ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
இரண்டாம் பத்து
அந்தாமத்தன்பு
ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.
ஆழ்வார் மகிழ்தல்
தரவு கொச்சக் கலிப்பா
திருமாலின் அவயங்கள் தாமரைப் பூக்களே
2829. அந்தாமத் தன்புசெய்தென்
னாவிசேர் அம்மானுக்கு,
அந்தாம வாழ்முடிசங்
காழிநூ லாரமுள,
செந்தா மரைத்தடங்கண்
செங்கனிவாய் செங்கமலம்,
செந்தா மரையடிகள்
செம்பொன் திருவுடம்பே.
திருமால் என்னுள் கலந்தவன்
2830. திருவுடம்பு வான்சுடர்செந்
தாமரகண் கைகமலம்,
திருவிடமே மார்வம்
அயனிடமே கொப்பூழ்,
ஒருவிடமு மெந்தை
பெருமாற் கரனேயோ,
ஒருவிடமொன் றின்றியென்
னுள்கலந் தானுக்கே?
திருமாலிடம் கலவாத பொருளே இல்லை
2831. என்னுள் கலந்தவன்
செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும் சுடர்மலைக்குக்
கண்பாதம் கைகமலம்,
மன்னு முழுவே
ழுலகும் வயிற்றினுள,
தன்னுள் கலவாத
தெப்பொருளும் தானிலையே.
தெவிட்டாத அமிழ்தம் திருமால்
2832. எப்பொருளும் தானாய்
மரகதக் குன்றமொக்கும்,
அப்பொழுதைத் தாமரப்பூக்
கண்பாதங் கைகமலம்,
எப்பொழுதும் நாள்திங்க
ளாண்டூழி யூழிதொறும்,
அப்பொழுதைக் கப்பொழுதென்
ஆரா அமுதமே.
கண்ணணின் வாய் பவளம்:பிற அவயவங்கள் தாமரை
2833. ஆரா அமுதமாய்
அல்லாவி யுள்கலந்த,
காரார் கருமுகில்போல்
என்னம்மான் கண்ணனுக்கு,
நேராவாய் செம்பவளம்
கண்பாதம் கைகமலம்,
பேரார நீண்முடிநாண்
பின்னும் இழைபலவே.
பாம்பணையானுக்கு உருவும் பண்பும் பலப்பல
2834. பலபலவே யாபரணம்
பேரும் பலபலவே,
பலபலவே சோதி
வடிவுபண் பெண்ணில,
பலபல கண்டுண்டு
கேட்டுற்று மோந்தின்பம்,
பலபலவே ஞானமும்
பாம்பணைமே லாற்கேயோ
பாம்பணையானே கண்ணனும் இராமனும்
2835. பாம்பணைமேல் பாற்கடலுள்
பள்ளி யமர்ந்ததுவும்,
காம்பணைதோள் பின்னைக்கா
ஏறுடனேழ் செற்றதுவும்,
தேம்பணைய சோலை
மராமரமேழ் எய்ததுவும்,
பூம்பிணைய தண்டுழாய்ப்
பொன்முடியும் போரேறே.
திருமாலை என்னால் முற்ற முடிய வர்ணிக்க முடியாது
2836. பொன்முடியம் போரேற்றை
யெம்மானை நால்தடந்தோள்,
தன்முடிவொன் றில்லாத
தண்டுழாய் மாலையனை,
என்முடிவு காணாதே
யென்னுள் கலந்தானை,
சொல்முடிவு காணேன் நான்
சொல்லுவதென் சொல்லீரே.
என் உயிருக்கு உயிர் போன்றவன் கண்ணன்
2837. சொல்லீரென் அம்மானை
என்னாவி யாவிதனை,
எல்லையில் சீரென்
கருமாணிக் கச்சுடரை
நல்ல அமுதம்
பெறற்கரிய வீடுமாய்,
அல்லி மலர்விரையத்
தாணல்லன் பெண்ணல்லனே.
எம்மானின் உருவை உள்ளபடி உரைக்க இயலாது
2838. ஆணல்லன் பெண்ணல்லன்
அல்லா அலியுமல்லன்,
காணலு மாகான்
உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணு
முருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்
பெம்மானைக் கூறுதலே.
இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்
2839. கூறுதலொன் றாராக்
குடக்கூத்த அம்மானை,
கூறதலே மேவிக்
குருகூர்ச் சடகோபன்,
கூறினவந் தாதியோ
ராயிரத்துள் இப்பத்தும்,
கூறுதல்வல் லாருளரேல்
கூடுவர்வை குந்தமே.
நேரிசை வெண்பா
சடகோபன் திருவடிக்கே அன்பு காட்டுக
அந்தாமத் தன்பால் அடியார்க ளோடிறைவன்,
வந்தாரத் தான்கலந்த வண்மையினால், - சந்தாபம்
தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே,
வாய்ந்தஅன்பை நாடொறும் வை.