ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கச்சி - அத்திகரி
(அத்தியூர், காஞ்சீபுரம், ஸத்யவ்ரதக்ஷேத்ரம்)
செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷன் சென்னை கடற்கரை - காஞ்சிபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.
சென்னையிலிருந்தும் மற்றும் பல ஊர்களிலிருந்தும் காஞ்சிபுரத்திற்கு பஸ்கள் உண்டு. எல்லா வசதிகளும் ஏராளமாக உண்டு. பெரிய நகரம்.
மூலவர் - வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - பெருந்தேவித் தாயார் (தனிக்கோயில்) , மஹாதேவி.
தீர்த்தம் - வேகவதி நதி, அனந்தஸரஸ், சேஷ, வராஹ, ப்ருஹ்ம, பத்ம அக்னிகுசல முதலிய பல தீர்த்தங்கள்.
விமானம் - புண்யகோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ருகு, நாரதர், ஆதிசேஷன், ப்ரஹ்மா, கஜேந்திரன்.
விசேஷங்கள் - பொய்கையாழ்வார், ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவதார ஸ்தலம். ஸ்ரீ ரங்கத்தைப்போலவே உபய வேதாந்த வித்வான்களின் காலக்ஷேபங்களாலும், மற்றப் பல அற வழிகளாலும் வைணவம் வளர்க்கப்பட்ட திவ்ய க்ஷேத்ரம். இங்கு
குளத்தில் மூழ்கிக் கிடத்தப்பட்டிருக்கும் அத்திவரதர் என்ற அத்தி மரத்தாலான சிலை 40 வருடங்களுக்கொருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, 10 தினங்கள் ஸேவைக்கு வைக்கப்படுகிறது.
எம்பெருமானின் வைகாசி விசாக கருட ஸேவை மிகப்ரஸித்தி வாய்ந்தது ஐராவதமே மலையுருவில் எம்பெருமானைத் தாங்கினமையால், இதற்கு அத்திகிரி (வேதகிரி) என்று பெயர் வந்ததாம். இங்கு ப்ரஹ்மா செய்த யாகத்திற்கு உகந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜன் என அழைக்கப்படகிறார்.
அயோத்யாதிபதியான ஸகரனுடைய பிள்ளை அஸமஞ்சனும் அவன் மனைவியும் சாபவசத்தால் பல்லிகளாயின. உபமன்யு என்பவர், இந்த பல்லிகளுக்கு ஸ்ரீ வரதனை ஸேவை செய்து வைத்த மாத்திரத்தில், பல்லிகள் நிஜரூபமெடுத்து ஸ்வர்க்கம் சென்றன. உபமன்யுவின் சரணாகத ரக்ஷணம் உலகுக்கு நிரந்தரமாகப் பிரகாசிக்க, பல்லிகளின் சரீரங்கள் தன் ப்ராகாரத்தில் ஸ்வர்ண சிரஸுகளுடன் இருக்கட்டும் என்றும், தன்னை ஸேவித்து ப்ரகாரத்திலிருக்கும் இந்த பல்லிகளை யார் தொடுகிறார்களோ அவர்களுடைய ஸகல வியாதிகளும் நீங்கும் என்றும் ஸ்ரீ வரதன் அருள்புரிந்தார். இதற்கிணங்க, நோயுற்றவர்கள் ஸ்ரீவரதனை ஸேவித்து, ப்லலிகளைத்தொட்டு வியாதியிலிருந்து நிவர்த்தியடைகிறார்கள். முன்பு ஒரு காலத்தில் ப்ருஹ்மா இங்கு யாகம் செய்தயால் இது (க-ப்ருஹ்மாவினால், அஞ்சிதம் - பூஜிக்கப்பட்டது என்பதனால்) காஞ்சி என்று பெயர் பெற்றதாக புராணவரலாறு. ஆளவந்தார், திருக்கச்சிநம்பி, ஸ்ரீ ராமாநுஜர், ஆழ்வான், ஸ்வாமி தேசிகன், ஸ்ரீ மணவாள மாமுனிகள் மங்களாஸாசனம் செய்த
இடம்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1541, 2050, 2060, 2066
பூதத்தாழ்வார் - 2276, 2277.
பேயாழ்வார் - 2307
மொத்தம் 7 பாசுரங்கள்.