வ்யாஸ வித்வத் ஸதஸின் நோக்கங்கள்
ஆண்டு தோறும் வேத ஸம்மேளனங்களைக் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் நடத்தி வருகிறார்கள். இந்தப் புதிய ஸதஸ், அந்த வேதஸதஸ்களின் ஒரு தொடர்ச்சி போன்றது. வேத வேதாந்தத்தின் தத்துவங்களைப் பாமரரும் அறிந்து பயன்பெறச் செய்வதைப் பற்றி இந்த சதஸ் பரிசீலனை செய்யும்.
கிழக்கு ஆசியநாடுகளில் இந்தியக் கலாசாரம் பெரிதும் பரவியிருக்கிறது. ராமாயணமும் பாரதமும் இந்துமத தத்துவங்களை மக்களுக்கு எளிதாக உணர்த்துகின்றவை. இவைகளைப் படித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்குச் சோழர்களும், பல்லவர்களும் பல தர்மங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தாய்லாந்தில் இன்று சிறந்து விளங்குகிற ‘சில்பகான்‘ நடனம் என்பது அனுமனின் தாண்டவத்தைக் குறிக்கிறது. கம்போடியா நாட்டில், ராமாயணக் கதையை எளிய அழகிய நடையில் எடுத்துரைக்கும் ஸம்ஸ்கிருதக் கல்வெட்டுக்கள் உள்ளன. கம்போடிய மன்னன் சோமசர்மன் பாரத ராமாயணப் பிரவசனத்துக்காகத் தர்மங்கள் ஏற்பாடு செய்திருந்தான். அங்கோர் வாட் புத்தர் ஆலயத்திலும், ஜாவாவில் ஒரு கோயிலிலும் சுவர்களில் ராமாயணம் செதுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் புழங்கும் அனியா, கேரளத்தின் சாக்கியர் கூத்து, கதக்களி, மஹாராஷ்டிரத்தின் பொவாடா, தஞ்சைப் பகுதியின் பாகவத மேளம் போன்றவையெல்லாம் கிராமப் பாடல்கள், கதைகளே, இவைகளின் மூலம் சாதாரண மக்களுக்கு ராமாயணம், மகாபாரதத்தின் நீதிகள் எட்டின. இசையும் நடனமும் இதற்கு உதவின. இத்தகைய நிகழ்ச்சிகளுக்குக் கேந்திரங்களாக ஆலயங்கள் விளங்கி வந்தன. ஆலயம், ஆலயக்கலைகள் ஆகியவற்றை போஷித்து அதன் மூலம் பக்தியையும் பண்பாட்டையும் காப்பாற்றுவது இப்போது மிகவும் அவசியம்.