நித்யானந்தம்
(தி.பி.பாலகிருஷ்ணன்)
ஆனந்தம் எவ்வாறு ஏற்படுகிறது? நாம் விரும்பிய பொருளை அடைந்தால் ஆனந்தம் உண்டாகிறது. நாம் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாம் நினைத்தது நடந்தால் இன்பம் தோன்றுகிறது.
இந்த ஆனந்தத்திற்கு இன்பத்திற்கு எதிர்மறையனது துன்பம். நாம் விரும்பிய பொருள் கிடைக்காவிடில் துன்பம். நம்முடைய முயற்சி தோல்வியுற்றால் துயரம். நாம் ஒன்று நினைக்க, வெறொன்று நடந்தால் மன வேதனை.
ஆகவே, இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையில் இடைவிடாது நடக்கும் தொடர் நிகழ்ச்சிகள். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று உள்ளன. இன்பத்தில் ஈடுபடவும் துன்பத்தைத் தவிர்க்கவும் முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் இந்த இன்பமோ அல்லது துன்பமோ நிலையானது அல்ல. அழியக்கூடியது, அநித்யமானது. விரும்பிய பொருளை அடைவதால் ஏற்படும் இன்பம், அதனை இழக்க நேரிட்டால் துன்பமாகிறது. வெற்றியில் ஏற்படும் மகிழ்ச்சி, பின் தோல்வியை எதிர் நோக்கும் பொழுது துயரமாகிறது.
இத்தகைய அநித்யமான ஆனந்ததிற்கு மாறாக, நித்யமான, அழிவற்ற ஆனந்தம் ஒன்று உண்டு. அதுதான் "நான்", "என்னுடையது" என்ற எண்ணம். "நான் வெற்றி பெற்றேன், இது என்னுடையது" என்று எண்ணும் போது இன்பம் உண்டாகிறது. "நான் வெற்றி பெறவில்லை; நான் பொருளை இழந்துவிட்டேன்" என்ற எண்ணங்கள் துன்பத்தை தோற்றுவிக்கின்றன.
ஆக, ’நான், என்னுடையது’ என்ற எண்ணங்களை மையமாக, ஆதாரமாகக் கொண்டே, இன்ப துன்பங்களால் அமைந்த மனித வாழ்க்கைச் சக்கரம் சுழலுகிறது.
இந்த அகங்காரம் - நான் என்ற உணர்ச்சி - மனதிலிருந்து நீங்க ஆரம்பித்தால் அதனைச் சார்ந்த உலகியல் இன்ப துன்பங்களால் ஏற்படும் பாதிப்பும் விலகுகிறது. இதனையே வள்ளுவர்,
"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்" என்ற குறளில் அறிவுறுத்துகிறார்.
"நான்" என்ற அகங்காரத்தை நீக்க வேண்டுமானால், மனத்தை அடக்க வேண்டும். மனத்தை அடக்குவது எங்ஙனம்? அது எளிதானதா? இந்த ஐயம் உண்டாவது இயற்கை.
असंशयं महाबाहॊ मनॊ दुर्निग्रहं चलम् |
अभ्यासेन तु कौन्तेय वैराग्यॆण च गृह्यतॆ ||
இதற்காகத்தான் பகவத் கீதையில் பகவான், "அலைந்து திரியும் தன்மையுடையது மனம். அதனை பயிற்சியினாலும், பற்றுக்களிலிருந்து விலகுதல் மூலமாகவும் அடக்கி ஒருமுகப்படுத்த வேண்டும்" என்று அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். மனத்தை அடக்குவதற்கான பயிற்சிதான் பக்தி மார்க்கம்.
ஆதியும் அந்தமும் அற்றதாய், அணுவினுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் விரிந்து நிற்பது பரம்பொருள். அந்தப் பரம் பொருளை உள்ளத்திற்கு உகந்த உருவில் தியானித்து வழிபடுவது பக்தி மார்க்கம். மனம் பக்தியில் ஈடுபடும்பொழுது புலன்களும், அதனுடன் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.
உடலும் உள்ளமும் இறைவழிபாட்டில் ஓன்றியிருக்கும் இந்நிலையை ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கத்தில் அற்புதமாக விளக்குகிறார்:
दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्द कीर्तिः
मुखॆ मॆ पवित्रं सदा तच्चरित्रम् ||
करॆ तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहॆ सन्तु लीना ममाशॆष भावाः ||
"கண்கள் கந்தன் திருவுருவைக் காண்க, காதுகள் அவன் புகழைக் கேட்க, வாய் எப்பொழுதும் அவன் உன்னத சரித்திரத்தைப் பேசுக, கைகள் அவனுக்கான பூஜை செயல்களைச் செய்க, உடல் அவனுக்கே தொண்டு செய்க, மற்றைய செயல்களும் அவனிடமே ஈடுபட்டதாக ஆகுக!" என்று பிரார்த்திக்கிறார்.
உள்ளத்தில் இறையுணர்வு பெருகப் பெருக "நான்" என்ற உணர்ச்சி தானாகவே நீங்குகிறது. நான் செய்கிறேன் என்ற நிலை மாறி, எல்லாம் என்னையாளும் ஈசன் செயல்," "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற பாவம் மேலோங்குகிறது.
உலகபந்த-பாசங்கள், விருப்பு-வெறுப்புக்கள் இவற்றையெல்லாம் கடந்து, மனமானது சூட்சும தத்துவமான இறையருளில் ஒன்றுபடும்பொழுது மனிதன் சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்கு உயர்கிறான்.
இந்த நித்யானந்தத்தை, பேரின்ப நிலையை ஆதிசங்கரர் நிர்வாண ஷட்கத்தில் சிறப்பாக எடுத்து கூறுகின்றார்:
मनॊ बुद्धयहंकार चित्तानि नाहं
न च श्रॊत्रजिह्वॆ न च घ्राणनॆत्रॆ
न च व्यॊम भूमिर्न तॆजॊ न वायुः
चिदानन्द रूपः शिवॊहं शिवॊहं ||
:நான் மனம் புத்தி அகங்காரம் எதுவுமில்லை; ஐம்புலன்களும் அல்ல; பஞ்ச பூதங்களும் அல்ல; நான் சிவஸ்வரூபமாக, பேரானந்தத்தின் தோற்றமாக இருக்கிறேன்."
கற்கண்டினை எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிப்பாக இருக்கிறது. அது போன்று நான் என்ற அகந்தை நீங்கித் தெய்வ சிந்தனையில் ஈடுபட்டிருப்பவரின் உள்ளம் எந்த நிலையிலும் பேரானந்தத்தில் ஒன்றியிருக்கிறது. இதனையே ஆதிசங்கரர் கூறுகிறார்:
यॊगरतॊ वा भॊग रतॊ वा सङ्गरतॊ वा सङ्गविहीनः |
यस्य ब्रह्मणि रमतॆ चित्तं नन्दति नन्दति नन्दत्यॆव ||
ஆகவே பெறுதற்கரிய மானிடப்பிறவியை பெற்றதன் நோக்கம் நித்யானந்தத்தை, பேரின்ப நிலையை அடைவதேயாகும். அதற்கு அடிப்படையாக உள்ளது மன அடக்கம். அந்த மன அடக்கத்திற்குப் பயிற்சியாக உள்ளது தெய்வ பக்தி.
"அவனருளால் அவன் தாள் வேண்டி", என்று மாணிக்கவாசகப் பெருமான் கூறியது போன்று இறைவனுடைய திருவடிகளைப் பற்றி நிற்கும் பேற்றைப் பெற இறைவனிடமே வேண்டுவோமாக!
|