ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
இரண்டாம் பத்து
கேசவன் தமர்
பகவான் தம்மீது வைத்திருக்கும் பேரன்பைக் கண்டு, அவரது பேருதவியை
ஆழ்வார் விரிவாகக் கூறுகிறார்.
பன்னிரு நாமப் பாட்டு
கலி நிலத்துறை
கேசவனாகிய நாராயணனால் யான் பெற்ற பெருவாழ்வு
2851. கேச வன்தமர் கீழ்மேல்
எமரே ழெழுபிறப்பும்,
மாசதி ரிதுபெற்று நம்முடை
வாழ்வு வாய்க்கின்றவா,
ஈச னென்கரு மாணிக்கமென்
செங்கோலக் கண்ணன்விண்ணோர்
நாயகன், எம்பிரா னெம்மான்
நாரா யணனாலே.
மாதவனே எல்லா உலகங்களுக்கும் நாயகன்
2852. நாரணன் முழுவே ழுலகுக்கும்
நாதன் வேதமயன்,
காரணம் கிரிசை கரும
மிவைமுதல்வ னெந்தை,
சீரணங் கமரர் பிறர்பல
ரும்தொழு தேத்தநின்று,
வாரணத் தைமருப் பொசித்த
பிரானென் மாதவனே.
கரும்புக் கட்டிதான் கோவிந்தன்
2853. மாதவ னென்றதே கொண்டென்னை
யினியிப்பால் பட்டது
யாத வங்களும் சேர்கொடே
னென்றென்னுள் புகுந்திருந்து,
தீதவம் கெடுக்கும் அமுதம்
செந்தாம ரைக்கட்குன்றம்,
கோதவ மிலென்கன்னற் கட்டியெம்
மானென் கோவிந்தனே.
மகாவிஷ்ணு என் பாவங்களைப் போக்கினான்
2854. கோவிந் தன்குடக் கூத்தன்
கோவலனென் றென்றேகுனித்து,
தேவும் தன்னையும் பாடியாடத்
திருத்தி,என் னைக்கொண்டென்
பாவந் தன்னையும் பாறக்கைத்
தெமரே ழெழுபிறப்பும்,
மேவும் தன்மைய மாக்கினான்
வல்லனெம் பிரான்விட்டுவே.
மதுசூதனின் திருக்கோலம் என்னே!
2855. விட்டிலங்கு செஞ்ஜோதித் தாமரை
பாதம் கைகள் கண்கள்,
மலையை திருவுடம்பு,
விட்டிலங்கு மதியம் சீர்சங்கு
சக்கரம் பரிதி,
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ
தனன் த னக்கே.
எந்நிலையிலும் யான் திரிவிக்கிரமனையே பாடுவேன்
2856. மதுசூ தனையன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி,
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாடி
நின்றூழி யூழிதொறும்,
எதிர்சூழல் புக்கெனைத் தோர்பிறப்பு
மெனக்கே யருள்கள்செய்ய
விதிசூழ்ந்த தாலெனக் கேலம்மான்
திரிவிக் கிரமனையே.
வாமனா!ஊழிதோறும் நின்னையே தொழுவேன்
2857. 'திரிவிக் கிரமன் செந்தா மரைக்கணெம்
மானென் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப்
பளிங்குநிறத்தனன்' என்றென்று, உள்ளிப்
பரவிப் பணிந்து பல்லூழி
யூழிநின் பாத பங்கயமே,
மருவித் தொழும்மன மேதந்தாய்
வல்லைகாணென் வாமனனே!
ஸ்ரீதரா!நினக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!
2858. 'வாமனன்!என்மரதக வண்ணன்!
தாமரைக் கண்ணினன்!
காமனைப் பயந்தாய்', என்றென்றுன்
கழல்பாடி யேபணிந்து,
தூமனத் தனனாய்ப் பிறவித்
துழதி நீங்க, என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்
செய்கேனென் சிரீதரனே!
இருடீகேசா!உன்னை என்னுள் வைத்தாயே!
2859. சிரீஇதரன் செய்ய தாமரைக்
கண்ணனென்றென் றிராப்பகல்வாய்
வெரீஇ,அல மந்து கண்கள்நீர்
மல்கிவெவ் வுயிர்த்துயிர்த்து
மரீஇய தீவினை மாளவின்
பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென் னுள்வைத்
தனையென் இருடீகேசனே!
மனமே பத்மநாபனை விடாதே
2860. 'இருடீ கேசன் எம்பிரான்
இலங்கை யரக்கர்குலம்,
முருடு தீர்த்த பிரானெம்மான்
அமரர்பெம்மான்' என்றென்று,
தெருடி யாகில் நெஞ்சே!
வணங்குதிண்ணம் அறியறிந்து,
மருடி யேலும் விடேல்கண்டாய்
நம்பிபற்ப நாபனையே.
தேவர்பிரான் எந்தை தாமோதரன்
2861. பற்ப நாபன் உயர்வற
வுயரும் பெருந்திறலோன்,
எற்பர னென்னை யாக்கிக்கொண்
டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்
போலம் வேங்கடநல்
வெற்பன், விசும்போர் பிரானெந்தை
தாமோ தரனே.
ஆழிவண்ணனின் தரத்தை யாரும் அறியார்
2862. தாமோ தரனைத் தனிமுதல்வனை
ஞால முண்டவனை,
ஆமோ தரமறிய ஒருவர்க்
கென்றே தொழுமவர்கள்,
தாமோ தரனுரு வாகிய
சிவற்கும் திசைமுகற்கும்,
ஆமோ தரமறிய எம்மானை
யென்னாழி வண்ணனையே?
இப்பாடல்களைப் பாடுக :கண்ணன் அருள் கிட்டும்
2863. வண்ண மாமணிச் சோதியை
அமரர் தலைமகனை,
கண்ணனை நெடுமாலைத் தென்குரு
கூர்ச்சட கோபன்,
பண்ணிய தமிழ்மாலை யாயிரத்துள்
ளிவைபன் னிரண்டும்,
பண்ணில் பன்னிரு நாமப்பாட்
டண்ணல்தாள் அணைவிக்குமே.
நேரிசை வெண்பா
சடகோபன் திருவடிகளே உயிர்களை உய்விக்கும்
'கேசவனா லெந்தமர்கள் கீழ்மே லெழுபிறப்பும்,
தேசடைந்தார்' என்று சிறந்துரைத்த, - வீசுபுகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல் லாமுய்கைக்கு,
ஆறென்று நெஞ்சே!அணை.