ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்

 மலர்: 21 ரௌத்ர வருஷம் - சித்திரை, வைகாசி ஏப்ரல், மே - 1980 இதழ் : 3, 4


அஷ்டபதி எனும் கீதகோவிந்தம்
ஸ்ரீ வத்ஸ ஸோமதேவ சர்மா

இது ஜயதேவர் என்ற கிருஷ்ணபக்தரால் எழுதப்பட்ட சிறந்த நூல். இதில் பக்திரஸம், ஸ்ங்கீதம், நர்த்தனம் இவைகளுக்கேற்ற அம்சம் பல ஆகிய விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதை புரி ஜகன்னாத ஷேத்திரத்தில் ஜயதேவர் பாட அவர் மனைவி பத்மாவதி ஆடினாள். ஆடல் பாடல் இரண்டும் பகவானுக்குப் பூஜாகாலத்தில் செய்யும் அறுபத்து நான்கு உபசாரங்களில் சேர்ந்தவை. உபசாரம் ஒவ்வொன்றும் நம்மிடம் பகவானுக்குக் கருணை உண்டாக்கும் கருவியாம். அவைகளில் நாட்டியமும் கீதமும் மிகவும் அந்தரங்கமான தத்துவம் நிறைந்தவை. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலையாம்.

நாத வடிவினன் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளக் செய்தது. லீலைகள் பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரமஏகாந்தி, ஜீவன் முக்தர் எனப்படுவர். அத்தகைய உத்தமரில் ஒருவர் வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை உலகுக்கு அளித்தார்.

அவைகளில் பத்தாவதான ப்ரம்மவைவர்த்தம் எனும் புராணத்தில் ஸ்ரீராதாக்ருஷ்ண சரிதத்தைக் கூறுகிறார். அதற்கு விரிவுரை வடிவமாக அமைந்த கர்க்க ஸம்ஹிதை என்ற இதிஹாஸத்திலும் இது மிக விரிவாகவும் ரஸமாகவும் தத்வார்த்தத்துடனும் விளக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் கொண்டே அஷ்டபதி அமைக்கப்பட்டது.

கோலோகத்திலுள்ள ஸ்ரீக்ருஷ்ணன் விரஜா என்ற மனைவியுடன் ரமித்துக் கொண்டிருந்தார். அதையறிந்த ராதை கனகோபத்துடன் வந்தாள். க்ருஷ்ணன் விரஜையை நதியாக மாறும்படி கூறி தாமும் மறைந்துவிட்டார். ராதை ஏமாந்து தன்னிருப்பிடம் போகும்போது, ராதையை தேடி அலைபவர் போல், ’ராதே ராதே’ எனக்கூறி எதிரே வந்தார் அவர். ராதை கோபங்கொண்டு பேசாமல் போக, க்ருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தினார். அவள் கடுங்கோபத்துடன் செல்ல, ’ராதே, கோபம் வேண்டாம். உன்னைப் பணிகிறேன். இனி உன்னை விட்டு அன்னியரிடம் ஆசை கொள்ளேன்’ என்றார். அவள் திரும்பிப் பாராமலேயே சென்றாள்.

இதைக் கண்ட உத்தம பக்தனான ஸுதாமா ராதையிடம் கோபங்கொண்டார். க்ருஷ்ணன் மறுபடியும் விரஜையுடன் விளையாட, பகவானது பிரிவை ஸஹிக்காமல் ஒரு தோழியை அனுப்பித் தன்னை மன்னித்து தன்னிருப்பிடம் வரும்படி சொல்லி அனுப்பினாள் ராதை. க்ருஷ்ணன், ராதையின் விரஹத்தால் எழுந்து நடக்க சக்தி இல்லாமல் தவிப்பதாகவும் உடனே ராதையை அங்கு அழைத்து வரும்படியும் அவளிடமே கூறினார். வேறு வழியில்லாமல் பகவானிருப்பிடம் வந்தாள் ராதை.

முன்பு அவளிடமே கோபங்கொண்ட ஸுதாமா அவளை உள்ளே விடாமல் தடுத்தார். தேவி அவரை அரக்கனாகும்படி சபித்தாள். ஸுதாமா ராதையைப் பகவானை விட்டு பிரிந்திருக்கும்படி சபித்தார். உடனே பகவான் வெளியில் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். ஸுதாமாவை சங்கசூடனாக பிறந்து சிவனால் கொல்லப்பட்டு கோலோகம் வரும்படி கூறினார். ராதையை வ்ருஷபானு என்பவரின் பெண்ணாகப் பிறந்து, அங்கிருக்கும்படியும் தாம் வஸுதேவனிடம் பிறந்து நந்தன் வீட்டில் வளரும் போது ராதையை மணந்து சிலகாலம் அவனியில் தங்கி பிறகு இருவரும் கோலோகம் செல்லலாம் என்றும் கூறினார். இந்தக் கதையைத் தான் ஜயதேவர் இருபத்துநான்கு அஷ்டபதியாகப் பாடினார்.

இதில் கோலோகத்தில் நடந்த கதையும் பூலோகத்தில் வந்த கதையும் சேர்த்து வர்ணிக்கப்படுகிறது. வேதத்திற்குத் தாயான காயத்ரீ எனும் மந்த்ர ராஜம் இருபத்துநான்கு அக்ஷரமுள்ளது. ஒரு எழுத்திற்கு ஆயிரம் ச்லோகமாக வால்மீகி ஸ்ரீராமசரிதத்தை 24000 ச்லோகமுள்ள ஸ்ரீராமாயணமாக இயற்றினார். ஸ்ரீத்யாகராஜஸ்வாமிகள் 24 ஆயிரம் கீர்த்தனமாக எழுதினார். இருபத்துநான்கு அஷ்டபதிகளாக ஜயதேவர் எழுதினார்.

கோவிந்தனைப் பற்றிய கீதமானதால் கீத கோவிந்தம் என்றும் எட்டுப் பதங்கள் (இங்கு நடனத்திற்கேற்றபடி பதங்கள் எனப்படுகின்றன) அமைக்கப்பட்டிருப்பதால் அஷ்டபதி என்றும் பெயர் தோன்றிற்று. ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள கீதத்தைப் புஷ்டிப்படுத்த பல ச்லோகங்கள் கூறப்படுகின்றன. பலர் இவ்வரிய நூலை ஒவ்வொரு ராகம், தாளத்தில் எழுதியிருக்கின்றனர். சிலர் இதை அவரவர் குரு சொன்னபடி வெவ்வேறு ராகத்தில் பாடுகின்றனர்.

காவ்யம் என்று பெயர் அமைக்கப்பட்டதால் ரகுவம்சம் முதலிய காவ்யங்களைப் போல் ஸர்க்கம் என்று பிரிவு காணப்படுகிறது. இதில் 12 ஸர்க்கங்கள் உள. கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தை மனசில் வைத்து 12 ஸர்க்கமாக அமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிக அருமையானவை. அர்த்த புஷ்டி நிறைந்தவை. அருள் சுரப்பவை.

  1. ஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.
  2. அக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.
  3. முக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.
  4. ஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.
  5. ஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.
  6. த்ருஷ்ட வைகுண்டன்: அல்லது தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.
  7. நாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.
  8. விலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.
  9. முக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.
  10. சதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.
  11. ஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.
  12. ஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.

இந்தப் பொருள் பொருந்திய நாமாக்களே இவ்வஷ்டபதியின் கருத்தை நன்கு விளக்குகின்றன. மோக்ஷமென்பதை நாம் அறியவில்லை. அறியாத ஒன்றை அறிந்த ஒன்றின் மூலமாகவே அறியவேண்டும். துன்பக் கலப்பில்லாத பேரின்பமே மோக்ஷம். அந்த ஆனந்தத்தின் திவிலைகளே மற்ற ஆனந்தங்கள். அனுபவத்தினால் மாத்ரம் அறியக்கூடிய இன்பம் பேரானந்தம். அதை அறிய அவரவர் அனுபவத்தால் உணர்ந்த சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறது வேதம். சிற்றின்பமென்பதைத் தற்கால உலகம், மேனாட்டவரைப் போல் மிருக இன்பமான காதல் எனக் கருதுகிறது. அது தவறு. ஸதிபதிகள் மனம் ஒருமித்து, இனிமையாகப் பேசுதல், பழகுதல், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமை, பிரிவால் ஏற்படும் துன்பம், பகவத் பூஜையின் உபசாரமான ஆடல் பாடல்களை நமது காயமெனும் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு அளித்தல், ஆலிங்கனம், முத்தமிடுதல் என்ற வகையில் இருவரும் பேதமில்லாதிருத்தல் முதலியவையே சிற்றின்பமாம்.

இதே நாயக-நாயகி பாவத்தால் ஜீவன்-ஈசுவரன் இருவருக்கும் ஒருமை சேர்க்கை, உபாஸனை முதலியன கூறப்படுகின்றன. இது நம் மதத்தில் மாத்ரமல்ல; முகம்மதிய மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும் இதே போல் நாயக-நாயகி பாவம் காணப்படுகிறது. தேவாரம், திவ்யப்ரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலும், பல பக்தர்களது பாடலிலும், ப்ரேமபக்தியை இங்ஙனம் சித்திரிக்கிறார்கள். அதோடு ஸ்தூலமாகப் பார்த்தால் சிற்றின்பம் போல் காணப்படினும் அவ்வளவும் வேதாந்தம் நிறைந்தது இது. ஆதலால் துறவியர்கூட இதைப் பாடுவார்கள். ஜீவன் பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவந்து பல துன்பங்களை - ஜனன மரணம், மூப்பு, பிணி, பசி போன்றவற்றை - அனுபவிக்கிறான். பரமனின் அருளால் நல்ல ஆசாரியன் அரிய உபதேசங்களைச் செய்து இறைவனிடம் ஜீவனைச் சேர்க்கிறான். க்ருஷ்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, ஸகி ஆசார்யன், என கற்பிக்கப்படுகிறது. இங்ஙனமே காமக்ரோதாதிகளுடன் படை எடுத்து வரும் அக்ஞானமென்ற அரசனை ப்ரபோதனெனும் ராஜா ஜயிக்கிறான் என்று குணங்களை அரசனாகச் சித்திரித்த ப்ரபோத சந்திரோதயம், ஸங்கல்ப ஸூர்ய உதயம் என்ற நாடகங்கள் நம் முன்னவரால் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ம புராணமே இதற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது.

Home Page