பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி - 44 வது ஜெயந்தி விழா - 19 Feb 2012
பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 44 வது ஜெயந்தி விழா காஞ்சிபுரத்தில் மிக விசேஷமாக கொண்டாடப்பட்டது. அன்றைய சுப தினம் ஶ்ரீ மடத்தில் சுப்ரபாதம் மற்றும் ஶ்ரீ பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்துடன் துவங்கியது.
பூஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி மற்றும் பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களும் பூஜ்யஶ்ரீ சந்த்ரசேகரந்திர சரஸ்வதி சங்கராசார்ய மஹாஸ்வாமிஜி அவர்களின் அதிஷ்டானத்தை மாலைகள், சால்வை மற்றும் மலர் கிரிடம் கொண்டு அலங்கரித்தார்கள்.
ஸ்தோத்ரங்கள் முழங்க பூஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களுக்கு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களால் ஸ்வர்ணபாதபூஜை மற்றும் கனகாபிஷேகம் செய்யப்பட்டது.. அதை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளுக்கு மந்த்ரபுஷ்பத்தில் உள்ள ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்து கொண்டே பலவிதமான மலர்களால் அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.
வேத பாராயணம், கணபதி ஹோமம்,நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், பவமான ஹோமம் மற்றும் மஹாருத்ர ஜப ஹோமம் முதலியன ஶ்ரீ மடத்தில் செய்யப்பட்டன. ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்பு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளுக்கு மந்த்ர தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பல்வேறு கோயில்களிலிருந்து ப்ரசாதங்கள் வரவழைக்கபட்டு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளுக்கு வழங்கபட்டது. பின்பு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் சந்த்ரமௌலீஸ்வர பூஜை பண்ணினார்கள்.
அதிகாலையில் பக்தர்கள் சூழ, மங்கள வாத்தியங்கள் முழங்க ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் இருவரும் காமாக்ஷி அம்மன் திருகோவிலுக்கு சென்றார்கள். அங்கு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள், அம்பாளுக்கும் ஶ்ரீ ஆதிசங்கராசார்யாள் சன்னதிக்கும் பூஜைகள் செய்து தீப ஆராதனை செய்தார்கள்.
மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஶ்ரீமடத்தில் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜ்ய ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்க்ரஹத்தை பெற்றனர்.