனது ஏழாவது வயதிலேயே வேத சாஸ்திரங்களை முறையாகக் கற்றார். இதற்கிடையில் தந்தையாரும் சிவகதி அடைந்தார்.
ஞானமூர்த்தி சங்கரரின் வாக்கில்-சரஸ்வதி, நோக்கில்-கருணை, முகத்தில்-தேஜஸ், குணத்தில்-சாந்தம் ஆகியவை குடி கொண்டன.
அன்று துவாதசி, பிக்ஷைக்குச் சென்றார் ஞானக்கனியான சங்கரர். ஓர் ஏழைச் சுமங்கலி, சங்கரருக்குப் பிக்ஷை தர ஏதுமில்லால் மன வருத்தமுற்றாள். ஆயினும் தன் வீட்டிலிருந்த ஓர் நெல்லிக்கனியை எடுத்துவந்து சங்கரருக்குப் பிக்ஷையிட்டாள். அவளது அவல நிலையை உணர்ந்த கருணைக்கடலான சங்கரரின் மனம் மிக்க வேதனையுற்றது. ஏழை மாதரின் இல்லத்தில் பொன் கொழிக்கச் செய்ய எண்ணி கணீரென்ற இனிய குரலில், "அங்கம் ஹரே புலக பூஷணமாச்ரயந்தி" என திருமகளை நினைத்து (கனகதாரா) ஸ்தோத்ரம் செய்தார். அவருடைய வாக்கு வன்மையால் அங்கே செல்வம் நிரம்பி வளம் பெருகிற்று எனச் சொல்லவும் வேண்டுமோ!
சங்கரர் வழக்கம்போல் தன் தாயுடன் சென்று நதியில் குளித்துக்கொண்டிருந்தார். துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்ற (கந்தர்வன்) முதலை, நதியில் நீராடிக்கொண்டிருந்த சங்கரரின் காலைக் கவ்விற்று. தனது அருமை மகன் சங்கரன் எவ்வாறேனும் பிழைத்தால் போதுமெனக் கருதிய தாய் சங்கரரின் வேண்டுகோளுக்கிணங்கிச் சந்நியாசம் வாங்கிக்கொள்ள அநுமதி தந்தாள். மறுகணமே முதலை காலை விட்டது. சங்கரரும் உலகப் பற்றை விட்டார்.
சந்நியாசியான சங்கரர் தக்க குருவைத் தேடி நர்மதை நதிக்கரையிலுள்ள கோவிந்த பகவத் பாதரின் ஆச்ரமத்தை அடைந்தார். கௌடபாதர் என்ற மகானின் சீடரே கோவிந்த பாதர். சங்கரரை சீடனாக ஏற்றுக்கொண்டு முறையான சந்நியாசம் அளித்தார் குரு கோவிந்தபாதர். சங்கரர், சங்கர பகவத்பாதாசாரியர் ஆனார்.
சங்கர பகவத்பாதர் காசி நகர் சென்று, காசினிப் புலவோர் புகழும் பல நூல்களை இயற்றியருளினார். "ப்ரஸ்தான த்ர்யம்" எனப்படும் வியாசர் அருளிய பிரம்ம சூத்திரம், கீதை, உபநிஷத்துக்களுக்கு ஆசாரிய ஸ்வாமிகள் விளக்க உரை (பாஷ்யம்) செய்தருளினார்.
அவர் இயற்றிய நூல்களுள் சிலவற்றை ஈண்டு காண்போம். முடிந்தவரை படித்துப் பயனும் பெறுவோம். எளிமையான சொற்கட்டு; அருமையான ஆழங் காணவியலா அற்புதக் கருத்துக் கோவை அவை.
ஸாதன பஞ்சகம், மனீஷா பஞ்சகம், கணேச பஞ்சரத்னம்,
தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம், கோவிந்த அஷ்டகம், தச ச்லோகி,
சிவனந்த லஹரி, ஆனந்த லஹரி, ஸௌந்தர்ய லஹரி,
ப்ரச்னோத்தர ரத்னமாலா, உபதேச ஸாஹஸ்ரி, பஜகோவிந்தம்
இப்படிப் பலப்பல.
தம் காலத்திற்கு முன்பிருந்த பைரவ, பாசுபத, தந்த்ர, காபாலிக, பாஞ்சராத்ர, பௌத்த, ஜைனமதங்கள் போன்ற எண்ணற்ற கருத்து வேறுபாடுகளைக் கொண்டவைகளைக்போக்கி அத்வைதத்தை நிரூபித்து சைவம், சாக்தம் ஸௌரம், வைஷ்ணவம், கௌமாரம், காணபத்யம் ஆகிய ஆறு மதங்களை ஸ்தாபித்து "ஷண்மத ஸ்தாபகாசார்யர்" என்ற விருதினைப் பெற்றார்.
பாரத புண்ணிய பூமியில் ஆதி சங்கரரின் காலடி படாத இடங்களே இல்லை எனலாம். அத்வைத மடங்களை ஆங்காங்கே நிறுவி நாடெங்கும் வேதாந்தக்கொடி நாட்டிய ஞானச்சுடர்மணியாகப் பிரகாசித்தார்.
ஆதி சங்கரரைப்பற்றி மஹா கவி பாரதியார் கூறும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்.........
......முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்.........
.........என்னகூறி மற்றெங்கன் உணர்த்துவேன்.
என ஏங்குகிறார் பாரதியார். பாரதியின் உள்ளத்தைத் தணிப்போம். சங்கரரின் ஏற்றத்தை இனியாகிலும் நம் இளஞ் சந்ததியேரிடையே பரப்புவோம். ஞானச் சுடறொளி "பிரச்னோத்தர ரத்னமாலை"யில் கூறியது போன்று குரு வசனத்தைக் கருத்தில் கொண்டு தீயர்--பிறர் பொருள் நீக்கி, உண்மையறிஞனை, உண்மையறிவினை உணர்ந்து, ஸாதுக்களின் உபதேசம் பெற்று, ஜீவஹிதம் செய்து ஒழுக்கமுடையோனாக விளங்கிக் காலடியில் அவதரித்தவரின் காலடியில் பணிவோமாக!
ஸ்வாமி விவேகானந்தர் கூறுகிறார்: "சங்கரர் வேத தர்மத்தின் தொன்று தொட்டு வந்த பண்பை ஸ்தாபித்தவர். அவரைப் பலர் சிவனுடைய அவதாரமாய்க் கொள்கின்றனர். இந்த சங்கரரை நீங்கள் பின்பற்றி ஒழுக வேண்டும்."
சங்கரம் சங்கராசார்யம் கேசவம் பாதராயணம்
ஸூத்ர பாஷ்ய க்ருதௌ வந்தே பகவந்தௌ புன: புன:
ச்ருதி ஸ்ம்ருதி புராணானாமாலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம். |